இலங்கை வரலாற்றில் 64 நாட்கள் மட்டுமே பதவியிலிருந்து சாதனை படைத்த தமிழர் சின்னையா

Report Print Shalini in கட்டுரை

இலங்கை வரலாற்றில் “50 ஆண்டுகளுக்குப் பிறகு இலங்கை கடற்படையின் தளபதியான தமிழர்” என்ற பெறுமையை ட்ராவிஸ் சின்னையா பெற்றிருந்தார்.

அதேபோல், 50 ஆண்டுகளுக்குப் பிறகு முதல் தமிழ் கடற்படை தளபதியாக நியமிக்கப்பட்ட ட்ராவிஸ் சின்னையாவின் பதவிக்காலம் 64 நாட்கள் மட்டுமே.

இலங்கை கடற்படை வரலாற்றில் மிகக் குறைந்த காலம் கடற்படை தளபதியாக பதவியில் இருந்தார் என்ற பெருமையும் இவருக்கு உரித்தாகி உள்ளது.

ட்ராவிஸ் சின்னையாவுக்கு கடந்த 26ஆம் திகதியுடன் 55 வயது நிறைவடைந்திருந்தது. முப்படைகளிலும் இருப்பவர்கள் 55 வயது வரையே பணியில் இருக்க முடியும்.

அதற்குப் பின்னர், சேவையில் இருக்க வேண்டுமானால், ஜனாதிபதியின் சேவை நீடிப்பு அனுமதியைப் பெற்றுக் கொள்ள வேண்டும். இந்த நிலையில் சின்னையாவுக்கு ஒரு மாத காலம் பதவி நீடிப்பை ஜனாதிபதி வழங்கியிருந்தார்.

ஜனாதிபதியின் இந்த பதவி நீடிப்பு நாளை வியாழக்கிழமையுடன் முடிவடைகின்றது. இந்த நிலையில் மேலும் அவருககு பதவி நீடிப்பு வழங்கப்படும் என அனைவரும் எதிர்பார்த்திருந்த நிலையில் சற்றும் எதிர்பாராத விதமாக ஜனாதிபதி புதிய கடற்படைத் தளபதியை நியமித்துள்ளார்.

இவ்வாறான பதவி நீடிப்பானது முன்னதாக 3 மாதம், 6 மாதங்களுக்கும் கொடுக்கப்பட்டுள்ளது. வருடக்கணக்கிலும் பதவி நீடிப்பு வழங்கப்பட்டுள்ளது. அது மட்டுமல்ல மூன்று முறை சேவை நீடிப்பு வழங்கப்பட்ட சம்பவங்களும் இலங்கையில் உள்ளன.

ஆனால் தமிழரான சின்னையாவுக்கு ஒரு மாத காலமே பதவி நீடிப்பு வழங்கப்பட்டு, பதவி நீடிப்பு கிடைக்கும் என எதிர்பார்த்திருந்த நிலையில் அனைவருக்கும் கிடைத்தது சற்று அதிர்ச்சியான செய்திதான்.

இதனால் மிகவும் குறுகிய காலம் இலங்கையின் கடற்படைத் தளபதியாக பதவி வகித்தவர் என்ற இடத்தை ட்ரவிஸ் சின்னையா பிடித்துள்ளார்.

1973ஆம் ஆண்டுக்குப் பின்னர், கடற்படைத் தளபதிகளாக இருந்த அனைவருமே, தமது ஓய்வு வயது நிறைவடைந்தும் குறைந்த பட்சம் ஒரு ஆண்டு மேலதிகமாக இந்தப் பதவியில் இருந்துள்ளனர்.

எனினும் தமிழரான ட்ராவிஸ் சின்னையாவுக்கு ஒரு ஆண்டு அல்ல ஒரு மாதமே பதவி நீடிப்பு வழங்கப்பட்டிருந்தது.

இவர் ஒரு தமிழர் என்பதால் இவருக்கு பதவி நீடிப்பு வழங்கப்படக்கூடாது என அரசாங்கத்தின் உயர் பதவியில் இருப்பவர்கள் அழுத்தம் கொடுத்ததாகவும் சில தகவல்கள் வெளியாகி இருந்தன.

இந்த நிலையில் கடற்படையின் பிரதம அதிகாரியாக பணியாற்றிய ரியர் அட்மிரல் சிறிமெவன் ரணசிங்க இலங்கையின் புதிய கடற்படை தளபதியாக இன்று நியமிக்கப்பட்டுள்ளார்.

ஜனாதிபதியின் இந்த செயற்பாடு தமிழர்கள் மத்தியில் சற்று சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு காரணம் 50 வருடங்களுக்குப் பின்னர் இலங்கை கடற்படையின் தளபதியாக நியமிக்கப்பட்டிருந்தவர் ஒரு தமிழர் என்பதாலாகும்.

சின்னையாவின் நியமனம் தமிழர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தினாலும் அவருடைய பதவி காலத்தை நினைத்தால் ஏமாற்றம் தான். ஒரு தமிழருக்கு பதவி கொடுப்பதைப் போன்று கொடுத்து விட்டு அதை பறித்து எடுத்திருப்பதாகவே நோக்கப்படுகின்றது.

சின்னையாவுக்கு புதிய பதவி எதும் வழங்கப்படுமா என்பது தொடர்பில் இதுவரை எந்த செய்தியும் வெளியாகவில்லை.

இலங்கை கடற்படையின் கிழக்கு பிராந்திய கட்டளைத் தளபதியாக கடமையாற்றிய சின்னையா ஆகஸ்ட் மாதம் 18ஆம் திகதி ஜனாதிபதியால் கடற்படையின் புதிய தளபதியாக நியமிக்கப்பட்டார்.

கண்டியை சொந்த இடமாகக் கொண்ட சின்னையா கண்டி ரினிட்டி கல்லூரியில் ஆரம்பக் கல்வியை கற்றுள்ளார்.

இதனையடுத்து கடற்படையின் திருகோணமலை கல்லூரியில் 1982 ஆம் ஆண்டு இணைந்து, 1984 ஆம் ஆண்டு தனது கடற்படை அதிகாரி பட்டப்படிப்பை முடித்துள்ளார்.

கப்பல்களுக்கிடையிலான தகவல் பரிமாற்றம் மற்றும் அதிநவீன இலத்திரனியல் யுத்தம் குறித்தும் சிறப்புப் பயிற்சிகளை பிரித்தானிய கடற்படையிடம் பெற்றுக் கொண்டுள்ள சின்னையா இறுதிக்கட்ட போரின் போது தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான கடற்படை நடத்திய பெரும்பாலான தாக்குதல்களிலும் முக்கிய பங்கு வகித்துள்ளார்.

மேலும், 2016 ஆம் ஆண்டு மே மாதம் கிழக்கு மாகாண கடற்படைத் தளபதியாக சின்னையா நியமிக்கப்பட்டிருந்தார்.

தற்போதைய நல்லாட்சி அரசாங்கத்தின் ஒவ்வொரு நகர்வுகளையும் சர்வதேசம் அவதானித்துக்கொண்டுதான் இருக்கின்றது. சின்னையாவின் நியமனத்தில் இந்த விடயம் வெளிவந்தது.

அதாவது, சின்னையாவை கடற்படையின் தளபதியாக ஜனாதிபதி நியமித்த போது நல்லாட்சியின் இந்த செயல் மிகவும் நல்லது என்றும், முன்னேற்றகரமானது, நல்லிணக்கத்திற்கு முதல் படி என்றும் இராஜதந்திர மட்டத்திலிருந்து சமூக வலைத்தளங்களில் வாழ்த்துக்கள் வந்து குவிந்தன.

எனினும் சின்னையாவுக்கு பதவி நீடிப்பு வழங்காமல் புதிய ஒருவரை நியமித்திருப்பதாவது, தமிழர் என்ற ஒரே காரணத்தினால் இவர் புறக்கணிக்கப்பட்டாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

இந்த திட்டம் நல்லிணக்கத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும் செயல் எனவும் விமர்சனம் எழுந்துள்ளது.

நல்லாட்சியை கவிழ்க்க வேண்டும் என்று ஒரு கூட்டம் திரியும் நிலையில், மக்களுக்கும் நல்லாட்சி மீது இருக்கும் நம்பிக்கை கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து செல்லும் இந்த நிலையில் ஜனாதிபதியின் இவ்வாறான திட்டம் நல்லாட்சிக்கு நல்லதல்ல என்றும் விமர்சனங்கள் எழுந்துள்ளன.

அதிலும் சின்னையாவுக்கு கடற்படைத்தளபதியாக பாதவி வழங்கப்பட்ட காலத்தில் அவர் தளபதிக்கான உத்தியோகப்பூர்வ வாசஸ்தலத்திற்கு கூட சென்றிருக்க வில்லை. அதற்குள் பதவி பறிக்கப்பட்டு விட்டது.

உண்மையில் இந்த பதவி வழங்கலும் பதவி பறிப்பும் தமிழ் மக்களை ஏமாற்றும் ஒரு கண்டுதுடைப்பு நாடகம் என்றும் அரசியல் அவதானிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.