நல்லாட்சி அரசாங்கத்தாலும் கண்டு கொள்ளப்படாத அரசியல் கைதிகள்!

Report Print Thileepan Thileepan in கட்டுரை

தமிழ் மக்கள் தமது உரிமைக்காக மேற்கொண்ட ஆயுதப் போராட்டமானது மௌனிக்கப்பட்டு 8 வருடங்கள் கடந்துள்ள நிலையிலும் தமிழ் மக்கள் முன்னுள்ள பல பிரச்சினைகள் தீர்க்கப்படாது இன்றும் தொடர்கின்றது.

காணிவிடுவிப்பு, அரசியல் கைதிகள் பிரச்சினை, காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரம், மீள்குடியேற்றம் என அது நீண்டு செல்கின்றது.

இதில் அரசியல் கைதிகள் விவகாரம் ஆனது கடந்த ஒரு மாத காலமாக பேசு பொருளாக மாறியிருக்கிறது. இறுதி யுத்தம் நடைபெற்ற காலப்பகுதியில் விடுதலைப் புலிகள் அமைப்பைச் சேர்ந்த பலர் இராணுவத்தினரிடம் சரணடைந்து இருந்தனர்.

சிலர் இராணுவத்தால் கைது செய்யப்பட்டும் இருந்தனர். இவ்வாறு சரணடைந்த, கைது செய்யப்பட்ட 12 ஆயிரம் வரையிலான முன்னாள் போராளிகள் புனர்வாழ்வின் பின் சமூகமயமாக்கப்பட்டுள்ளனர்.

ஆனால் யுத்தம் நடைபெற்ற காலப்பகுதியிலும், அதனை அண்டிய காலப்பகுதியிலும் விடுதலைப் புலிகளுடன் தொடர்புகளைப் பேணியதான குற்றச்சாட்டின் அடிப்படையிலும், சந்தேகத்தின் அடிப்படையிலும் பாதுகாப்பு தரப்பினரின் சுற்றி வளைப்புக்கள் மற்றும் அவர்களது செயற்பாடுகளின் போது கைது செய்யப்பட்ட பலர் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் அரசியல் கைதிகளாக நீண்டகாலமாக தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

நேரடியாக விடுதலைப் புலிகள் அமைப்பில் இருந்த பலர் புனர்வாழ்வு அடிப்படையில் கடந்த மஹிந்த அரசாங்கத்தின் காலப்பகுதியில் இருந்தே விடுவிக்கப்பட்டிருந்தனர்.

ஆனால் அரசியல் கைதிகள் விவகாரம் என்பது நீறுபூத்த நெருப்பாக இன்று வரை தொடர்கிறது. கடந்த 10, 15, 20 வருடங்களாக சில அரசியல் கைதிகளுக்கு எதிராக வழக்கு விசாரணைகள் நடத்தப்படாது அவர்கள் நீண்டகாலமாக தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

அவர்களது ஆயுட்காலத்தின் பெரும் பகுதியும், இளமைக்காலமும் சிறைகளிலேயே கழிந்துள்ளன. பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களின் விசாரணைகளை துரிதப்படுத்த வேண்டும் என கூறப்படுகின்ற போதும் அவை நடைபெறுவதாக தெரியவில்லை.

சந்தேகத்தின் பேரில் எவரையும் நீண்டகாலம் தடுத்து வைத்திருப்பது அடிப்படை மனிதவுரிமை மீறல் என்று யாழ் மேல் நீதிமன்றம் அண்மையில் ஒரு வழக்கில் தீர்ப்பளித்து முன்னாள் விடுதலைப் புலி உறுப்பினர்களான சந்தேக நபர்களுக்கு பிணை வழங்கியிருந்தது.

ஆனால் அரசியல் கைதிகளைப் பொறுத்தவரை அவர்கள் கைது செய்யப்பட்ட காலப்பகுதியில் இருந்து பிணை வழங்கப்படாது தொடர்ந்தும் சிறைச்சாலைகளிலும், தடுப்பு முகாம்களிலும் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

அரசியல் கைதிகள் என்போரும் இந்த நாட்டில் ஏற்பட்ட இன விடுதலைக்கான போராட்டத்துடன் தொடர்புடையவர்கள். முன்னாள் போராளிகளை புனர்வாழ்வின் கீழ் விடுதலை செய்ய முடியுமாக இருந்தால் அரசியல் கைதிகளாக உள்ளோரை ஏன் விட முடியாது என்ற கேள்வி இயல்பாகவே எழுகிறது...?

அவர்கள் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றத்திற்காக வழங்கப்படும் சிறைத்தண்டனைக் காலத்தை விட பலர் அதிக காலம் சிறையிலேயே தமது காலத்தை கழித்து இருக்கின்றனர். அவர்கள் நிரபராதி என விடுதலையாகி வரும் போது அவர்களது வயது கூட முதுமை அடைந்து விடுகின்றது.

அண்மையில் கடந்த 10 வருடங்களுக்கு மேலாக சிறையில் இருந்த அரசியல் கைதியானஎ கனகரத்தினம் ஜீவரட்ணம் என்பவர் நிரபராதி என கொழும்பு மேல் நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டுள்ளமையும் இங்கு கவனிக்கத்தக்கது.

அரசியல் கைதிகளாகவுள்ளளோர் தமது இளமைகாலம், குடும்பம், தொழில் என எல்லாவற்றையும் இழந்தே சிறையில் வாடுகின்றனர். அவர்களது குடும்பங்கள் கூட நிர்க்கதியான நிலையிலேயே இருக்கின்றது. எனவே இது தொடர்பாக ஒரு அரசியல் தீர்மானம் எடுக்க வேண்டிய தேவையும் இருக்கிறது.

அரசியல் கைதிகளுக்கு தமது வழக்குகளை கொண்டு நடத்துவதற்கு இருக்கின்ற உரிமைகள் கூட மறுக்கப்பட்டுள்ளதாகவே தெரிகிறது.

குறிப்பாக அநுராதபுரம் சிறைச்சாலையில் கடந்த 8 ஆண்டுகள் தடுத்து வைக்கப்பட்டுள்ள இராஜதுரை திருவருள், மதியழகன் சுலக்ஷன், கணேசன் தர்ஷன் ஆகிய மூவருக்கு எதிராக கடந்த 2013ஆம் ஆண்டு வவுனியா மேல் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு மீதான விசாரணைகள் கடந்த நான்கு ஆண்டுகளாக 58 தவணைகளாக நடைபெற்று வந்தன.

வவுனியா மேல் நீதிமன்றத்தில் இடம்பெற்று வந்த வழக்கினை பாதுகாப்பு தரப்பைச் சேர்ந்தவர்களை அதிகமானதாகக் கொண்ட சாட்சியாளர்களுக்கு பாதுகாப்ப இல்லை என்ற காரணத்தைக் கூறி சட்டமா அதிபர் திணைக்களம் அநுராதபுரம் மேல் நீதிமன்றுக்கு இடமாற்றியுள்ளது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் தமது வழக்குகளை வவுனியா மேல் நீதிமன்றத்திலேயே நடத்த வேண்டும் எனக் கோரியும் அந்த மூன்று அரசியல் கைதிகளும் கடந்த நான்கு வாரங்களுக்கு மேலாக உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

சந்தேக நபர்களான அரசியல் கைதிகள் அவ்வாறு கோருவதற்கான இடமும் உள்ளது. திருகோணமலை குமாரபுரம் படுகொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களான பாதுகாப்பு தரப்பினர் தமது வழக்கை அனுராதபுரம் நீதிமன்றுக்கு மாற்றுமாறு கோரியிருந்தனர்.

அதனடிப்படையில் அந்த வழக்கு மாற்றப்பட்டு, அவ் வழக்கு மீதான விசாரணைகள் இடம்பெற்று கைது செய்யப்பட்டிருந்த சந்தேக நபர்கள் நிரபராதிகள் என விடுவிக்கப்பட்டிருந்தனர். ஆனால் மூன்று தமிழ் அரசியல் கைதிகள் விடயத்தில் அவர்கள் விரும்பும் நீதிமன்றில் வழக்கை நடத்தும் வகையில் இத்தகைய ஒரு அணுகுமுறை பின்பற்றப்படவில்லை.

அவர்களது நீதியானதும், நியாயமானதும் ஆன கோரிக்கைக்கு ஆதரவாக ஏனைய சிறைச்சாலைகளில் உள்ள அரசியல் கைதிகளும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

அரசியல் கட்சிகள், அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தும் அமைப்புக்கள், பல்கலைக்கழக சமூகம், பொது அமைப்புக்கள், சிவில் சமூக செயற்பாட்டளர்கள் எனப் பலரும் ஆதரவு தெரிவித்து போராட்டங்களை முன்னெடுத்துள்ளனர்.

ஆர்ப்பாட்டம், கையெழுத்து வேட்டை, பூரண கதவடைப்பு, ஜனாதிபதிக்கு எதிராக கறுப்புக் கொடி ஏந்தல் என பல வழிகளிலும் போராட்டங்கள் இடம்பெற்று, இது தொடர்பில் ஜனாதிபதியுடனும் சந்திப்பு இடம்பெற்றது.

கடந்த 19 ஆம் திகதி யாழ். பல்கலைக்கழக மாணவர்களுடனும், அரசியல் கைதிகளின் உறவினர்களுடனும் சந்திப்பை மேற்கொண்ட ஜனாதிபதி 25ஆம் திகதிக்குள் உரிய தீர்வு ஒன்றை வழங்குவதாக வாக்குறுதியளித்த போதும் அது தொடர்பில் உள்ப்பூர்வமாக செயற்பட்டதாக தெரியவில்லை. எந்தவொரு தீர்வும் வழங்கப்படவும் இல்லை.

புலம்பெயர் தேசங்களிலும் அரசியல் கைதிகளுக்கு ஆதரவாக போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகிறன.

குறிப்பாக பிரித்தானிய பிரதமர் அலுவலகத்திற்கு முன்பாக நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் ஏற்பாட்டில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அமைச்சர்களான சொக்கலிங்கம் யோகலிங்கம், மணிவண்ணன், நிமலன், ஆறுமுகம், அகிலன், மற்றும் பிரதான செயற்பாட்டாளர்கள் உள்ளிட்ட ஈழ உணர்வாளர்களின் ஏற்பாட்டில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றும் நடைபெற்றுள்ளது.

அத்துடன், அரசியல் கைதிகள் விவகாரம் உள்ளிட்ட தமிழ் மக்கள் எதிர்நோக்கும் பல்வேறு பிரச்சினைகள் குறித்து பிரித்தானிய பிரதமரிடம் மகஜர் ஒன்றும் கையளிக்கப்பட்டுள்ளது.

அரசியல் கைதிகள் தொடர்பில் உள்நாட்டில் மட்டுமன்றி புலம்பெயர் தேசங்களிலும் போராட்டங்கள் இடம்பெற்று வருகின்றன.

இலங்கைக்கு இரண்டு வார விஜயம் மேற்கொண்ட ஐ.நா விசேட நிபுணரும் இது தொடர்பில் கவனம் செலுத்தியிருந்த நிலையிலும், அரசாங்கம் அரசியல் கைதிகள் விவகாரத்தை கண்டு கொள்ளாமல் இருப்பது என்பது தமிழ் சமூகத்தினை சினங் கொள்ள வைத்துள்ளது.

நல்லாட்சி எனக் கூறப்படும் மைத்திரி - ரணில் அரசாங்கமும் கடந்த காலத்தை போன்று தமிழ் மக்களது அபிலாசைகளையும், அவர்களது நியாயமான கோரிக்கைகளையும் புரிந்து கொள்ளாது செயற்படுவதாகவே இருக்கின்றது எண்ணும் நிலை உருவாகியிருக்கிறது.

இந்த நாட்டின் தேசிய இனங்களில் ஒன்றாகிய தமிழ் மக்கள் புதிய அரசாங்கம் மீது நம்பிக்கை கொள்ளும் வகையில், குறைந்தபட்சம் நல்லெண்ணத்தை வெளிப்படுத்தும் விதமாக அரசியல் கைதிகள் விடயத்தை அரசாங்கம் கையாள முன்வரவேண்டும்.

இதுவே இந்த நாட்டில் நிலையான நல்லிணக்கத்திற்கும், இனங்களுக்கு இடையிலான ஐக்கியத்திற்கும், நீடித்த சமாதானத்திற்கும் வழியை ஏற்படுத்தும்.