கடாபி வழியில் திட்டமிட்ட மஹிந்த! நடுத் தெருவில் அசிங்கப்பட்ட அவல நிலை

Report Print Vethu Vethu in கட்டுரை

இலங்கையின் அரசியல் தளத்தில் கடந்த சில தினங்களாக அதிகம் பேசப்பட்டவராக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மாறியிருந்தார்.

அரசியல் மட்டத்தில் பல்வேறு சூடான சம்பவங்கள் இடம்பெற்று வந்த போதும், பல ஊடகங்கள் வாயிலாக மஹிந்த பேசப்பட்டு வந்தார்.

கடந்த வாரம் இலங்கையில் ஏற்பட்ட எரிபொருள் நெருக்கடிக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் மஹிந்த தலைமையிலான அணியினர் வித்தியாசமான முறையில் நாடாளுமன்றம் சென்றிருந்தனர்.

மஹிந்த தலைமையிலான கூட்டு எதிர்க்கட்சியினர் சைக்கிள் மற்றும் மாட்டுவண்டிகளில் பயணம் செய்திருந்தனர்.

இதன்போது மெய்பாதுகாவலர்களும் சாரதிகளும் ஓட்டமும் நடையுமாக செல்ல, மஹிந்த சைக்கிள் ஓட்டிச் சென்ற காட்சி பலருக்கும் வியப்பை ஏற்படுத்தியிருந்தது.

ஏனெனில் கடந்த வாரம் இலங்கையில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டமை திடீரென ஏற்பட்ட ஒரு நிகழ்வாகும்.

எனினும் கடந்த ஆட்சியின் போது எரிபொருள் பிரச்சினை பெரும் நெருக்கடிகளை ஏற்படுத்தியிருந்தது. பெருந்தொகை ஊழல் மோசடிகள் காரணமாக இலங்கைக்கு தரமற்ற எரிபொருள் இறக்குமதி செய்யப்பட்டிருந்தது. இதன்மூலம் பல வாகனங்கள் பழுதடைந்து வீதியில் நின்ற அதிக சம்பவங்கள் உண்டு.

அப்போதைய எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்கவின் வாகனம் கூட தரமற்ற எரிபொருள் காரணமாக பழுதடைந்த நிலையில், 50000 ரூபா செலவிட்டு திருத்தியதாக ஊடகங்களில் அதிகம் பேசப்பட்டிருந்தன.

இந்நிலையில் நல்லாட்சியில் தற்செயலாக ஏற்பட்ட எரிபொருள் நெருக்கடிக்கு மஹிந்த எதிர்ப்பு தெரிவித்து சைக்கிளில் சென்றமை நகைப்புக்குரிய விடயம் என பலரும் கருத்து வெளியிட்டுள்ளனர்.

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக செயற்பட்ட மஹிந்த கடைநிலை உறுப்பினராக சைக்கிளில் சென்றதுடன், அவர்களை தடுத்த பொலிஸாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

நாட்டின் தலைவராக செயற்பட்ட ஒருவருக்கு மிகுந்த மாரியாதை கொடுப்பது வழமையாகும். அதிலும் மஹிந்த மாறுபட்ட அரச தலைவராக தென்னிலங்கையில் வர்ணிக்கப்பட்டு வருகிறார்.

நாட்டில் மூன்று தசாப்தங்களாக நிலவிய போரினை முடிவுக்கு கொண்டு வந்ததன் மூலம் சர்வதேச ரீதியாக அதிகம் பேசப்படும் தலைவராக மஹிந்த மாறினார். அத்துடன் தென்னிலங்கை மக்கள் மத்தியில் துட்டகைமுனு மன்னர் என வர்ணிக்கப்பட்டார்.

இலங்கையின் அரசியல் வரலாற்றில் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதிகளாக செயற்பட்டவர்கள், தமது பதவிக் காலம் முடிவடைந்ததுடன் மிகவும் அமைதியான முறையில் கௌரவமாக நடந்து கொண்டனர்.

ஆனால் இலங்கையை இருமுறை ஆட்சி செய்த மஹிந்த, மிகவும் கீழ்த்தரமான முறையில் தெருவில் சண்டை போடும் அளவுக்கு மாற்றம் பெற்றமை ஏன்? இதற்கு எல்லாம் ஒரேயொரு காரணம் பதவி மீதான வெறிப்பிடித்த ஆசையே ஆகும்.

தமிழினத்திற்கு எதிரான போரை முன்னெடுத்த ராஜபக்ஷ ரெஜிமென்ட், இலட்சக்கணக்கான தமிழர்களின் உயிரை காவு கொண்டு வெற்றியை தமதாக்கினர்.

அன்றையதினத்திருந்து இலங்கையின் வாழ்நாள் அரச தலைவர் என்ற அத்தியாயத்தை மஹிந்த ஆரம்பித்திருந்தார்.

லிபியாவின் முன்னாள் அரச தலைவர் முயம்மர் கடாபியின் மிகவும் நெருக்கமான நண்பரான மஹிந்த, கடாபி வழியில் இலங்கையை ஆட்சி செய்ய திட்டமிட்டிருந்தார்.

இலங்கையில் குடும்ப ஆட்சியை நிலைநிறுத்த பல்வேறு வேலைத்திட்டங்கள் திரைமறைவில் ராஜபக்ஷர்களால் அரங்கேற்றப்பட்டது.

மஹிந்தவின் காலத்தின் பின்னர் இலங்கையை நாமல் ஆட்சி செய்யும் நோக்கில் பல்வேறு திட்டங்கள் வகுக்கப்பட்டன. இதற்காக லிபியா சென்றிருந்த நாமல் ராஜபக்ஷ கடாபியை சந்தித்திருந்தார்.

இவ்வாறான நிலையில் 2015ம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் எதிர்பாராத விதத்தில் மஹிந்த தோல்வியை தழுவியிருந்தார்.

நிலையான ஆட்சி மீது நம்பிக்கை கொண்டிருந்த மஹிந்த, ஆட்சிக்காலம் முடிவடைய இரு வருடங்கள் இருக்கும் நிலையில், தேர்தல் நடத்த திட்டமிட்டு பதவியை பறிகொடுத்திருந்தார்.

ஜோதிடத்தின் மீது கொண்டிருந்த தீவிர நம்பிக்கையும், அவருக்கு நெருக்கமானவர்களின் தவறான வழிகாட்டல்கள் காரணமாகவும் மஹிந்த தேர்தலுக்கு அழைப்பு விடுத்திருந்தார்.

எனினும் சிறுபான்மையின மக்களின் பலமான வாக்குகளால் மஹிந்த தோற்கடிக்கப்பட்டதுடன், சமகால ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் கைகளில் ஆட்சியை ஒப்படைத்தனர்.

இதனை சற்றும் ஏற்றுக்கொள்ளாத ராஜபக்ஷர்கள் இழந்த ஆட்சியை மீண்டும் கைப்பற்றும் நோக்கில் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

அதற்காக சமகால அரசாங்கத்திற்கு எதிராக பல்வேறு கோஷங்களை எழுப்பி வருக்கின்றனர். புதிய அரசியல் கட்சியின் மூலம் பலமான சக்தியாக மாற முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

அதற்கு வலுச்சேர்க்கும் வகையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் மஹிந்த தலைமையிலான குழுவினர் நாடாளுமன்றத்திற்கு மாட்டுவண்டி மற்றும் சைக்கிள்களில் சென்றிருந்தனர்.

இதன்மூலம் மக்கள் மத்தியில் பாரியதொரு புரட்சியை ஏற்படுத்த முடியும் என மஹிந்த திட்டமிட்டிருந்தார். ஊடகங்களில் அதிகம் பேசப்பட வேண்டும் என்பதற்காக பொலிஸாருடன் மஹிந்த சண்டையிடும் அளவுக்கு அடிமட்ட உறுப்பினராக மாறியிருந்தார்.

எனினும் மஹிந்த தரப்பினருக்கு அதிர்ச்சி தரும் வகையில் நிதியமைச்சர் மங்கள சமரவீர பதிலளித்திருந்தார்.

அடுத்தாண்டுக்காக நீல பசுமை வரவு செலவுத் திட்டம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டிருந்தார். அதற்கு பலம் சேர்க்கும் வகையில் மஹிந்த அணியினர் மாட்டுவண்டி, சைக்கிளில் வந்துள்ளனர் என நாடாளுமன்றில் தெரிவித்தார்.

இந்த கூற்றினால் மஹிந்த அணியின் திட்டம் தவிடு பொடியாகியுள்ளது. இதன்மூலம் மஹிந்த அரசியல் கனவுக்கும் ஆப்பு வைக்கப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அரசியல் ரீதியாக பின்தள்ளப்பட்டுள்ள ராஜபக்ஷகள் எதிர்காலத்தில் நாட்டை ஆட்சி செய்வது என்பது முடியாத ஒன்றாகவே உள்ளது. இதன்மூலம் நாமல் ராஜபக்ஷவின் ஜனாதிபதி கனவு முற்றாக கலைந்துள்ளதாக அரசியல் ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.