2009 மே இறுதி யுத்தக்களத்தின் நிலை..! நேரடி ரிப்போர்ட்

Report Print Gokulan Gokulan in கட்டுரை

ஓ!... மரணித்த வீரனே... என்ற எழுச்சிப் பாடலைக் கேட்கும் போதெல்லாம் எனது மனதில் இனம்புரியாத சோகம் ஒன்று ஏற்படும். அநேகமான வேளைகளில் மனச்சாட்சியின் உறுத்தல்களுக்கும் உள்ளாகியுள்ளேன்.

அமைதியான மரணம்

அமைதியான மரணம் எல்லோருக்கும் கிடைத்து விடுவதில்லை. அதுவும் கொடூரம் மிக்க போர்க்களம் ஒன்றில், விழுப்புண்ணடைந்து துடிக்கும் வீரன் ஒருவனுக்கு ஏற்படும் நரக வேதனையில் இருந்து விடுதலை பெற அவன் விரும்புவதெல்லாம் அமைதியான மரணத்தையே.

அதற்கும் மேலாக முன்னரங்கில் போரிடும் ஒரு வீரனுக்கு, போரிடும் மன வலிமையை கொடுக்கும் முக்கிய காரணிகளாக இருப்பவை பாதுகாப்பான பின்தளம் தொடர்பான நம்பிக்கையும், தான் மரணமடைந்தாலும் தனக்கு அளிக்கப்படும் மதிப்பளிப்பு தொடர்பான நம்பிக்கையுமே என்றால் மிகையாகாது.

ஆனால் முள்ளிவாய்க்கால் போரரங்கின் இறுதிக் கணங்களில் இவையெதுவுமே சாத்தியமற்றுப் போயிருந்தன.

முள்ளிவாய்க்கால் போரரங்கின் இறுதிக்கணங்கள்

காயமடைந்தாலும் தூக்கிச்செல்ல யாருமில்லை, அப்படி வந்தாலும் கொண்டு செல்ல வழியுமில்லை, மருந்துமில்லை, சிகிச்சையுமில்லை.

அதையும் மீறி... வீரச்சாவடைந்தால் வித்துடல் பேழையுமில்லை, மலர்வளையமும் மரியாதை வேட்டுக்களும் இல்லை, துயிலுமில்ல பாடலுமில்லை, குழியுமில்லை.

இதையெல்லாம் அறிந்தும் “மரணிக்கும் வரை போரிடுவோம்” என்ற முடிவுடன் புலி வீரர்கள் போரிட்டதனால், முள்ளிவாய்க்கால் போர் நீடித்துக் கொண்டிருந்தது.

துயரம் மிக்க இப்போரரங்கின் முழுப் பரிமாணத்தையும் புரிந்து கொள்வதோ, வெளிப்படுத்துவதோ இலகுவான பணி அல்ல. ஆனாலும், அங்கு வீழ்ந்த “பெயர் அறியப்படாத மாவீரர்களின்” அர்ப்பணிப்பை மனதில் கொண்டு, சில தகவல்களை பதிவிடுவதை காலத்தின் கடமையாக கருதுகிறேன்

மே 15, 2009

மே 15, 2009ஆம் நாள் முள்ளிவாய்க்காலில் இயங்கி வந்த கடைசி மருத்துவமனையும் சிறிலங்கா படையினரின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்டிருந்தது.

ஆங்காங்கே இயங்கிய படையணிகளின் மருத்துவ முகாம்களும் பெருமளவு காயக்காரர்களால் நிரம்பி வழிந்ததால் செய்வதறியாது திணறிக்கொண்டிருந்தன.

“இனி புதிதாக ஒருவரையும் கொண்டு வரவேண்டாம்” என்று சொல்லுமளவிற்கு நிலைமை வந்துவிட்டது. அதேவேளை கப்பலடி துயிலுமில்லமும் கைவிட்டுப்போக, வித்துடல் சேகரிப்பு, வீரவணக்க நிகழ்வு, வித்துடல் விதைப்பு போன்ற ஒழுங்கமைப்புகளும் சீர்குலைந்து போயின.

ஆனாலும் போர் தொடர்ந்து கொண்டிருந்தது…

அங்கே முன்னணி, பின்தளம் என்ற எந்த பாகுபாடும் இருக்கவில்லை. A35 என்ற குறியீட்டுப் பெயருடைய முல்லைத்தீவு - பரந்தன் பிரதான வீதியை மையப்படுத்தி ஒரு சில கிலோமீற்றர்கள் நீள அகலத்தில் நான்குபுறமும் போர் முழு வீரியத்துடன் நடந்துகொண்டிருந்தது.

அர்ச்சனா உட்பட்ட பெருமளவு போராளிகளின் வீரச்சாவு

15 மே 2009 மதியம் 11:00 மணியளவில், கடற்புலிகளின் “குட்டி வீரன்” படகு நிறுத்தப்பட்டிருந்த இடத்திற்கு வடக்குப்புறமாக இருந்த பனந்தோப்பின் மீது இரசாயன குண்டுத்தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது.

இதனால் அந்த இடம் முழுவதும் பற்றியெரியத் தொடங்கியது. அப்பனந்தோப்பினுள்ளே சில மருத்துவ முகாம்கள் இருந்தன. பெருமளவு பொதுமக்களும் இருந்தனர்.

மீட்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டபோது பெருமளவு போராளிகளின் வித்துடல்கள் எரிந்த நிலையிலேயே மீட்கப்பட்டன. அவர்களின் அடையாளத் தகடுகள் சேகரிக்கப்பட்டன.

புதிதாக இணைக்கப்பட்ட போராளிகளுக்கு ‘லெமினேற்’செய்யப்பட்ட காகித அடையாள தகடுகள் வழங்கப்பட்டிருந்ததால் அவை அடையாளம் காணப்படமுடியாத அளவிற்கு உருகிப் போயிருந்தன.

இவ்வேளையில் தான் அங்கு வந்த தமிழீழ மாவீரர் பணிமனையின் துணைப்பொறுப்பாளர் அர்ச்சனா மிக அருகில் வீழ்ந்து வெடித்த எறிகணை சிதறல் தலையில் தாக்கியதால் அவ்விடத்திலேயே வீரச்சாவடைந்தார்.

உதவி அணிகளின் இழப்பு

முள்ளிவாய்க்காலின் மீதமிருந்த குறுகிய நிலப்பரப்பினுள் நின்று சளைக்காமல் மீட்புப் பணிகளில் ஈடுபட்டவர்களை என்றும் மறக்க முடியாது.

போராளிகள், காவல்துறை உறுப்பினர்கள், தமிழர் புணர்வாழ்வு கழக தொண்டர்கள், நிர்வாகசேவை பணியாளர்கள் என இன்னும் பல பிரிவுகளிலிலுமிருந்த அர்ப்பணிப்பு மிக்க தொண்டர்கள் இறுதிவரை சேவையாற்றினர். பலர் இப்பணியிலேயே தமது உயிரையும் அர்ப்பணித்தனர்.

இந்தவைகயில், தமிழீழ காவல்துறை உறுப்பினரான தவக்குமாரும் அவரது அணியினரும் முள்ளிவாய்க்கால் மருத்துவமனை மீதான குண்டுவீச்சின் பின்னரான மீட்பு நடவடிக்கையொன்றின்போது வீரச்சாவடைந்தனர்.

அவர்கள் மீது நடத்தப்பட்ட எறிகணைத்தாக்குதலில் அந்த அணி முற்றாகவே அழிந்துபோனது. அதனைத் தொடர்ந்து குறுகிய நேரத்தினுள் அப்பகுதி சிறிலங்கா படையினரின் கட்டுப்பாட்டில் வந்தமையினால், அங்கு வீரச்சாவடைந்தவர்களின் விபரம் அறியப்பட முடியாமலே போய்விட்டது.

அது மட்டுமன்றி பின்களப் பணிகளில் ஈடுபட்ட தமிழ்த்தேசிய துணைப்படை வீரர்கள,போர் உதவிப்படை வீரர்களும் தமது கடமையின்போது வீரச்சாவடைந்தனர்.

அத்துடன் இயக்கத்தின் அவசர அழைப்பின் பேரில் உதவிப்பணிகளுக்காக சென்ற பல குடும்பத்தலைவர்களும் இன்றுவரை வீடு திரும்பவில்லை. இவர்களின் வீரச்சாவுகள் அறியப்படாமலோ, பதியப்படாமலோ போனதுதான் இங்குள்ள மிகப்பெரிய சோகம்.

இறுதி 48 மணித்தியாலங்கள்

மே 16, 2009 அதிகாலையிலிருந்து மோதல்கள் உச்சமடைந்தன. வீரச்சாவுகளின் எண்ணிக்கையும், காயமடைந்தவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து கொண்டே போனது.

பல வீரச்சாவடைந்த போராளிகளின் வித்துடல்கள் கைவிடப்பட்ட பதுங்குகுழிகளுக்குள் விதைக்கப்பட்டன. சில எரிக்கப்பட்டன. காயமடைந்தவர்களுக்கு சரியான முதலுதவியோ, மருத்துவ உதவியோ கிடைக்கவில்லை.

காயமடைந்தவர்களை A 35 வீதிக்கு அண்மித்த நிலைகளுக்கு கொண்டு வருமாறு பணிப்பு வழங்கப்பட்டதையடுத்து இயலுமானவரை காயக்காரர்கள் நகர்த்தப்பட்டனர்.

பல காயமடைந்த போராளிகள் தாமாகவே ஊர்ந்து ஊர்ந்து A 35 வீதியை நோக்கி நகரத்தொடங்கினர். இதில் பலர் வழியிலேயே வீரச்சாவடைந்தனர்.

மரணத்துக்காக ஏங்கிய போராளி

கடற்கரைப் பக்கமாக பலத்த காயமடைந்த போராளி ஒருவரைக் கண்டேன். அவர் காயமடைந்து பல நாட்களாகியும் எவராலும் சிகிச்சை வழங்கப்படாமல் இருந்ததால்,அவரது காயங்களில் இருந்து புழுக்கள் வந்துகொண்டிருந்தன.

காகங்கள் அவரது காயத்திலிருந்த புழுக்களை கொத்திக்கொண்டிருந்தன. அசைய முடியாத அவரால் வேதனையில் முனகுவதை தவிர வேறு ஒன்றும் செய்ய முடியவில்லை.

அதிகளவு இரத்தப்போக்கினால் அவரது உடல் வெளிறிப்போயிருந்தது. என்னைக் கண்டதும் என்னைச் சுட்டுவிடு, என்னைச் சுட்டுவிடு என ஈனக்குரலில் மன்றாடினார்.

நான் இயன்றவரை அவருக்கு நம்பிக்கையூட்டி, காயங்களை கழுவிவிட்டு A 35 வீதிக்கு அருகில் கொண்டுவந்தேன். அன்று இரவே அப்போராளி சாவைத்தழுவிக் கொண்டார்.

அவரது இலக்கத்தகடு குறியீட்டின் படி ஜெயந்தன் படையணியைச் சேர்ந்த மட்டக்களப்பு போராளியாக இருக்கலாம் எனக்கருதினேன். ஆனால் அவ்விபரம் எங்கும் பதியப்படவில்லை.

இப்படியாக வீரச்சாவடைந்த மாவீரர்களின் விபரங்கள் பதிவுசெய்யப்படாமலே, அவர்களின் வித்துடல்களுடன் அவர்கள் பற்றிய தகவல்களும் விதைக்கப்பட்டு விட்டன அல்லது எரியூட்டப்பட்டுவிட்டன.

வீரத்தின் அடையாளமான புலிவீரர்கள்

இந்தக் கொடூரமான காட்சிகளால் முள்ளிவாய்க்காலே உறைந்துபோயிருந்த அந்தநேரத்தில்தான், அனைவரையும் வியப்பில் ஆழ்த்தும் வகையில் இனி திரும்பி வரவே முடியாத அந்த இறுதி யுத்தத்திற்காக புலிவீரர்கள், வரிப்புலி சீருடையணிந்து யுத்த சன்னத்தர்களாக காட்சியளித்தனர்.

தளபதிகளான பானு, ஜெயம், சூசை, சசிக்குமார் மாஸ்ரர், இரத்தினம் மாஸ்ரர் மற்றும் கபில் அம்மான், இளங்கோ, சொலமன், சிவம் அண்ணை உப்பட பல தளபதிகளும், போராளிகளும் மக்கள் மத்தியிலிருந்து புறப்பட்டுச் சென்றது, மக்களுக்கு கடைசியான சிறு நம்பிக்கையை ஏற்படுத்தியிருந்தது.

இவர்களில் ஒருவராக நின்ற செல்வம் மாமா என்ற மூத்த போராளியைக் கண்டேன். மாமா, நீங்களும் போறீங்களா? எனக் கேட்டேன். கடைசிமட்டும் போவோம் என பதில் கூறிச் சிரித்தார்.

இறுதி யுத்தத்தின் பெருமைக்குரிய வீரர்கள்

முள்ளிவாய்க்கால் போரின் இறுதி அத்தியாயத்தை எழுதுவதற்காக தெரிவு செய்யப்பட்ட புலிவீரர்களின் வீரத்தையும், தியாகத்தையும் அளவிட முடியாது.

மே 16, 2009 இரவு தொடங்கிய தாக்குதல்கள் 48 மணிநேரங்களுக்கு மேலாக நீடித்தது. நந்திக்கடலோரம் நடந்த இந்தப்போரில் வீழ்ந்த 300 இற்கும் மேற்பட்ட மாவீரர்களின் வீரத்தை எதிரிகளின் தளபதிகளே வியந்துரைத்தனர்.

செய் அல்லது செத்துமடி என்ற மந்திரத்துடன் போராடி, ஸ்பார்டாவின் வீர வரலாற்றை புலிவீரர்கள் எம் மண்ணிலும் எழுதிச் சென்றார்கள். ஆனால் இவர்களின் பெயர் விபரங்கள் இன்றுவரை யாருக்கும் தெரியவில்லை. அல்லது வெளிப்படுத்தப் படவில்லை.

பெயர் அறியப்படாத மாவீரர்கள்

இப்படியாக முள்ளிவாய்க்கால் போரின் இறுதிக்கணத்தில் வீரச்சாவடைந்த மாவீரர்கள் பெயர் அறியப்படாத மாவீரர்களாகவே இன்றுவரை பதிவு செய்யப்பட்டுள்ளனர்.

இவர்களின் விபரங்கள் வெளியிடப்படாததும், பெயர் விபரம் தெரியவந்தவர்களுக்கு முறைப்படியான மாவீரர் நிலை அறிவிக்கப்படாததும் நமது போராட்ட வரலாற்றில் சோகம் நிறைந்த பக்கமாகவே பதிவு செய்யப்பட்டுள்ளது.

அத்துடன் நாம் செய்யத்தவறிய கடமைகளின் பட்டியலிலும் இது இடம்பெற்று விட்டுள்ளது. நீண்ட போரியல் வரலாற்றைக் கொண்ட ஐரோப்பிய நாடுகளில், பெயர் அறியப்படாத போர்வீரர்களுக்காக, தனித்துவமான நினைவிடங்கள், சின்னங்கள் அமைக்கப்பட்டுள்ளதை நாம் அறிவோம்.

இதே முன்னுதாரணத்தை மாவீரர் பணிகளில் ஈடுபட்டுள்ள செயற்பாட்டாளர்கள் கவனத்திற்கொள்வது நன்று என கருதுகின்றேன்.

உன் வீட்டு முகவரியை
இறுதி மூச்சில் எனக்குத்தா!
எஞ்சிய வீடுகளில் பிழைத்தவர்கள் மத்தியிலே
உற்றாரைக் கண்டுபிடித்து
உன்னைப் பற்றி சொல்வதற்கு
இன்னுயிரை உவந்தளித்த
உன் துணிவைப் போற்றுதற்கு
வார்த்தைகள் போதவில்லை:
வரலாறு பாடும் உன்னை…

என்ற பாடல் வரிகளைக் கேட்கும்போது, பெயர் அறியப்படாத மாவீரனுக்கும் அவன் பற்றிய செய்திகளுக்காக காத்திருக்கும் அவன் உறவுகளுக்கும் நாம் செய்ய தவறிய கடமைகளுக்காக ஏற்படும் மனச்சாட்சியின் உறுத்தலால் நெஞ்சம் வலிக்கின்றது…

- ரஞ்சித் குமார் இம்மானுவேல்