சிங்கள ஆட்சியாளர்களை கதிகலங்க வைத்த தமிழ் மக்களின் பாதுகாவலன் பிரபாகரன்!

Report Print Samy in கட்டுரை

தந்தை செல்வநாயகத்திற்குப் பின்னர் இந்த நாட்டுத் தமிழ்மக்களது தேசியத்தலைவராகப் பிரபாகரன் இருந்தார்.

1983 ஆம் ஆண்டுக்குப்பின்னர் உலகத்தமிழர்களின் அடையாளமாகவும், தமிழர்களின் தலைநிமிர்வுக்கும், பலத்திற்கும் உயர்வுக்கும் காலம் தந்த சரித்திரத் தலைவனாகவும் விளங்கிய பிரபாகரனது 63ஆவது பிறந்தநாளாகிய இன்று அவரது போரியல் சிந்தனைகள், சாதனைகள் அவரின் சிறப்புகள், தனித்துவங்கள் பற்றி நினைவுகூருதல் பொருத்தமானது.

தமிழினத்தின் விடுதலையை வென்றெடுப்பதற்காக தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பை உருவாக்கி ஆயுதப் போராட்டத்தை 30 ஆண்டு காலம் வரை நடத்திய பிரபாகரன் எதிரிகளாலும், மாற்றுக் கட்சியினராலும் இலங்கையின் முப்படையின் சில உயரதிகாரிகளாலும் கூட விதந்துரைக்கப்பட்டதொரு தலைவராவார்.

இந்திய இராணுவத்திலிருந்த உயரதிகாரிகள் சிலராலும், ஐரோப்பிய நாடுகளைச் சேர்ந்த பல இராஜதந்திரிகளாலும் இன்றும் விதந்து விமர்சிக்கப்படும் வீரத் தலைவராகவே பிரபாகரன் விளங்குகின்றார்.

1983ஆம் ஆண்டு ஜூலை மாதம் 23 ஆம் திகதியன்று நள்ளிரவு வேளை பலாலி வீதி திருநெல்வேலியில் வீதிப் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த இராணுவ வாகனம் மீது நிலக்கண்ணி வெடித்தாக்குதலை மேற்கொண்டதன் மூலம் ஆயுதப் போராட்டத்துக்கு அடி யெடுத்துக் கொடுத்த நாளிலிருந்து, வன்னி முள்ளிவாய்க்காலில் 2009 மே 18 ஆம் திகதி இறுதிப்போர் முடியும் வரை பிரபாகரன் இலங்கையர்களாலும், பன்னாட்டுத் தரப்புகளாலும் அதிகம் பேசப்பட்ட மனிதராக இருந்து வந்துள்ளார்.

இலங்கையில் சிங்கள முஸ்லிம், தரப்புகளிலிருந்தும் பலர் பிரபாகரனைப் போற்றிப் பாராட்டியுமுள்ளனர். பிரபாகரனை தமிழ் சமூகம் ஒரு போதும் மறக்கப்போவதி்ல்லை.

தமிழ்மக்கள் மனங்களில் ஆகக் கூடிய செல்வாக்குடன் இறுதி வரை மதிக்கப்பட்டவர் பிரபாகரன் மட்டும் தான் என கிழக்கு மாகாணத்தைச்சேர்ந்தவரும் முஸ்லிம் காங்கிரசின் முக்கிய தலைவர்களில் ஒருவருமான பசீர் சேகுதாவுத் துணிச்சலான கருத்தை சில ஆண்டுகளுக்கு முன்னர் தெரிவித்திருந்தார்.

தமிழ் மக்களின் தேசிய விடுதலைச் சின்னமாக விடுதலைப் புலிகளும் அதன் தலைவர் பிரபாகரனும் இருந்தார்கள் என்றும் அவர் தெரிவித்திருந்தார்.

முப்பது ஆண்டுகளில் நான்கு ஈழப் போர்களை வழிநடத்திக் காட்டிய தேசியத்தலைவரான பிரபாகரன் இலங்கைப் படைகளாலோ, இந்தியப்படைகளாலோ தன்னை உயிரோடு பிடிக்க முடியாதவாறு தனது பாதுகாப்பு கட்டமைப்பை பலமாக வைத்திருந்தார்.

தமிழீழமே தமிழ் மக்களுக்கான இறுதிவழி என்ற கொள்கை நிலைப்பாட்டில் அவர் மாறாமல் இறுதி வரை சிங்கள அரசுகளை எதிர்த்துப் போராடினார்.

வேலுப்பிள்ளை பார்வதி தம்பதியினருக்கு கடைசி மகனாகப் பிறந்த பிரபாகரன் வல்வெட்டித்துறை ஊரிக்காடு என்ற இடத்திலுள்ள சிதம்பராக் கல்லூரியில் 10 ஆம் வகுப்பு வரை கல்வி கற்றார். பாடசாலையில் கல்வி கற்கும் காலப்பகுதியில் பிரபாகரனின் சித்தனை யோட்டமும் செயற்பாடுகளும் தனித்துவம் மிக்கதாகவே இருந்தன.

தந்தையுடன் பிற இடங்களுக்குச் செல்லும் போது இலங்கைப் படையினர் அப்பாவித் தமிழ் மக்களைத் தாக்குவதைக் கண்டு பல சந்தர்ப்பங்களில் அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தார்.

பிரபாகரன் சிறுவனாக இருந்த காலப்பகுதியில் 1958 ஆம் ஆண்டு முதன் முதலில் அப்போதைய தலைமை அமைச்சரான எஸ்.டபிள்யூ.ஆர்.டி.பண்டாரநாயக்கவின் அரசினால் தமிழ் மக்களுக்கு எதிரான இன வன்முறை தூண்டி விடப்பட்டு நூற்றுக்கணக் கான தமிழ் மக்கள் படுகொலை செய்யப்பட்ட சம்பவமும் அவர் மனதில் மிகவும் ஆழமாகப் பதிந்திருந்தது.

தென்னிலங்கையில் சிங்களக் குண்டர்களால் இன வன்முறையின் போது தமிழ்மக்கள் ஈவு இரக்கமில்லாது கொடூரமாகக் கொல்லப்பட்ட நெஞ்சை உறுத்தும் பல சம்பவங்களை பிரபாகரன் நன்கு அறிந்திருந்தார்.

தமிழ் மக்களுக்கு இந்தகைய இன்னல்கள் எதற்காக ஏற்பட வேண்டும்? அப்பாவித்தமிழ் மக்களுக்கு ஏன் இந்த நிலை தமிழனாக இலங்கையில் பிறந்த குற்றத்துக்காக இப்படித் துயரங்களை அனுபவிக்க வேண்டுமா? என்று பிரபாகரன் மனதில் தமிழ் மக்கள் மீது அனுதாபமும் பரிவும் ஏற்பட்டிருந்தது.

இனவெறி கொண்ட சிங்கள அரசுகளின் பிடிக்குள்ளிருந்து தமிழ் மக்களை மீட்டெடுக்க வேண்டும். என்ற உத்வேகம் பிரபாகரன் மனதில் உருவாகியது. தனது வாலிப வயதை எட்டும் பருவத்தில் ஆயுதப் போராட்டத்தின் மூலமாகவே இதனைச் சாதிக்க முடியும் என்று உணர்ந்தார்.

பிரபாகரனின் காலில் கைக்குண்டு எரிகாயம் ஏற்பட்டது. மருத்துவ சிகிச்சைகளுக்குப் பின்னர் அந்த இடத்தில் கருமையாக இருந்தமையினால் கரிகாலன் என்ற புனைபெயரும் ஏற்பட்டிருந்தது.

தமிழ் மாணவர்கள் பாடசாலைக்கல்வியை முடித்த பின்னர் மேற்படிப்புக்காக பல்கலைக் கழகம் செல்வதற்கு சிங்கள அரசின் தரப்படுத்தல் கொள்கை ஒரு தடையாக இருந்தது. 10 ஆம் வகுப்பு வரையிலும் கல்வி கற்ற பிரபாகரன் விடுதலைப் போராளியாக செயற்படத் தொடங்கிய படியினால் மேற்கொண்டு படிப்பை அவரால் தொடர முடியவில்லை.

பிரபாகரனினது போக்கு அவரது பெற்றோருக்குப் புரியவில்லை. மகன் புரட்சி நடவடிக்கைகளில் ஈடுபட்டிருக்கிறார் என்பதை அறிந்து கொள்ளும் சந்தர்ப்பம் தானே தேடி வந்தது.

ஒரு முறை பிரபாகரனைத் தேடி பொலிஸார் அதிகாலை வேளை 3 மணிக்கு அவரது வீட்டுக் கதவைத் தட்டினர் பொலிஸார் தன்னைத் தேடி வந்ததையறிந்த பிரபாகரன் ஒருவாறாக எவரும் அறியாமல் தப்பி விட்டார்.

அப்போது தான் தமது மகன் இரகசிய இயக்கத்தில் செயற்பட்டு வருகிறார். என்பதை பெற்றோர்களால் உணர முடிந்தது. பிரபாகரனைக் கைது செய்ய வந்த பொலிஸாருக்கும் பெருத்த ஏமாற்றமாகவே முடிந்தது. இதன் பின்னர் பிரபாகரன் தனது சொந்த வீட்டுக்குத் திரும்பவேயில்லை.

தப்பிச்சென்ற பிரபாகரனை பெற்றோர்கள் சமாதானப்படுத்தித் தமது வீட்டிற்கு அழைத்துச் சென்றனர். வீட்டிற்கு வந்த பிரபாகரன்’’ நான் ஒருபோதும் உங்களுக்குப் பயன்பட மாட்டேன். என்னால் உங்களுக்கு எந்தத் தொல்லையும் வேண்டாம். என்னை என்போக்கில் விட்டுவிடுங்கள். இனி எதற்கும் என்னை எதிர்பார்க்காதீர்கள் என்று கூறி விட்டு வீட்டிலிருந்து வௌியேறினார்.

1978ஆம் ஆண்டு ஏப்ரல் மாதமளவில் வன்னி முருங்கன் காட்டுப் பகுதிக்குள் இன்ஸ்பெக்டர் பஸ்தியாம்பிள்ளை உட்பட 04 இலங்கை புலனாய்வுப் படையினர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் நாடெங்கும் காட்டுத்தீயாகப் பரவியது.

பிரபாகரனால் உருவாக்கப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகள் அக்காலகட்டத்தில் நடத்தப்பட்ட இராணுவ நடவடிக்கைகளுக்கு பகிரங்கமாக உரிமை கோரி அறிக்கை விட்டிருந்தனர். இதன்பின் தமிழ்மக்களின் விடுதலைக்கான போராட்டம் தொடர்ந்து பிரபாகரனால் முன்னெடுக்கப்பட்டு வந்தது.

ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சியில் விடுதலைப் புலிகளின் தாக்குதல் நடவடிக்கைகள் தொடர்ந்தன. புலிகளை ஒழிப்பதற்கு கடும் நடவடிக்கைகளையும் அரசும் படைகளும் மேற்கொண்டிருந்தன.

புலிகள் அமைப்பை அழிப்பதற்கு சகல நடவடிக்கைகளை அரசு

மேற்கொள்ள முனைந்த போது ஆயுதப் போரட்டத்தையும் அரசியல் போராட்டத்தையும் உறுதிப்படுத்தி விரிவாக்க வேண்டும் என்ற நோக்கில் பிரபாகரன் அரசாங்கத்தின் அடக்குமுறை நடவடிக்கைகளை முறியடிப்பதற்காக கெரில்லா போர் முறையைப் பலப்படுத்தி அரசியல் பிரிவையும் விரிவாக்க முடிவு செய்தார்.

முப்பது ஆண்டுகள் வரை தமிழினத்தின் விடுதலைக்காகப் போராடிய புலிகளின் தலைவர் பிரபாகரனின் சாவு பற்றிய செய்திகள் இன்று வரையில் ஓர் மர்மம் நிறைந்ததொன்றாகும்.

2009ஆம் ஆண்டு மே மாதம் 17 ஆம் திகதி அல்லது 18 ஆம் திகதி பிரபாகரன் கொல்லப்பட்டு விட்டார் என்ற செய்தியை இலங்கை அரசு அறிவித்திருந்தது. எனினும் இன்று வரை உயிருடன் இருக்கின்றாரா? இல்லையா? என்ற வாதப்பிரதி வாதங்கள் தென் இலங்கையிலும் தமிழ் மக்கள் மத்தியிலும் எழுந்த வண்ணமே இருக்கின்றன.

இந்திய அரசு ராஜீவ்காந்தி கொலை வழக்கை முடிவுக்கு கொண்டு வரும் பொருட்டு பல தடவைகள் பிரபாகரனது இறப்புச் சான்றிதழை வழங்குமாறு கோரியும் இலங்கை அரசு பிரபாகரனது இறப்புச் சான்றிதழை இதுவரை கையளிக்கவில்லை.

இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வொன்றை வழங்காது ஆட்சியாளர்கள் காலத்தை இழுத்தடித்தமையாலேயே வடக்கில் ஆயுதப் போராட்டம் தலை தூக்கியது. பிரபாகரன் என்ற இளைஞர் ஆயுதப் போராட்டத்தை ஆரம்பிக்க காரணமாகியது என இராஜாங்க அமைச்சரான டிலான் பெரேரா கடந்த வருடம் தெரிவித்திருந்தார்.

தமிழர்கள் மத்தியில் பிரபாகரன் இல்லாத நிலையில், இன்று அவரது போராட்டத்தையும் விடுதலையுணர்வையும், வீரத்தையும் அவர்கள் பாராட்டுவதிலிருந்து, பெருந்தலைவராக பிரபாகரன் தமிழ் மக்கள் மத்தியில் எத்தகைய மதிப்புக்கும் மரியாதைக்கும் உரியவராகியிருந்தார் என்பது தெட்டத் தௌிவாகிறது.

உலகின் எந்தவொரு விடுதலை இயக்கமும் சந்தித்திராத பல சரிவுகளை, பல திருப்பங்களை பல நெருக்கடிகளை பிரபாகரன் சந்தித்திருந்தார். இவ்வாறான துணிச்சல் மிக்கவீரனாக செயற்பட்டு வந்ததுடன் கொண்ட கொள்கையில் உறுதியாகவேயிருந்தார்.

இலங்கையில் தமிழினம் நிம்மதியாக வாழ வேண்டும் என்பதற்காக தனது தமிழீழக் கனவை எடுத்தியம்பினார். இதன் காரணமாகவே தமிழ் மக்கள் போராட்டத்தை நேசித்தனர். இப்போராட்டத்தால் பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்கள் உயிரிழந்தனர். அப்படியிருந்தும் பிரபாகரனுடைய போராட்டம் சரியானதேயென இன்றும் பெரும்பாலான மக்கள் கருதுகின்றனர்.

நோர்வே நாட்டின் முன்னாள் வௌிவிவகார அமைச்சரும் தூதுவருமான எரிக் சொல்ஹெய்ம் பிர பாகரன் குறித்த தனது கருத்தை சில ஆண்டுகளுக்கு முன்னர் பதிவு செய்திருந்தார். தனது தாயக விடுதலை குறித்த உறுதியிலிருந்து இலங்கை அரசுக்கு விலை போகாத பிரபாகரன் இறுதி நிமிடம் வரை மாறவில்லை, என்றும் குறிப்பிடுகின்றார்.

தேசியத்தலைவர் என்று கூறத்தக்க ஒரே ஒரு தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன். அவருக்கு முன்பும் அப்படி ஒரு தேசியத்தலைவர் இருந்ததுமில்லை. இனியும் இன்னுமொரு தேசியத் தலைவர் உருவாகப் போவதுமில்லை என தமிழரசுக் கட்சியின் முக்கியஸ்தவரும் வடக்கு மாகாண சபையின் தவிசாளருமான சீ.வே.கே. சிவஞானம் தெரிவித்திருந்தார்.

பிரபாகரன் போரில் ஈடுபட்டது பகவத்கீதையை அடிப்படையாகக் கொண்டுதான் எனவும், கீதாசார தர்மம் போர் எனவும் ஸ்ரீ ஜெயவர்த்தனபுர பல்கலைக்கழக வரலாறு மற்றும் தொல்லியற்துறை பீட பேராசிரியர் ரி.ஜீ.குலதுங்க 2013ஆம் ஆண்டு தெரிவித்திருந்தார்.

நவம்பர் மாதம் 26ஆம் நாள் பிரபாகரனின் பிறந்தநாள் என்பது ஈழத் தமிழர்களின் மனதிலிருந்து எழுகின்ற எழுச்சிநாள். நவம்பர் 27ஆம் நாள் மாவீரர் நாளாக உணர்ச்சி பூர்வமாக கொண்டாடப்படுகின்ற நாள்களாகும்.

தமிழ் மக்களின் உரிமைகளுக்காகப் போராடிய வீரத் தலைவனாக – காவிய நாயகனாக போற்றப்படுபவராக என்றும் மனக் கண் முன்னால் வலம் வருகின்ற தலைவர் பிரபாகரன்.

தமிழினம் தோற்றுப் போகின்ற இனமல்ல. தோற்கடிக்க முடியாத இனம் என்று வீர முழக்கமிட்ட தலைவரான பிரபாகரனது புகழுக்கு அழிவென்பது கிடையாது என்பது வரலாறு கூறும் செய்தியாகும்.

தமிழர்களின் விடுதலைப் போராட்டம் ஜெனிவா வரை கொண்டு செல்லப்பட்டு இன்று அதி முக்கியத்துவம் பெறுவதற்கும் இப்பிரச்சினை தொடர்ந்தும் தீர்க்கப்படாததால் இலங்கை அரசுக்கு பன்னாட்டு அழுத்தங்களும், நெருக்கடிகளும் உருவாகிக் கொண்டிருப்பதற்கும் தலைவர் பிரபாகரன் என்ற சக்திமிக்க மாவீரனே காரணமாகும்.

அந்த சக்தி மிக்க வீரத் தலைவனின் பிறந்தநாள் தமிழர்களுக்கு எழுச்சி நாள் என்பதில் மாற்றுக்கருத்தில்லை.

newuthayan