கோத்தபாயவின் கைது சாத்தியமா?

Report Print Subathra in கட்டுரை

அரசியல் மட்டத்தில் பெரியளவில் எதிர்பார்க்கப்பட்டது போல கோத்தபாய ராஜபக்ஷவின் கைது கடந்த மாதம் 22ஆம் திகதி நடைபெறவில்லை. கோத்தபாய ராஜபக்ஷ கைது செய்யப்படவுள்ளார் என்று செய்திகள் வெளியாகிய போதிலும் இதுவரையில் அந்த நிகழ்வு நடக்கவில்லை.

கடந்த வாரம் மேல்முறையீட்டு நீதிமன்றில் தம்மைக் கைது செய்வதற்கு இடைக்கால தடை உத்தரவு ஒன்றையும் கோத்தபாய ராஜபக்ஷ பெற்றிருக்கிறார்.

கோத்தபாய ராஜபக்ஷ உண்மையிலேயே கைது செய்யப்படவுள்ளாரா அல்லது அவரைக் கைது செய்வதற்கு அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக ஒரு கதை பரப்பப்பட்டு அரசியல் ஆதாயம் தேடப்படுகிறதா என்ற சந்தேகங்களும் உள்ளன.

பொது சொத்துக்கள் சட்டத்தின் கீழேயே கோத்தபாய ராஜபக்ஷவை கைது செய்வதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதாக கூறப்பட்டது. அதனால் தான் அந்த சட்டத்தின் கீழ் அவரை கைது செய்வதற்கு இடைக்கால தடை உத்தரவு பெற்றப்பட்டுள்ளது.

அம்பாந்தோட்டையில் தனது தந்தையான டீ.ஏ. ராஜபக்சவின் நினைவிடத்தை புனரமைப்பதற்கு பாதுகாப்பு அமைச்சுக்காக ஒதுக்கப்பட்ட நிதியை பயன்படுத்தி மோசடி செய்தார் என்பதே அவர் மீது கூறப்படும் குற்றச்சாட்டு.

இது குறித்து நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவு விசாரணைகளை நடத்தி வந்தது. எனினும் கோத்தபாய ராஜபக்ஷவை கைது செய்வதற்கு சட்டமா அதிபர் திணைக்களம் அனுமதித்திருக்கவில்லை அதனால் தான் அவரை இதுவரையில் கைது செய்ய முடியாத நிலை காணப்பட்டது.

அமெரிக்காவுக்கு சென்று விட்டு சில வாரங்களுக்கு முன்னர் நாடு திரும்பிய கோத்தபாய ராஜபக்ஷ கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்படவுள்ளார் என்று தகவல் பரவியிருந்தது. அப்போது அவருக்கு ஆதரவாக பௌத்த பிக்குகள், ஆதரவாளர்கள் பலரும் விமான நிலையத்திற்கு படையெடுத்திருந்தனர். ஆனால் எந்த சிக்கலும் இல்லாமல் வெளியே வந்தார் கோத்தபாய ராஜபக்ஷ.

அதற்கு பின்னர் தான் கோத்தபாய ராஜபக்ஷவை கைது செய்வதற்கு சட்டமா அதிபர் திணைக்களத்தின் அனுமதி கிடைத்தது.

இப்போது சட்டமா அதிபரின் அனுமதி கிடைத்தும் கோத்தபாய ராஜபக்ஷவை கைது செய்ய முடியவில்லை. கடந்த 22ஆம் திகதி அவர் கைது செய்யப்படவுள்ளதாக செய்திகள் பரவின அதற்கு முதல் நாளே மஹிந்த ராஜபக்ஷ வெளியிட்டிருந்தார்.

கைது நடக்க போவதாக கூறப்பட்ட 22ஆம் திகதிக்கு முதல் இரவு அதாவது 21ஆம் திகதி இரவு பொள்ள பிக்குகள் குழுவொன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்து பேசியது.

அதையடுத்தே கோத்தபாய ராஜபக்ஷவின் கைது திட்டம் கைவிடப்பட்டுள்ளதாக ஒரு தகவல்.

உயர்மட்ட கைதுகள் தொடர்பாக ஜனாதிபதியிடம் அனுமதி கோரப்படுவது வழக்கம் என்றும் அவ்வாறு அனுமதி பெறப்பட்ட பின்னரே கைது நடக்கும் என்றும் இன்னொரு தகவல்.

இப்படியே கோத்தபாய ராஜபக்ஷவின் கைது தொடர்பான தகவல்கள் நீண்டு கொண்டே சென்றன. அதற்கிடையில் மேல் முறையீட்டு நீதிமன்றில் கைது செய்வதற்கு இடைக்கால தடை உத்தரவை அவர் பெற்றுக் கொண்டார்.

இந்த மனு தொடர்பான சட்டமா அதிபரின் கருத்தை மேல் முறையீட்டு நீதிமன்றம் கேட்கவில்லை என்றும் ஒருத் தலைப்பட்சமாகவே இடைக்காலத் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும், பிரதி சொலிசிற்றர் ஜெனரால் தில்ருக்சி தெரிவித்திருந்தார்.

இப்போதைய நிலையில் டிசம்பர் 6ஆம் திகதி வரையில் கோத்தபாய ராஜபக்ஷவைக் கைது செய்ய முடியாது. அதற்குப் பின்னரும் அவரைக் கைது செய்ய அரசாங்கம் நடவடிக்கை எடுக்குமா என்பது முக்கியமான கேள்வி.

ஏனெ்றால் அரசாங்கத்துக்குள் கோத்தபாய ராஜபக்ஷவைக் கைது செய்வது தொடர்பாக முரண்பட்ட கருத்துக்கள் உள்ளன.

அமைச்சர் சரத் அமுனுகம கோத்தபாய ராஜபக்ஷவை கைது செய்ய வேண்டிய தேவை இல்லை என்று கூறியிருக்கிறார். வேறு சில அமைச்சர்களும் இந்த கைது நடவடிக்கையை தடுப்பதில் அக்கறை காட்டுகின்றனர்.

ஐ.தே.கவில் உள்ள சிலரும் கூட கோத்தபாய ராஜபக்ஷ கைது செய்யப்பட வேண்டுமா என்ற கேள்வியை எழுப்புவதாக தெரிகிறது.

இப்படியான நிலையில் கோத்தபாய ராஜபக்ஷவைக் கைது செய்வதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்குமா என்பது சந்தேகத்துக்குரிய விடயமாகவே உள்ளது.

கோத்தபாய ராஜபக்ச கைது செய்யப்பட்டால் பௌத்த பிக்குகள் வீதியில் இறங்கிப் பேராட்டம் நடத்துவார்கள் என்று பௌத்த பிக்குகள் சிலர் மாத்திரமன்றி, முன்னாள் அமைச்சர் மேர்வின் டி சில்வா போன்றவர்களும் கூட எச்சரிக்கை விடுத்து வருகின்றனர்.

புதிய அரசியலமைப்பைத் தோற்கடிக்க எலிய அமைப்பின் மூலம் தீவிர பிரச்சாரத்தை முன்னெடுப்பதைத் தடுக்கவே கோத்தபாய ராஜபக்ஷவை கைது செய்ய அரசாங்கம் முயற்சிப்பதாக மஹிந்த ராஜபக்ஷ கூறியிருந்தார்.

கோத்தபாய ராஜபக்ஷவை அவசரப்பட்டு கைது செய்வதற்கு எடுக்கப்படும் நடவடிக்கைகள் அரசாங்கத்திற்கு பாதகமான விளைவுகளையே ஏற்படுத்தக்கூடும்.

தற்போதைய நிலையில் அரசாங்கம் அத்தனையதொரு நடவடிக்கைகளை முன்னெடுக்குமானால் அது ஆழம் தெரியாமல் காலை விட்ட கதையாகவும் முடிந்து போகலம்.

கோத்தபாய ராஜபக்ஷவுக்கு எதிராக போர்க்குற்றங்கள் தொட்டம் நிதி மோசடி உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டு சுமத்தப்பட்டிருந்த போதிலும், இப்போது அவரை கைது செய்வதற்கு பொதுச் சொத்து சட்டத்தை பயன்படுத்த முயற்சிக்கப்படுகிறது.

இந்த சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டால், அவர் சில நாட்களில் வெளியே வந்து விடுவார். நாமல் ராஜபக்ஷ, யோஷித ராஜபக்ஷ போன்றவர்களைக் கைது செய்து அரசாங்கம் எதையும் சாதிக்கவில்லை. ஒரு சில வாரங்களில் அவர்கள் வெளியே வந்தார்கள்.

அது போலத்தான் கோத்தபாய ராஜபக்ஷவின் கைதுக்கு பின்னரும் சில நாட்களில் அவர் வெளியே வந்து விடுவார். கோத்தபாய ராஜபக்ஷவை பிடித்து உள்ளே தள்ளிளோம் என்ஞ பெறுமை பேசிக் கொள்வதற்கு மாத்திரமே அந்த நடவடிக்கை உதவலாம்.

கோத்தபாய ராஜபக்ஷவுக்கு எதிராக விசாரணைகளை நடத்த அல்லது அவர் நடவடிக்கை எடுக்க இதனை விடவும் வலுவான பல வழக்குகள், விவகாரங்கள் இருந்த போதிலும், பொதுச் சொத்துக்கள் சட்டத்தின் கீழ் அவரை கைது செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படுவது ஏன் என்பது குழப்பமாகவே உள்ளது.

கோத்தபாய ராஜபக்ஷவின் கைது என்பது அவரது அடுத்தகட்ட அரசியல் வளர்ச்சியைத் தடுப்பதற்கானதா அல்லது உந்தித் தள்ளுவதற்கானதாக என்பது தான் முக்கியமான கேள்வி.

உள்ளுராட்சித் தேர்தல் இன்னும் இரண்டு மாதங்களில் நடக்கப் போகின்ற சூழலில், கோத்தபாய ராஜபக்ஷவின் கைதும், அதனைத் தொடர்ந்து ஏற்படக் கூடும் என்று எதிர்பார்க்கப்படும் நிகழ்வுகளும் அரசாங்கத்தைப் பொறுத்தவரையில் பாதகமானதாகவே இருக்கும்.

போர்க் கதாநாயகனாக சிங்கள மக்களால் பார்க்கப்படுபவர் கோத்தபாய ராஜபக்ஷ என்பதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை.

அவ்வாறான ஒருவர் கைது செய்யப்படும் போது, போர் வீரர்களை அரசாங்கம் பழி வாங்குகிறது, பொய் வழக்குப் போட்டு சிறைக்குள் தள்ளுகிறது என்று இதுவரை எதிரணியினர் கூறி வந்த குற்றச்சாட்டுக்கள் எல்லாமே உண்மை என்றாகி விடும்.

இது கோத்தபாய ராஜபக்ஷவின் செல்வாக்கை அதிகரிக்கச் செய்யும். அத்துடன், வரப்போகும் உள்ளுராட்சித் தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷ அணியினரை அரசியல் ரீதியாகவும் பலப்படுத்தும். அரசாங்கத்தைப் பலவீனப்படுத்தும் வாய்ப்புகளும் உள்ளன.

மஹிந்த ராஜபக்ஷ ஆட்சியில் ஆயிரக்கணக்கான கோடி ரூபா ஊழல் செய்யப்பட்டதாக குற்றச்சாட்டுக்கள் கூறிய அரசாங்கம், இதுவரையில் அதற்கு எதிராக என்ன நடவடிக்கையை எடுத்துள்ளது என்பது கேள்வி.

கோத்தபாய ராஜபக்ஷவின் கைது போதிய ஆதாரங்களுடன் அவரை சட்டத்தினால் தண்டிக்கப்படும் அளவுக்கு வலுவான ஆதாரங்களுடன் நிகழுமேயானால் அது அரசாங்கத்தை பலப்படுத்தும்.

அதேவேளை, வெற்று ஆதாரங்களுடன் அவரை கைது செய்து சிறையில் தள்ளுவதால் எந்த பலனையும் அரசாங்கம் அடையப் போவதில்லை. அவ்வாறான முயற்சி கோத்தபாய ராஜபக்ஷவை இன்னும் பலமானவராக வெளிப்படுத்தவே உதவியாக அமையும்.

இந்தநிலையில் அரசாங்கம் எவ்வாறு செயற்படப் போகிறது என்று தெரியவில்லை. அரசாங்கம் என்ன நினைகிறதோ அதிகாரிகள் பலரும் அதற்கு நேர்மாறாக செயற்படுகிறார்கள்.

அவர்கள் கோத்தபாய ராஜபக்ஷவை பலப்படுத்துவதற்காகக் கூட அவரைக் கைது செய்ய முனையலாம்.

கடந்த அரசின் நிழல் இன்னமும் அகலாத நிலையில் கோத்தபாய ராஜபக்ஷவின் கைது என்பது அரசியல் ரீதியாக நெருக்கடி ஒன்றை ஏற்படுத்துவதற்கும் பயன்படுத்தப்படும் சாத்தியம் உள்ளது.