பரபரப்பாகும் தென்னிலங்கை அரசியல்! மைத்திரியின் வாளுக்கு இலக்காகப் போவது யார்?

Report Print Jeslin Jeslin in கட்டுரை

இலங்கையின் அரசியல் வரலாற்றில் நாளைய தினம் ஏற்படும் மாற்றங்கள் என்ன..? தென்னிலங்கை அரசியல் களத்திலும் சரி, நாட்டு மக்களிடத்திலும் சரி நாளைய தினம் குறித்த ஒரு எதிர்ப்பார்ப்பு தற்போது எழுந்துள்ளது.

ஆம், நாளைய தினம் சர்சைக்குரிய மத்திய வங்கியின் பிணை முறி மோசடி தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கை தொடர்பில் ஜனாதிபதி வெளியிடும் சிறப்பு அறிக்கைக்காக அனைத்து தரப்பினரும் எதிர்ப்பார்ப்புடனேயே காத்திருக்கின்றனர்.

எதிர்வரும் பெப்ரவரி மாதம் உள்ளூராட்சி சபைத் தேர்தல் இடம்பெறவுள்ள நிலையில் இந்த விசாரணை அறிக்கை தொடர்பான உள்ளடக்கங்கள் வெளியிடப்படுமிடத்து அது பொதுமக்களின் கவனத்தை முழுமையாக ஈர்ப்பதாக அமையும்.

மத்திய வங்கியின் பிணைமுறி மோசடி தொடர்பாக ஆராய்வதற்கும், விசாரணை நடத்துவதற்கும் கடந்த வருடம் ஜனவரி மாதம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் நீதியரசர் கே.ரி.சித்ரசிறி தலைமையிலான விசேட ஆணைக்குழு ஒன்று அமைக்கப்பட்டது.

இந்நிலையில், மத்திய வங்கியின் பிணைமுறி மோசடி தொடர்பாக அமைக்கப்பட்டிருந்த ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கை கடந்த 30ஆம் திகதி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கையளிக்கப்பட்டிருந்தது.

ஆணைக்குழுவின் தலைவரான நீதிபதி கே.ரி.சித்ரசிறி குறித்த அறிக்கையினை ஜனாதிபதியிடம் கையளித்திருந்தார்.

அதனைத் தொடர்ந்து 1, 400 பக்கங்களைக்கொண்ட குறித்த அறிக்கையை முழுமையாக ஆராய்ந்ததன் பின்னர் அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.

ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவினால் ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்ட இந்த அறிக்கையானது, சாட்சியங்கள், இணைப்புகள், பரிந்துரைகளை உள்ளடக்கிய 100 இணைப்புக்களுடனும், 1,400 பக்கங்களைக் கொண்டதாகவும் அமைந்துள்ளது.

மேலும், 70 சாட்சிகளின் சாட்சியங்களையும் உள்ளடக்கியதாக குறித்த அறிக்கை அமையப்பெற்றுள்ளது.

முன்னாள் மத்திய வங்கியின் ஆளுனர் அர்ஜூன் மகேந்திரன் மீது பாரிய குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளதாகவும், அதனுடன் அரசியல் முக்கியஸ்த்தர்கள் சிலர் தொடர்புபட்டுள்ளதாகவும் அறியக் கிடைக்கின்றது.

மேலும், மத்திய வங்கியின் முன்னாள் ஆளுனர் அர்ஜூன் மகேந்திரனின் மருமகன் அர்ஜூன் அலோசியஸ் மீதும் கடுமையான குற்றச்சாட்டுக்களும் முன்வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில், குறித்த அறிக்கை தொடர்பாக நாளைய தினம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சிறப்பு அறிக்கை வெளியிடவுள்ளதாக அறிவித்துள்ளமை அரசியல் தரப்பிலும், பொதுமக்களிடத்திலும் பலத்த எதிர்ப்பார்ப்புக்களை தோற்றுவித்துள்ளது.

அத்துடன், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் அடுத்தக்கட்ட நடவடிக்கை என்ன? இதில் சிக்கிக்கொள்ளும் அந்த அரசியல் பிரமுகர்கள் யார்? மைத்திரியின் களையெடுக்கும் நடவடிக்கையில் பிடுங்கி எறியப்படுபவர்கள் யார்?? என்ற கேள்வி எம் அனைவரது மத்தியிலும் தொக்கி நிற்கின்றது.

இந்நிலையில், முன்னாள் வெளிவிவகார அமைச்சரும், நல்லாட்சி அரசின் முதலாவது நிதி அமைச்சருமான ரவி கருணாநாயக்க பிணை முறி மோசடியுடன் தொடர்புபட்டுள்ளதாக அவர் மீது கூட்டெதிர்க்கட்சியினர் நம்பிக்கையில்லாப் பிரேரணையை கொண்டு வந்திருந்தனர்.

கூட்டெதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் 32 பேர் கையெழுத்திட்டு குறித்த நம்பிக்கையில்லாப் பிரேரணை கடந்த ஒகஸ்ட் மாதம் 3ஆம் திகதி நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டது.

முன்னாள் மத்திய வங்கி ஆளுனர் அர்ஜூன் மகேந்திரனின், மருமகனான, வர்த்தகர் அர்ஜூன் அலோசியஸூடன் வர்த்தக தொடர்புகளை வைத்திருந்தார் என்று அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.

அதனைத் தொடர்ந்து ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாகிய ரவி கருணாநாயக்க தனக்கு இது தொடர்பில் ஏதும் தெரியாது என குறிப்பிட்டிருந்தார்.

எனினும், அரசியல் உந்துதல்களினாலும், தொடர்ந்து கொடுக்கப்பட்ட அழுத்தங்களினாலும் முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக்க பதவி விலகியிருந்தார்.

இதுபோல இன்னும் பல முக்கிய அரசியல் பிரமுகர்கள் இந்த பிணை முறி மோசடியுடன் தொடர்புபட்டுள்ளதாக அறியமுடிகின்ற நிலையில், ஜனாதிபதியின் விசேட அறிக்கை வெளியானவுடன் முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக்கவைப் போல அவர்களும் பதவி துறக்க வேண்டிய நிலை ஏற்படுமா? அல்லது பதவியில் இருந்து தூக்கி எறியப்படுவார்களா என்ற கேள்வி எழுகின்றது.

மேலும், குறித்த பிணைமுறியுடன் தொடர்புடைய பெர்ப்பச்சுவல் ட்ரசரிஸ் நிறுவனத்திடம் ஐக்கிய தேசியக் கட்சியைச் சேர்ந்த 20 அரசியல் பிரமுகர்கள் இலஞ்சம் பெற்றுக்கொண்டுள்ளதாக முன்னதாக குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.

அத்துடன் குறித்த பிணை முறி மோசடி தொடர்பான விசாரணைகளின் போது, பிரதமர் ரணில் விக்ரமசிங்க உள்ளிட்ட சில அமைச்சர்களும் விசாரணைக்காக அழைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

தற்போது குறித்த விசாரணைகள் அனைத்தும் முடிவுற்ற நிலையில், அந்த அறிக்கையின் வெளிப்பாடு நாளைய தினம் எவ்வாறான மாற்றங்களை ஏற்படுத்தும் என்ற ஆவல் அனைவரிடத்திலும் நிலவுகின்றது.

இந்நிலையில், ஜனாதிபதி ஆணைக்குழுவின் குறித்த அறிக்கையின் வெளிப்பாடு எதிர்வரும் நாட்களில் நாட்டின் அரசியலில் என்னென்ன மாற்றங்களை கொண்டு வரக்காத்திருக்கின்றது, எதிர்வரும் உள்ளூராட்சிசபைத் தேர்தலில் இது தாக்கம் செலுத்துமா?

கூட்டரசாங்கத்தில் பிளவினை ஏற்படுத்தும் வகையில் ஏதேனும் தாக்கங்கள் ஏற்படுமா? நல்லாட்சி அரசின் ஸ்த்திரத்தன்மை இதன்மூலம் பாதிக்கப்படுமா என்ற கேள்விகளும் எழுகின்றன.

மேலும், ஐக்கிய தேசிய கட்சிக்கும், ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சிக்குமான புரிந்துணர்வு உடன்படிக்கை டிசம்பர் 31ஆம் திகதியுடன் முடிவடைந்திருந்த நிலையில், குறித்த உடன்படிக்கையை நீடிப்பு செய்வதிலும் இந்த பிணைமுறி அறிக்கை தாக்கம் செலுத்தும் என அறிய முடிகின்றது.

குறித்த பிணைமுறியு மோசடியுடன் அதிகளவிலான ஐக்கிய தேசியக் கட்சியினை பிரதிநிதித்துவப்படுத்தும் பிரமுகர்கள் தொடர்பு பட்டிருக்கும் நிலையில், இந்த புரிந்துணர்வு உடன்படிக்கையை ஜனாதிபதி நீடிப்பாரா அல்லது ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சியினரின் அழுத்தத்தின் பிரகாரம் உடன்படிக்கை முடிவுக்குக் கொண்டு வரப்படுமா என்பதுடன், தொடர்புபட்ட ஐக்கிய தேசிய கட்சியைச் சேர்ந்தவர்களுக்கு ஜனாதிபதியின் தண்டனை எவ்வாறு அமையும் என்பது தொடர்பிலும் கேள்விகள் எழுகின்றன.

அதனடிப்படையில் குறித்த புரிந்துணர்வு உடன்படிக்கை முடிவுறுத்தப்படும் நிலையில், அடுத்தகட்டமாக மகிந்த மற்றும் மைத்திரியின் இணைவுகூட சாத்தியப்படலாம் என்ற நிலையும் தோன்றியுள்ளது.

எனினும் 1,400 பக்கங்களைக் கொண்ட குறித்த அறிக்கையை நான்கு நாட்களில் முழுதுமாக ஆராய்ந்து அதன்படி தீர்வினை மேற்கொள்ளும்போது அது பக்கச்சார்பானதாக அமையுமா என்ற கேள்விகூட எழச்செய்கின்றது.

அண்மையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, நாட்டில் தூய்மையான அரசியல் கலாச்சாரத்தை ஏற்படுத்தவுள்ள பயணத்தில் தனது வாளுக்கு இலக்காகுபவர்கள் குறித்து தனக்கு பிரச்சினை இல்லை எனவும்,

தனது வாளுக்கு எந்த கட்சி, எந்த உறவினர், நெருக்கமானவராக அல்லது யாருடைய, யார் என்பது எல்லாம் தனக்கு முக்கியம் இல்லை எனவும் குறிப்பிட்டிருந்தார்.

இதனடிப்படையில் நாளைய தினம் மைத்திரியின் அறிக்கை அமையுமாக இருந்தால், மைத்திரியின் வாளுக்கு இலக்காகுபவர்கள் யார்?

எனவே பொருத்திருந்து பார்க்கலாம் மைத்திரியின் நாளைய அறிவிப்புக்களில் சிக்கிக்கொள்ளும் அந்த கருப்பு ஆடுகள் யார்? என்பதையும் பிடுங்கி எறியப்படும் களைகள் யார் என்பதையும்....!