புலிகளும், இராணுவத்தினரும் முக்கியத்தும் அறிந்த வடக்கின் நுழைவாயில்..! முதலமைச்சரின் அதிரடி முடிவால் ஏற்பட்ட மாற்றம்?

Report Print Theesan in கட்டுரை

வவுனியா மாவட்டம் வடக்கின் நுழைவாயில் என அழைக்கப்படுகிறது. தெற்கையும், வடக்கையும் இணைக்கின்ற கேந்திர ஸ்தானமாக உள்ளது. வன்னியின் முத்து என்று கூட வர்ணிக்கலாம்.

விடுதலைப்புலிகளும், இராணுவத்தினரும் போராட்ட காலத்தில் இதன் முக்கியத்துவம் கருதி எழுதப்படாத ஒப்பந்தம் மூலம் பொதுமக்கள் வந்து செல்லக்கூடிய இடமாக பிரகடணம் செய்யாத சமாதான வலயமாக நீண்ட காலம் கையாண்டு வந்தனர்.

இந்த விடயம் இலங்கையின் அனைத்து மக்களுக்கும் வவுனியா நகரம் முக்கியத்துவம் மிக்கது என்பதை காட்டி நிற்கிறது.

தற்போது இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பியுள்ள நிலையில் வடக்கினதும், தெற்கினதும் இணைப்பு பாலமாக வவுனியா நகரம் மீண்டும் எழுச்சி கண்டுள்ளது. வவுனியாவை தம்புள்ள, குருநாகல், பிபிலை போன்ற சந்தி நகரங்கள் அட்டவணையில் இணைக்கமுடியும் .

சாதாரண சூழ்நிலை நிலவிவரும் இக்காலத்தில் வவுனியாவிற்கு இலங்கையின் பல்வேறு பிரதேசங்களில் இருந்தும் பேருந்து மூலம் தினமும் ஆயிரக்கணக்கானோர் வந்து செல்கின்றார்கள்.

இந்நிலையில், வவுனியாவின் பேருந்து போக்குவரத்து சேவைகளில் ஏற்படும் தேக்க நிலை இலங்கையின் அனைத்து பிரதேச பயணிகள் இடையேயும் குறிப்பாக வடக்கு நோக்கிய பயணிகளின் அதிர்வுகளை ஏற்படுத்தும்.

இதனால் தரமான சீரான போக்குவரத்து சேவையை வழங்க வேண்டிய அவசியம் வவுனியா போக்குவரத்து துறையினருக்கு இருக்கிறது.

காலி, கொழும்பு, கதிர்காமம், புத்தளம், இரத்தினபுரி, குருநாகல், அனுராதபுரம், பதுளை என நாட்டின் தென்பகுதி மலையகப்பகுதி மக்கள் வடக்கின் நுழைவாயிலாக வவுனியாவை அடையாளம் காண்கின்றனர்.

அதுமட்டுமல்லாது, கிழக்கு மாகாணம், மன்னார், முல்லைத்தீவு, கிளிநொச்சி மற்றும் யாழ்ப்பாண பயணிகளின் பொற்கதவாக (கோல்டன் கேற்) வவுனியா நகரம் விளங்குகிறது.

பல நகரங்களின் பயணிகளின் சங்கமம் இங்கு இருப்பதால் பயணிகள் இடம்மாறிச்செல்லும், பேருந்து போக்குவரத்து மையமாகவும், இது சிறப்புப் பெறுகிறது. இதனால்தான் போக்குவரத்து நகரம் என்ற பதம் பயன்படுத்தப்பட்டது.

அண்மைக்காலமாக நிலவிவந்த போக்குவரத்து சீரின்மை தற்போது முடிவுக்கு வந்திருப்பது பலருக்கு பெரிய நிம்மதியை ஏற்படுத்தி உள்ளது.

எனினும், முதல்வரின் அதிரடி முடிவு கடந்த நாட்களில் ஏற்படுத்திய மாற்றம் பாரியது. புது வருடம் ஆரம்பித்த நாளில் இருந்து வடக்கில் போராட்டம், கடையடைப்பு என்பன ஆரம்பித்து விட்டன.

இலங்கைப் போக்குவரத்துச் சபையினரின் 3 அம்ச கோரிக்கைகளை ஏற்று, முதலமைச்சரினால் பிறப்பிக்கப்பட்ட ஆணையினை நகர்த்தாவிடின், முதலமைச்சரின் உருவப் பொம்மையை எரிக்கும் சூழ்நிலை ஏற்படுமென்று வடமாகாண இலங்கை போக்குவரத்துச் சபையினர் எச்சரிக்கை விடுக்கும் அளவிற்கு போராட்டம் உக்கிரமடைந்தது.

இலங்கைப் போக்குவரத்துச் சபையின் வடமாகாண சாலை ஊழியர்கள் வியாபார நிலையங்களை மூடி எதிர்ப்பு தெரிவித்தனர். அது மூடப்பட்டதன் காரணமாக அப்பகுதியில் வர்த்தகத்தில் ஈடுபட்ட சுமார் 147 வர்த்தக நிலையங்களை மூடிவிடும் நிலை ஏற்பட்டது.

வடக்கு முதல்வர் இதற்கு முடிவு கட்டும் விதமாக எடுத்த நடவடிக்கையால் எல்லா சீற்றமும் தனிந்து விட்டது என்றுதான் கூற வேண்டும். “ஒரு உறையினுள் இரண்டு வாள்” நிலையில் தமது சேவைகளை செய்வதில் பலத்த போராட்டங்களை சந்தித்த இரு தரப்பினரும் முதலமைச்சரின் அதிரடி முடிவால் இன்று தமது அனைத்து எதிர்ப்புகளையும் கைவிட்டு ஒரு குடையின் கீழ் சேவையில் ஈடுபடத் தொடங்கியுள்ளமை பாராட்டப்படக்கூடியது.

இது வடமாகாணத்தில் உள்ள தனியார் மற்றும் இலங்கைப் போக்குவரத்து சபையினரின் ஒன்றிணைந்த போக்குவரத்து சேவையின் ஒரு நல்ல முன் உதாரணமாக மாறி இருக்கிறது.

காலப்போக்கில் ஏனைய மாவட்டங்களிலும் முதலமைச்சர் இவ்வாறான ஒருங்கிணைந்த சேவையை அமுல் செய்ய ஆலோசனை வழங்கலாம். பொருத்திருந்து பார்ப்போம் முதல்வரின் அடுத்தக்கட்ட முடிவில் என்ன என்ன மாற்றம் நிகழும் என்பதை...