சுமந்திரன் தொடுத்துள்ள போர்!

Report Print Habil in கட்டுரை

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுதந்திரன் ஊடகங்களுடன் தொடங்கியுள்ள பனிப்போர் தீவிரமடைந்திருக்கிறது.

அண்மையில் பருத்தித்துறையில் நடந்த உள்ளூராட்சித் தேர்தலுக்கான வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் கூட்டத்தில் அவர் நிகழ்த்திய உரையில் ஏக்கிய இராஜ்யவை ஏற்றுக்கொள்கிறோம் என்று கூறியிருந்தார்.

அரசியலமைப்புக்கான இடைக்கால அறிக்கையில் ஏக்கிய இராஜ்ய என்ற பதத்துக்கு ஒருமித்த நாடு என்றே வியாக்கியானம் கூறப்பட்டுள்ளது என்றும் அதன் அடிப்படையிலேயே ஏக்கிய இராஜ்யவை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஏற்றுக்கொள்வதாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

ஆனால் ஊடகங்கள் பலவும் அவரது உரையை வைத்து கூட்டமைப்பு ஒற்றையாட்சிக்கு இணங்கி விட்டதாக செய்திகளை வெளியிட்டிருந்தன.

இதையடுத்து யாழ்.நகரப் பகுதியில் கூட்டமைப்பின் முஸ்லிம் வேட்பாளர்களை அறிமுகப்படுத்தும் கூட்டம் ஒன்று நடந்தது. அதில் பங்கேற்று உரையாற்றிய பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுதந்திரன் ஊடகங்கள் மீது கடுமையான குற்றச்சாட்டுகளையும் விமர்சனங்களையும் முன்வைத்தார்.

தான் கூறாத விடயங்களை ஊடகங்கள் பொய்யாக எழுதுவதாக அவர் குற்றஞ்சாட்டியிருந்தார். ஏக்கிய இராஜ்ய என்பது ஒருமித்த நாடே என்றும் ஒற்றையாட்சி ஒவ்வாதது என்று இடைக்கால அறிக்கையிலேயே கூறப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியிருந்தார்.

ஏக்கிய இராஜ்ய, ஒற்றையாட்சி ஆகிய பதங்கள் தொடர்பான சிக்கல்களும், சர்ச்சைகளும் இப்போது ஓயப்போவதில்லை. உள்ளூராட்சித் தேர்தல் பிரசாரங்களில் இது மிகத் தாராளமாகவே எதிரொலிக்கும். ஊடகங்களுக்கும் அரசியல் பிரமுகர்களுக்கும் இந்தத் தேர்தலை எதிர்கொள்வதற்காக உள்ள ஒரே தீனியும் இதுவாகத் தான் இருக்கப் போகிறது.

அதேவேளை ஊடகங்களுக்கும் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரனுக்கும் இடையில் தொடங்கியுள்ள பனிப்போர் தான் இப்போது அதிகபட்சம் பேசப்படுகின்ற விடயமாக மாறியிருக்கிறது.

ஏன் ஊடகங்களை சுமந்திரன் காட்டமாக விமர்சிக்கிறார்? சுமந்திரனை ஏன் ஊடகங்கள் விமர்சிக்கின்றன? இந்த இரண்டு கேள்விகளும் முக்கியமானவை.

தமிழ்த் தேசிய அரசியல் பரப்பில் சுமந்திரன் தவிர்க்க முடியாத ஒருவராக மாறி விட்டார். யார் விரும்பினாலும் சரி விரும்பாவிட்டாலும் சரி அந்த நிலை உருவாகி விட்டது என்பதை எவரும் மறுப்பதற்கில்லை.

அவர் எது சொன்னாலும் செய்தியாகி விடுகிறது. என்ன செய்ய முயன்றாலும் செய்தியாகி விடுகிறது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனை விடவும் கூட சில வேளைகளில் சுமந்திரனின் செய்திகள் அதிக முக்கியத்துவம் வாய்ந்தவையாகி விடுகின்றன.

2010ம் ஆண்டு பாராளுமன்றத் தேர்தலின் மூலம் அரசியலுக்கு வெளிப்படையாக களமிறங்கிய சுமந்திரன் குறுகிய காலத்துக்குள் தன்னை தமிழ்த் தேசிய அரசியலுக்குள் நிலைப்படுத்திக் கொண்டிருக்கிறார்.

அவர் தமிழ்த் தேசிய அரசியல் செய்யவில்லை. தமிழ்த் தேசிய விரோத அரசியல் செய்கிறார் என்ற அவரது எதிராளிகளின் குற்றச்சாட்டுகளையும் மீறி அவர் தமிழ்த் தேசிய அரசியலில் வலுவாகக் காலூன்றியிருக்கிறார்.

அவரைப்போல தமிழ்த் தேசிய அரசியலில் குறுகிய காலத்துக்குள் வலுவாக நிலைப்படுத்திக் கொண்ட மற்றொருவர் முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன். அவர் 2013ம் ஆண்டு தான் தமிழ்த் தேசிய அரசியலுக்குள் நுழைந்தவர் ஆனால் அவர் இன்று கூட்டமைப்பின் தலைமையுடன் சமமாக மோதக்கூடிய ஒருவராக மாறியிருக்கிறார்.

அதுபோலவே சுமந்திரனும் கூட்டமைப்புக்குள் தவிர்க்க முடியாத ஒரு சக்தியாக மாறியிருக்கிறார். இரண்டு பேருக்கும் இடையில் பொதுவான அரசியல் குணாம்சத்தில் வேறுபாடுகள் உள்ளன.

முதலமைச்சர் விக்னேஸ்வரன் பல விடயங்களில் கடும்போக்கு நிலைப்பாட்டை வெளிப்படுத்துவதாக தென்னிலங்கையில் பார்க்கப்படுகின்ற அதேவேளை சுமந்திரன் மென்வலு அரசியல் மூலம் தென்னிலங்கையில் நட்பு சக்தியாக பார்க்கப்படும் நிலையை ஏற்படுத்தியிருக்கிறார்.

இரண்டு பேருக்குமே ஊடகங்கள் மத்தியில் விமர்சனங்களும் இருக்கின்றன. கண்மூடித்தனமான வரவேற்பும் இருக்கின்றது. முதலமைச்சரை சில் ஊடகங்கள் கண்ணை மூடிக்கொண்டு ஆதரிப்பது போல சுமந்திரனை எந்த ஊடகமும் ஆதரிப்பதில்லை.

ஊடகஙகள் தனது உரைகள் மற்றும் கருத்துக்களை சரியான கோணத்தில் வெளியிடுவதில்லை. திரிபுபடுத்துகின்றன என்பது சுமந்திரன் எப்போதும் கூறி வருகின்ற குற்றச்சாட்டு.இது ஊடகங்களுக்கு எரிச்சலை ஏற்படுத்தியிருப்பதும் உண்மை.

அதனால் ஊடகங்களுக்கும் சுமந்திரனுக்கும் இடையிலான உறவுகள் சுமுகமாக இருந்ததில்லை. தமிழ் தேசியக் கூட்டமைப்பின் உயர்மட்டப் பிரமுகர்களின் செல்வாக்குக்குட்பட்ட ஊடகங்களில் கூட சுமந்திரன் விமர்சிக்கப்படுகின்ற சூழல் தான் உள்ளது.

அதேவேளை தமிழ்த் தேசிய அரசியல் பரப்பில் கடுமையான விமர்சனங்ளை எதிர்கொள்கின்ற ஒருவராகவும் சுமந்திரனே எதிர்கொண்டிருக்கிறார்.

சம்பந்தன், சுமந்திரன் தொட்பான கடுமையான விமர்சனங்களை பலரும் வெளியே இருந்து முன்வைத்து வந்தாலும், கூட்டமைப்புக்குள் இருக்கின்றவர்கள் சம்பந்தனை நோக்கி விமர்சிப்பதில்லை. ஆனால் சுமந்திரன் கூட்டமைப்புக்குள்ளேயும் விமர்சனத்துக்குரிய ஒருவராகவே இருந்து வருகிறார்.

அதற்கு தனியே அவரது அரசியல் நிலைப்பாடுகள், அணுகுமுறைகள் மாத்திரம் காரணமல்ல. அதற்கும் அப்பால் சுமந்திரனின் வளர்ச்சி கூட்டமைப்புக்குள் உள்ள பலரையும் அச்சமடையவும் செய்திருக்கிறது. அதனைப் பிடிக்காதவர்களால் சுமந்திரன் விமர்சிக்கப்படுவதிலும் ஆச்சரியமில்லை.

இப்படியாக ஊடகங்களாலும் அரசியல் பரப்பிலும் காட்டமாக விமர்சிக்கப்படுகின்றதால் கூட சுமந்திரன் தமிழ் அரசியல் பரப்பில் கூடுதல் அறியப்பட்ட ஒருவராக மாறியிருக்கிறார்.

எந்தளவுக்கு சர்ச்சைகள் செய்திகளில் சிக்குகிறார்களோ அந்தளவுக்கு அவர்களால் ஊடகங்களில் பிரபலமடைய முடியும். அரசியல்வாதிகள் பலரும் தினமும் தமது பெயர் ஊடகங்களில் வெளியாக வேண்டும் என்று எதிர்பார்ப்பது வழமை.

சுமந்திரனை விமர்சிப்பது என்ற பெயரில் அவரது அரசியல் எதிராளிகளால் தொடரப்பட்ட பிரசார யுத்தம் அவரை தமிழ் அரசியலில் வலுவாக நிலைப்படுத்தவே உதவியிருக்கிறது.

கடந்த பாராளுமன்றத் தேர்தலில் சுமந்திரன் வெற்றி பெறுவாரா என்ற சந்தேகமே இருந்தது. அவரைத் தோற்கடிப்பதற்காக கூட்டமைப்பில் போட்டியிட்ட வேட்பாளர்கள் பலரும் கூட பிரசாரம் செய்தனர். ஆனால் கடைசியில் அவர்கள் தான் தோற்றுப் போயினர்.

அத்தகைய பிரசாரங்கள் சுமந்திரனை இன்னமும் பிரபலப்படுத்தியது. கூட்டமைப்புக்குள் அவரை வலுப்படுத்தியது. அதுபோலத்தான் சுமந்திரனுக்கு எதிராக தொடர்ந்து முன்வைக்கப்படும் விமர்சனங்களும் அவரை இன்னமும் பலப்படுத்தவே உதவி வந்திருக்கிறது.

சுரேஸ் பிரேமச்சந்திரன், கஜேந்திரகுமார் போன்றவர்கள் சுமந்திரனைப் பலவீனப்படுத்துவதற்காக என்று அவர் மீது தொடுத்த தாக்குதல்கள் எல்லாம் அவரைப் பலப்படுத்துவதிலேயே சென்று முடிந்திருக்கிறது.

இத்தகைய சூழலில் உள்ளூராட்சித் தேர்தலிலும் கூட்டமைப்புக்கு எதிரான கட்சிகள் சுமந்திரனைக் குறிவைப்பதாக நினைத்துக்கொண்டு தாக்கினால் அதன் விளைவு அவர்களுக்கே ஆபத்தாக அமையலாம்.

தனது அரசியல் வளர்ச்சியில் தனக்கு எதிரான அரசியல் சக்திகள் எந்தளவுக்குப் பங்களித்துள்ளன என்பதை சுமந்திரன் நன்கு அறிவார். அதனால் அவர் தனது எதிரிகளின் விமர்சனங்களை அமைதிப்படுத்த அவர் ஒருபோதும் விரும்பமாட்டார் .

தன்னை தனது எதிரிகள் தொடர்ந்து தாக்கிக் கொண்டிருக்கும் வரை தமிழ் மக்கள் மத்தியில் தனது பெயர் சென்றடைந்து கொண்டிருக்கும் என்பது அவருக்கு நன்றாகவே தெரியும். இத்தகைய பின்னணியில் தான் அவர் இப்போது ஊடகங்களையும் தனது எதிரிகளாக சித்திரிக்கத் தொடங்கியிருக்கிறார்.

ஊடகங்கள் பொய்யைச் சொல்லுகின்றன. மக்களுக்கு உண்மையைக் கூற மறுக்கின்றன என்று அவர் இப்போது விளாசுகிறார். அதுமாத்திரமன்றி ஊடகங்களைப் பகைத்துக்கொண்டு தேர்தலில் வெற்றி பெற முடியாது என்று சிலர் கூறுவதாகவும் அதற்காக மக்களிடம் உண்மையைச் சொல்லாமல் இருக்க முடியாது என்றும் அவர் கூறியிருக்கிறார்.

ஊடகங்களைப் பகைத்துக்கொண்டு தேர்தல் ஒன்றில் வெற்றி பெறுவது கடினமான விடயம் தான். கடந்த பாராளுமன்றத் தேர்தலில் பெரும்பாலான ஊடகங்கள் சுமந்திரனை ஆதரிக்கவில்லை. சமூக ஊடகங்களில் சுமந்திரனே பிரதான குறியாக இருந்தார். ஆனால் சுமந்திரனின் வெற்றியை அவற்றினால் தடுக்க முடியவில்லை.

அதுபோல அச்சு மற்றும் இலத்திரனியல் ஊடகங்களையும் பகைத்துக்கொண்டு சுமந்திரனால் அல்லது அவர் கட்சியினால் வெற்றியைப் பெற முடியும் என்று நம்புவது கடினமானது. ஊடகங்கள் வலிமையானவை. அவை நாளாந்தம் மக்களைச் சென்றடைந்த காலம் மாறி இப்போது ஒவ்வொரு கணமும் மக்களைச் சென்றடைகின்றன.

ஊடகங்களில் எதிர்மறையாக விமர்சிக்கப்படுகின்ற தரப்புகளை மக்கள் வேறுவிதமாகவே பார்க்க முனைவார்கள்.

விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இருந்து கருணா பிரிந்து சென்ற போது தனது முடிவை நியாயப்படுத்த சில காரணங்களை முன்வைத்திருந்தார். அவை வலிமையானதாகவே பல்வேறு தரப்பினராலும் பார்க்கப்பட்டது.

கருணாவின் போரியல் திறமைகள் மற்றும் புலிகள் இயக்கத்தில் இருந்த போது அவர் தொடர்பாக தமிழ் மக்கள் மத்தியில் இருந்த நம்பிக்கை என்பன விடுதலைப் புலிகளுக்கு சவாலாக இருந்தன.

கருணாவின் நிபந்தனைகளின் மீதிருந்த சில நியாயப்பாடுகளை உடைத்து கருணாவை எதிர்மறையான நபராக அடையாளப்படுத்துவதற்காக விடுதலைப் புலிகள் கடுமையாக போராட வேண்டியிருந்தது.

கருணா புலிகள் இயக்கத்தில் இருந்து உடனடியாக அரசதரப்புடன் அல்லது படைத்தரப்புடன் இணைந்து கொதண்டிருந்தால் புலிகளுக்கு அது சிக்கலாக இருந்திருக்காது. ஆனால் கருணா அவ்வாறு செய்யவில்லை.

அதனால் அவரைப் பற்றிய எதிர்மறையான புதிய விம்பத்தை உருவாக்குவது புலிகளுக்குச் சவாலாக இருந்தது. அதுபோலத் தான் சுமந்திரன் விடயத்திலும் அவரைப்பற்றிய எதிர்மறையான ஒரு விம்பத்தை உருவாக்குவது கடினமானது. அதற்கு ஒரு கடுமையான கூட்டு முயற்சியும் தேவை..

ஊடகங்களை சுமந்திரன் முழுமையாகப் பகைத்துக் கொண்டால் அத்தகைய ஒருமித்த முயற்சி ஒன்றுக்குச் சாதகமான சூழ்நிலை உருவாகக் கூடும். அது தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கும் கூட கடும் சவாலாக மாறலாம்.

கூட்டமைப்பைப் பொறுத்தவரையில் சுமந்திரன் எந்தளவுக்கு தவிர்க்க முடியாத நபரோ அதுபோலத்தான் இந்த தேர்தலின் வெற்றியும் அவர்களுக்கு முக்கியமானது.

எனவே ஊடகங்களுடனான சுமந்திரனின் பனிப்போர் கூட்டமைப்புக்குப் பாதகமான நிலையையே உருவாக்கக் கூடும்.