ரணில் போடும் குத்துக்கரணம்! 2002ஆம் ஆண்டை நோக்கி வீழ்ச்சியில் ஐ.தே.க

Report Print Jeslin Jeslin in கட்டுரை

இலங்கையின் சமகால அரசியல் நிலையில் என்ன நடக்கின்றது என அனைவரும் உற்றுநோக்கும் வகையில் நாட்டின் அரசியல் களம் ஒரு தளம்பல் நிலையில் சென்றுக்கொண்டிருக்கின்றது.

அரசிற்குள் நிலவும் உட்பூசல்களும், கருத்து வேற்றுமைகளும், தலைமைப்பீடங்களில் நிலவும் சில முரண்பாடுகளுமே இதற்கு காரணம்.

கடந்த 3ஆம் திகதிக்கு முன்னர் இலங்கையின் அரசியல் களம் ஒரு சுமூகமான நிலையிலேயே சென்றுக்கொண்டிருந்தது, அதாவது பிணை முறி மோசடி தொடர்பான ஜனாதிபதி தனது அறிக்கையினை வெளியிடுவதற்கு முன்னரான காலப்பகுதி!

இந்நிலையில், குறித்த அறிக்கையில் அதிகளவில் ஐக்கிய தேசிய கட்சியினைச் சார்ந்தவர்களுக்கு ஜனாதிபதியால் எச்சரிக்கை விடப்பட்டிருந்ததும், அதில் மிக முக்கியமாக பிரதமர் ரணில் விக்ரமசிங்விற்கு எதிராகவும் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டிருந்தமையே இன்றைய அரசியல் தளம்பல் நிலைக்கு வித்திட்டது.

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியும், ஐக்கிய தேசியக் கட்சியும் புரிந்துணர்வு உடன்படிக்கை ஒன்றின் மூலம் ஆட்சி அமைத்திருந்தாலும் கூட ஜனாதிபதியின் அறிக்கையின் பின்னர் கூட்டரசாங்கத்திலும், அரச அங்கத்தவர்களிடையேயும் புரிந்துணர்வு அற்ற நிலை காணப்படுவதை நாட்டின் மக்கள் சமகாலத்தில் உணர்ந்துள்ளனர்.

மேலும், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு எதிராக ஐக்கிய தேசிய கட்சியின் முக்கியஸ்த்தர்கள் பகிரங்கமாக மக்கள் மத்தியில் தற்போது தமது பரப்புரைகளை முன்னெடுத்து வருவதானது அரசாங்கத்தில் நிலவும் பிரச்சினைகளை மக்களுக்கு புடம்போட்டு காட்டுவதாய் அமைந்துள்ளது.

அதே சமயம் இது கூட்டெதிர்க்கட்சியினருக்கும் தங்களது தரப்பினை வலுப்படுத்தும் சந்தர்ப்பமாய் அமைந்துள்ளதுடன், மகிந்தவின் தேவையையும் மக்கள் உணர்கின்றார்கள் என்ற நிலைப்பாட்டையும் அரசாங்கத்தின் குழப்ப நிலைகள் உணர்துகின்றன.

இந்த நிலையில் தான் நேற்று இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் இருந்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வெளியேறியிருந்தமை அரசின் தளம்பல் நிலையை சுட்டிக்காட்டுவதாய் அமைந்துள்ளது.

அத்துடன், ஐக்கிய தேசியக் கட்சியைச் சேர்ந்தவர்கள் ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியினரை சாடுவதும், ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியைச் சார்ந்தவரகள் ஐக்கிய தேசிய கட்சியை சாடுவதும் கூட அதிகரித்துவிட்டன.

ஐக்கிய தேசிய கட்சியினரிடையே மைத்திரிக்கு எதிரான குரல்களும் மேலோங்க ஆரம்பித்து விட்டன, உதாரணமாக அண்மைக்காலங்களில் ஐக்கிய தேசிய கட்சியின் முக்கியஸ்த்தர்கள் சிலர் மக்களுடனான பொதுக்கூட்டங்களில் மைத்திரியை பகிரங்கமாக விமர்சித்து வருகின்றனர்.

அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ, இராஜாங்க அமைச்சர் சுஜீவ சேனசிங்க, நாடாளுமன்ற உறுப்பினர்களான மரிக்கார், சமிந்த ஆகியோர் ஜனாதிபதியைப் பகிரங்கமாகவே விமர்சித்து உரையாற்றி வருகின்றனர்.

அதைவிட, கடந்த 10ஆம் திகதி பிணைமுறி மோசடி தொடர்பாக விவாதிக்கும் விசேட நாடாளுமன்ற அமர்வில் ஏற்பட்ட குழப்பநிலையும், அதில் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும் யார் திருடன் என கூச்சலிட்டதும் கூட, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியில் உள்ளவர்களிடையே விமர்சனத்தை தோற்றுவித்திருந்தது.

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும் கூட ஜனாதிபதி மைத்திரிக்கு எதிரான நிலைப்பாட்டைக் கொண்டுள்ளார் என்பதை, பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் அந்த யார் திருடன் என்ற ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியை சாடுவதாய் அமைந்திருந்த கூற்று உணர்த்துகின்றது.

இந்நிலையில், நேற்றைய அமைச்சரவைக் கூட்டத்தில் இருந்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வெளிநடப்பு செய்திருந்தமை தென்னிலங்கை அரசியல் அவதானிகளிடையே பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது.

மைத்திரியின் அடுத்தக்கட்ட நடவடிக்கை எவ்வாறானதாக இருக்கும், அது இலங்கை அரசியலில் பாரிய மாற்றங்களை தோற்றுவிக்குமா என்ற நிலை இதன்காரணமாக தோற்றம் பெற்றுள்ளது.

மேலும், பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிரான அரசியல் காய் நகர்த்தல்களும் வலுப்பெறுகின்றன, தற்போது பிரதமருக்கு எதிரான கூட்டெதிர்க்கட்சியினரின் நம்பிக்கையில்லாப் பிரேரணை தயாராகியுள்ளமை அதற்கு சான்று.

ஆட்சியில் இருக்கக்கூடிய ஜனாதிபதிக்கும், பிரதமருக்கும் எதிராக தற்போது அதிகபடியான அழுத்தங்கள் கொடுக்கப்பட்டு வருகின்றன எனக்கூட கூறலாம், இலகுவாய் கூறுவதென்றால், பிணை முறி தொடர்பான ஜனாதிபதியின் அறிக்கை அவருக்கே தற்போது தலையிடியாக அமைந்துள்ளது.

இவ்வாறான அழுத்தங்களின் மூலம் ஜனாதிபதிக்கும், பிரதமருக்கும் இடையில் ஒரு வலுவான முறுகல் நிலை தோன்றும் பட்சத்தில் அதன் விளைவு எவ்வாறு இருக்கும் என்பதோடு, கூட்டரசாங்கத்தின் ஆயுள் தொடர்பிலும் சந்தேகத்தை தோற்றுவித்துள்ளது.

இதேபோன்றதான ஒரு சூழ்நிலை கடந்த 2002ஆம் ஆண்டு காலப்பகுதியில் இடம்பெற்றதை இத்தருணத்தில் சுட்டிக்காட்டலாம், கடந்த 2002ஆம் ஆண்டு ஆட்சிக்காலத்தில் ரணில் விக்ரமசிங்கவிற்கும், முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்காவிற்கும் இடையில் இவ்வாறான ஒரு முறுகல் நிலையே ஏற்பட்டது.

2002ஆம் ஆண்டில் இடம்பெற்ற ஜனாதிபதிக்கும், பிரதமருக்கும் இடையில் ஏற்பட்ட புரிந்துணர்வு அற்ற நிலையின் காரணமாக அப்போதைய ஜனாதிபதியாக இருந்த சந்திரிக்கா அதிரடியாக செயற்பட்டு அப்போதைய பாதுகாப்பு அமைச்சு, உள்துறை அமைச்சு, ஊடகத்துறை அமைச்சு ஆகியவற்றை கைப்பற்றிக்கொண்டார்.

அப்போதைய அமைச்சரவையில் இருந்த ஜோன் அமரதுங்க, திலக் மாரப்பன ஆகியோரது பதவிகள் இதன்போது பறிபோயின.

அத்துடன் 3 மாத காலத்திற்கு நாடாளுமன்றத்தை முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா ஒத்திவைத்து, அந்த 3 மாத காலப்பகுதி நிறைவடைந்த பின்னர் அதிரடியாக நாடாளுமன்றத்தை கலைத்தார்.

இதுபோன்ற ஒரு முறுகல் நிலையே தற்போதும் நிலவுவதால் அன்றைய ஜனாதிபதி சந்திரிக்காவைப்போல மைத்திரியும் செயற்படுவாரா என்பதே தற்போதைய கேள்வி!

அவ்வாறான அபாயகரமான சூழ்நிலை உருவாகுமா? அல்லது ஐக்கிய தேசிய கட்சியினர் அழுத்தங்களின் மூலமாக மைத்திரியை அந்நிலைக்கு உட்படுத்திவிடுவரா என்ற ஐயப்பாடும் நிலவுகின்றது.

மேலும், இன்றைய தினம் இடம்பெற்ற ஐக்கிய தேசிய கட்சியின் செயற்குழு கூட்டத்தில், ஜனாதிபதி சம்மந்தமாக விமர்சனங்களை முன்வைப்பதில்லை என முடிவு செய்துள்ளதாக அமைச்சர் ஹரின் பெர்ணாண்டோ தெரிவித்திருந்தார்.

அத்துடன், ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி அமைச்சர்கள் வெளியிடும் கருத்துக்கள் சம்பந்தமாக அவர்களை இலக்கு வைத்து பதிலளிக்க வேண்டுமே தவிர ஜனாதிபதியை இலக்கு வைக்கக் கூடாது என்ற தீர்மானத்தை செயற்குழு எடுத்துள்ளதாக அவர் குறிப்பிட்டிருந்தார்.

ஐ.தே.க வின் முடிவிற்கமைய ஜனாதிபதியை அவர்கள் சீண்டாமல் இருப்பார்களா? முடிவில் மாற்றங்கள் ஏற்படுமா? இந்த நிலை இன்னும் எத்தனை நாட்களுக்கு தொடரும் என்ற எதிர்ப்பார்ப்பே தற்போது தென்னிலங்கை அரசியல் குறித்து நிலவுகின்றது.

மேலும், மைத்திரியை ஐ.தே.கவினர் சீண்டாமல், ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சியினரை இலக்கு வைத்து செயற்பட்டார்கள் எனில், சுதந்திரக்கட்சியின் தலைமைத்துவத்தில் இருக்கும் மைத்திரி அதற்கு எவ்வாறு பதில் அளிக்கப்போகின்றார்.

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியினர் மீது ஐ. தே.கவினர் வலுவான அழுத்தங்கள் கொடுத்தால், மைத்திரி கூட்டரசாங்கத்தின் ஜனாதிபதி என்ற நடுநிலையுடன் செயற்படுவாரா? இல்லை ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் என்ற ரீதியில் செயற்படுவாரா? என்ற ஐயப்பாடும் நிலவுகின்றன.

எது எப்படியாயினும், ஐ.தே.க தொடர்பில் மைத்திரியின் அடுத்தக்கட்ட நடவடிக்கை என்ன? என்பதே தென்னிலங்கை அரசியல் அவதானிகளினதும், நாட்டு மக்களினதும் எதிர்ப்பார்ப்பு!!