அரசியல் அநாதையாக்கப்பட்டுள்ள ரவி! இக்கட்டான நிலையில் மைத்திரி?

Report Print Jeslin Jeslin in கட்டுரை

சமகாலத்தில் தென்னிலங்கை அரசியல் தளம் சற்று கேளிக்கைக்குரியதாக மாறிவிட்டதாக அரசியல் அவதானிகளால் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அடுத்து என்ன மாற்றங்கள் அரசியல் வட்டாரத்தில் நிகழப்போகின்றன என அரசியல் ஆர்வலர்கள் சிந்திக்கும் கனப்பொழுதுக்குள், அரசின் அடுத்த கட்ட நகர்வு இடம்பெற்றுவிடுகின்றது.

ஆளும் தரப்பிலுள்ள ஐக்கிய தேசியக் கட்சியும் சரி, ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சியும் சரி அடுத்தடுத்து ஒருவரை ஒருவர் தாக்கி சரமாரியாக கருத்துக்களை பரிமாறி வரும் நிலை இதுவரையில் இருந்தது.

ஆனால் இன்று சற்று அது மாற்றமடைந்து தாம் சார்ந்த கட்சிக்குள் உள்ளவர்களையே விமர்சிக்கும் நிலைக்கு அரசியல் தலைவர்கள் வந்துவிட்டனர்.

அத்துடன் பல அரசியல் தலைவர்களின் அரசியல் ஸ்த்திரத்தன்மை ஆட்டம் காணும் நிலையை இவர்களின் விமர்சனங்கள் தோற்றுவித்துள்ளன.

அவர்களுள் அதிகம் பாதிக்கப்பட்டவர் முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக்க என்றால் அதில் தவறல்ல.

இலங்கை அரசியல் வரலாற்றில் இரு வேறு சக்திகளாக இயங்கிய இரண்டு அரசியல் கட்சிகள் இணைந்து அமைத்த இந்த நல்லாட்சி அரசின் முதலாவது நிதி அமைச்சராக ஆரம்ப காலங்களில் வலம் வந்தவர் முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக்க.

ஐக்கிய தேசியக் கட்சியின் துணைத் தலைவராகவும் இவர் பதவி வகித்து வருகின்றார்.

மேலும், இதற்கு முன்னர் 2002ஆம் ஆண்டு காலப்பகுதியில் ஜனாதிபதியாக சந்திரிக்காவும், பிரதமராக ரணில் விக்ரமசிங்கவும் ஆட்சி செய்த காலத்திலும் அவர் அமைச்சுப் பதவியை வகித்திருந்தார்.

அதனைத் தொடர்ந்து வரலாறு எதிர்ப்பார்க்காத வகையில் அமையப்பெற்ற இந்த நல்லாட்சி அரசில் நிதி அமைச்சுப் பதவியை வகித்தார், நல்லாட்சி அரசின் முதலாவது நிதியமைச்சர் என்ற பெருமையும் அவரைச் சாரும்.

அதனைத் தொடர்ந்து கடந்த 2017ஆம் வருடம் அவரிடம் உள்ள நிதி அமைச்சுப் பதவி பறிக்கப்பட்டு அக்காலத்தில் வெளிவிவகார அமைச்சராக இருந்த அமைச்சர் மங்கள சமரவீரவிற்கு வழங்கப்பட்டது.

தொடர்ந்து அமைச்சர் மங்கள சமரவீரவிடம் இருந்த வெளிவிவகார அமைச்சுப் பதவி ரவி கருணாநாயக்கவிற்கு வழங்கப்பட்டது.

நல்லாட்சி அரசில் ரவி கருணாநாயக்கவின் நிலை ஆட்டம் கண்டமைக்கு இந்த ஆட்சி மாற்றம் முதல் அடித்தளமாக எல்லோராலும் பார்க்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து மத்திய வங்கியின் பிணை முறி மோசடி தொடர்பான குற்றச்சாட்டுக்களில் இந்த நிலை விஷ்வரூபம் எடுத்தது.

பிணை முறி மோசடியுடன் முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக்கவுக்கு தொடர்பு உள்ளது என ஜனாதிபதி ஆணைக்குழுவினரால் விசாரணைக்கு அவர் அழைக்கப்பட்டதன் பின்னர் கூட்டு எதிர்க்கட்சியினரால் நாடாளுமன்றத்தில் அவருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவரப்பட்டது.

சர்சைக்குரிய மத்திய வங்கியின் பிணை முறி மோசடியுடன் தொடர்புடை பெர்ப்பச்சுவல் ட்ரசரிஸ் நிறுவனத்தின் தலைவரும் மத்திய வங்கியின் முன்னாள் ஆளுனர் அர்ஜீன் மகேந்திரனின் மருமகனுமான அர்ஜுன் அலோசியஸூடன் தொடர்புகள் இருக்கின்றன எனவும் பல கட்டங்களில் இவர் மீது விசாரணைகள் துரிதப்படுத்தப்பட்டன.

அத்துடன், முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக்க தனது அமைச்சுப் பதவியில் இருந்து விலக வேண்டும் அல்லது அவரது அமைச்சுப் பதவி பறிக்கப்பட வேண்டும் என பல்வேறு தரப்பினராலும் தொடர் அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டன.

தொடர் அழுத்தங்களின் பலனாக, முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக்கவிற்கு எதிரான கூட்டு எதிர்க்கட்சியின் நம்பிக்கையில்லாப் பிரேரணை நாடாளுமன்றத்தில் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படும் முன்னரே அவர் பதவியிலிருந்து தானாக விலகினார்.

இதன் போது அவர் குறிப்பிடுகையில், வெளிவிவகார அமைச்சர் பதவியில் இருந்து தாம் விலகிக் கொள்ள எடுத்துள்ள இந்த முடிவை அழுத்தங்களினாலோ, வருத்தத்துடனோ எடுக்கவில்லை என்றும் இந்தப் பதவியை துறப்பதில் தாம் பெருமை அடைவதாகவும் தெரிவித்தார்.

சட்டவிரோதமாக சொத்துக்களை சேர்க்க வேண்டிய தேவை தமக்கு இல்லை என்றும், தமக்கு எதிராக சுமத்தப்படும் குற்றச்சாட்டுகள் அடிப்படையற்றவை என்றும் அவர் கூறினார்.

என்னிடம் உள்ள செல்வம் பற்றி அனைவருக்கும் தெரியும். எனது கட்சியைச் சேர்ந்தவர்களும் ஏனையவர்களும் எனது வீட்டுக்கு வந்திருக்கின்றனர்.

நான் அரசியலுக்காக அவற்றைப் பயன்படுத்தியதில்லை என்று அவர்களுக்குத் தெரியும். முன்னரைப் போன்றில்லாமல், அமைச்சர்களை விசாரிக்க சட்டமா அதிபருக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அதிகாரிகள் தமது விசாரணைகளை தொடர்ந்து முன்னெடுக்க வேண்டும்.

ஜனநாயகம், நல்லாட்சிக்காக எனது பதவியை துறக்கிறேன். இந்த முடிவை எடுப்பதற்காக நான் பெருமைப்படுகிறேன். என அவர் நாடாளுமன்றத்தில் குறிப்பிட்டிருந்தார்.

இவ்வாறு அறிவித்த பின்னர், ரவி கருணாநாயக்க நாடாளுமன்றத்தில் பின்வரிசையில் சென்று அமர்ந்து கொண்டார்.

அவர் பதவி விலகியிருந்தமை நாட்டு மக்களிடத்திலும், உள்நாட்டு அரசியல் வட்டாரத்திலும் அவருக்கு நன்மதிப்பைப் பெற்றுத்தந்தது.

உதாரணமாக, எதிர்க்கட்சித் தலைவர் முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக்கவின் முடிவை வரவேற்றிருந்தார்.

அமைச்சர் பதவியில் இருந்து விலகும் ரவி கருணாநாயக்கவின் முடிவு ஒரு துணிச்சலான நகர்வு என்றும் இவர் தவறு செய்ததாக தகுதிவாய்ந்த நீதிமன்றத்தினால் கண்டறியப்படவில்லை எனவும் எதிர்க்கட்சித் தலைவர் நாடாளுமன்றத்தில் அறிவித்திருந்தார்.

நாட்டினதும் மற்றும் நல்லாட்சி அரசாங்கம் என்ற பதாதையின் கீழ் ஆட்சிக்கு வந்த அரசாங்கத்தினதும் நலன் கருதி அவர் பதவியை விட்டு விலகும் முடிவை எடுத்திருப்பதை நான் வரவேற்கிறேன் என ரவி கருணாநாயக்கவிற்கு அவர் புகழாரம் சூட்டியிருந்தார்.

அதனைத் தொடர்ந்து, கடந்த டிசம்பர் மாதம் 30ஆம் திகதி பிணை முறி மோசடி தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசேட அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டது.

குறித்த அறிக்கையில், முன்னாள் நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க தொடர்பாக குறிப்புகள் இடம்பெற்றிருந்தன, அவர் கொள்ளுப்பிட்டியில் அடுக்குமாடிக் குடியிருப்பு ஒன்றைப் பெற்றுக் கொண்டமை தொடர்பாக விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

மேலும், ஜனாதிபதி ஆணைக்குழுவின் முன்னிலையில் அவர் பொய்சாட்சியம் வழங்கியிருந்தார் என்ற குற்றச்சாட்டும் அவர் மீது வலுவாக பதிவாகியிருந்தது.

இந்நிலையில்தான், தற்போது அவரிடம் உள்ள ஐக்கிய தேசியக் கட்சியின் துணைத்தலைவர் பதவியையும் பறிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

அவர் ஐக்கிய தேசிய கட்சியின் அனைத்து செயற்பாடுகளில் இருந்தும் தவிர்ந்து இருக்க வேண்டும் என்று இதன்போது பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

பிணைமுறி மோசடி சம்பந்தமான ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கை தொடர்பில் ஆராய்ந்த, ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் திலக் மாரப்பன தலைமையிலான குழு இவ்வாறு பரிந்துரை செய்திருந்தது.

அந்த அறிக்கை தொடர்பில் சட்டமா அதிபர் திணைக்களம் மற்றும் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் சட்ட நடவடிக்கைகள் நிறைவடையும் வரை, ரவி கருணாநாயக்க கட்சியின் செயற்பாடுகளில் இருந்து விலகி இருக்க வேண்டும் என்று அழுத்தம் கொடுக்கப்பட்டுள்ளது.

அதன்படி அவர் கட்சியின் உப தலைவராக எந்த செயற்பாடுகளையும் முன்னெடுக்க முடியாது என்று அந்தக் குழு பரிந்துரை செய்துள்ளது.

இது, அவர் அரசியில் இருந்து முற்றிலும் நிர்க்கதியாக்கப்பட்டு விடுவாரோ என்ற சந்தேகத்தை தென்னிலங்கை அரசியல் அவதானிகளிடையே தோற்றுவித்துள்ளது.

அதுவும், பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும், முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக்க கட்சியின் துணைத்தலைவர் பதவியில் இருந்து விலகுவது தொடர்பில் கருத்தை முன்வைத்துள்ளமை ரவி கருணாநாயக்கவின் அரசியல் எதிர்காலம் தொடர்பான சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினதும், பிரதமர் ரணில் விக்ரமசிங்கவினதும் ஏகோபித்த செல்வாக்கையும் பெற்றவராக முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக்க காணப்பட்டார்.

இந்நிலையில், அவர்களையும் தாண்டி முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக்கவின் பதவி பறிக்கப்படுகின்றதெனில் அவரது அரசியல் எதிர்காலம் எவ்வாறு இருக்கும்? முற்றிலுமாக அவர் அரசியல் அநாதையாக்கப்படுவாரா? ரவி கருணாநாயக்கவின் அடுத்த கட்ட நடவடிக்கை என்ன? அவர் தொடர்பில் கட்சித் தலைவர் என்ற ரீதியில் பிரதமரது நகர்வு என்ன?

தன்னிடத்தில் ரவி கருணாநாயக்கவிற்கு தனிப்பட்ட செல்வாக்கு இருந்தும், தன்னால் ஏதும் அவருக்கு சாதகமாக செய்யமுடியாத இக்கட்டான சூழலில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உள்ளார் என்பதும் கவனிக்கத்தக்கதே.

எனினும் பிணை முறி மோசடியின் மூலம் ரவி கருணாநாயக்கவினால் சொத்துக்கள் சேர்க்கப்பட்டது என பலரும் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டிருந்த போதிலும், அவ்வாறு சேர்க்கப்பட்ட சொத்துக்களுக்கு என்ன நடந்தது? என்ற கேள்விகளும் எழுகின்றன.

எது எவ்வாறாயினும் இன்றைய சூழலில் முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக்கவின் அரசியல் ஸ்த்திரத்தன்மை கேள்விக்குறியாகியுள்ளது என்பது மறுக்க முடியாத ஒன்றாகிவிட்டது, இதிலிருந்து அவர் எவ்வாறு தன்னை தற்காத்து கொள்ளப்போகின்றார்?

அவரது அரசியல் இருப்பை பாதுகாக்க அவரது இராஜதந்திர நகர்வுகள் எவ்வாறு இருக்கப்போகின்றன? பிரதமர் தனது நம்பிக்கைக்குரிய ஒருவரை எவ்வாறு பதவியில் இருந்து நீக்கும் விடயத்தில் எவ்வாறு செயற்படப்போகின்றார் என்ற கேள்விகளும் தொக்கி நிற்கின்றன.

அல்லது முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக்க தான் சார்ந்த ஐக்கிய தேசியக் கட்சினராலேயே ஓரம் கட்டப்பட்டு விடுவாரா என்பதை அடுத்த கட்ட அரசியல் நகர்வுகள்தான் தெளிவுப்படுத்த வேண்டும்.

இதேவேளை, தற்போது நடைபெறும் அரசியல் நகர்வுகள் முன்கூட்டியே தீர்மானிக்கப்பட்ட நாடகமாக அரங்கேற்றப்பட்டு வருவதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உட்பட பலரும் குற்றம் சாட்டி வருகின்றனர்.

நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தல் இரு பிரதான கட்சிகளுக்கும் மிகவும் முக்கியமானதாகும். தனிப்பெரும் கட்சியாக ஆட்சி அமைப்பதற்கான முன்னோட்டமாக இந்த தேர்தல் பார்க்கப்படுகிறது.

அவ்வாறானதொரு தேவைப்பாட்டின் மத்தியில் கூட்டாட்சிக்குள் உள்ளக மோதல்கள் ஏற்பட்டுள்ளதாக மாயை தோற்றுவிக்கப்பட்டுள்ளதாக பலரும் விமர்சனம் வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.