ஜெனிவா 37ஆவது கூட்டத்தொடரில் நடைபெறப் போவது என்ன?

Report Print S.V Kirubaharan S.V Kirubaharan in கட்டுரை

ஜெனிவாவில் ஐ.நா மனித உரிமை சபையின் 37ஆவது கூட்டத்தொடர் 26ஆம் திகதி ஆரம்பமாகி, எதிர்வரும் மார்ச் 23ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.

இக்கூட்டத் தொடர், சுலோவேனியா நாட்டின் ஜெனிவா பிரதிநிதி வோஜிசிலவ் சக் தலைமையில் நடைபெறவுள்ளது.

ஆரம்ப தினத்தன்று, ஐ.நா.வின் பொதுச் செயலாளர் திரு. அந்தோனியோ குற்றஸ் அங்கு உரையாற்றவுள்ளார். பொதுவாக செயலாளர் நாயகம் யாரும் மனித உரை சபையில் உரையாற்றும் வேளைகளில், எந்த நாட்டையுடம் குறிப்பிட்டு உரையாற்றுவது இல்லை.

தற்போதைய ஐ.நா பொதுச் செயலாளர், ஐ.நா அகதி நிறுவனத்தின் ஆணையாளராக கடமையாற்றிய வேளையில், இலங்கைக்கு யுத்த காலத்தில் விஜயம் செய்து, அரச தரபையும், தமிழீழ விடுதலை புலிகளின் பிரதிநிதிகளையும் சந்தித்து உரையாடியிருந்தார் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

இவ் 37ஆவது கூட்டத் தொடரின் முதல் வாரத்தில் முதல் மூன்று நாட்களும் ஐ.நா அங்கத்துவ நாடுகளின் வெளிநாட்டு அமைச்சர்கள், மனித உரிமை அமைச்சர்கள், நாடுகளின் முக்கிய புள்ளிகள் உரையாற்றவுள்ளனர். இவ் வரிசையில், இலங்கை சார்பாக உரையாற்றுவதற்கு இது வரையில் எந்த முக்கிய பிரதிநிதியும் பதிவு செய்யப்படாத போதிலும், சிலவேளைகளில் இலங்கையின் வெளிநாட்டு அமைச்சர் அல்லது பிரதி அமைச்சர் உரையாற்றலாம் என எதிர் பார்க்கப்படுகிறது.

கூட்டத் தொடரின் பிராதான கூட்டத்தின் நிகழ்ச்சி நிராலின் பிரகாரம் பொதுவாக ஒவ்வொரு வாரமும் இலங்கை பற்றிய விவகாரம், ஏதோ ஒரு விதத்தில பேச்சு பொருளாக திகழவுள்ளது.

ஆனால் மனித உரிமை சபையை பொறுத்த வரையில், இக்கூட்டத் தொடரில், இலங்கை பற்றிய விவகாரங்களில் எந்தவித அடிப்படை மாற்றங்களும் நடைபெறப் போவதில்லை என்பது தின்மம். காரணங்கள் பல.

நிகழ்ச்சிகள்

இக்கூட்டத் தொடரின் முதல் வாரத்தில், அதாவது மார்ச் 1ஆம் 2ஆம் திகதி ஐ.நா மனித உரிமை சபையினால் நியமிக்கப்பட்ட பல மனித உரிமை நிபுணர்கள் உரையாற்றவுள்ளனர்.

இதில் இலங்கைக்கு விஜயம் செய்திருந்த இரு நிபுணர்கள் தமது அறிக்கைகளை வெளியிடவுள்ளனர். அதில் முதலாவதாக, மனித உரிமைக்கும் பயங்கரவாதத்திற்கு எதிரான விடயத்திற்கு பொறுப்பாக கடமையாற்றிய, பேன் இமேசன் என்பவரது இலங்கை பற்றிய விஜயத்தின் அறிக்கையை, இந்த பதவிக்கு புதிதாக நியமிக்கப்பட்டுள்ள பினனாலுலா நீ அலோ என்பவர் வெளியிடவுள்ளார்.

இந்த அறிக்கை நிச்சயம் இலங்கையின் உண்மை நிலைமைகளை எடுத்துக் காட்டலாம் என்பதில் எந்தவித ஐயமுமில்லை.

அதனை அடுத்து, இலங்கைக்கு பல தடைவ விஜயம் செய்துள்ள பாவுலே டி கீறீவ் என்பவரது அறிக்கை வெளியாகவுள்ளது. இவர் மாறுபட்ட நீதி எனும் பொருள்படும் விடயங்களுக்கு பொறுப்பாக கடமையாற்றுபவர்.

இவருடன் இணைந்து வேறுசில மனித உரிமை நிபுணர்களும் இலங்கை விடயத்தில் கருத்துக்களை முன் வைக்கலாமென எதிர்பார்க்கப்படுகிறது.

இவற்றை தொடர்ந்து இரண்டாவது வாரம், ஐ.நா.அங்கத்துவ நாடுகள் பற்றிய ஒரு வருடந்த அறிக்கையை, ஐ.நா. மனித உரிமையாளர் ஆணையாளர் அல் குசேயூனினினால் வெளியிடப்படவுள்ளது.

அவ்வேளையில் இலங்கை பற்றிய சில கருத்துக்களை ஆணையாளர் சிலவேளைகளில் முன்வைக்கலாமென எதிர்பார்க்கப்படுகிறது.

அடுத்து மூன்றாவது வாரம், கடந்த நவம்பர் மாதம் இலங்கை மீது இடம்பெற்ற யு.பி.ஆர் எனப்படும் ‘பூகோள தவணை முறை ஆய்வின்’ இறுதி அறிக்கை இங்கு வெளியிடப்படவுள்ளது. அவ்வேளையில் அரச சார்பற்ற நிறுவனங்கள் சில கருத்து கூறுவதற்கு சந்தர்ப்பம் வழங்கப்படும்.

அதனை அடுத்து, நான்காவது வாரம், 2017ஆம் ஆண்டு மார்ச் மாதம் இலங்கை அரசிற்கு இருவருட கால அவகாசம் கொடுக்கப்பட்டு நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் முதல் கட்டமாக, ஐ.நா.மனித உரிமை ஆணையாளரின் முதலாவது அறிக்கை, மார்ச் 21ஆம் திகதி புதன்கிழமை வெளியிடப்படவுள்ளது.

இவ் அறிக்கை பற்றிய பாரிய எதிர்பார்ப்பு தமிழ் மக்களிடையே காணப்படும் அதேவேளை, ஆணையாளாரின் உரையில் நிச்சயம், இலங்கை மீது பல கண்டனங்கள் காணப்படும் என்பதில் எவ்வித ஐயமுமில்லை.

ஆனால் அன்று அதே தினம், ஆணையாளர் வேறு ஆறு நாடுகள் (புருண்டி, கொலம்பியா, சைபிறஸ், கொட்டமலா, கொண்டுறஸ், ஈரான்) பற்றிய அறிக்கைகளை வெளியிடவுள்ள காரணத்தினால், இலங்கை விடயத்தில் அங்கத்துவ நாடுகள் ஓர் பாரிய உரையாடலையோ அல்லது விவாதத்தையோ நடத்துவதற்கு இடமளிக்கப்படுமா என்பது கேள்வி குறி! இதுவும் வடக்கு கிழக்கு வாழ் தமிழ் மக்களிற்கு கிடைத்த சாபக்கேடுகளில் ஒன்று எனலாம்.

ஆகையால் ஒட்டுமொத்தமாக பார்க்கும் வேளையில், இவ் 37வது கூட்டத் தொடரில் பலர் எதிர்பார்ப்பது போல் இலங்கை விடயத்தில் விசேடமாக எதுவும் நடைபெறுவதற்கான எந்த அறிகுறிகளும் தென்படுவதாக தெரியவில்லை.

அது மட்டுமல்லாது, இலங்கையை பொறுத்தவரையில் இறுதி தீர்மானத்தில் அறுத்து உறுத்து இருவருட கால அவகாசம் கொடுக்கப்பட்டுள்ள காரணத்தினால், யாராலும் இலங்கை மீது எந்த நடவடிக்கையையும், அடுத்த வருடம், அதாவது 2019ம் ஆண்டு மார்ச் மாதம் எடுக்க முடியாத நிலை உருவாக்கப்பட்டுள்ளது.

மாறிவரும் மனித உரிமை சபை

ஐ.நா.மனித உரிமை சபை 2006ஆம் ஆண்டு நடைமுறைக்கு வருவதற்கு முன்னர், ஐ.நா.மனித உரிமை ஆணைகுழுவே நடைமுறையில் இருந்துள்ளது என்பது சரித்திரம். அந்த மனித உரிமை ஆணைக்குழு, மனித உரிமை சபையில் அங்கத்துவம் பெறும் 47 நாடுகள் போல் அல்லாது, 53 அங்கத்துவ நாடுகளை கொண்டிருந்தது. இதில் வேடிக்கை என்னவெனில், உலகில் மனித உரிமை மீறல்களை கடுமையாக மீறும் நாடுகளான – கியூபா, ராஸ்யா, அமெரிக்கா, பாகிஸ்தான், இந்தியா போன்ற நாடுகள் தொடர்ச்சியாக இவ் ஆணைகுழுவில் அங்கத்துவம் வகித்து, தம்மீது எந்த சர்ச்சைகளும் ஆணைகுழுவில் இடம் பெறாது காப்பாற்றி கொண்டனர்.

இதன் காரணமாக, திரு. கோபி அணன், ஐ.நா. செயலாளர் நாயகமாக பதவி வகித்த காலத்தில், மனித உரிமை ஆணைகுழு என்பது மனித உரிமை சபையாக மாற்றம் அடைந்ததுடன், மனித உரிமைகளை மிகவு மோசமாக மீறும் நாடுகள் அங்கத்துவம் பெறது இருக்க கூடிய சில வழிவகைகள் அறிமுகப்படுத்தப்பட்டது.

துரதிஸ்ட்டவசமாக, இன்று மனித உரிமை சபை ஆரம்பிக்கப்பட்டு பன்னிரண்டு வருடங்களின் பின்னர், மனித உரிமை சபையிலும் முன்னைய ஆணைக்குழு போல், உலகில் மனித உரிமைகளை மிகவும் மோசமாக மீறும் நாடுகள் அங்கத்துவம் பெற வழவகுத்துவருகிறது.

உதராணமாக, கடந்த ஒக்டோபர் மாதம், ஐ.நா மனித உரிமை சபைக்கான பதினைந்து புதிய அங்கத்தவர்கள் தெரிவு ஐ.நா. பொதுச்சபையில் இடம் பெற்ற வேளையில் - ஆப்கானிஸ்தான், அங்கோலா, ஜனநாயக கொங்கோ குடியரசு, பாகிஸ்தான், நைஜீரியா, கட்டார் போன்ற நாடுகள் மனித உரிமை சபைக்கு தெரிவாகியுள்ளது மிகவும் வேடிக்கையானது.

இப்படியாக உலகில் மிக மோசமான மனித உரிமை மீறல்களை கொண்டுள்ள நாடுகள் தெரிவாவதையுட்டு, ஓர் சர்வதேச அரச சார்பற்ற நிறுவனம் கருத்து கூறுகையில், “கோழி பண்ணைக்கு, ஓநாய்களை கண்காணிக்க அனுமதிப்பதற்கு சமனானதாக” கருத்து கூறியிருந்தார்கள்.

யதார்தம்

எது என்னவானலும், ஐ.நா மனித உரிமை சபையில் யாரும், “மந்திரத்தால் மாங்காய் பறிக்க முடியாது”. மனித உரிமை சபைக்குரிய வழிமுறைகளை கையாள்வதன் மூலமே ஈழத் தமிழர்களாகிய எம்மால் அங்கு எதையும் சாதிக்க முடியும்.

ஐ.நா விற்கு, இலட்சக்கணக்கான கையெழுத்துக்களுடனான மனுக்களை கொடுப்பதன் மூலம், அங்கு யாராலும் ஒன்றையும் சாதிக்க முடியாது. அப்படியாக எதுவும் ஐ.நா. விதிமுறைகளில் இல்லை என்பதற்கு அப்பால், ஐ.நா.வின் சரித்திரத்தில் உலகில் எந்த நாட்டிலும் அப்படி எதுவும் நடைபெற்றதும் கிடையாது.

ஆகையால் அப்பாவி மக்களை திருப்திப்படுத்தும், கபட வேலைகளை கைவிட்டு, யாவரும் நேர்வழியில் பயணிப்பதன் மூலமே நாம் எதையும் ஐ.நா.மனித உரிமை சபையில் உருப்படியாக பெற்றுக் கொள்ள முடியும்.

ஐ.நா அங்கத்துவ நாடுகளுக்கு எதிராக எங்களில் ஒரு பகுதியினரால் சுயநலத்தின் அடிப்படையில் மேற்கொள்ளும் நடவடிக்கைகள் யாவும், அடுத்த வருடம் மார்ச் மாதம், அதாவது ஐ.நா.மனித உரிமை சபையின், 40ஆவது கூட்டத் தொடர், நிச்சயம் பௌத்த சிங்கள இலங்கை அரசிற்கே சார்பாக அமையும்.

ஐ.நா.மனித உரிமை சபையின் பிரதான கூட்டம் மண்டபத்தில் மேலே குறிப்பிடப்பட்ட நிகழ்ச்சி நிரல்கள் நடைபெறும் அதே வேளை, அரச சார்பற்ற நிறுவனங்களினால் - பக்க கூட்டங்கள், இரு நிமிட உரைகளென நடைபெறுவது வழமை. மனித உரிமை செயற்பாட்டிற்கு இவ் இரு விடயங்களும் மிக முக்கியமானதாக காணப்பட்டாலும், இவற்றை யார்? எப்படியாக செய்கிறார்கள்? என்ற அடிப்படையிலேயே முக்கியம் பெறுகிறது.

உதாரணத்திற்கு மனித உரிமை சபையில், அரச சார்பற்ற நிறுவனங்களினால் மேற்கொள்ளப்படும் இரு நிமிட உரையை நாம் எடுத்து பார்ப்போமானால், இதை சர்வதேச மனித உரிமை அமைப்புக்களான சர்வதேச மனித உரிமை சபை, மனித உரிமை கண்காணிப்பகம் போன்றவை மேற்கொள்ளும் வேளையில் அதனது பெறுமதி வேறாக காணப்படுகிறது. இதேவேளை அரசியல்வாதிகளினால் வாக்கு வங்கிகளை நோக்கி மேற்கொள்ளப்படும் செயற்திட்டங்கள், இச் சபையில் பெறுமதியற்றே காணப்படுகிறது.

முன்னைய காலங்களில், அரச சார்பற்ற நிறுவனங்கள் மூலம் எம்மால் ஆற்றப்பட்ட உரைகளிற்கு, எமது உரை முடிவடைந்தவுடனேயே, இலங்கை அரசு எமது உரைக்கு பதில் கூறும் நிலை காணப்பட்டது. அது மட்டுமல்லாது எமது உரைக்கு இலங்கை அரச சார்பு பத்திரிகைகள் விமர்சனங்கள் எழுதுவதுடன், எம்மையும் இம்சித்தார்கள்.

ஆனால் இன்று நிலைமை வேறு. கடந்த இரண்டு மூன்று வருடங்களிற்குள், சர்வதேச மன்னிப்பு சபை மூலம், 2006ம் ஆண்டு ஜனவரி மாதம் 2ம் திகதி, திருகோணமலையில் படுகொலை செய்யப்பட்ட தனது மகன் ரகேயர் உட்பட மற்றைய மாணவர்கள் பற்றி, வைத்திய காலநிதி காசிப்பிள்ளை மனோகரன் அவர்களால் ஆற்றப்பட்ட உரையை கேட்டு சபையே கலங்கியது மட்டுமல்லாது, இலங்கையின் பிரதிநிதி தாம் இப் படுகொலைகள் சம்பந்தமாக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக சபையில் உடன் பதிலும் கூறினார்.

அர்த்தமற்ற செயற்பாடுகள்

இதே போன்று தான் ஐ.நா.வின் பக்க கூட்டங்களும். இக் கூட்டங்களும் யாரால்? எப்படியாக? நடத்தப்படுகிறது என்பது மட்டுமல்லாது, அங்கு யார் உரையாற்றுகிறார்கள் என்பதை பொறுத்தே, தமிழர்கள் அல்லாத வேறு இனத்தவர் மட்டுமல்லாது, ஐ.நா பிரதிநிதிகளும் இராஜதந்திரிகளும் கலந்து கொள்வார்கள்.

தமிழர்களால் தமிழர்களுக்கு கூட்டம் வைப்பதற்கு, யாரும் ஜெனிவா செல்ல வேண்டிய அவசியமில்லை. கடந்த காலங்களில், சர்வதேச அமைப்புக்களின் அனுசாரணையுடன் ‘தமிழர் மனிதர் உரிமைகள் மையத்தினால்’ நடாத்தப்பட்ட பக்க கூட்டங்களில் பெரும்பான்மையான சர்வதேச பிரதிநிதிகள், கலந்து கொண்டிருந்ததுடன். இவற்றிற்கான செய்திகளை சர்வதேச செய்தி தாபனங்கள் உட்பட பல நிறுவனங்களினால் வெளியிட்டிருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

ஆகையால், முக நூல்களிற்கு செய்திகள் வெளியிடுவதற்காக ஐ.நா. மனித உரிமை சபையில் மேற்கொள்ளப்படும் விடயங்கள் எதையும், எமது இனத்திற்கு தொடர்ந்து நடைபெறுகின்ற மனித உரிமை மீறல்களிற்கோ, போர் குற்றங்களிற்கோ அல்லது இன அழிப்பிற்கோ நீதி கிடைப்பதற்கான செயற் திட்டமாக பொது அவதானிகளினால் கணிக்கப்படுவதில்லை.

ஆலங்களிற்கு செல்பவர்கள் யாவரும் பக்தர்கள் இல்லை என்பது போல், ஐ.நா. மனித உரிமை சபைக்கு செல்பவர்கள் யாவரும் மனித உரிமை செயற்பாட்டாளர்கள் அல்ல! காரணம், மனித உரிமை சபையில் பங்கு பற்றுபவர்கள், தமிழர்கள் அல்லாத வேறு இனத்தவர்களுடன் உரையாட முடியாதவர்கள், எப்படியாக மனித உரிமை செயற்பாடுகளை முன்னெடுக்க முடியும்?

இவற்றை முகநூல்களை படிக்கும் எந்தனை அப்பாவி தமிழர்கள் உணர்ந்துள்ளார்கள்? அதேவேளை, மனித உரிமை சபை கூட்ட வேளையில் - தொட்டாட்டு வேலைக்கு செல்பவர்களும், முகநூல்களிற்கு புகைப்படங்கள் எடுப்பவரும் மனித உரிமை செயற்பாட்டாளர் ஆகமுடியமா?

தகைமைகள் உள்ளவர்களை தேடி ஊடகங்கள் வருவது வழமை. இதனால் எரிச்சல் பொறாமை கொண்டு தமக்கு தாமே ‘மனித உரிமை செயற்பாட்டாளரென’ முகநுல்களில் பட்ட சூட்டிய தகமையற்றவர்கள், சபையில் மற்றவர்களிற்கு சோறு கறி வேண்டுமென கேட்பது போல், தமக்கும் ஒரு சந்தர்பத்தை தாருங்களென ஊடகங்களிடம் கெஞ்சுவது ‘இயலாமை’. “உயரப் பறந்தாலும் ஊர் குருவி பருந்தாகுமா? கங்கையில் முழ்கினாலும் காக்கை அன்னமாகுமா?”