அம்பாறை தாக்குதல் சம்பவத்தில் முஸ்லிம்களை ஏமாற்றும் ஹக்கீம் - ஹரீஸ்! அமைச்சுக்களை துறப்பார்களா?

Report Print M.M.Nilamdeen M.M.Nilamdeen in கட்டுரை
447Shares

அம்பாறை முஸ்லிம் ஹோட்டல் மற்றும் பள்ளிவாசல் தாக்குதல் சம்பவத்தில் முஸ்லிம்களின் ஏக பிரதிநிதி என்று எப்போதும் மார் தட்டும் ஹக்கீம், கட்சி தலைவர் மற்றும் சட்டம் ஒழுங்கு அமைச்சர் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை அம்பாறைக்கு அழைத்து வருவேன் என்று ஊடக வீரம்பேசி வந்தார்.

அம்பாறை தாக்குதல் சம்பவம் நடந்த போது பிரதமர் ரணில் சிங்கப்பூரில் இருந்தார். நேற்று இரவு சிங்கப்பூரில் இருந்து வந்த பின்பு நேற்று இரவு ஹக்கீம் பிரதமரை சந்தித்தார். அதன் பின்பு இரண்டாம் கட்டமாகவும் ஹக்கீம் ரணிலை சந்தித்துள்ளார்.

ஹக்கீம் அவசரப்பட்டு பெரும் சாணக்கியம் என்று நினைத்து பிரதமரை அம்பாறைக்கு அழைத்து வருவேன் என்று சொல்லி விட்டார். ஆனால் ரணில் அம்பாறைக்கு போனால் இருக்கின்ற வாக்கு வங்கியும் குறைந்து விடும் என்று ரணிலுக்கு உளவு தகவல் கொடுத்து விட்டார்கள்.

அதனால் அம்பாறை செல்வதை ரணில் விரும்பவில்லை. அதே போன்று ஜனாதிபதி மைத்திரி நேற்று மட்டக்களப்பு சென்ற போதும் அம்பாறை செல்வதை தவிர்த்து விட்டார்.

பிரதமர் ரணில் மற்றும் ஜனாதிபதி மைத்திரி ஆகியோர் முஸ்லிம்களுக்கு ஆதரவாக ஒரு சிறிய குரல் கொடுத்தாலும் சிங்கள மக்கள் பாடம் புகட்டுவார்கள் என்பது ஹக்கீமுக்கு தெரியாதா?

சின்னப்பிள்ளைகள் போன்று விரைவில் இந்த அரசுக்கு பாடம் புகட்டுவோம் என்று கல்முனை பிரதி அமைச்சர் ஹரீஸ் பேசுவது விந்தைமிகு பேச்சாக அவருக்கே தெரியவில்லையா? பாவம் அரசியல் கத்துக் குட்டிகள். அம்பாறை சம்பவத்தை சரியாக புரிந்து கொள்ளாமல் பேசியுள்ளார்.

அம்பாறை இனவாத தாக்குதலுக்கு சட்ட நடவடிக்கை எடுப்பதில் தீவிரம் காட்டும் முஸ்லிம் காங்கிரஸ் என்று நேற்று ஹக்கீம் காங்கிரஸ் தரப்பால் ஊடக அறிக்கையொன்று வெளிவந்துள்ளது.

இது வேறு நகைச்சுவையாக. சிங்கப்பூரில் உள்ள பிரதமரை 3 தடவை தொலைபேசி மூலம் ஹக்கீம் தொடர்பு கொண்டாராம். தொடர்பு கொண்டு என்ன பிரயோசனம்? என்ன பலன் ஹக்கீம் கண்டார்? ஊடக அறிக்கை எல்லோரும் விடலாம். அதில் ஒன்றுமில்லை.

அம்பாறை சம்பவத்துடன் தொடர்புடைய 5 பேரை அம்பாறை பொலிஸ் கைது செய்து சந்தேகநபர்களுக்கு சாதகமான “வி” ரிப்போர்ட் சமர்ப்பித்து நீதிமன்றில் நிறுத்தி பொலிஸ் தரப்பு சந்தேகநபர்களுக்காக வாதாடி பிணையும் பெற்றுக் கொடுத்து விட்டார்கள்.

சாதாரண தெருச் சண்டை போன்று அம்பாறை தாக்குதல் சம்பவத்தை பொலிஸ் செய்துள்ளது. இதற்குப் பின்பு இந்த விடயத்தில் ஹக்கீம் என்ன சட்ட நடவடிக்கை எடுக்கப் போகின்றார்.

ஒரு சட்டத்தரணியாக இருந்து கொண்டு இவ்வளவும் நடந்த பின்னர் சட்ட நடவடிக்கை என்று அம்பாறை முஸ்லிம்களை ஏமாற்றுவதை சகிக்க முடியவில்லை.

இங்கு என்ன திருமணச் சம்மந்தமா பேசுகின்றார்கள். இரண்டாம், மூன்றாம் கட்டப் பேச்சுவார்த்தையாம். மாவட்ட பொலிஸ் அதிகாரி முன்பாகவே பிரதி அமைச்சர் ஹரீஸ் கெட்ட வார்த்தைகளால் தூசிக்கப்பட்டு அவமானப்படுத்தப்பட்ட சம்பவம் உலகம் முழுவதும் ஊடக வாயிலாக காண்பிக்கப்பட்டுள்ளது.

சம்பவ இடத்தில் இருந்து ஹரீஸ் தப்பி வந்த விடயமே பெரிய விடயம்தான். காரணம் ஆயிரக்கணக்கான சிங்களவர்கள் மத்தியில் 10 பொலிஸ் நின்று கொண்டு என்ன செய்ய முடியும்.

ஹரீஸ்க்கு நடந்துள்ளது போன்று ஒரு சாதாரண சிங்கள எம்.பி ஒருவருக்கு முஸ்லிம் பகுதியில் நடந்தால் நிலைமை என்னவாகும் என்பதை கொஞ்சம் சிந்தித்துப் பாருங்கள்.

ஹக்கீம் தரப்பு தங்களது 7 எம்.பிக்ளை கொண்டு இந்த ஆட்சியையே மாற்றலாம். அம்பாறை தாக்குதல் சம்பவத்தின் முழு நோக்கமும் இதுதான்.

இப்போது பிரதமர் ரணிலுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை ஒன்று கொண்டு வருவதற்கான ஒரு நகர்வை மஹிந்த அணி செய்து வருகின்றது.

மறுபுறம் மஹிந்த அணி எதிர்கட்சி தலைவர் பதவியை குறி வைத்து ஒரு நகர்வை செய்து வருகின்றது. மறுபுறம் ஐ.தே.க பெரும்பான்மை பலம் தேடிக் கொண்டிருக்கின்றது. இந்த நிலையில் ஹக்கீம் கட்சி நினைக்கின்ற பக்கம் ஆட்சியை மாற்றலாம்.

எதிர்வருகின்ற மாகாணத் தேர்தல் மற்றும் பொதுத் தேர்தல் ஆகியவற்றில் மஹிந்த அணியின் தாமரை மொட்டுச் சின்னம் அதிக இடங்களில் வெற்றி பெறும் நிலமை உள்ளது.

இந்த நிலையில் ஹக்கீம் கட்சி மஹிந்த அணியுடன் பேச்சு வார்த்தை செய்து மஹிந்த அணியுடன் இப்போதே இணைந்து கொள்வது முஸ்லிம்களுக்கு நல்லது.

தமிழ் படங்களில் வரும் காட்சிகள் போன்று எல்லாம் முடிந்த பின்னர் சந்தேகநபர்கள் பிணையில் சென்ற பின்னர் ரணில் அம்பாறை சென்று என்ன சாதிக்கப் போகின்றார். அதில் ஏதும் நன்மை முஸ்லிம்களுக்கு கிடைக்குமா?

ரணில் அம்பாறை வருகையினால் ஹக்கீம் மட்டுமே அரசில் இலாபம் நன்மை பெறுவார்! முஸ்லிம்கள் மத்தியில் மார் தட்டவும் வீரம் பேசவும் ரணில் அம்பாறை வந்தால் அதைப்பயன் படுத்துவார்.

அம்பாறை தாக்குதல் சம்பவத்திற்கு ரணில் எந்தவொரு வாக்குறுதியும் ஹக்கீமுக்கு கொடுக்கவில்லையாம். கொஞ்சம் பொறுங்கள் மக்கள் இதை மறந்து விடுவார்கள் அப்போது எல்லாம சரியாகி விடும் என்று தகவல் கசிந்துள்ளது.

இது பொரும்பான்மை சிங்கள மக்கள் சம்மந்தப்பட்ட விடயம். 7 எம்.பிக்காக 70 எம்.பிக்களுக்கான வாக்குகளை இழக்க எவரும் விரும்புவார்களா? இந்த எளிய கணக்கு கூட ஹக்கீமுக்கு தெரியாமல் அம்புலி மாமா கதை சொல்லி ஹக்கீம் சும்மா கதை விடுவதை ஒரு கூட்டம் இன்னும் நம்பிக் கொண்டிருப்பதுதான் கேவளம்.

முஸ்லிம்களின் எந்தவொரு பிரச்சினைக்கும் ஹக்கீம் தீர்வு பெற்றுக்க கொடுக்கமாட்டார். அது ஒரு போதும் நடக்காது. ஹக்கீம் கட்சியை பொறுப்பேற்று 18 ஆண்டுகளில் ஏதும் நடந்திருக்கா? இனிமேலும் நடக்குமா? இந்த அரசுக்கு மருந்து கட்டுவேன் என்று ஹரீஸ் கொக்கரித்துள்ளார். பாவம் ஹரீஸ் எம்.பிக்கு ஹக்கீம் எப்போது வேட்டு வைக்கலாம் என்று உள்ளார்.

இந்த அம்பாறை சம்பவத்தை வைத்து ஹக்கீம் கட்சி 4 மாங்காய்களை பெற்றுக் கொள்ளக் கூடிய அரிய வாய்ப்பு கிடைத்துள்ளது. ஹக்கீம் கட்சி தங்களது அமைச்சுக்களை இராஜினாமா செய்தால் முதலாவது ஹக்கீம் கட்சி இழந்துள்ள வாக்குகளையும் ஆதரவையும் மீண்டும் பெற்றுக் கொள்ளலாம்.

இரண்டாவது அம்பாறையில் மீண்டும் பலம் பெற்று வருகின்ற அதாவுல்லாவை பின்னுக்குத் தள்ளலாம். மூன்றாவது அம்பாறையில் வேகமாக முன்னேறி வருகின்ற அமைச்சர் ரிஷாட்டின் மயில் கட்சியை உடைத்து பின்னுக்குத் தள்ளலாம்.

நான்காவது மஹிந்தவுடன் இப்போதே இணைந்தால் மஹிந்த ஆட்சியில் பலமான அமைச்சை ஹக்கீம் கட்சி பெற்று உயர்ந்த சுகபோக வாழ்க்கை வாழலாம். நாடு முழுவதும் ஹக்கீம் கட்சி பலம் பெறும் முஸ்லிம் மக்களிடம் ஹக்கீம் கட்சி மார்தட்டலாம்.

நாம் ஹக்கீம் கட்சிக்கு சவாலாக இதை முன்வைப்போம். முஸ்லிம்களின் ஏக பிரதிநிதி என்று மார்தட்டும் ஹக்கீம் மற்றும் வகையறாக்கள் தங்களது அமைச்சுக்களை இராஜினாமா செய்வார்களா? துணிவிருந்தால் செய்வார்களா? ஆனால் மறைந்த தலைவர் அஷ்ரப் இருப்பாரானால் நிச்சயமாக இதைச் செய்து ஒரு புரட்சியே செய்திருப்பார்.

ஹக்கீமைப் பொறுத்தமட்டில் தன்னையும் தனது குடும்பத்தையும் வளர்ப்பதற்காக இந்த கட்சியை முற்றாகப் பயன்படுத்தி வருவதை அம்பாறை முஸ்லிம் மக்கள் உணர்ந்து அம்பாறையை விட்டு ஹக்கீமை விரட்டும் வரைக்கும் எந்தவொரு விமோசனமும் அம்பாறை முஸ்லிம்கள் பெறப் போவதில்லை.

இந்த விடயத்தில் அமைச்சர் ரிஷாத் பதியுத்தீனை யாரும் விமர்சனம் செய்ய முடியாது. காரணம் அவர் இன்னும் முஸ்லிம்களின் தலைவர் இல்லை. மற்றது அம்பாறை மக்கள் அவர் கட்சிக்கு யாரும் வாக்களித்து யாரையும் இன்னும் எம்.பியாக்கி அமைச்சராக்கவில்லை.

எதிர்வரும் காலங்களில் அமைச்சர் ரிஷாத் ஹக்கீம் கட்சியை விட அதிக ஆசனங்கள் பெற்று இந்த நிலை வருகின்ற போது நமது விர்சனம் நிறைந்து காணப்படும்.

ஆனால் அவைகளை விட்டு முஸ்லிம் எம்.பி ஒருவர் எதிர் கட்சியில் இருந்து கொண்டு எமது குறைகளை பேசவும் நமக்கு சிங்களம் செய்யும் கொடுமைகளை சர்வதேசத்திடம் முறையிடவும் ஒரேயொரு எம்.பி வேண்டும்.

அதற்கான வழி என்ன? அதன் சாத்தியப்பாடுகள் பற்றி ஆராய வேண்டும். எப்போதும் முஸ்லிம்கள் ஆளும் தரப்பு என்பதால் எதுவும் நடக்காது!. மாறி மாறி வருகின்ற சிங்கள அரசுக்கு முஸ்லிம் அரசியல் உழைப்பும் வியாபாரமாகவும் மாறியுள்ளதால் முஸ்லிம்கள் மிகவும்மோசமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.