கண்டியில் முஸ்லிம்கள் இலக்கு வைக்கப்பட்டதன் நோக்கம் என்ன? திடுக்கிடும் உண்மைகள்…!

Report Print S.P. Thas S.P. Thas in கட்டுரை

கலகங்களால் கலவரங்களால் தோன்றிய பூமியாக இலங்கை காட்சியளித்துக் கொண்டிருக்கிறது.

ஆட்சி இயந்திரத்தில், தலைமை, அமைச்சு, நிர்வாகம், பொருளாதாரக் கொள்கை என்று அத்தனையும் மாற்றம் பெற்றிருந்தாலும், அரசியல் கொள்கையில் இலங்கை தேசம் இன்னமும் பழமையான சித்தாந்தத்தில் மூழ்கிக் கிடக்கிறது. அது அவ்வப்போது வெளிப்பட்டுக் கொண்டிருப்பதனை உணர முடிகிறது.

மஹாவம்சத்தை வரலாற்று நூலாகக் கொண்டு ஆரம்பிக்கும் சிங்கள தேசத்தின் வரலாற்றுப் பக்கங்கள், நாட்டை இனவாத, மதவாத சித்தாந்தத்திற்குள் அடக்கிக் கொண்டிருப்பதனையும், அதன் வழி சிறுபான்மை சமூகங்கள் அடக்கப்படுவதும் தொடர் கதையாகிக் கொண்டிருக்கிறது.

திட்டமிட்டு உருவாக்கப்பட்ட வரலாற்றுப் பிழைகள் இன்று அனைத்து தரப்பையும் பிரித்து வைத்திருக்கிறது.

கடந்த ஒரு வாரமாக தொடர்ந்து கொண்டிருக்கும் கலகத்திற்கான காரணம் சிங்கள சாரதி கொல்லப்பட்டதும், உணவகத்தில் ஒருவகை மருந்துப் பொருள் கலந்து விற்பனை செய்தது என்பது வெறும் சாக்குப் போக்கான கருத்தேயன்றி அது தான் மூலகாரணம் என்று சொல்ல முடியாது.

முன்னதாகவே முஸ்லிம் மக்கள் இலக்கு வைக்கப்பட்டார்கள். சந்தர்ப்பத்திற்காக காத்திருந்தவர்களுக்கு சாரதி மீதான தாக்குதல் பெரும் வாய்ப்பாக மாறியது.

இலங்கை சிறுபான்மை இனங்களின் மீதான தாக்குதல் என்பது அச்சத்தின் உச்சத்தால் வந்ததேயன்றி அது வேறு எதற்காகவும் வந்ததல்ல. சிங்கள பேரினவாத கொள்கையினைக் கொண்டிருப்பவர்களின் ஆதிக்க சிந்தனையும், பொருளாதாரத்தில் தமிழ், முஸ்லிம் மக்களின் வளர்ச்சியைப் பொறுத்துக் கொள்ள முடியாததன் விளைவுகளும் கலவரங்களிலும், வர்த்தக நிறுவனங்களை சூறையாடுவதிலும் வந்து நிற்கிறது.

முதல் முதலாக அரசியல் ரீதியான கட்டமைக்கப்பட்ட கலவரமாக 1915ம் ஆண்டு பதிவாகியிருக்கிறது. இந்த கலவரத்தின் போது, கண்டியில் பள்ளிவாசல்கள் தாக்கப்பட்டதோடு, வணிக நிறுவனங்களும் முற்றாக அழிக்கப்பட்டன. இது வரலாற்றின் கறுப்பு பக்கத்தில் பதியப்பட வேண்டியது.

அந்தக் கலவரத்தின் எச்சங்கள் தொடர்ந்து கொண்டு தான் இருக்கின்றன. இந்தக் கலவரத்தில் சிங்களத்தலைவர்களான டீ. எஸ் சேனானாயக்கா, ஆர் டயஸ் பண்டாரநாயக்கா, டீ. எஸ் விஜேவர்தனா, டொக்டர் நெயிசர் பெரேரா, ஈ. டீ. த சில்வா, எச் அமரசூரிய, ஏ. எச். மொலமூறே போன்றோர் கைது செய்யப்பட்டனர். இவர்களை சேர். பொன் இராமநாதன் அன்றைய காலகட்டத்தில் பிரித்தானிய அரசோடு பேசி விடுவித்தார்.

இதனை தமிழ் தலைமைகளின் நல்லெண்ண செயற்பாடாகப் பார்க்கப்பட்டாலும், அதனை சிங்களத் தலைவர்கள் இன்றுவரை நினைவு கொள்வதில்லை என்பது வேறு கதை.

1915ம் ஆண்டுக் கலவரத்தின் பின்னர் அடுத்தடுத்து 1958, 1977, 1983 என்று கலவரங்கள் பெரும் துயரத்தைக் கொடுத்தது. இந்தக் கலவரங்களின் முக்கியமான நோக்கமே சிறுபான்மை சமூகங்களின் பொருளாதாரத்தை சிதைப்பதும், அழிப்பதும்.

1983ம் ஆண்டு கலவரம் இலங்கை வரலாற்றின் கறுப்புப் பக்கங்களால் உருவானது. கறுப்பு ஜூலை என்று இன்று வரை தமிழ் மக்களால் துயரத்தோடு நினைவுபடுதப்படும் இந்தக் கலவரத்தின் வடுக்கள் இன்னமும் காயவில்லை. அன்று தலைநகர் கொழும்பு உட்பட நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் தமிழ் மக்கள் தாக்கப்பட்டார்கள். வணிக நிறுவனங்கள் வேரோடு சாய்க்கப்பட்டன.

தமிழர்கள் மீண்டும் தலைநிமிர்ந்து கொள்ள முடியாதளவிற்கு தாக்குதல்கள் பலப்படுத்தப்பட்டன. திரும்பிய பக்கமெங்கும் பேரினவாதத்தின் கோரமுகம் தாண்டவமாடியது.

யாழ்ப்பாணத்தில் சிங்கள இராணுவத்தினர் மீது விடுதலைப் புலிகள் தாக்குதல் நடத்தியதில் 13 இராணுவ வீரர்கள் கொல்லப்பட்டதன் பின்னர் 1983ம் ஆண்டு கலவரம் வெடித்ததாக சொல்லப்பட்டாலும் அது பெருமளவில் முன்னதாகவே திட்டமிடப்பட்டதாக அமைந்தது என்பது வரலாற்று ஆசிரியர்களின் கருத்தாக இருக்கின்றது.

அன்று புலிகளின் தாக்குதலும் அதன் பின்னர் தான் கலவரம் வெடித்ததாகவும் பாடம் கற்பித்து வரலாற்றில் எழுதிய சிங்கள தேசம் அதே போன்றதொரு புதிய கலவரத்தை அதே பாணியில் தொடங்கியிருக்கிறது.

கண்டி சிங்கள மக்களின் இதய பூமியாக தொடர்ந்தும் சித்தரித்துக் கொண்டிருக்கும் தரப்பினர், அதன் விளைவாக அந்தப் பகுதியில் ஏனை சமூகத்தினரின் வளர்ச்சியை ஒரு போதும் விரும்பியதில்லை. இலங்கையை தங்களின் ஆளுகைக்குள் கொண்டுவந்த போர்த்துக்கீசியர்களும், டச்சுக்காரர்களும் கண்டியை கைப்பற்றிக் கொள்ள முடியாமல் தோற்றனர்.

ஆனால் பிரித்தானியர்கள் கண்டியை கைப்பற்றிக் கொண்டதும், அது நேரடி ஆங்கிலேயர்களின் ஆதிக்கத்திற்குள் கொண்டுவரப்பட்டது. அன்று தங்களின் ஒட்டுமொத்த சுதந்திரமும் பறிபோனதாக சிங்களத் தரப்பினர் உணர்ந்தனர். இன்று வரை அதே எண்ணத்தில் இருக்கிறார்கள் என்பதில் இரு வேறு கருத்துக்கு இடமில்லை.

அதன் விளைவு தான் சுதந்திரத்திற்குப் பின்னர் அதிகாரங்களை சிறுபான்மை சமூகங்களுக்கு பகிர்ந்து கொள்வதில் அவர்களின் தயக்கம் தொடர்கிறது.

1983 கலவரமும், 2009ம் ஆண்டு இறுதிக் கட்டப்போரும் தமிழ் மக்களின் அத்திபாரத்தையே ஆட்டம் காணச் செய்தது. அதிலும் 2009ம் ஆண்டு பெரும் கோரத் தாண்டவத்தை ஏற்படுத்தியது.

புலிகளின் அழிப்பிற்குப் பின்னர், தமிழ் மக்களுக்கான தலைமையிழப்பு அல்லது வெற்றிடம் உருவாக்கப்பட்டது. இந்நிலையில் அடுத்து வணி ரீதியில் அசுர வேகத்தில் வளர்ந்து கொண்டிருக்கும் முஸ்லிம் மக்களை இலக்கு வைக்கத் தொடங்கியது பேரினவாதம்.

அதன் விளைவாகப் போருக்குப் பின்னர் பள்ளிவாசல்களும் கடைத் தொகுதிகளும் சிறிது சிறிதாக தாக்கப்பட்டு வந்தன. இடையில் பௌத்த தேரர்கள் வெளிப்படையாகவே எச்சரித்துக் கொண்டும் இருந்தனர்.

ஒருகட்டத்தில் ஐஎஸ் தீவிரவாதிகளுக்கு இலங்கையில் அடைக்கலம் கொடுக்கப்படுவதாகவும் குற்றம் சுமத்தினார்கள். ஆனால் அது அவ்வளவுக்கு எடுபடவில்லை.

இந்நிலையில் தான் அவர்களுக்கு ஒரு வாய்ப்பு கிடைத்தது. “காகம் இருக்க பனம் பழம் விழுந்த கதை” யாக, முஸ்லிம் இளைஞர்களின் தாக்குதலில் சிங்கள சாரதி இறக்க அதையே வாய்ப்பாக பயன்படுத்திக் கொண்டனர். ஒட்டுமொத்தமாக கண்டியில் பெரும் வணிக நிறுவனங்களும் கடைகளும் கொளுத்தப்பட்டு அழிக்கப்பட்டன. பள்ளிவாசல்கள் நாசமாக்கப்பட்டன.

புலிகளின் பலத்தையழித்து, வடக்கு கிழக்கின் சொத்துக்களையும், சூறையாடியதன் பின்னர் எப்படி தமிழ் மக்கள் அநாதரவாக்கப்பட்டார்களோ அதே செயலை மீண்டும் செய்யத் தொடங்கியிருக்கிறார்கள் அதிகார வர்க்கத்தினர். இது தொடர் கதையாகிக் கொண்டிருக்கிறது.

சிறுபான்மை சமூகங்கள் வணிக ரீதியில் வளர்ந்து கொண்டிருக்கும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் இதேபோன்ற தாக்குதல்கள் தொடர்வதென்பது வாடிக்கையான நிகழ்வாகியிருக்கிறது.

ஆனால், அரசாங்கம் இவற்றை சரியான முறையில் கையாளுவதில் பின் நிற்கும். ஏனெனில் அவர்களின் வாக்கு வங்கிகளில் சரிவு ஏற்படும் வகையில் செயற்பட விரும்புவதில்லை எப்போதும்.