நோக்கத்தையும், பொறுப்பையும் நிறைவேற்றுமா ஐ.நா...?

Report Print Thileepan Thileepan in கட்டுரை

இலங்கையைப் பொறுத்தவரையில் ஐக்கிய நாடுகள் மனிதவுரிமைகள் ஆணையகத்தின் 37 ஆவது கூட்டத்தொடர் சூடு பிடிக்கத் தொடங்கியுள்ள நிலையில், இலங்கையின் மீது பல்வேறு வகைகளில் சர்வதேசத்தின் பார்வை திரும்பியுள்ளது.

கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இந்த மாங்காய் வடிவத் தீவை இலக்கு வைத்து சர்வதேச ஆளும் வர்க்கங்கள் எப்படியாவது தமது கால்களை பதித்து விடவேண்டும் என்ற முனைப்பில் பல்வேறு வழிகளிலும் முயற்சிகளை மேற்கொண்டு இருந்தன.

அதன் ஒரு கட்டமாக இத்தீவில் 2009 ஆம் ஆண்டு நடைபெற்ற தமிழ் மக்களுக்கு எதிரான தாக்குதலின் போது இடம்பெற்ற மனிதவுரிமை மீறல்கள், யுத்தக் குற்றங்கள் மற்றும் மானிடத்திற்கு எதிரான குற்றங்கள் தொடர்பாக இலங்கை அரசாங்கம் பொறுப்பு கூற வேண்டும் என்று வலியுறுத்தி அதனூடாகவும் தமது கால்களை இலங்கையில் தடம் பதித்துள்ளன.

யுத்தத்தினால் பாதிப்புக்குள்ளான தமிழ் மக்கள், யுத்தம் முடிந்தும் கடந்த 9 ஆண்டுகளாக சொல்லொண்ணா துயரங்களை அனுபவித்து வருவதுடன், சர்வதேசத்தின் மூலமாகவாவது தமக்கு தீர்வு கிடைக்குமா என்ற பேரவாவுடனும், பெரும் எதிர்பார்ப்புக்களுடனும் காத்திருக்கின்றனர்.

தமிழ் தரப்பின் அரசியல் தலைமைகள் இன்றி தமக்கான விடியலையும், நீதியையும் பெற்றுக் கொள்வதற்காக கடந்த ஓர் ஆண்டுக்கும் மேலாக காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களும், காணிகளை பறிகொடுத்தவர்களும், சர்வதேசத்தின் கண்டனத்திற்கு உள்ளாகியுள்ள பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களின் உறவினர்களும் விரக்தியின் உச்சத்திற்கு சென்று சர்வதேசம் தமக்கு நீதியை வழங்கும் என்ற சிறிய நப்பாசையுடன் வீதிகளில் இறங்கியுள்ளனர்.

வணங்கிய கைகள் மரத்துப்போன நிலையிலும், படிக்கட்டுகள் ஏறி ஏறியே கால்கள் சோர்ந்து போன நிலையிலும், அழுவதற்கு இனி கண்ணீர் இல்லை என்ற நிலையிலும் பரிதாபத்திற்கு உட்பட்டவர்களாகவும், அனுதாபத்துடன் பார்க்கப்பட வேண்டியவர்களாகவும் அவர்கள் மாறியுள்ளனர்.

அரசாங்கத்திடம் கேட்டுப் பார்த்தும், ஆலயங்களில் மன்றாடியும், சர்வதேச சமூகத்தின் கால்களில் விழுந்தும் இதுவரையில் எதுவும் நடக்கவில்லையே. எமக்கு நீதியே கிடைக்காதோ என்ற ஏக்கத்தில் அவர்கள் நடைபிணமாக வாழ்க்கையை கொண்டு நடத்துகின்றனர்.

ஒடுக்கப்பட்ட தேசிய இனத்தின் உரிமைகளை வென்றெடுப்பதற்கும், அந்த உரிமைகளுக்காக போராடி காணாமல் போகச் செய்யப்பட்டவர்களுக்கும், சர்வதேச அங்கீகாரத்துடன் வரையறைக்கப்பட்டிருந்த பிரதேசங்களில் கடமையாற்றியவர்களை புலிகள் என்றும் முத்திரை குத்தி கைது செய்யப்பட்டவர்களுக்கும், அரசாங்கத்தின் கோரிக்கைக்கு அமைவாக சரணடைந்தவர்களும், சர்வதேச ஆளும் வர்க்கங்கள் நீதியை பெற்றுக் கொடுக்கத் தவறியுள்ளன.

தற்போது சர்வதேச அழுத்தங்களின் காரணமாக காணாமல் போகச் செய்யப்பட்டவர்களை கண்டறிவதை நோக்ககமாகக் கொண்டு ஒரு அலுவலகம் திறப்பதற்கான சட்டமூலம் நிறைவேற்றப்பட்டு, அந்த அலுவலகத்தில் பணிபுரிவதற்கான குழுவையும் இலங்கை அரசாங்கம் நியமித்துள்ளது.

மறுபுறத்தில் காணாமல் போகச் செய்யப்பட்டவர்கள் என்று எவருமே இல்லை என்று அரசாங்கத்தின் உயர் பதவிகளில் இருப்பவர்கள் பகிரங்கமாகவே அறிவித்துள்ளனர்.

சர்வதேச ஆளும் வர்க்கங்களுக்கு இந்தக் குட்டித் தீவில் தடம்பதிக்க அனுமதியளித்ததன் பின்னர் அவை தாம் வைத்த கோரிக்கைகளை இலங்கை அரசாங்கம் நிறைவேற்றுவதற்கு போதிய அழுத்தம் கொடுக்கவில்லை என்ற விரக்தி பாதிக்கப்பட்ட தமிழ் சமூகத்தின் மத்தியில் தோன்றியிருக்கின்றது.

நல்லாட்சி அரசாங்கத்தைக் கொண்டு வந்ததில் இருந்து அந்த அரசாங்கம் நீடித்து இருப்பதற்கு பாராளுமன்றத்தில் கொண்டு வரப்படுகின்ற எந்தவொரு விடயமும் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்பட வேண்டும் என்ற எண்ணத்திலேயே தமிழ் தேசியக் கூட்டமைப்பு இந்த அரசாங்கத்தின் 3 வரவு செலவுத் திட்டங்களுக்கும் வேறு வேறு காரணங்களை சொல்லி ஆதரவளித்து இருந்தது.

2018 ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவு அளித்த போது காணாமல் ஆக்கப்பட்டோருக்கான அலுவலகத்திற்காக ஒதுக்கப்பட்ட நிதியையும் ஒரு காரணமாக காட்டியே தமிழ் தேசியக் கூட்டமைப்பு அந்த வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவு வழங்கியிருந்தது என்பதும் இங்கு கவனிக்கத்தக்கது.

காணாமல் ஆக்கப்பட்டோர் அலுவலகத்திற்கு முக்கியமான விடயங்களை கையாள்வதற்கான எத்தகைய சட்ட அதிகாரமும் வழங்கப்படவில்லை. மேலும் தற்போது பாராளுமன்றத்தில் காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பாக நிறைவேற்றப்பட்டுள்ள சட்டமூலமும் கூட இனிமேல் நடைபெறுவதை தடுக்கும் வகையிலேயே அமைந்துள்ளதை பலரும் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இந்த நிலையில் இந்த அலுவலகம் பாதிக்கப்பட்டவர்களுக்கு எத்தகைய நிவாரணத்தை வழங்கப் போகிறது என்ற கேள்வி ஜனநாயக சக்திகளிடமும், மனிதவுரிமை செயற்பாட்டாளர்களிடமும், மேலும் ஒடுக்கப்பட்ட மக்களுக்காக குரல் கொடுக்கும் அனைத்து தரப்பினரிடமும் எழுந்துள்ளது.

அரசு என்ற ரீதியில் அனைத்து அரசுகளும் ஒன்று கூடி தமது தேவைகளை நிறைவேற்றிக் கொள்வதற்காக பாதிக்கப்பட்ட மக்களின் எதிர்பார்ப்புக்களை பகடக்காயாக பயன்படுத்திக் கொண்டு தமது தேவை நிறைவேறியவுடன் அதனை கைகழுவி விட்டுவிடுமோ என்ற அங்கலாய்ப்பும், ஆதங்கமும் பரவலாக எழுந்துள்ளது.

வல்லரசுகளின் நிதிக் கொடையின் மூலமே ஐ.நாவின் உடைய அனைத்து சபைகளும் இயங்கி வருகின்றது. ஆகவே ஐ.நாவில் வல்லரசுக்கள் ஆதிக்கம் செலுத்தி வருகின்றன.

இருப்பினும் வல்லரசுகள் தாங்கள் தங்களது நிலையை தக்கவைத்துக் கொள்வதற்காக ஐ.நாவை ஓரளவுக்கு சுயாதீனமாக செயற்பட வைக்க வேண்டிய தேவையுள்ளது. எனவே ஐ.நாவின் மீது உலக மக்கள் நம்பிக்கை வைப்பதற்காக வல்லரசு நாடுகள் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய நீதியை வழங்குவதை உத்தரவாதப்படுத்த முன்வரவேண்டும்.

அத்துடன், நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள நிலமை பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி வழங்கும் செயற்பாடுகளில் தாமதத்தை ஏற்படுத்தி விடுமோ என்றும் தமிழ் மக்கள் மத்தியில் அச்சம் ஏற்பட்டுள்ளது.

சுமார் ஒரு நூற்றாண்டு காலமாக பல்வேறு வடிவங்களில் ஒடுக்கப்பட்டு வரும் இலங்கையின் தமிழ் தேசிய இனம், தனக்கு உரித்துடைய சுயநிர்ணய உரிமையை வென்றெடுப்பதற்காக போராடி வருகின்றது.

அந்த உரிமைகளை அவர்களுக்கு வழங்குவதற்கு இன்னமும் கூட இலங்கை அரசாங்கத்திற்கு மனம் இல்லாத நிலை தொடர்கின்றது. பொருளாதார அபிவிருத்தி மூலம் அனைத்து விடயங்களையும் சரி செய்து விடலாம் என்ற நோக்கில் கருமங்களை முன்னெடுத்துச் செல்லும் அரசாங்கம், அந்த கருமங்களை நிறைவேற்றுவதற்கு பாதிக்கப்பட்ட மக்களின் பங்களிப்பையும் ஆலோசனைகளையும் பெற்றுக் கொள்வதற்கு தொடர்ந்தும் பின்னடித்து வருகின்றது.

பணி நியமனங்களில் பாரபட்சம் காட்டுகின்ற போக்கு தொடர்வதாகவே வேலையற்ற பட்டதாரிகள் முதல் பாடசாலை கல்வியை இடைநிறுத்திக் கொண்டவர்கள் வரை குறை கூறுகின்றார்கள்.

உயர் பதவிகளில் தமக்குரிய மதிப்பளிக்கப்படவில்லை என்று ஒடுக்கப்பட்ட தேசிய இனம் இன்று வரை கவலை கொண்டுள்ளது. நிலைமைகள் இவ்வாறு இருக்க, அரசியல் ரீதியான நல்லிணக்கம் ஏற்பாட்டாலேயன்றி வேறு எந்த வகையிலும் நல்லிணக்கத்தையும், இனங்களுக்கிடையிலான ஐக்கியத்தையும் ஏற்படுத்த முடியாது.

ஆகவே நிலைமாறுகால நீதிப் பொறிமுறைகளை கடுமையாக அமுல்படுத்துவதற்கு ஐக்கியநாடுகள் சபை தனக்குரிய முழுமையான சக்திகளையும், வளங்களையும், அதிகாரத்தையும் பயன்படுத்தி தனது ஆளுமையையும், தனது நோக்கத்தையும் நிறைவேற்ற முன்வரவேண்டும்.


you may like this video..