உயிர்களை குறிவைக்கும் உயிர்க்கொல்லி அரக்கன்! மறைக்கப்படும் உண்மை?

Report Print Sujitha Sri in கட்டுரை

இலங்கை நான்கு புறமும் கடலால் சூழப்பட்டு நீலக் கம்பளத்திற்கு நடுவில் உள்ள முத்து போல் அமைந்துள்ளது.

இந்த நாட்டிற்குள் வாழும் மக்கள் வசீகரமான சூழலுடன் ஒன்றிய வாழ்வினையே மேற்கொண்டு வருகின்ற போதிலும், ஒரு சிலரின் அசமந்த போக்கினால் நம் இயற்கை அன்னை பாதிக்கப்படுவது நம்மில் பலர் அறியாத விடயமே.

நாம் எந்தவொரு செயலை செய்தாலும் அதற்கு கண்டிப்பாக விளைவு உண்டு என்பது உலக நியதி. அது நம்மையாக இருந்தாலும் சரி, தீமையாக இருந்தாலும் சரி.

அந்த வகையிலேயே நாம் இயற்கை அன்னைக்கு விளைவிக்கும் கேடானது டெங்கு நோயெனும் விளைவாக மாறி தற்காலத்தில் நம்மை அதிகமாக ஆட்கொண்டுள்ளது என்பதில் எவ்வித ஐயமும் இல்லை.

வருடா வருடம் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டு வருவதாக அறிக்கைகள் கூறுகின்றன. அதிலும் 2016ஐ விட 2017ஆம் ஆண்டில் 50 சதவீதத்திற்கும் மேலாக டெங்கு நோய் தொற்று அதிகரித்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இதற்கெல்லாம் யார் காரணம்? மேலோட்டமாக பார்வையை செலுத்தினால் டெங்கு நோயானது ஆர்போ (arbo) வைரசால் ஏற்படுகின்றதுடன், இந்த வைரசை ஏடிஸ் (Aedes: ஈடிஸ் ஈஜிப்ட் மற்றும் ஈடிஸ் எல்பொபிக்டஸ்) எனும் நுளம்பு காவிச் செல்கிறது.

டெங்கு நோயினை ஏற்படுத்தும் வைரசினை காவிச் செல்லும் நுளம்பானது கடிக்கும் போது டெங்கு நோய் வருகிறது என்பதாகவே நாம் கூறுவோம்.

ஆனால் இங்கு உண்மையானது மறைக்கப்படுகின்றது என்பதே உண்மை. காரணம் டெங்கு நுளம்புகளின் உருவாக்கத்திற்கும், அதிகரிப்பிற்கும் மனிதர்களே காரணமாகின்றார்கள்.

சூழல் மீதான அக்கறையீனமே இந்த டெங்கு எனும் உயிர்க்கொல்லி அரக்கன் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரையில் பல உயிர்களை பறித்துக் கொண்டு செல்கின்றமைக்கு காரணமாக உள்ளது.

மன அமைதி தேடி நாம் செல்லும் கடற்கரை சூழலில் கூட பொலித்தீன் பைகள், யோகட் கோப்பைகள், இளநீர் கோம்பை மற்றும் சிரட்டைகள் போன்றவற்றை நாம் போட்டுவிட்டு வருகின்றோம். அதனை குப்பை தொட்டியில் போடும் எண்ணம் கூட இல்லை பலருக்கு..

இவ்வாறான பொருட்களை நாம் பாவனையின் பின் அழிப்பதற்கு முயற்சிக்க வேண்டும். அவ்வாறு இல்லாவிடினும் கூட அதனை அழிப்பவர்களுக்கு உதவ முன்வர வேண்டும்.

இதேவேளை, இவ்வாறான பொருட்களை அழிக்கும் நடிவடிக்கையை மேற்கொள்ளும் போது சிரட்டை போன்ற பொருட்களை நாம் மண்ணில் புகைக்கலாம், பொலித்தீன் மற்றும் பிளாஸ்டிக் பொருட்களை மீள் சுழற்சிக்கு உட்படுத்தலாம்.

இவ்வாறான பொருட்களில் தேங்கும் நீரினாலேயே அதிகளவான நுளம்புகள் பெருகுகின்றன. அத்துடன் வீடுகளில் அழகுக்காக வைக்கப்படும் நீர் நிரப்பப்பட்ட பூந்தொட்டிகள் உள்ளிட்டனவும் நுளம்புகளின் பெருக்கத்திற்கு காரணமாக அமைகின்றன.

இவற்றை நாம் கருத்தில் கொண்டு கவனமாக செயற்பட்டால் நிச்சயமாக மாதந்தோறும் டெங்கிற்கு பலியாகும் உயிர்களை காப்பாற்ற முடியும்.

இதேவேளை, கடந்த வருடத்தில் இலங்கையில் டெங்கு நோய்த்தாக்கம் அதிகரித்திருந்த நிலையில் அரசினால் பல்வேறு சிரமதானப் பணிகள் மற்றும் வேலைத்திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டன.

இந்த முயற்சியின் பலனாக கடந்த காலத்தை விட தற்போது டெங்கு நோய்த்தாக்கம் ஓரளவு குறைவடைந்து காணப்படுகின்ற போதிலும், நோயின் தாக்கமானது மீண்டும் தலைதூக்கும் அபாயம் காணப்படுகிறது.

டெங்கு நோயின் தாக்கம் தொடர்பில் வருடத்தின் சில நாட்கள் மட்டும் யோசித்து வேலைத்திட்டங்களை செயற்படுத்தி விட்டு மற்றைய நாட்களில் வழமை போல் நாம் சூழல் மாசடையும் செயற்பாடுகளில் ஈடுபடுவதே நோயின் தாக்கம் மறுபடியும் அதிகரித்து வருகின்றமைக்கு வழிவகுக்கிறது.

எனவே டெங்கு ஒழிப்பு நடவடிக்கையை நாம் அன்றாட பணிகளில் ஒன்றாக கொண்டு செயற்படுத்துவோமேயானால் நிச்சயமாக டெங்கு நோயின் தீவிரத்தை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர முடியும் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை.