ஹக்கீம், கண்கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம்?

Report Print M.M.Nilamdeen M.M.Nilamdeen in கட்டுரை

காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் செய்வதையெல்லாம் செய்வார். பின்பு அரசிடம் எதிர்பார்த்தது எதுவும் கிடைக்கவில்லையென்றால் சீ இந்தப் பழம் புளிக்கும் என்ற நரிக் கதைக்கு வந்து விடுவார்.

கட்சியைப் பாதுகாப்பதற்காக பதவிகளை தூக்கியெறிந்து விட்டு களத்தில் நின்று போராடுகின்ற தீர்மானங்களை எடுப்பதற்கு தாம் ஒரு போதும் பின்நிற்கப் போவதில்லையாம் என்று கடந்த வாரம் கட்சித் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.

ஹக்கீம் எந்தப் போரில் எந்தக்களத்தில் எப்போது போராடியுள்ளார். கட்சியைப் பாதுகாப்பது என்றால் கட்சியை யாராவது திருடிச் செல்லப் போகின்றார்களா? இல்லை நான்கு டயர் போட்டு ஹக்கீம் கட்சியை யாராவது உருட்டிச் செல்லப் போகின்றார்களா?

கடந்த உள்ளூராட்சித் தேர்தலில் ஐ.தே.க.யுடன் எவ்விதமான ஒப்பந்தமும் இன்றி ஹக்கீம் கட்சி இணைந்து போட்டியிட்டது.

ஐ.தே.க.யுடன் ஹக்கீம் கட்சி இணைந்து யானைச் சின்னத்தின் கீழ் போட்டியிட்டதனால் ஹக்கீம் கட்சி ஐ.தே.க.யில் மறைந்து தமது தோல்விகளை மறைத்துக் கொண்டது.

அதாவது ஹக்கீம் கட்சி இம்முறை பாரிய வாக்குச் சரிவைக் கண்டுள்ளது. ஆனால் ஐ.தே.க.வில் இணைந்து போட்டியிட்டதனால் ஹக்கீம் கட்சியின் தோல்வி ஐ.தே.க.வினால் காப்பாற்றப்பட்டுள்ளது.

ஹக்கீம் கட்சி ஐ.தே.க.வில் இணைந்து போட்டியிட்டதனால் ஹக்கீம் கட்சிக்கு பெருத்த நலன் கிடைத்துள்ளது. அதே நேரம் போனஸ் ஆசனங்கள் ஐ.தே.கட்சிக்கு கிடைத்துள்ளது. ஆனால் பல இடங்களில் ஹக்கீம் கட்சி ஜெமன் பதவிகளை கேட்கின்றது.

அதனால் பிரதமர் ரணிலுக்கும் ஹக்கீக்கும் முறுகல் நிலை வந்துள்ளது. இந்த முறுகலின் உச்ச கட்டம் ரணிலுக்கு எதிராக மல்லுக்கட்டி வருகின்றார். அதனால் அரசுக்கு கொடுத்து வரும் ஆதரவை வாபஸ் பெறப் போகின்றேன் என்று ஹக்கீம் ரணிலை மிரட்டி வருகின்றார்.

இந்த நிலையில்தான் கடந்த வாரம் ஹக்கீம் கட்சித் தலைமையகத்தில் காரசாரமாக ஐ.தே.கட்சிக்கு எதிராக இனிமேலும் ஐ.தே.க.யுடன் பயணிக்க முடியாது என்று ஹக்கீம் பேசியுள்ளார்.

இதேநேரம் பாகிஸ்தான் சென்று வந்துள்ள அதிபர் மைத்திரியுடன் ஹக்கீம் சுதந்திரக் கட்சி ஆட்சி அமைப்பது பற்றி பேசியுள்ளார். அத்துடன் தலைவர் சம்பந்தனுடன் பேசியுள்ளார்.

இந்தப் பேச்சுக்கள் எல்லாமே ரணிலை மிரட்டும் செயல். அதாவது ஹக்கீம் தனது ஆதரவை வாபஸ் பெறப் போகின்றார் என்ற செய்தியை கசிய விட்டு ஹக்கீம் தனது தேவைகளை நிறைவேற்றவும் பெற்றுக் கொள்ளவும் உரிய சன்மானங்களை அடையவும் ஒரு தந்திரமாக இதைப் பார்க்கலாம்.

மஹிந்த ஆட்சிக் காலத்தில் மிகப்பெரிய ஒரு பாவத்திற்கு முஸ்லிம் காங்கிரஸ் உடந்தையாகி விட்டது என்று ஹக்கீம் மஹிந்தவின் ஆட்சிக் காலத்தில் மஹிந்தவுக்கு ஆதரவு தெரிவித்துவிட்டு புலம்பி வந்தார். அதாவது 17,18 ஆவது திருத்தச்சட்டத்திற்காக அப்போதைய மஹிந்த அரசுக்கு ஹக்கீம் கட்சி ஆதரவளித்ததைத்தான் மிகப் பெரிய பாவமாக ஹக்கீம் அப்போது சொல்லியிருந்தார்.

18 ஆவது அரசியல் திருத்தச் சட்டம் என்பது மூன்றாவது முறையும் மற்றும் ஆயுள் வரையும் ஜனாதிபதியாகப் போட்டியிடும் அரசியல் திருத்தம். ஹக்கீம் அரசுக்கு அப்போது ஆதரவளித்த போது பாவமாகத் தெரியவில்லையாம். இப்போது இவருக்கு பாவமாகத் தெரிகிறதாம்.

இது எப்படி இருக்கிறது தெரியுமா ஒன்றும்; தெரியாத பாப்பா ராத்திரி 9 மணிக்குப் போட்டாளாம் தாப்பாள்.

எந்த விதமான அதிகாரங்களுமற்ற நீதி என்கின்ற அநீதி அமைச்சுக்கு ஆசைப்பட்டு முழு நாட்டையும் அப்போது மஹிந்த கம்பனிக்கு அடகு வைத்த பெருமை ஹக்கீமையே சாரும்.

அரசியல் அனுபமில்லாது முதிர்ச்சியில்லாது வெறும் அமைச்சர் என்ற பந்தாவுக்காகத்தானே அரசுக்கு ஹக்கீம் கம்பனி ஆதரவளித்தது.

இப்போது அதற்கான பலனை ஒட்டு மொத்த முஸ்லிம்களும் அனுபவிக்கின்றார்கள். இதை முஸ்லிம் மக்கள் உணர வேண்டும்.

ஹக்கீம் செய்துள்ள வரலாற்றுத் துரோகங்களில் மறக்க முடியாத மன்னிக்க முடியாத பட்டியலில் இது மிகவும் முக்கியமானது.

இந்தப் 18 ஆவது திருத்தச் சட்டத்திற்கு சிறுபான்மைக் கட்சிகள் அரசுக்கு ஆதரவளிக்க வேண்டாம் என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் ஐயா அப்போது பகிரங்க அறைகூவல் விடுத்திருந்தார். அந்த அறைகூவலை ஹக்கீம் மற்றும் ஆறுமுகம் தொண்டமான் ஆகியோர்கள் காதில் எடுக்கவில்லை.

அப்போது ஹக்கீம் அண்ணன் அழுது புலம்பி என்ன பயன். ஆண்டாண்டுகள் கடந்தாலும் அழுது புரண்டாலும் மாண்டார்கள் வருவதில்லை ஹக்கீம் ஐயா.

இலங்கையில் தமிழர்களுக்கு எவ்விதமான அநீதியும் நடக்கவில்லை என்றும் எந்தவொரு மனித உரிமை மீறல்களும் தமிழர்களுக்கு எதிராக நடக்கவில்லை என்றுதானே மனித உரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளையிடம் உத்தியோபூர்வமாக எடுத்துரைத்தார்.

இதுக்கு மேலும் தமிழர்கள் ஹக்கீமை நம்ப வேண்டுமா? நம்பலாமா? தமிழர்களிடம் நாம் வைக்கும் முதல் கேள்வி இது.

சிறுபான்மை மக்களின் அதிகாரங்களைப் பறிக்கும் திவிநெகும சட்ட மூலத்திற்கு ஆதரவாக கிழக்கு மாகாண சபையிலும் மேல் மாகாண சபையிலும் பாராளுமன்றத்திலும் ஹக்கீம் கட்சி அப்போது அரசுக்கு ஆதரவளித்தது.

ஆனால், சிறுபான்மை மக்களுக்கு பாதகமான இச்சட்ட மூலங்களுக்கு ரவூப் ஹக்கீம் கட்சி அரசுக்கு அதரவாக வாக்களிக்கக் கூடாது என்று தமிழ்த் கூட்டமைப்புத் தலைவர் சம்பந்தன் ரவூப் ஹக்கீம் கட்சி உட்பட்ட சகல சிறுபான்மைக் கட்சிகளிடமும் பகிரங்கமாகவும் நேரடியாகவும் கேட்டிருந்தார்.

அப்போது சம்பந்தனின் கோரிக்கையை ரவூப் ஹக்கீம் கட்சி உட்பட எந்தவொரு கட்சியும் ஏற்றுக் கொள்ளவில்லையே.

ரவூப் ஹக்கீம் கட்சி அரசுக்கு ஆதரவளிக்கும் ஒவ்வொரு பிரேரணையும் சிறுபான்மை சமூகங்களுக்கு பாதகமானது என்று அப்போது தமிழ் கூட்டமைப்பு தலைவர் இரா.சம்பந்தன் உரத்துச் சொன்னார்.

அப்போது சம்பந்தனின் கருத்துக்கள் ரவூப் ஹக்கீம் கட்சிக்கு செவிடன் காதில் ஊதிய சங்கு போல்தான் இருந்தது.

ரவூப் ஹக்கீம் கட்சி ஒரு பாவத்தை மட்டும் செய்யவில்லை அரசுடன் ரவூப் ஹக்கீம் கட்சி இணைந்து கொண்ட பின்னர் அரசுக்கு ஆதரவாக சிறுபான்மைச் சமூகத்திற்கு எதிரான பாதகமான அத்தனை திருத்தச் சட்ட மசோதாக்களுக்கும் ரவூப் ஹக்கீம் கட்சி ஆதரவளித்து துரோகங்களை செய்துள்ளது.

அரசுக்கு வக்காளத்து வாங்கிய ஹக்கீம்

மனித உரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளை இலங்கை வந்திருந்த போது அரசின் நீதி அமைச்சர் ஹக்கீமை முதன் முதலாக கொழும்பில் சந்தித்தார்.

ஹக்கீம் ஏற்கனவே ஊடகத்திற்கு தெரிவிக்கப்பட்டது போன்று இலங்கைக்கு செய்ய வேண்டிய கடமைகளையும் பணிகளையும் நன்றாகவே செய்து முடித்தார். அதாவது சிங்கள தேசத்தின் சிங்கள அரசின் அமைச்சர் எதைச் செய்வாரோ அதைச் செய்தார்.

அதாவது இலங்கையில் தமிழர்கள் சொல்வது போன்று தமிழர்களுக்கு எவ்விதமான மனித உரிமைகள் மீறல்களும் நடைபெறவில்லை என்றும் இலங்கையில் முஸ்லிம்களுக்கு பிரச்சினைகள் எதுவுமில்லை என்றும் சொல்லியிருந்தார்.

அதாவது இலங்கையில் முஸ்லிம்களுக்கு பிரச்சினை எதுவுமில்லை. அண்மைக்காலமாக ஒரு சிறிய குழுவொன்று முஸ்லிம்கள் மீது சிறிய கசப்புணர்வுகளை வெளிக்காட்டி வருகின்றது என்று அப்போதைய அளுத்கம, வேருவலை தாக்குதல் சம்பவங்கள் பற்றி முஸ்லிம் எம்.பிக்கள் இணைந்து கையொப்பம் இட்டு மகஜராக ஜனாதிபதியிடம் கையளித்துள்ளோம்

இனிமேல் இப்படியான சம்பவங்கள் நடக்கக் கூடாது என்றும், இனிமேல் நடக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்றும் கோரிக்கைகளாகக் கொடுத்துள்ளோம், அவைகளை ஜனாதிபதி செய்வார் என்ற நம்பிக்கை எமக்குள்ளது என்றும் ஹக்கீம் நவநீதம்பிள்ளையிடம் தெரிவித்திருந்தார்.

முஸ்லிம்களுக்குப் பிரச்சினையில்லையாம்

அதாவது இலங்கையில் முஸ்லிம்களுக்கு ஒரு பிரச்சினையுமில்லை. சும்மா தெருச்சண்டை சிறுபிள்ளைகள் வீதிகளில் பிடிக்கும் சாதாரண சண்டைதான்.

இவைகளை நாங்கள் பெரிது படுத்தவில்லை. நீங்களும் பெரிது படுத்த வேண்டாம். முஸ்லிம்களாகிய நாங்கள் ஜனாதிபதியிடம் பேசித்தீர்த்துக் கொள்வோம். வேறு ஒரு பிரச்சினையுமில்லை என்றவாறுதான் ஹக்கீம் நவநீதம்பிள்ளையிடம் பேசியிருந்தார் .

நவநீதம்பிள்ளையிடம் இப்படி ஹக்கீம் பேசிய பின்பு கண்டி, குருநாகல, தெகிவளை ஆகிய இடங்களில் பள்ளிவாசல்கள் உடைக்கப்பட்டது.

மற்றும் முஸ்லிம்களுக்கு எதிரான பல தாக்குதல் சம்பவங்கள் மஹிந்த ஆட்சிக் காலத்தில் நடைபெற்றுள்ளது.

ஹக்கீம் நவநீதம்பிள்ளையிடம் பேசிய தகவல்கள் ஊடகங்களில் கசிந்த பின்புதான் மு.கா.பிரதிநிதிகள் குழுவொன்று நவநீதம்பிள்ளையைச் சந்திக்க வேண்டும் என்று தூக்கத்தில் இருந்து எழுந்தவன் போன்று நவநீதம்பிள்ளையைச் சந்திக்க முயன்றார்கள்.

அதாவது மு.கா. குழுவொன்று நவநீதம்பிள்ளையைச் சந்திக்க வேண்டும். அதற்கான நேரத்தை ஒதுக்கித் தர வேண்டும் என்று இலங்கை வெளிவிவகார அமைச்சிடம் ரவூப் ஹக்கீம் கட்சி கோரியது.

அந்தக் கோரிக்கை வெளிநாட்டமைச்சினால் நிராகரிக்கப்பட்டது. காரணம் நவநீதம்பிள்ளையின் நிகழ்ச்சி நிரலில் முன்கூட்டியே நேரம் பெறுவதற்கு ரவூப் ஹக்கீம் கட்சி தவறிவிட்டது.

எந்தவொரு திட்டமும் இல்லாது நவநீதம்பிள்ளையைச் சந்திக்க வேண்டும் என்ற எண்ணம் திடீரென்று ஹ.க.வுக்கு எழுந்துள்ளது.

மு.கா. நவநீதம்பிள்ளையைச் சந்திக்கவில்லை

ஒரு பொறுப்பு வாய்ந்த கட்சி அல்லது அமைப்பு என்பது முன்கூட்டியே கூடி இவைகள்பற்றி ஆராய்ந்திருக்க வேண்டும்.எதற்கெடுத்தாலும் ஹக்கீம் கட்சி உயர்பீடம் நாளை கூடுகின்றது என்பார்கள்.

கடலில் நடப்போம், காற்றில் பறப்போம், வானில் மிதப்போம் என்று துள்ளிக் குதிக்கும் ரவூப் ஹக்கீம் கட்சி மிகவும் பொறுப்பு வாய்ந்த சர்வதேச ஆணையாளர் வருகின்றார் என்றால், அவரை நாம் எப்படி எதிர் கொள்வது யார் யார் சந்திப்பது என்னவெல்லாம் பேசுவது என்று முன்கூட்டியே ஆராய்ந்திருக்க வேண்டும்.

தமிழர்களுக்குப் பின்னர் முஸ்லிம்களுக்கு எதிராக சிங்களம் பெரும் தாக்குதல்கள் செய்து வருகின்றது. இவைகளில் இருந்து எங்களுக்கு பாதுகாப்பு வேண்டும்.

அதற்காக சர்வதேச சமூகம் எங்களுக்கு உதவ வேண்டும் என்ற வகையில் நவநீதம்பிள்ளையிடம் ஹக்கீம் தெரிவித்திருக்க வேண்டும்.

ஆனால், இவைகள் எதுவுமே நவநீதம்பிள்ளையிடம் பேசப்படவில்லை. முஸ்லிம்கள் மத்தியில் எத்தனையோ சிவில் அமைப்புக்கள் உள்ளது அவைகளில் ஒன்றாவது நவநீதம்பிள்ளையிடம் ஏதாவது பேச முயன்றுள்ளதா. இல்லையே.

ஆனால், நவநீதம்பிள்ளை நாட்டைவிட்டு வெளியானதும் பக்கம் பக்கமாக நவநீதம்பிள்ளையிடம் மகஜர் கொடுத்தார்களாம். யாரை ஏமாற்ற இந்த நாடகம்.

முஸ்லிம்களின் பிரச்சினைகளை எடுத்துச் சொல்ல ஒரு அமைப்போ அல்லது ஒரு கட்சியோ அல்லது ஒரு அரசியல் தலைமையோ முஸ்லிம்கள் மத்தியில் இல்லை என்பதை புடம் போட்டுக் காட்டப்பட்டுள்ளது.

இலங்கை முஸ்லிம்கள் அரசியல் அனாதைகள் என்பதற்கு இதைவிட வேறு என்ன வேண்டும். ஒரு கொள்கை இல்லாது, திட்டம் இல்லாது கூடிக் கலைவதும் விடிய விடிய சண்டைபிடிப்பதும்தான் உயர்பீடக் கூட்டமா? நவநீதம்பிள்ளையின் வருகை என்பது எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது.

முஸ்லிம்களின் பிரச்சினைகளை விளக்கிச் சொல்லக்கூடிய அரிய வாய்ப்பொன்று சகல முஸ்லிம் தரப்பாலும் அப்போது கைநழுவி விடப்பட்டது.

முஸ்லிம்களின் பிரச்சினைகள் நவநீதம்பிள்ளையிடம் கையளிப்பு

இலங்கை முஸ்லிம்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டு வரும் மத உரிமைகள் மீறல்கள், இனவாத அச்சுறுத்தல்கள், மற்றும் தாக்குதல்கள் சம்பங்கள் தொடர்பாக விரிவான அறிக்கையொன்றை ஐ.நா.மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளையிடம் நல்லாட்சிக்கான மக்கள் இயக்கம் கையளித்தது.

திருகோணமலையில் சிவில் சமூக பிரதிநிதிகளை நவநீதம்பிள்ளை அப்போது சந்தித்த போதே நல்லாட்சிக்கான மக்கள் இயக்கத்தின் பிரதிநிதிகளால் அந்த அறிக்கை கையளிக்கப்பட்டது.

நல்லாட்சிக்கான மக்கள் இயக்கம் நவநீதம்பிள்ளையுடனான சந்திப்பை தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஏற்பாடு செய்து கொடுத்தது என்பது வெளிவராத உண்மை.

முஸ்லிம்கள் மீதான தாக்குதல்களை முறையிட்ட கூட்டமைப்புக்கு நவநீதம்பிள்ளை பாராட்டு

இலங்கை முஸ்லிம்களுக்கு எதிராக அரசின் அனுமதியுடன் பௌத்த தீவிரவாத அமைப்புக்களால் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள தாக்குதல் நடவடிக்கைகள் குறித்து ஜ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளையிடம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அப்போது முறையிட்டது.

அந்த முறைப்பாட்டை தன்னிடம் தெரிவித்தமைக்காக கூட்டமைப்புக்கு நவநீதம்பிள்ளை பாராட்டுத் தெரிவித்தள்ளதாக கூட்டமைப்பு எம்.பிக்களான எம்.ஏ சுமந்திரன், சுரேஷ் பிரேமச்சந்திரன் ஆகியோர் அப்போது தெரிவித்திருந்தனர்.

முஸ்லிம்களின் பள்ளிவாசல்கள் மீதான தாக்குதல்கள்,முஸ்லிம் பெண்களின் பர்தா உடை மீதான பிரச்சினைகள் தொடர்பில் நவநீதம்பிள்ளையிடம் கூட்டமைப்பு சார்பில் முறையிட்டிருந்தது.

இதுகுறித்து கூட்டமைப்பு பேச்சாளரும் எம்.பியுமான சுரேஷ் பிரேமச்சந்திரனிடம் அப்போது தொடர்பு கொண்டு கேட்ட போது,

முஸ்லிம்கள் தொடர்பான பிரச்சினைகள் குறித்து யாருமே தன்னிடம் முறையிடவில்லை என்றும், முஸ்லிம் சிறுபான்மையினத்திற்காக மற்றொரு சிறுபான்மையினத்தின் பிரதிநிதிகள் முறையிடுவதை நான் பாராட்டுகின்றேன் என்று நவநீதம்பிள்ளை தெரிவித்திருந்தார்.

அன்றும் இன்றும் முஸ்லிம்களுக்கான குரல் தமிழரசுக் கட்சிதான்

முஸ்லிம்களுக்கான சிங்களத் தாக்குதல் என்பது இன்று நேற்று முளைத்த விடயமல்ல. தந்தை செல்வா காலம் தொட்டு இன்றைய சம்மந்தன் காலம் வரையும் தொடராகவே நடந்து வருகின்றது.

தந்தை செல்வா காலத்தில் முஸ்லிம்களின் பள்ளிவாசல்கள் உடைக்கப்பட்ட போதும்,முஸ்லிம்கள் மீது தாக்குதல்கள் மேற்க்கொள்ளப்பட்ட போதும் அப்போது தந்தை செல்வா முஸ்லிம்களுக்காக பாராளுமன்றத்திலும் பாராளுமன்றத்திற்கு வெளியிலும் குரல் கொடுத்திருந்தார்.

ஆனால் அன்றைய காலங்களில் முஸ்லிம்கள் மத்தியில் போதியளவு அமைச்சர்கள் இல்லை. எம்.பிக்கள் இல்லை. முஸ்லிம் கட்சிகளும் இல்லை. ஆனால் இப்போது அப்படி இல்லையே.

திரும்பும் தெருவெல்லாம் டீக் கடை போன்று, திரும்பும் திசையெல்லாம் முஸ்லிம் எம்.பிக்களும், முஸ்லிம் அமைச்சர்களும், முஸ்லிம் கட்சிகளும், முஸ்லிம் அமைப்புக்களும் உள்ளன.

இத்தனை முஸ்லிம் அமைச்சர்களும், முஸ்லிம் அரசியல்வாதிகளும் இருந்தும் முஸ்லிம்களின் உண்மை நிலையை நவநீதம்பிள்ளையிடம் எடுத்துரைக்க ஒருவர் கூட இல்லையே என்ற ஆதங்கம் முஸ்லிம்கள் மத்தியில் ஓங்கி ஒலிக்கின்றதே.

அப்போதும், இப்போதும் முஸ்லிம்களுக்கென்று குரல் கொடுப்பது தமிழரசுக் கட்சிதான் என்பதை முஸ்லிம்கள் மறுக்க முடியுமா.

முஸ்லிம்களைப் பொறுத்த மட்டில் வடக்கு கிழக்கு என்றாலும் மேற்கு என்றாலும் சரி சிங்களவர்களை ஆதரித்துக் கொண்டு தமிழர்களின் இணக்க அரசியலை இழந்து விட்டோம். இப்போதும் இழந்து நிற்கின்றோம்.

இப்போது முஸ்லிம்களின் பிரச்சினைகளை விபரமாக நவநீதம்பிள்ளையிடம் முறையிட்டது கூட்டமைப்புத்தான். சம்பந்தன் தலைமையில் நவநீதம்பிள்ளையிடம் முஸ்லிம்களின் பிரச்சினைகள் பற்றி விரிவாக சொல்லப்பட்டுள்ளது.

அதனால் கூட்டமைப்புக்கு முஸ்லிம்களிடம் இருந்து பாராட்டுக்கள் குவிந்தது. இந்த நிலையென்பது எதிர்கால முஸ்லிம்களுக்கு மிகவும் முன்னேற்றமான பயணமாகும்.

குறிப்பாக வடகிழக்கில் முஸ்லிம்கள் தமிழர்களுடன் இணக்க அரசியல் செய்யவில்லையென்றால் எதிர்கால முஸ்லிம்களின் நிலமை மிகவும் மோசமடையும் என்பதில் மாற்றுக் கருத்தில்லைதான்.

கூட்டமைப்புடன் முஸ்லிம்கள் இணக்க அரசியல் செய்ய வேண்டும்

முஸ்லிம்களுக்கென்று, முஸ்லிம்களின் குரலாகச் செயல்படக் கூடிய கட்சியுமில்லை முஸ்லிம்களுக்கென்று செயல்படக்கூடிய அரசியல் வாதிகளுமில்லை, முஸ்லிம்களுக்கென்று ஒரு அமைப்பு கூட இல்லை.

முஸ்லிம்களுக்கென்று இருக்கின்ற மார்க்க அமைப்புக் கூட அரசின் ஊதுகுழலாக மாறிவிட்டது. முஸ்லிம்களின் கட்சி என்கின்ற கட்சியும் ஜனாதிபதியின் முகவராக மாறிவிட்டார்.

இந்த நிலையில் யாரை நம்பி, எந்த அமைப்பை நம்பி முஸ்லிம்கள் தங்கியுள்ளார்கள் என்ற கேள்விக்கு எங்கிருந்து யார் பதில் தருவார்கள்.

முஸ்லிம் மக்கள் முஸ்லிம் அரசியல்வாதிகளை நம்பி எந்தவொரு விமோசனமும் அடையமாட்டார்கள் என்பதற்கு பல உதாரணங்களைச் சொல்ல முடியும்.

விசேடமாக முஸ்லிம் காங்கிரஸ் கட்சியை நம்பி முஸ்லிம் மக்கள் எந்தவொரு விமோசனமும் அடையமாட்டார்கள் என்பதை நாம் மீண்டும் மீண்டும் ஆணித்தரமாகச் சொல்லமுடியும்.

முஸ்லிம்கள் இப்படியே போனால் முஸ்லிம்களின் ஆடைகளும் பறிபோய்விடும்.

குறிப்பாக வடகிழக்கில் வாழ்கின்ற முஸ்லிம்கள் எதிர்வரும் பொதுத் தேர்தலில் கூட்டமைப்பு சார்பாக முஸ்லிம் வேட்பாளர்களை நிறுத்தி முஸ்லிம் எம்.பிக்களைத் தெரிவு செய்து முஸ்லிம்களின் உரிமைகளை பாதுகாக்க கூட்டமைப்புடன் இணக்க அரசியல் செய்வதற்கான அணியை உருவாக்க வேண்டும்.

தமிழ் முஸ்லிம் இன உறவு

இல்லாது போனால் முஸ்லிம்களின் ஏக பிரதிநிதிகள் என்று மார்தட்டுகின்றவர்கள் தாங்களும் தங்களது குடும்பத்தினருமாக கொழுத்த பணத்துடன் வாழ்வார்கள்.

குருட்டுத் தனமாக வாக்களிக்கின்ற முஸ்லிம் வாக்காளர்கள் மட்டும் தெருத் தெருவாக புலம்பிக் கொண்டிருப்பார்கள்.

முஸ்லிம் வாக்காளர்களே முஸ்லிம்களின் உரிமைக்காகக் குரல் கொடுக்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்பில் முஸ்லிம் வேட்பாளர்கள் இணைந்து போட்டியிட்டு முஸ்லிம்களின் உரிமைகளைப் பாதுகாப்போம்.

வாருங்கள் தமிழ் முஸ்லிம் இன உறவைப் பலப்படுத்துவோம் தந்தை செல்வா காலத்தைக் காண்போம். முஸ்லிம்களை விற்றுப் பிழைப்பு நடத்தும் இந்த முஸ்லிம் அரசியல் வர்த்தக வகையறாக்களை விரட்டியடிப்போம்.

வடகிழக்கில் தமிழ் மக்களுடன் முஸ்லிம்கள் இணைந்து செல்ல வேண்டிய பாரிய அவசிய தேவை தங்கியுள்ளது.

தமிழ் மக்களுடன் முஸ்லிம்கள் இணையவில்லையென்றால் பாரிய சேதாரத்திற்குள் முஸ்லிம்கள் தள்ளப்பட்டு விடுவார்கள் என்பதை இங்கு ஆணித் தரமாக எத்தி வைக்கின்றேன்.