தமிழீழ விடுதலைப்புலிகளின் நிலை தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் வருமா?

Report Print Jeslin Jeslin in கட்டுரை

பிரதமர் ரணில் விக்ரமசிங்க மீதான நம்பிக்கையில்லாப் பிரேரணை தொடர்பான விவாதம் மற்றும் வாக்கெடுப்பு நாளைய தினம் நாடாளுமன்றத்தில் இடம்பெறவுள்ளது.

பிரதமருக்கு எதிராக கூட்டு எதிர்க்கட்சியினர் கொண்டுவந்துள்ள இந்த நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சி மற்றும் மக்கள் விடுதலை முன்னணி ஆகிய பிரதான கட்சிகள் சிலவும் ஆதரவாக வாக்களிக்கவுள்ளதாக தற்போது வரையில் வெளிவந்துள்ள தகவல்களின் மூலம் அறியமுடிகின்றது.

எனினும் தமிழ் மக்களின் ஏக பிரதிநிதியாகவும் நாட்டின் எதிர்க்கட்சியாகவும் செயற்படும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையில் என்ன நிலைப்பாட்டைக் கொண்டிருக்கின்றது என்பது தொடர்பில் இதுவரையில் எவ்வித தகவல்களும் வெளிவரவில்லை.

உண்மையில், கடந்த 2005ஆம் ஆண்டு இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தலில் தமிழீழ விடுதலைப்புலிகள் யாருக்கு ஆதரவளிப்பது என்பது தொடர்பில் எவ்வித நிலைப்பாட்டில் இருந்தனரோ அதே போன்றதான நிலைப்பாட்டில்தான் தற்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரும் உள்ளனர்.

2005ஆம் ஆண்டு இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தலில் வேட்பாளர்களாக களமிறங்கிய முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச மற்றும் தற்போதைய பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகிய இருவர் தொடர்பில் எவ்வித சாதகமான நிலையையும் அவர்கள் கொண்டிருக்கவில்லை.

மாறாக அந்த ஜனாதிபதித் தேர்தலை விடுதலைப்புலிகள் புறக்கணித்திருந்தனர், எனினும் கூட்டமைப்பின் காரணமாக வடக்கு, கிழக்கு பகுதிகளில் உள்ள தமிழ் மக்களின் கணிசமான வாக்குகள் ரணில் விக்ரமசிங்கவுக்கு கிடைக்கப்பெற்றிருந்தது.

எனினும் நாட்டின் ஏனைய பிரதேசங்களின் வாக்குகளால், பெரும்பான்மை இனத்தவரிடத்தில் மகிந்த ராஜபக்சவுக்கு இருந்த செல்வாக்கின் காரணமாகவும் ஜனாதிபதித் தேர்தலில் மகிந்த ராஜபக்ச வெற்றிப்பெற்று ஜனாதிபதியானார்.

அதற்கு பின்னரான காலப்பகுதியிலேயே விடுதலைப்புலிகளுக்கு எதிரான இலங்கை அரசின் நடவடிக்கைகள் வலுப்பெற்று இறுதியில் 2009இல் விடுதலைப்புலிகளின் யுத்தத்தையும் இலங்கை அரசு மௌனிக்கச் செய்தது.

அன்று தமிழீழ விடுதலைப் புலிகள் விட்ட தவறின் காரணமாகவே இறுதியில் அவர்களது யுத்தம் மௌனிக்கப்பட்டது என இதுவரையிலும் அரசியல் ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டிவருகின்றனர்.

அது போன்றதான மற்றுமொரு சூழலில் தற்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இருக்கின்றதோடு, இந்த சூழலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முடிவு எவ்வாறு இருக்கும் என்பதில் அனைத்து தமிழர் சார் அரசியல் தரப்பும் எதிர்ப்பார்ப்புடன் இருக்கின்றது.

அத்துடன், பிரதமருக்கு ஆதரவளிப்பதா அல்லது பிரதமருக்கு எதிராக செயற்படுவதா என்ற முடிவில்தான் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் எதிர்காலம் தங்கியுள்ளது.

மேலும், நடந்த முடிந்த உள்ளூராட்சிமன்றத் தேர்தலின் மூலம் வடக்கு, கிழக்கு சார் தமிழ் மக்கள் தமது வெளிப்படையான எதிர்வலைகளை காட்டியிருந்தனர்.

அதன்மூலம் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு தற்போதைய சூழலில் மக்களின் ஆதரவு அல்லது மக்கள் செல்வாக்கு எந்தளவில் இருக்கின்றது என்பதையும் பிரதமர் மீதான மக்களின் அதிருப்தியையும்கூட தெரிந்திருக்க முடியும்.

இந்நிலையில், பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு ஆதரவாக செயற்படுவதா எதிராக செயற்படுவதா என்ற தர்மசங்கட நிலைக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புத் தள்ளப்பட்டுள்ளது.

விடுதலைப்புலிகளைப்போன்று மீண்டும் ஒரு தவறான முடிவை தமிழர்களின் ஏகப் பிரதிநிதியான கூட்டமைப்பு எடுக்குமிடத்து அதில் கூட்டமைப்பின் எதிர்காலம் மாத்திரம் இன்றி தமிழர்களின் அரசியல் சுதந்திரம், எதிர்காலம் போன்றனவும் கேள்விக்குறியாகும்.

அத்துடன், வடக்கில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரான சிவஞானம் சிறீதரன்,வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரான சார்ள்ஸ் நிர்மலநாதன் ஆகியோரும் கிழக்கில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரான சீனித்தம்பி யோகேஸ்வரன் ஆகியோரும் பிரதமருக்கு எதிரான தமது நிலைப்பாட்டினை, மனோ நிலையினை வெளிப்படுத்தியுள்ளனர்.

இது இவ்வாறிருக்க இரு வேறு மனநிலையிலும், இரு வேறு கருத்துக்களுடனும் இருக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முடிவு என்ன என்பதை உள்நாட்டு அரசியல் ஆய்வாளர்கள் உட்பட சர்வதேசமும் உற்றுநோக்குகின்றது.

மேலும், பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை தொடர்பில் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் உட்பட கூட்டமைப்பின் முக்கியஸ்த்தர்கள் பலரும் பல்வேறு கருத்துக்களை முன்வைத்து வருகின்றனர்.

பிரதமருக்கு எதிரான குறித்த நம்பிக்கையில்லாப் பிரேரணை தொடர்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக்கட்சிகளுக்கிடையில் கலந்துரையாடல்கள் நடத்தப்பட்டு வருவதாக நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தெரிவித்திருந்தார்.

அத்துடன், தற்போதைய நிலைமைகள் குறித்தும் பிரதான அரசியல் கட்சிகளின் பிரதிபலிப்புக்கள் குறித்தும் கலந்துரையாட உள்ளதாகவும், அதற்கு பின்னர் நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவு அளிப்பதா இல்லை அதனை எதிர்ப்பதா என்பதை முடிவு செய்வோம் எனவும் மாவை சேனாதிராஜா குறிப்பிட்டிருந்தார்.

அத்துடன் இன்றைய தினம் குறித்த பிரேரணை தொடர்பில் முடிவு எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

மேலும், இன்றைய தினம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை தொடர்பில் கலந்துரையாடும்பொருட்டு விசேட சந்திப்பொன்றை நடத்தியுள்ளனர்.

இதன்போது, பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை தொடர்பில் தமது நிலைப்பாடு என்ன என்பதை இன்று இரவு அல்லது நாளை காலை கட்சிகளுடன் கலந்துரையாடிய பின்னர் தீர்மானத்தை வெளியிடுவோம் என எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, அண்மையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் ஈ.பி.டி.பியுடன் பேச்சுவார்த்தை நடத்தியிருந்தனர் என வெளிவந்த தகவல்களின் காரணமாக மக்கள் பெரும் அதிருப்திகளை வெளியிட்டுள்ளனர்.

இந்நிலையில், நாளைய தினம் சபையின் விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ள பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை தொடர்பில் கூட்டமைப்பு எவ்வாறான நிலையை கையாளப்போகின்றது? கூட்டமைப்பின் தெரிவு என்ன? பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை காப்பாற்றுமா கூட்டமைப்பு என தொக்கி நிற்கும் கேள்விகளுக்கு கூட்டமைப்பின் பதில் என்ன? என்பது நாளைய தினம் வெளிப்படுத்தப்படும்.