புறக்கணிக்க இயலாத சூழ்நிலையில் சிக்கி தவிக்கும் மனித சமுதாயம்! இலங்கை மாத்திரம் விதிவிலக்கா?

Report Print Sujitha Sri in கட்டுரை

மனிதர்களான நாம் மனதாலும், உடலாலும் நாள்தோறும் பல சவால்களுக்கு முகங்கொடுத்து வருகின்றோம். இவ்வாறான சவால்களுக்கு முகங்கொடுக்க ஆரோக்கியம் என்பது மிக முக்கியம்.

மன வலிமைக்காக செய்யும் பயிற்சிகளும், யோகாவும் மாத்திரம் போதாது. நோய்களை கட்டுப்படுத்த மருந்தும், உணவுகளும் மானிட வாழ்வில் அத்தியாவசியமாகும்.

ஆனால் பரபரப்பான வேலைப்பளு மிகுந்த, செக்கன்கள் வரையில் கவனத்தில் கொண்டு செயற்படும் இந்த காலத்தில் துரித உணவுகளும், ஆங்கில வைத்தியமுமே ஆதிக்கம் செலுத்தி வருகின்றன.

தற்போதைய காலங்களில் பல வண்ணங்களில் மாத்திரைகளும், மங்கிய நிறங்களில் உணவுகளுமே நமக்கு சொர்க்கமாகிவிட்டது என்றால் யாரும் இல்லையென்று சொல்ல முடியாது.

இதெல்லாம் எதற்கு........? நாம் நலமாக வாழ்வதற்காகவா அல்லது பிணமாக வாழ்வதற்காகவா. உங்களுக்காகவும், உங்கள் சந்ததிக்காகவும் சில நிமிடங்களை ஒதுக்கி யோசித்து பாருங்கள்.

என்று நம் உணவு நஞ்சாகும் நிலை வந்ததோ, நம் இயற்கை மருத்துவங்கள் ஒதுக்கப்பட்டதோ அன்று தொடங்கி அனைவருமே கூறுவது ஒன்று தான். நாம் நம் ஆயுளை இழந்து கொண்டிருக்கின்றோம் என்பது.

ஆனால் கூறுபவர்கள் கூறிவிட்டு செல்கின்றனர். நாமும் ஓரிரு நிமிடங்கள் யோசிப்பது போன்று பாவனை செய்து விட்டு மீண்டும் அதே உணவை தான் உண்ணுகின்றோம்.

இதில் ஆச்சரியம் என்னவென்றால் நஞ்சை உண்டால் மனிதன் இறந்து விடுவான் என்ற காலம் போய் நஞ்சால் உருவாக்கப்பட்டால் தான் உணவை கூட உண்ண முடியும் என்ற காலம் வந்து விட்டது.

ஏனெனில் விவசாய நிலத்தில் ஆரம்பித்து, அறுவடையில் தொடர்ந்து, களஞ்சியப்படுத்தலையடுத்து அடுப்பில் வந்து நிற்கிறது இரசாயனங்கள் எனும் முகமூடி அணிந்த நச்சுப்பொருட்கள்.

இந்த காலத்தில் பாருங்கள் கடையில் வாங்கிய உணவு என்றால் உண்ணக்கூடாது என்று எல்லாருமே பெரிதுபடுத்தி கூறுகின்றார்கள். ஆனால் யாராவது சிந்தித்தார்களா? வீட்டில் சமைக்கும் உணவுகளில் கூட நாம் சுவையூட்டிகளை சேர்க்காமல் சமைப்பதில்லை.

இதனை பார்த்தால் தோன்றவில்லையா? கடையில் வாங்கினால் என்ன, வீட்டில் சமைத்தால் என்ன எல்லா இடத்திலுமே நச்சுப் பொருட்களின் ஆதிக்கம் காணப்படுகின்றது என்று.

இவ்வாறு நாமே உண்ணும் உணவுகளில் எல்லாம் நச்சுப்பொருட்களை சேர்த்துவிட்டு, அதனால் வரும் நீரிழிவு, கொலஸ்திரோல், மன அழுத்தம், இரத்த அழுத்தம் போன்ற வகைவகையான பெயர்களில் நோய்களையும் சேமித்து வைத்திருக்கின்றோம் நம் சந்ததிகளுக்காக..

எவ்வாறு கட்டடங்களின் ஆதிக்கம் நமது பூமியில் காணப்படுகிறதோ அதைவிட அசுர வேகத்தில் காணப்படுகிறது வைத்தியசாலை கட்டடங்களின் பெருக்கம்.

மருத்துவ உலகம் அபரிமிதமான வளர்ச்சி கண்டுள்ள இந்த காலகட்டத்தில், புதிய புதிய நோய்களின் அறிமுகமும் அதற்கான மருத்துவ வழிமுறைகளும் வீட்டிலுள்ள ஐந்து வயதுக் குழந்தை முதல் அறுபது தாண்டிய பாட்டிவரை அனைவரும் அறிந்ததாகவே உள்ளது.

90 வயதை தாண்டிய பாட்டிமார் இறக்கும்வரை தமக்கெனத் தனிக் குடிசை, தனது சமையல் தனது வீடென்று தாமாக இயங்கி கடைசி நொடிவரை திடகாத்திரமாக இருந்தனர்.

ஆனால் இன்று அவாறான மூதாட்டிகளைக் காண்பது மிக அரிது. அவர்களுக்கு என்ன நேர்ந்தது? அந்த பரம்பரை இன்று எங்கே போனது?

அன்று பேரன் பேத்திமாரின் நல்லது கெட்டது காண்பதற்கும் பூட்டன்மார் பூட்டிமார் உயிரோடு இருந்தனர். இன்று தான் பெற்ற பிள்ளையின் பிள்ளையைப் பார்க்கக்கூடப் கொடுத்துவைக்காத ஆயிரக்கணக்கான பெற்றோர்களை நாம் காண்கின்றோம்.

பூமி முழுவதும் இந்த நிலை தொடர்ந்து கொண்டிருக்கும் நிலையில், நொடிக்கு நொடி நச்சுப் பொருட்கள் மனித உடலை ஆக்கிரமிக்கின்றது. இதில் இலங்கை மட்டும் என்ன விதிவிலக்கா??

கடந்த ஆண்டு சுகாதார அமைச்சின் தகவலின்படி 20% இலங்கை மக்கள் குறை போஷணையினாலும், 20% மக்கள் நீரிழிவாலும், மேலும் 20% மாணவர்கள் உயர் குருதியழுத்தத்தினாலும் பாதிக்கப்படுகின்றனர்.

இருதய நோயினால் மாத்திரம் வருடந்தோறும் சுமார் 219,000 நோயாளிகள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்படுகின்றனர். நாளொன்றுக்கு சராசரியாக 20 பேர் இதயம் தொடர்பான நோயினால் உயிரிழக்கின்றனர்.

இவ்வாறு நோய்களின் தாக்கமும், அதனால் ஏற்படுகின்ற விளைவுகளும் தீவிரமாக இருக்கின்ற வேளையில் நாம் ஒவ்வொருவரும் சற்று நிதானமாக சிந்தித்து செயற்படவேண்டும்.

விரும்பியோ, விரும்பாமலோ எமது ஆரோக்கியத்திற்கு ஆபத்து விளைவிக்கும் பல்வேறுபட்ட நடைமுறைகளையும் பழக்கவழக்கங்களையும் புறக்கணிக்க இயலாத சூழ்நிலையில் மனித சமுதாயம் அகப்பட்டுச் சிக்கித் தவிக்கிறது.

இருப்பினும் எவ்வளவோ சாதனைகளை குவித்த மனித இனத்திற்கு இந்த பிரச்சினையிலிருந்து தன் பரம்பரையை காத்துக் கொள்ள முடியும் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை.