ரணில் தப்பினார்! கூட்டமைப்பு சிக்கலில்?

Report Print Jeslin Jeslin in கட்டுரை

பிரதமர் ரணில் விக்ரமசிங்க மீது கூட்டு எதிர்க்கட்சியினரால் கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லா பிரேரணை நேற்றைய தினம் நாடாளுமன்றில் தோற்கடிக்கப்பட்டது.

குறித்த நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவாக 76 வாக்குகளும், எதிராக 122 வாக்குகளும் அளிக்கப்பட்டிருந்தன. இதன்படி குறித்த பிரேரணை 46 மேலதிக வாக்குகளால் தோற்கடிக்கப்பட்டது.

இந்த வாக்கெடுப்பில் 26 பேர் கலந்துகொள்ளவில்லை என்பதுடன், தமிழ் தேசியக் கூட்டமைப்பு பிரதமர் ரணிலுக்கு ஆதரவு வழங்கியிருந்தமை சுட்டிக்காட்டத்தக்கது.

பிரதமருக்கு எதிராக கொண்டுவரப்பட்ட பிரேரணையை வெற்றிப்பெறச் செய்வதற்கு முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தரப்பினர் தீவிர முயற்சியை மேற்கொண்டிருந்தனர்.

அதேபோல பிரேரணையை தோற்கடிப்பதற்கு பிரதமர் தரப்பும் தீவிர அரசியில் நடவடிக்கைகளை மேற்கொண்டுவந்ததுடன், இதற்காக பல அரசியல் கட்சி தலைவர்களுடன் பிரதமர் பேச்சுவார்த்தை நடத்தியிருந்தார்.

நம்பிக்கையில்லா பிரேரணை குறித்து பல அரசியல் கட்சிகள் இரவோடு இரவாக பேச்சுவார்த்தைகளை நடத்தியிருந்தன.

பேச்சுவார்த்தையின் முடிவில் பல அரசியல் கட்சிகள், பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவு வழங்குவதற்கு தீர்மானித்தன.

அந்த வகையில், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், தமிழ் முற்போக்கு கூட்டணி, ஈ.பி.ஆர்.எல்.எவ், ஈழ மக்கள் ஜனநாயக் கட்சி பிரதமருக்கு ஆதரவாக செயற்படுவதற்காக தீர்மானித்திருந்தன.

குறித்த கட்சிகள் அனைத்தும் பிரதமருடன் தனித்தனியே சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியிருந்ததாகவும், இதன் போது சில கோரிக்கைகளை பிரதமரிடம் முன்வைத்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இந்த கோரிக்கைகள் தொடர்பில் பிரதமர் தனித் தனியே உறுதி மொழி கடிதங்கள் வழங்கியுள்ளதை தொடர்ந்தே குறித்த அனைத்து தரப்பினர்களும் பிரதமருக்கு ஆதரவு வழங்கியதாக குறிப்பிடப்படுகின்றது.

இந்நிலையில், பல சிறுபான்மையின கட்சிகளும் பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை தொடர்பில் தமது நிலைப்பாட்டினை வெளிப்படுத்தியிருந்த நிலையில், பல கோரிக்கைகளை முன்வைத்திருந்த நிலையில் வடக்கு கிழக்கு தமிழ் மக்களின் ஏக பிரதிநிதி என தன்னை அடையாளப்படுத்திக்கொள்ளும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் பிரதமரிடம் பல கோரிக்கைகளை முன்வைத்திருந்தது.

அதில் தமிழ் மக்களின் நீண்ட கால அவலமும் உடனடித் தேவைகளாகவும் உள்ள 10 விடயங்களை எதிர்வரும் மாகாண சபைத் தேர்தல் அறிவிப்பிற்கு முன்னர் நிறைவேற்ற வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.

இது குறித்து எழுத்து மூலம் உறுதியளித்தால் ரணிலுக்கு எதிரான நம்பிக்கை இல்லாத தீர்மானத்தை எதிர்க்கலாம் என தமிழ் தேசியக் கூட்டமைப்பு நிபந்தனை விதித்திருந்தது.

அதற்கமைய 10 கோரிக்கைகள் அடங்கிய நிபந்தனைப் பட்டியல் ஒன்றும் தயாரிக்கப்பட்டு ரணில் விக்ரமசிங்கவிடம் கையளிக்கப்பட்டது.

அந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ள கோரிக்கைகளாவன,

01 வடக்கு கிழக்கு பிரச்சினைக்கு துரிதமாக அரசியல் தீர்வு காண்பது.

02 அடுத்த நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்னர், மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் புதிய அரசியலமைப்பை நிறைவேற்ற வேண்டும்.

03 பொதுமக்களுக்குச் சொந்தமான காணிகள், கட்டடங்களில் இருந்து இலங்கை படையினர் முற்றாக விலக வேண்டும்.

04 அனைத்து அரசியல் கைதிகளுக்கும் பொதுமன்னிப்பு வழங்கி விடுவிக்க வேண்டும்.

05 போர்க்காலத்தில் காணாமல் ஆக்கப்பட்டவர்கள் குறித்த விசாரணைகளை துரிதப்படுத்த வேண்டும்.

06 வடக்கு, கிழக்கில் வாழும் மக்களின் உரிமைகளை உறுதிப்படுத்த வேண்டும்.

07 வடக்கு, கிழக்கில் உள்ள இளைஞர்களுக்கான வேலை வாய்ப்புகளை உறுதி செய்ய வேண்டும்.

08 வடக்கு, கிழக்கு மாகாணங்களில் வசிக்காதவர்களுக்கு இந்த மாகாணங்களில் நியமனங்கள் வழக்கப்படக் கூடாது.

09 வடக்கு, கிழக்கின் 8 மாகாணங்களுக்கும் மாவட்டச் செயலர்களாக தமிழர்களை நியமிக்க வேண்டும்.

10 வடக்கு, கிழக்கில் அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுக்கும் போது, இரண்டு மாகாணசபைகளுடன் இணைந்தே முன்னெடுக்க வேண்டும்.

போன்ற கோரிக்கைகளை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிடம் முன்வைத்திருந்தனர்.

ஆனால் குறித்த கோரிக்கைகளுள் தமிழ் மக்களுக்குத் தேவையான அடிப்படையானவை உள்ளடக்கப்பட்டுள்ளனவா? அல்லது தமிழ் மக்களின் பிரதான கோரிக்கைகளை பிரதமரிடம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் முன்வைத்துள்ளனரா என்ற கேள்விகள் தற்போது எழ ஆரம்பித்துள்ளன.

வடக்கு கிழக்கு பகுதிகளில் வாழும் மக்கள் தற்போது எதிர்கொள்ளும் பாரிய பிரச்சினை என்றால் அது சிங்களமயமாக்கல்தான்.

சிங்கள மக்களே இல்லாத பகுதிகளில் புதிதாக பௌத்த விகாரைகள் துளிர் விட ஆரம்பித்துள்ளன.

முற்றிலும் தமிழர் தேசம் என குறிப்பிடப்படும் குறித்த பகுதிகளில் கொண்டுவரப்படுகின்ற இந்த பௌத்த விகாரைகள் பிற்காலத்தில் தமிழரின் இருப்பினை கேள்விக்குள்ளாக்கக்கூடும் என்ற ஒரு அச்சம் அனைவரிடத்திலும் நிலவுகின்றது.

இந்த விடயம் வடக்கு கிழக்கில் வாழும் தமிழர்கள் எதிர்கொள்ளும் காணப்படும் அதி முக்கியமான பிரச்சினையாக காணப்படுகின்றது.

ஆனால் இது தொடர்பில் கூட்டமைப்பு பிரதமரிடத்தில் முன்வைத்த கோரிக்கைகளுள் உள்ளடக்கப்பட்டதா அல்லது இந்த விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டதா என்பது தொடர்பான கேள்விகள் எழுகின்றன.

அத்துடன், தற்போது வடக்கு கிழக்கு பிரதேசங்களில் பரவலாக சிங்கள மக்களின் குடியேற்றங்கள் அமைக்கப்படுவதாகவும் அந்த குடியேற்றங்களின் எண்ணிக்கை காலபோக்கில் அதிகரித்துக்கொண்டு வருவதாகவும் அனைத்துத் தரப்பினரிடம் இருந்தும் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.

ஆனால் விஷ்வரூபம் எடுத்துவரும் இந்த பிரச்சினைகள் தொடர்பில் இதுவரையில் எவ்வித அரசியல் நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டதாகவோ, தீர்வுகள் எட்டப்பட்டதாகவோ தெரியவில்லை.

ஈழத்தமிழர்களுக்காக விடுதலைப்புலிகள் மேற்கொண்ட யுத்தம் மௌனிக்கப்பட்டதன் பின்னர் தமிழ் மக்களின் ஏக பிரதிநிதிகள் நாங்களே என கூறி ஆட்சி பீடம் ஏறிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் இதுவரையில் இது தொடர்பில் எவ்வாறான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது என்பது தொடர்பில் இத்தருணத்தில் ஆராய வேண்டியிருக்கின்றது.

இன்றும் கூட திருகோணமலையில் பௌத்த விகாரை ஒன்றுக்கான அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது, அத்துடன் முல்லைத்தீவில் யுத்தம் நிறைவுக்கு வந்தபின்னர் 13 பௌத்த விகாரைகள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் தெரியவருகின்றது.

நிலை இவ்வாறிருக்கு பிரதமரிடம் முன்வைத்த கோரிக்கைகளில் இந்த சிங்களமயமாக்கலை தடுப்பதற்கான ஒரு பிரதான கோரிக்கையை ஏன் கூட்டமைப்பு முன்வைக்கவில்லை.

அத்துடன், வடக்கு கிழக்கு தாயக பகுதிகளில் பெரும்பாலான தமிழ் பட்டதாரிகள் இன்று வேலையற்ற ஒரு அவல நிலையில் வாழ்ந்து வருகின்றனர்.

இன்று அரச தொழிழ்வாய்ப்புக்கள் பெருமளவில் வழங்கப்பட்டு வருகின்ற நிலையில், அவற்றை முடிந்தளவு ஏன் தமிழ் பட்டதாரிகளுக்கு வழங்க முடியாது என்ற கேள்வி பரவலாக காணப்படுகின்றது.

தொழிழ்வாய்ப்புக்களை வழங்குகின்றபோது தமிழ் இளைஞர் யுவதிகள் புறக்கணிக்கப்படுகின்ற நிலை அனைவரும் அறிந்ததே. ஆனால் ஏன் இவ்வாறான அடிப்படை கோரிக்கைகளை கூட்டமைப்பு பிரதமர் தரப்பிடம் முன்வைக்கவில்லை?

இந்நிலையில், நேற்றைய தினம் இடம்பெற்ற நாடாளுமன்ற அமர்வின்போது நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் இது தொடர்பிலான உரையொன்றினை ஆற்றியிருந்தார்.

“குளியாப்பிட்டி பகுதியில் தென்னந்தோட்டங்களில் தேங்காய் பறித்த நபர்கள் கூட வடக்கில் அலுவலக உதவியாளர்களாகவும் பாதுகாப்பு அதிகாரிகளாகவும் நியமிக்கப்பட்டுள்ளதாகஎம்.ஏ.சுமந்திரன் தெரிவித்திருந்தார்.

தமிழ் பேசும் மக்கள் 100 வீதம் வாழும் பிரதேசங்களில் தமிழ் மொழியை பேச முடியாதவர்கள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாணம் கச்சேரியில் பணியாற்றும் ஆறு வாகன சாரதிகள் காலியில் இருந்து வந்தவர்கள். ஏன் காலியை சேர்ந்தவர்கள் சாரதிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர்?

குளியாப்பிட்டியில் தென்னந் தோட்டங்களில் தேங்காய் பறித்தவர்கள் வடக்கில், அலுவலக ஊழியர்களாகவும் பாதுகாப்பு அதிகாரிகளாகவும் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

தேங்காய் பறிப்பவர்கள் இல்லாத காரணத்தினால், தேங்காய் விலையும் அதிகரித்துள்ளது.

அதேவேளை முல்லைத்தீவு மாவட்டத்தில் தெற்கில் இருந்து மீனவர்கள் அழைத்து வரப்பட்டு குடியேற்றங்கள் ஏற்படுத்தப்பட்டு வருகிறது. முல்லைத்தீவில் காணிகள் இல்லாத மக்கள் இருக்கின்றனர்.

தெற்கில் இருந்து அழைத்து வந்து சிங்களவர்கள் குடியேற்றப்பட்டதே ஆரம்ப காலத்தில் பிரச்சினைகளுக்கு காரணமாக அமைந்தன. தற்போதும் அதனை தொடரக் கூடாது” என எம்.ஏ.சுமந்திரன் குறிப்பிட்டிருந்தார்.

இதேவேளை, ஐக்கிய தேசியக் கட்சியால் குறித்த நியமனங்கள் வழங்கப்பட்டு நீண்ட நாட்கள் கடந்த நிலையில் கூட்டமைப்பு இதுவரை இது பற்றி எந்த தகவலையும் வெளிப்படுத்தவில்லை.

இவ்வாறான அடிப்படை விடயங்களை கூட்டமைப்பு தெரிந்து தவிர்த்ததா அல்லது இதற்கும் இராஜதந்திரம் என்ற ஒரு பதத்தினை பாவித்து கூட்டமைப்பு தப்பித்துக்கொள்ளுமா என்ற கேள்வியும் எழுகின்றது.

தமிழ் மக்களுக்காகத்தான் நாம் என்ற அழுத்தமான கருத்துக்களை பயன்படுத்தி தேர்தலில் வென்று நாடாளுமன்றம் சென்ற கூட்டமைப்பின் பணி என்ன?

மக்களின் பலத்தை பெற்றும் அவர்களின் ஆணையை நிறைவேற்றும் செயற்பாட்டில் கூட்டமைப்பு இதுவரையில் எதனை சாதித்திருக்கின்றார்கள்?

அல்லது மீண்டும் ஒரு தேர்தலில் களமிறங்கி, தமிழ் மக்களின் பலத்தினால் வெற்றிப்பெற்று, இதே போன்று மீண்டும் கோரிக்கைகளை மாத்திரம் முன்வைக்கப்போகின்றனரா என்ற சந்தேகம் தற்போது தமிழ் மக்களிடம் உலாவுகின்றது.

மேலும், நல்லாட்சி அரசாங்கம் உருவாகி முழுமையாக மூன்று வருடங்கள் நிறைவடைந்துள்ள நிலையில், இதுவரையில் கூட்டமைப்பு விடுத்த கோரிக்கைகள் அனைத்தும் கோரிக்கைகளாக மாத்திரமே இருக்கின்றன. தேர்தல் காலத்தில் வழங்கப்பட்ட வாக்குறுதிகள் வழங்கப்பட்டவையாக மட்டுமே உள்ளன.

இதுவரையில் கூட்டமைப்பின் கோரிக்கைகள் எவற்றிற்கும் அரசு செவிசாய்த்ததாகவோ? அதற்கு விடை தந்ததாகவோ இல்லை.

இந்நிலையில் மீதமிருக்கும் இரண்டு வருட காலங்களையும் நல்லாட்சி அரசு இவ்வாறு வெறுமனே கடத்திவிடுமா? தமிழ் மக்களுக்கான தீர்வு என்பது கிடைக்கப்பெறுமா அல்லது தீர்வு என்பது வெறும் வாய்வார்த்தையாக மாத்திரம் இருந்துவிடுமா என்ற அச்சம் நிலவுகின்றது.