வடக்கு கிழக்கில் மீள் எழுச்சி பெறும் மாற்று அரசியல் கட்சிகள்! தாக்கு பிடிக்குமா தமிழ் தலைமைகள்..

Report Print Jeslin Jeslin in கட்டுரை

வடக்கில் யாழ்ப்பாணம் தொடக்கம் கிழக்கில் அம்பாறை வரை தமிழீழ விடுதலைப்புலிகளின் காலத்திலிருந்து அப்பகுதிகளில் மேலோங்கியிருந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அரசியல் இராட்சியம் தற்போது ஆட்டம் காண துவங்கியுள்ளதாக பரவலாக கருத்துக்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.

நடந்து முடிந்த உள்ளூராட்சி சபைத் தேர்தல், அதன் முடிவுகள் என்பன அந்த கருத்தினை தமிழ் மக்களுக்கு தெட்டத் தெளிவாக புடம்போட்டு காட்டியிருந்தன எனலாம்.

கடந்த பெப்ரவரி மாதம் நடந்த உள்ளூராட்சி சபைத் தேர்தலின் மூலம் தெரிவு செய்யப்பட்ட உள்ளூராட்சி சபைகளின் அமர்வுகள் தற்போது இடம்பெற்று வருகின்றன.

தேர்தலின் போது, 167 உள்ளூராட்சி சபைகளில் எந்தக் கட்சியும் ஆட்சியமைப்பதற்கான பெரும்பான்மை பலத்தைப் பெறவில்லை.

இந்நிலையில், கடந்த 2002ஆம் ஆண்டுக்கு பின்னர் வட - கிழக்கு தாயக பகுதிகளில் மற்றுமொரு மாற்று அரசியல் சக்தியாக ஈ.பி.டி.பின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா உருவாக தொடங்கிவிட்டார்.

அதே சமயம் தமிழர்களின் ஏக பிரதிநிதி எனப்படும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரும் மக்கள் மத்தியில் தமக்கென ஒரு தனித்துவத்தை பேணி வந்தனர்.

எனினும், 2009ஆம் ஆண்டு விடுதலைப்புலிகளின் ஆயுத போராட்டம் மௌனிக்கப்பட்டதன் பின்பு நீண்ட ஒரு இடைவெளிக்கு பின்னர் இடம்பெற்ற உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களின் மூலம், மக்கள் மத்தியில் அசைக்கமுடியாத அசுர சக்தியாக வளர்ச்சிக்கண்ட தமிழ் தலைமைகள் மீதும், அவர்கள் சார் கட்சிகள் மீதும் இந்த இடைப்பட்ட காலத்திற்குள் மக்கள் கொண்ட வெறுப்புணர்வை அவதானித்திருக்க முடியும்.

எந்த ஒரு பிரதான தமிழ் அரசியல் கட்சியும் கணிசமான ஆசனங்களை பெறவில்லை என்பதோடு, வட - கிழக்கு தாயக பிரதேசங்களில் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் தேசிய கட்சிகளில் ஆதிக்கம் நிறைந்திருந்ததையும் அவதானித்திருக்க முடியும்.

அத்துடன், இதர தமிழ் அரசியல் கட்சிகளும் இந்த தேர்தலின் மூலம் பிரதான தமிழ் அரசியல் கட்சிகளை தகர்த்தெறிந்து விஸ்வரூப வளர்ச்சி காணத் தொடங்கியிருந்தன.

இதன் காரணமாக தமிழ் வடக்கு கிழக்கு பகுதிகளில் தமிழர்களின் வாக்குகள் சிதறடிக்கப்பட்டதுடன் இது, இத்தனை காலம் தமிழ் மக்கள் கொண்டிருந்த நம்பிக்கை ஒன்று வீணடிக்கப்பட்டதன் வெளிப்பாடாகவும் அமைந்திருந்தது.

குறிப்பாக கூறவேண்டுமானால் வடக்கு பகுதிகளில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியும், கிழக்கில் முன்னாள் மாகாண முதலமைச்சர் பிள்ளையான் எனப்படுகின்ற சிவனேசத்துரை சந்திரகாந்தனின் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியும் மீள் எழுச்சி பெற்றுள்ளதுடன், அவை புதிய உத்வேகத்துடன் நடைபோட ஆரம்பித்துள்ளன.

இந்த கட்சிகளின் மீள் எழுச்சிக்கு தீணி போட்டவர்கள் நிச்சயமாக எமது ஏக பிரதிநிதிகளான தமிழ் தலைமைகள்தான். தேர்தல்களில் அவர்களும் அவர்கள்சார் பிரதிநிதிகளும் காட்டிய அசமந்தபோக்குதான் இதற்கு காரணம் என்பதை மறுப்பதற்கில்லை.

வடக்கு கிழக்கு பகுதிகளில் இதுவரை காலம் மக்களால் ஒதுக்கப்பட்ட தூற்றப்பட்ட பல அரசியல் கட்சிகள் தற்போது அதே மக்களின் ஆதரவுடன் மீள் எழுச்சிப்பெற ஆரம்பித்துள்ளன. அத்துடன், தமிழ் மக்களின் வாக்குகள் சிதறடிக்கப்பட்டுள்ளன.

நடைபெற்றுமுடிந்த இந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் கடைப்பிடிக்கப்பட்ட ஒத்துவராத தேர்தல் நடைமுறைகளும் கூட இவ்வாறு தமிழ் தலைமைகளின் பின்னடைவுக்குக் காரணம் எனலாம்.

இதனை பறைசாற்றும் வகையில் நாட்டின் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும்கூட நேற்று முன்தினம் நடைபெற்ற சந்திப்பொன்றில் உள்ளூராட்சிமன்றத் தேர்தலில் கடைபிடிக்கப்பட்ட முறைமை தொடர்பில் சலித்துக்கொண்டிருந்தார்.

“புதிய உள்ளூராட்சித் தேர்தல் முறை அறிமுகம் செய்யப்பட்டது மிகப் பெரிய தவறு” என்பதை அவராகவே முன்வந்து தெரிவித்திருந்தார்.

“இந்த அசாதாரணமான முறையினால், உண்மையில் உள்ளூராட்சி சபைகள் பலவற்றில் வெற்றி பெற்றவர்களால் அந்த சபைகளைக் கட்டுப்பாட்டில் கொண்டு வர முடியாது போயுள்ளது.

உள்ளூராட்சித் தேர்தல் முடிவுகளும், உள்ளூராட்சி நிர்வாகங்கள் உருவாக்கப்பட்டதும், மக்களின் விருப்பத்தைப் பிரதிபலிக்கவில்லை.

தேர்தலில் வெற்றி பெறுபவர்கள், உள்ளூராட்சி சபைகளைக் கட்டுப்படுத்தக் கூடிய வகையில், உள்ளூராட்சித் தேர்தலில் திருத்தங்கள் செய்யப்பட வேண்டும்.

புதிய முறையின்படி, 4000 ஆக இருந்த உள்ளூராட்சி சபைகளின் உறுப்பினர்கள் எண்ணிக்கை, 8000 ஆக அதிகரிக்கப்பட்டது.

இந்தளவு உறுப்பினர்களை வைத்திருப்பதால் ஏற்படக் கூடிய செலவுகளைக் கட்டுப்படுத்தும் வகையில், மீண்டும் உறுப்பினர்களின் எண்ணிக்கையை 4000 ஆக குறைக்க வேண்டும்.

நான் அமைச்சரவையில் இதுபற்றிய திருத்தங்களை முன்மொழிவேன். அடுத்த உள்ளூராட்சித் தேர்தலுக்கு முன்னர், சட்டத் திருத்தங்களைச் செய்வதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்” என அவர் இதன்போது குறிப்பிட்டிருந்தார்.

இந்த உள்ளூராட்சிமன்றத் தேர்தல் சாதாரணமாக உள்ளூராட்சி மன்றங்களுக்கான தமது பிரதிநிதிகளை தெரிவு செய்யும் தேர்தலாக ஆரம்பத்தில் பார்க்கப்பட்டாலும், காலப்போக்கில் தேசிய கட்சிகள் பலவற்றின் பலத்தையும் மக்கள் மத்தியில் இருக்கும் செல்வாக்கையும் நிரூபிக்கும் தேர்தலாக மாற்றமடைந்தது.

இதன்காரணமாக நாட்டின் பல பாகங்களிலும் தேசிய கட்சிகள் அனைத்தும் தமது பலத்தினை நிரூபிப்பதற்காக மும்முரமாக செயற்பட்டிருந்தன.

இதற்கிடையில், இதர தமிழர்சார் தரப்பும், அதாவது வடக்கில் சில ஈபிடிபி, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி, என்றும் கிழக்கிலும் அவ்வாறே பிள்ளையானின் தரப்பும், ஒரு புறம் கருணா எனப்படுகின்ற விநாயகமூர்த்தி முரளிதரன் போன்றோரது தரப்பும் தேர்தலில் அதீத கவனம் செலுத்த சில சுயேற்சைக்குழுக்களும் தமக்கு கிடைத்த தேர்தல் களங்களை விட்டுவைத்ததாய் இல்லை.

இவ்வாறு தாம் அரசியல் தரப்பின் வெற்றிக்காக அனைவரும் மிக தீவிரமாக செயற்பட்டுவந்த நிலையில் பிரதான தமிழ் தலைமைகள், அதாவது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு போன்ற பிரதான கட்சிகள் இதனை அலட்சியப்போக்குடன் எடுத்துக்கொண்டன.

அவர்களது அலட்சியத்தின் வெளிப்பாட்டை உள்ளூராட்சி மன்றத் தேர்தல் வெகுவாய் உணர்த்தியிருந்தது என்பது அரசியல் ஆய்வாளர்களின் கருத்து.

யாழ். நகர சபையிலும் கூட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரால் கணிசமான வாக்குகளைப்பெற்றுக்கொள்ள முடியாத துரதிஸ்ட்ட நிலை உண்டாகியிருந்தது.

அதனைத் தொடர்ந்து கிழக்கு மாகாணத்தில் தனிப்பெரும்கோட்டையான0 மட்டக்களப்பு மாவட்டத்திலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பின்னடைவை சந்தித்துள்ளது.

இதற்கு சிறந்த உதாரணமாக முன்னாள் கிழக்கு மாகாண முதலமைச்சர் பிள்ளையான் எனப்படுகின்ற சிவனேசதுரை சந்திரகாந்தனின் கட்சியான தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சி நீண்ட இடைவெளிக்குப்ப பின்னர் இந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலின் மூலம் ஸ்த்திரத்தன்மை அடைந்துள்ளமையை குறிப்பிட முடியும்.

கடந்த நாடாளுமன்றத் தேர்தலின் மூலம் கணிசமான வாக்குகளைப் பெற்றுக்கொள்ள குறித்த கட்சியால் முடியாமல் போனது எனினும் இந்த பிரதேச சபைத் தேர்தலின் மூலம் 40ஆயிரம் வாக்குகளை ஒருசேர பெற்றுக்கொண்டுள்ளது.

அத்துடன், ஹக்கீம் மற்றும் ரிசாத் சார் முஸ்லிம் கட்சிகளுக்கும் மக்கள் ஆதரவு அளித்திருந்ததுடன் அப்பகுதிகளில் தேசிய கட்சிகள் பலவும் தமது கால்தடத்தினை வலுவாக இத்தேர்தலின் மூலம் பதித்துவிட்டிருந்தன.

வடக்கு கிழக்கில் தேசிய கட்சிகள் பலவற்றிற்கும் மக்கள் தமது ஆதரவினை வழங்கியிருந்தனர்.

இவ்வாறு தமிழர்களின் சாம்ராஜ்ஜியத்தில் இதர கட்சிகளின் ஊடுறுவல் என்பது தமிழர்களுக்கான தீர்வு என்ற விடயத்தில் பாதிப்பினைத் தோற்றுவிக்கும். தமிழரிடத்தில் மீண்டும் தமிழர் அரசியல் தரப்பின் கரம் தலைத்தோங்க வேண்டுமெனில் தமிழ் கட்சிகளில் அடிப்படை கட்டமைப்புக்களிலும், அவர்களது பிடிவாத அரசியலிலும் மாற்றறங்கள் வரவேண்டும்.

குறிப்பாக எதிர்க்கட்சித் தலைவர் சம்பந்தனின் கோட்டை எனப்படுகின்ற திருகோணமலையிலும் தலைமைகளில் ஏற்பட்ட கலக்கங்கள் காரணமாக தன் ஆட்சியை நிலைநாட்ட முடியாமல் போயிற்று.

இவை அனைத்திற்கும் இலகுவாக சாட்டு போக்கு சொல்லிவிடவும், இராஜதந்திரம் எனும் பதத்தைப் பயன்படுத்தி தப்பித்துக்கொள்ளவும் எமது தமிழர் தரப்பு முனையும்.

எனினும் இவ்வாறான சாட்டுப்போக்குகளின் அறுவடையை மீண்டும் மாகாண சபைத் தேர்தல்களில் எதிர்ப்பார்க்க முடியும் என்பதோடு, அதன் தாக்கம் அடுத்த நாடாளுமன்றத் தேர்தல் வரை செல்வாக்கு செலுத்தும் என்பது நிதர்சனமான உண்மையே.