தென்னிலங்கையில் மனிதாபிமானம் கேள்விகுறி? காணல் நீராண மைத்திரியின் வாக்குறுதி? தவிக்கும் குழந்தைகள்

Report Print Nivetha in கட்டுரை

தென்னிலங்கையில் மனிதாபிமானம் இருக்கின்றது என்பதை நிலை நாட்ட வேண்டிய ஒரு கட்டாயத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உள்ளார்.

தமிழ் சிங்கள சித்திரைப் புதுவருடத்தில் அரசியல் கைதி சச்சிதானந்தன் ஆனந்த சுதாகரன் விடுவிக்கப்படுவார் என்று அனைவரினாலும் எதிர்பார்க்கப்பட்டது.

தமிழ் புத்தாண்டு பிறந்திருக்கும் நிலையில், அரசியல் தண்டனைக் கைதி சச்சிதானந்தன் ஆனந்தசுதாகர் விடுவிப்பு பற்றி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடமிருந்து எந்தவொரு சாதகமான பதிலும் இன்னும் கிடைக்கவில்லை.

அரசியல் கைதியின் குழந்தைகள் அநாதரவான நிலையில் இருந்த காட்சி அனைவரையும் கண்ணீர் சிந்த வைத்துள்ளது. ஆனந்த சுதாகரனின் பிள்ளைகள் பெரும் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

புதுவருடத்துக்கு முன்னர் தந்தையை ஜனாதிபதி விடுவித்து, அப்பா தம்முடன் இணைவார் என்று ஆனந்த சுதாகரின் பிள்ளைகள் நம்பிக்கையில் இருந்தனர்.

தந்தையை விடுதலை செய்ய கோரி ஜனாதிபதி, ஜனாதிபதியின் மகள் ஆகியோருக்கு கடிதமும் எழுதினார்கள். அந்த பிஞ்சுகள் இரண்டும் ஜனாதிபதியை நேரில் சந்தித்தும் கோரிக்கையும் விடுத்திருந்தனர்.

பிஞ்சுக்களின் கோரிக்கையை செவிமடுத்த ஜனாதிபதி அப்பாவின் விடுதலைக்கு நடவடிக்கை எடுப்பேன் என பிஞ்சுகளுக்கு நம்பிக்கை கொடுத்துள்ளார்.

இந்த நிலையில் இன்றைய புதுவருடத்தில் தாயும் இல்லாது தந்தையும் இல்லாது புதுவருடத்தைக் கொண்டாட முடியாதவர்களாக அநாதரவான நிலையில் இருக்கின்றனர்.

இரண்டு பிள்ளைகளின் தந்தையான சச்சிதானந்தம் ஆனந்த சுதாகர், 2008 ஆம் ஆண்டில் கைது செய்யப்பட்டு, 9 வருடங்களாக மகசின் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்தார்.

இவருக்கு கடந்த வருடம் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. இந்த நிலையில், இவரின் மனைவி யோகராணி கடந்த மாதம் 15 ஆம் திகதி உயிரிழந்தார்.

சிறைச்சாலை அதிகாரிகளின் அனுமதியுடன் மனைவியின் இறுதிக்கிரியைகளில் கடந்த மாதம் ஆனந்த சுதாகர் கலந்துகொண்டார். மீண்டும் சிறை நோக்கி புறப்பட்ட ஆனந்த சுதாகரை அவரது பெண் பிள்ளை பற்றிக்கொண்டு பின்னாலேயே சென்றமை பலரையும் துயரத்தில் ஆழ்த்தியிருந்தது.

இந்த நிலையில் அவரின் பிள்ளைகளின் எதிர்காலம் கருதி ஆனந்த சுதாகரனை விடுதலை செய்யுமாறு வலியுறுத்தி பல இடங்களில் கையெழுத்து பெறப்பட்டு வந்தது.

இதேவேளை, அரசியல் தண்டனைக் கைதி சச்சிதானந்தன் ஆனந்த சுதாகருக்கு பொது மன்னிப்பளித்து விடுவிக்கவேண்டும் எனக் கோரி வடக்கு மாகாண முதலமைச்சர் நீதியரசர் விக்னேஸ்வரன், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு கடிதம் அனுப்பிவைத்துள்ளார்.

தமிழர் பகுதிகள் எங்கும் போராட்டங்களும் இடம்பெற்றது. இந்த நிலையில் புதுவருடத்துக்கு முன்னர் ஆனந்த சுதாகரன் விடுவிக்கப்படுவார் என்று பலரினால் எதிர்பார்க்கப்பட்டது. எனினும் புது வருடம் கடந்தும் அவர் விடுவிக்கப்பட வில்லை.

நல்லாட்சி என்று கூறி கொண்டு ஆட்சிக்கு வந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தமிழர்களுக்கு கொடுத்த வாக்குறுதிகள் ஏராளம். அதை மறந்து விட்டாரா அல்லது மறுத்து விட்டாரா என்று தெரியவில்லை.

ஆட்சி மாற்றத்தின் பின்னர் தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்படுவர் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்களால் நம்பிக்கை வெளியிடப்பட்டிருந்தது.

ஆனால் நம்பிக்கை, வாக்குகள் வழங்கப்பட்டிருந்த அளவிற்கு விடயங்கள் எதுவும் விரைவாக இடம்பெறவில்லை.

எல்லாவற்றையும் இழந்து அடிமைகளாக வாழும், உண்மை தமிழர்கள்தான் இன்று அரசியல் கைதிகள். விடுதலையை எதிர்பார்த்து எதிர்பார்த்தே வருடக்கணக்கில் தங்கள் வாழ்க்கையைச் சிறைச்சாலைகளில் கடத்தி விட்டனர்.

எஞ்சியுள்ள வாழ்க்கையையேனும் நிம்மதியாகக் கழிக்கலாம் என்ற அவர்களின் எதிர்பார்ப்பும் கானல் நீராகிக் கொண்டேயிருக்கின்றது. உண்மையில் அவர்கள் செய்த குற்றம்தான் என்ன?

அரசியல் கைதிகளின் நிலை கவலைக்கிடமாக மாறியுள்ளது. ஆனால், நல்லாட்சி அரசில் இது தொடர்பான எவ்வித சமிக்ஞையும் புலப்படாதிருப்பது தமிழ் மக்களை மேலும் விரக்தியடையச் செய்துள்ளது.

இந்த நிலையில் அரசியல் கைதியான சுதாகரனை விடுவிப்பதாக ஜனாதிபதி வழங்கிய வாக்குறுதியும் காணல் நீராகியுள்ளது தமிழ் மக்கள் மத்தியில் பாரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

இலங்கை ஜனாதிபதி நினைத்தால் தற்போது ஒரு ஆணை பெண்ணாகவும், ஒரு பெண்ணை ஆணாகவும் மாற்ற முடியும்.

அப்படி இருக்கையில் சுதாகரன் விடயத்தில் காலம் தாழ்த்தாமல் தீர்வு வழங்க வேண்டும் என்பது அரசியல் அவதானிகளின் கோரிக்கையாக உள்ளது. பொருத்திருந்து பார்ப்போம் ஜனாதிபதியின் பதில் இரண்டு குழந்தைகளின் வாழ்க்கையில் சுடர் ஏற்றுமா என்று..