ஆபத்தின் விளிம்பில் வவுனியா நகரசபை! கேள்விக்குள்ளாகும் தமிழர்களின் எதிர்காலம்?

Report Print Jeslin Jeslin in கட்டுரை

நடந்து முடிந்த உள்ளூராட்சிமன்றத் தேர்தல் பல்வேறு பிரதேசங்களிலும் எதிர்பாராத பல அரசியல் மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளது.

அதிலும் தமிழர் பிரதேசங்கள் பலவற்றில் தேசிய கட்சிகளினதும், பெரும்பான்மை இன கட்சிகளினதும் ஆதிக்கம் தழைத்தோங்கியுள்ளது.

தமிழர் தரப்பு கணிசமான ஆசனங்களைப் பெற்றிருந்தாலும் கூட அதனால் ஆட்சியமைக்க முடியாத ஒரு சூழலை இந்த தேர்தல் முறைமை உண்டாக்கியுள்ளது.

வவுனியா நகர சபையில் ஆட்சி அமைப்பதிலும், தமிழரின் அரசியல் தரப்பு பாதுகாக்கப்படுவதிலும் ஏற்பட்டுள்ள இக்கட்டான சூழ்நிலை இதற்கு ஓர் சிறந்த உதாரணம்.

வவுனியா நகர சபையில் தமிழரசுக் கட்சி கணிசமான ஆசனங்களைப் பெற்றுள்ள போதிலும், அந்த கட்சியால் ஆட்சியமைக்க முடியாத நிலையில் அந்த சபையை தேசிய கட்சி ஒன்று கைப்பற்ற முனைப்புடன் செயற்பட்டு வருகின்றது.

நடந்து முடிந்த உள்ளூராட்சி சபைத் தேர்தலில் வவுனியா நகரசபைக்கு போட்டியிட்டு நகரசபை உறுப்பினர்களாக தெரிவு செய்யப்பட்டவர்களில் 8 பேர் தமிழரசுக் கட்சியின் பக்கம் உள்ளனர்.

4 பேர் ஐக்கிய தேசியக் கட்சியினர், 3 பேர் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினர், தமிழர் விடுதலைக் கூட்டமைப்பைச் சேர்ந்த 3 பேர் உட்பட 11 உறுப்பினர்கள் உள்ளனர்.

இதைவிட ஈ.பி.டி.பியைச் சேர்ந்த ஒருவரும் அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த உறுப்பினர் ஒருவரும் உள்ளார்.

வவுனியா நகர சபையைக் கைப்பற்றுவதற்காக ஐக்கிய தேசியக்கட்சியில் போட்டியிட்டுள்ள அமைச்சர் ரிஷாட் பதியூதீனின் இணைப்பாளரை தவிசாளர் பதவிக்கு தெரிவு செய்வதற்கு கடும் முயற்சிகள் இடம்பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

வவுனியா மாவட்டமானது, அம்பாறை மட்டக்களப்பு போல மூவின மக்கள் ஒன்றித்து வாழும் ஒரு பிரதேசம்.

இந்நிலையில்தான் குறித்த பிரதேசத்தில் உள்ள தமிழர்களின் அரசியல் ஸ்த்திரத்தன்மையையும், தமிழர்களின் பிரதிநித்துவத்தையும் பாதுகாக்க வேண்டிய கட்டாய கடமை தமிழ் தலைமைகளிடம் உண்டு.

எவ்வித சூழலிலும் பிரிதொரு கட்சியொன்றுக்கு தாம் வாக்களிப்பதில்லை, கட்சி எதுவாயினும் நாம் அதற்கு ஆதரவு வழங்கப்போவதில்லை என்ற அசைக்க முடியா கொள்கையில் இருப்பதாக தமிழர் விடுதலைக் கூட்டணித் தரப்பு அறிவித்துள்ளது.

வவுனியா நகரசபைக்கு போட்டியிட்ட அனைத்து தேசிய கட்சிகளும் ஆட்சியை கைப்பற்ற முயற்சிக்கும் நிலையில், தமிழர்களின் பிரதிநிதித்துவத்தை பாதுகாக்க தமிழர் விடுதலைக் கூட்டணி, தமிழரசுக் கட்சியுடன் கைகோர்க்குமா? என்பதுதான் தற்போதுள்ள கேள்வி.

தமிழர் பிரதேசத்தில் பேரினவாத கட்சிகள் ஆட்சியமைக்கக்கூடாது, தமிழர் தலைமைத்துவம் பாதுகாக்கப்படவேண்டும், தமிழர் தாயகத்தில் தென்னிலங்கை அரசியல் கட்சிகளின் ஆதிக்கம் வரக்கூடாது என்பதற்காக ஏற்கனவே தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு ஆதரவு வழங்கியது போல வவுனியா நகர சபையில் கூட்டமைப்புக்கு தமிழர் விடுதலைக் கூட்டணி தனது ஆதரவை வழங்குமெனின் இங்கு தமிழர்களின் எதிர்காலம் பாதுகாக்கப்படும்.

அவ்வாறில்லாமல், அரசியல் பழிவாங்களின் காரணமாக தமிழர் விடுதலைக் கூட்டணி கூட்டமைப்பை ஆதரிக்க மறுத்தால் வவுனியா வாழ் தமிழர்களின் எதிர்காலம் கேள்விக்குள்ளாகும் என அப்பகுதி மக்கள் கடும் விசனம் வெளியிட்டுள்ளனர்.