வடக்கு கிழக்கு விவகாரம்! ஸ்ரீலங்காவை இந்தியா உலக நீதி மன்றத்திற்கு கொண்டு செல்ல வேண்டும்

Report Print S.V Kirubaharan S.V Kirubaharan in கட்டுரை

இலங்கைத் தீவின் சுதந்திரத்தை அடுத்து ஆட்சிக்கு வந்த ஸ்ரீலங்கா அரசுகள், தமிழ் மக்களின் அரசியல் உரிமைகளை ஏற்க தவறிய காரணத்தினால், தமிழ் மக்கள் 35 வருடகாலமாக ஓர் அகிம்சை போராட்டத்தை நாடத்த வேண்டி ஏற்பட்டது. இப் போராட்டத்தை ஸ்ரீலங்காவின் பாதுகாப்பு படைகள் தொடர்ச்சியாக வன்முறை மூலமாக நசுக்கிய காரணத்தினால் அது ஓர் ஆயுதப் போராட்டமாக வெடித்து.

தற்பொழுது தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் ஸ்ரீலங்கா அரச படைகளுக்கும் இடையில் ஓர் மரபு முறை யுத்தமாக மாறியுள்ளது.

இலங்கை தீவின் அரசியல் யதார்த்த நிலைகளை ஒருவர் எந்தவித பாரபட்சம் அற்ற நிலையில் ஆராய்வாரேயானால், அங்கு எப்பொழும் எண்ணிக்கையில் பெரும்பான்மையான சிங்கள மக்களுக்கு சார்பான முடிவுகளையே, இன்றுவரை நடாளுமன்றமும் முன்பு சட்ட (செனற்) சபையும் நிறைவேற்றியுள்ளதை நாம் காணாலாம்.

அத்துடன் இத் தீவில் தமிழ் மக்கள் மீது ஏவப்பட்ட ஐந்து இனக் கலவரங்களும், ஓர் தமிழ் இன அழிப்பு நடைபெறுவதை ஆதாரபூர்வமாக காட்டியுள்ளது. அவ்வேளையில் நடைபெற்ற ஐந்து இனக் கலவரங்களிலும, ஒரு போதும் தங்களை தாக்கிய சிங்களவர்களை, தமிழ் மக்கள் எதிர்த்து தாக்கியது என்பது வரலாற்றில் கிடையாது.

இவ் இனக் கலவரங்கள் அரச படைகளின் உதவியுடனும், சிங்கள அரசியல்வாதிகளின் ஏவுதலின் பின்னணியில் ஏற்பட்டது என்பது யதார்த்த உண்மை. எது எப்படியாயினும், ஸ்ரீலங்காவினுடையா தமிழ் இன அழிப்பு ஓரளவு வெற்றிகரமாக நிறைவெறியுள்ளது என்பதை பின்வரும் புள்ளி விபரங்கள் ஆதாரத்துடன் காட்டுகின்றன.

இன்று மேற்கு நாடுகளில் 500,000 மேற்பட்ட தமிழ் அகதிகளும், அயல் நாடான இந்தியாவில் ஏறக்குறைய 153,000 இலங்கை தமிழ் மக்கள் அகதிகளாக தஞ்சம் கோரியுள்ளனர். (இந்தியாவில் 103,000 பேர் வரை வேறுபட்ட அகதி முகாம்களிலும், 50,000 பேர் வரை அகதி முகாம்களுக்கு வெளியிலும் உறவினருடனும் வாழுகின்றனர்). அத்துடன் உள்நாட்டில் 500,000க்கு மேற்பட்டோர் இடம் பெயர்ந்தும் அகதிகளாக முகாம்களில் வாழுகின்றனர்.

தேசிய விடுதலைப் போராளிகள்

வெளி உலகில் பலருக்கு அறியாத உண்மை என்னவெனில், தமிழ் மக்களுடைய தேசிய விடுதலைப் போராளிகளான தமிழீழ விடுதலைப் புலிகள், 70ஆம் ஆண்டளவிலேயே ஆரம்பிக்கப்பட்டு, தமிழரின் தற்பாதுகாப்பு நடவடிக்கைகளை, 1983ம் ஆண்டின் பிற்பகுதியிலேயே மேற்கொள்ள ஆரம்பித்தார்கள் என்பதுடன், அது வரையில் தமிழ் மக்கள் சார்பாக எந்தவித தற்பாதுகாப்பு நடவடிக்கைகளோ அல்லது எதிர் தாக்குதலோ இடம் பெறவில்லை ஏன்பதை.

இத் தீவில் இடம்பெற்ற குறைந்தது ஐந்து இனக் கலவரங்களிலும், சிங்களவர்களினால் ஆயிரக்கணக்கான தமிழ் மக்கள் கொல்லப்பட்டும், அவர்களது கோடிக் கணக்கான சொத்துக்கள் அழிக்கப்பட்டும் சூறையாடப்பட்டன. இவ் வேளையில், வடக்கு கிழக்கு மாகாணங்களுக்கு வெளியில் வாழ்ந்த தமிழ் மக்கள் பாதுகாப்புக்காக உடனடியாக அவர்களது பூர்வீக நிலமான வடக்கு கிழக்குக்கே அனுப்பப்பட்டார்கள்.

ஆனால் ஸ்ரீலங்கா அரசின் தமிழ் இன அழிப்புக்கு வடக்கு கிழக்கு விதி விலக்காக இருக்கவில்லை. அங்கும் சிங்கள குடிறேற்றங்கள் நடைபெறுவதுடன், எல்லைப்புறங்களில் வாழ்ந்த தமிழ் மக்கள் சிங்களவர்களினாலும், எல்லைப் படைகளினாலும் விரட்டி அடிக்கப்படுகிறார்கள்.

தமிழ் மக்களின் தற்பாதுகப்பு நடவடிக்கையும், எதிர் தாக்குதலும் ஆரம்பிக்கப்பட்டதிலிருந்து சில இழப்புக்கள் உள்ளன என்பது உண்மை. ஆனால் முன்பு நடைபெற்ற ஐந்து இனக் கலவரங்களுடனும் ஒத்து பார்க்கும் பொழுது, இங்கு இழப்புக்கள் இருந்தாலும், தமிழ் மக்களுக்கென ஓர் அரசு, சரியான கட்டமைப்புகளுடன் உருவாகியுள்ளதை வெளிப்படையாக காணக் கூடியதாக உள்ளது.

1977ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலில், வடக்கு கிழக்கில் வாழும் தமிழ் மக்கள், தனி அரசுக்கான ஆணையை பெரும்பான்மை வாக்குகளால் கொடுத்திருந்த போதிலும் இதை ஸ்ரீலங்கா அரசு விசமத்தனமாக அலட்சியம் செய்தது என்பது வரலாறு.

அடக்கு முறையின் யுக்திகளில் மாற்றம்

இலங்கைத் தீவில் இனப்பிரச்சினைக்கு சமாதானப் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணத்தவறிய ஸ்ரீலங்கா அரசு, தொடர்ந்து தனது இன அழிப்பு கொள்கையை கடைப்பிடித்து வருகிறது.

ஆனால் தொடர்ச்சியாக சந்திந்த இராணுவ தோல்விகளினால், தனது அடக்கு முறையின் யுக்திகளையும் அணுகு முறைகளையும் மாற்ற வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டது.

இவ்வேளையிலேயே, சர்வதேச சமுதாயத்தின் உதவியுடன் தமிழ் இன அழிப்பை தொடர்வதற்காக, வெளிநாடுகளில் உள்ள தனது தூதுவராலயங்கள் ஊடாக, இனப் பிரச்சனை தொடர்பான உண்மைக்கு புறம்பான தகவல்களை சர்வதேச சமுதாயத்திற்கு வழங்கி வருகிறது.

இதனால் சில நாடுகள், தமிழிழ மக்களுடைய தேசிய விடுதலைப் போராளிகளான தமிழீழ விடுதலைப் புலிகளை, எந்தவித காரணமும் இல்லாது தடையும் செய்தனர். அத்துடன் சில நாடுகள் நவீன ஆயுதங்களை ஸ்ரீலங்கா அரசுக்கு வழங்கியும் வந்தனர்.

ஆனால் இந்த நிலை முழுதாக நீண்ட காலம் நீடிக்கவில்லை. அண்மைக்காலத்தில், விசேடமாக ஜனாதிபதியாக ராஜபக்ச பதவியேற்ற காலத்திலிருந்து, ஸ்ரீலங்காவின் சர்வாதிகாரத்துடனான

தமிழ் இன அழிப்பு போக்கை அவதானித்த சர்வதேச சமுதாயம், ஸ்ரீலங்கா மீது தனது கவனத்தை திருப்ப தொடங்கியது.

உதாரணத்திற்கு, கடந்த நவம்பர் டிசம்பர் மாதங்களில், ஜெனிவாவில் நடைபெற்ற ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை சபையில் - ஏழு நாடுகள் உட்பட, ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை ஆணையாளரும் மற்றும் பல சர்வதேச மனித உரிமை அமைப்புகளும் ஸ்ரீலங்கா மீதான தமது ஆட்சேபத்தை ஏழுப்பியிருந்தன.

சர்வதேச சமுதயத்தின் கவனம் ஸ்ரீலங்கா மீது திருப்பப்பட்டுள்ளதை அவதானித்த சிறிலங்கவின் கொள்கை வாகுப்பாளர்கள், தமது தமிழ் இன அழிப்பின் அணுகு முறையின் யுக்திகளை மாற்ற ஆரம்பித்தனர். இதன் பிரகாரம், இலங்கைத் தீவின் அரச நிர்வாக விடயத்தில் தமிழ்த் தேசியமும், தமிழ் மக்களின் பூர்வீக நிலமான வடக்கு கிழக்கும் அங்கீகாரம் பெறுவதை நிறுத்துவதற்காக, ஸ்ரீலங்காவின் நீதி மன்றங்களில் வழக்குகளை தொடுத்து அவற்றின் அங்கீகாரத்தை இல்லாது ஒழிக்க திட்டமிட்டனர்.

இந்த அடிப்படையில், வழக்குகளை ஸ்ரீலங்காவின் உச்ச நீதி மன்றத்தில் தொடர்வதற்காக பல சிங்கள அரசியல் கட்சிகளும், வழங்கறிஞர்களும் தயாராக்கப்பட்டனர்.

இந்த அடிப்படையில் ஸ்ரீலங்காவின் உச்ச நீதிமன்றம், அரசின் கொள்கைகளை பிரதிபளித்து, தீர்ப்புக்களை இன அடிப்படையில் வழங்கும் ஒரு நாடாக கொட்டகையாக மாற்றப்பட்டது. அத்துடன் இவ் உச்ச நீதி மன்றத்தில் அரசியல் சர்ச்சைக்குரிய விடயங்களை விசாரிப்பதற்கு, இன விகிதாசாரத்தை மனதில் கொள்ளாது, சிங்களவரை மட்டுமே நீதிபதிகளாக நியமித்தார்கள்.

தமிழ் மக்களுக்கு நீதி

திருகோணமலையில், 2005ம் ஆண்டு சட்ட விரோதமாக சிங்களவரால் நிறுவப்பட்ட புத்தர் சிலை தொடர்பான தீர்ப்பும், அத்துடன் சுனாமியினால் பாதிக்கப்பட்டோருக்கான நிவாரணம் மற்றும் புனர்நிர்மாண ஒப்பந்தம் பற்றிய தீர்ப்பும், ஸ்ரீலங்காவின் சட்டத் துறை பக்கச் சார்பானது என்பதை நிரூபித்த அதேவேளை, ஸ்ரீலங்காவில் தமிழ் மக்களுக்கு எந்த விடயத்திலும் நீதி கிடைக்கப் போவது இல்லை என்பதையும் தெட்டத் தெளிவாக உணர்த்தியது.

இவ் இரு தீர்ப்புகளையும் வெற்றிகரமாக மேடையேற்றிய ஸ்ரீலங்காவின் சட்டத்துறை, அடுத்தபடியாக தமிழ் மக்களின் பூர்வீக நிலமான வடக்கு கிழக்கு மாகாணங்களை இரு வேறு மாகாணங்களாக பிரிப்பட வேண்டுமென்ற வழக்கை தாக்கல் செய்வதற்கு தயார் ஆகினார்கள்.

தமிழ் மக்களின் பூர்வீக நிலமான வடக்கு கிழக்கில், தமிழ் மக்கள் பல ஆயிரம் ஆண்டு காலமாக பரம்பரையாக வாழ்ந்து வருகிறார்கள். அத்துடன், 1987ம் ஆண்டு ஜூலை 29ம் திகதி கையெழுத்தான ஸ்ரீலங்கா-இந்தியா சர்வதேச உடன்படிக்கையின் பிரகாரம், ஸ்ரீலங்காவின் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியினால், 1988ம் ஆண்டு செம்டம்பர் 8ம் திகதி, இவ் இரு மாகாணங்களும் ஒன்றாக இணைக்கப்பட்டது என்பது யாவரும் அறிந்ததே.

ஸ்ரீலங்காவின் அரசியல் யாப்பை பொறுத்தவரையில், நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியினால் எடுக்கப்படும் முடிவுகளுக்கும், நடைமுறைப்படுத்தப்படும் தீர்மானங்களுக்கும், நாடாளுமன்றத்தின் ஆதரவோ அல்லது வேறு ஏதாவது அதி உயர் மட்டத்தின் ஒத்தாசையோ தேவையில்லை என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

பதினெட்டு வருடத்தின் பின்னர்

வடக்கு கிழக்கு மாகாணங்கள் ஒன்றாக இணைக்கப்பட்டு பதினெட்டு வருட காலத்தின் பின்னர், விசேடமாக ஜனதிபதி மகிந்த ராஜபக்ச பதவிக்கு வந்த பின்னர், இவ் வழக்கை சிங்கள நீதிபதிகள் முன்னிலையில் பரிசீலனைக்கு எடுப்பதற்கான தயாரிப்புக்களை பூர்த்தி செய்யப்பட்ட பின்னர், ஏற்கனவே சுனாமி ஒப்பந்தத்திற்கு எதிராக வழக்கு தொடுத்து வெற்றி கண்ட அதே விண்ணப்பக்காரர்களினால், வடக்கு கிழக்கு மாகாணங்கள் இரு வேறு மாகாணங்களாக பிரிப்பட வேண்டும் என்ற வழக்கு, உச்ச நீதி மன்றம் தக்கல் செய்யப்பட்து.

இதன் பிரகாரம் உச்ச நீதி மன்றம் தனது அரசியல் முடிவை, தீர்ப்பு என்ற போர்வையில் - கடந்த ஆண்டு ஓக்டோபர் 16ம் திகதி வழங்கியது. முன்னைய ஜனாதிபதியினால், வடக்கு - கிழக்கு மாகாணங்கள் ஒன்றாக இணைக்கப்பட்டது செல்லுபடியாகாது என உச்ச நீதி மன்றம், தனது தீர்ப்பில் கூறியது. இவ் வேளையிலே, நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச 'மகிந்த சிந்தனையை" மனதில் கொண்டு மிகவும் அமைதியாகி விட்டார்

இவ் உச்ச நீதி மன்றத்தின் தீர்ப்பை அறிந்த சர்வதேச சமுதாயமும், இந்தியாவும் மிகவும் அதிருப்தி அடைந்தன. இதே வேளை சில சிங்கள அரசியல் வாதிகளும், ஒரு சில அமைச்சர்களும் வழமை போல் தமது அதிருப்தியை தெரிவித்தனர். உண்மையில், இது சர்வதேச சமுதாயத்தின் அதிருப்தியை சமாளிப்பதற்காக சிங்கள அரசியல் வாதிகளினால் மேற்கொள்ளப்பட்ட இராஜதந்திரம் என்பது தான் உண்மை.

நிறைவேற்று அதிகாரம்

ஸ்ரீலங்காவிற்கு, நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை அறிமுகம் செய்த முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்த்தன ஒரு முறை கூறியதவாது, “ஸ்ரீலங்காவின் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியினால் ஒன்றை மட்டும் நிறைவேற்ற முடியாது. அதாவது, ஒரு ஆணை பெண்ணாகவோ அல்லது பெண்ணை ஆணாகவோ மற்றுவதற்கு மட்டும் முடியாது” எனக் கூறினார்.

நாடாளுமன்ற பெரும்பான்மையையோ அல்லது வேறு ஏதாவது சட்டமன்றங்களின் ஒத்தாசையையோ எதிர்பராதா, மாபெரும் அதிகாரங்களை கொண்டு, ஓர் முடிசூடா மன்னனாக ஸ்ரீலங்காவின் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி திகழ்கிறார்.

இவ்வளவு அதிகாரம் கொண்ட ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச, தமிழ் மக்களுக்காக எதையும் செய்யத் தயாராக இல்லை என்பதை இங்கு நிரூபித்துள்ளார்.

ஸ்ரீலங்கா - இந்தியா ஒப்பந்தம் பல எதிர்ப்புக்களை சந்தித்த போதிலும், அவ் உடன்படிக்கையில் உள்ள சில நிபந்தனைகள் - பலவிதப்பட்ட இரத்த களரிகள், உயிர் இழப்புக்கள் மத்தியில் நடைமுறை படுத்தப்பட்டுள்ளன. இவ் நிலையில், சட்டங்களை மனதில் கொள்ளாத சிங்கள நீதிபதிகளினால், ஒரு தலை பக்கச் சார்பாக கொடுக்கப்பட்ட உச்ச நீதி மன்றத்தின் அரசியல் தீர்ப்பை ஏற்று, வடக்கு கிழக்கு மாகாணங்களை இரண்டாக பிரிக்க முடியுமா?

விடுதலை புலிகளினால் கையளிக்கப்பட்ட ஆயுதங்கள்?

இந்த உச்ச நீதி மன்றத்தின் அரசியல் தீர்ப்பை சிங்கள மக்களும், ஸ்ரீலங்காவின் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனதிபதியும் ஏற்பார்களேயானால், இந்தியாவில் உள்ள ஓர் அரசியல் கட்சி, தற்செயலாக இந்தியாவின் நீதி மன்றத்தில் ஸ்ரீலங்கா - இந்தியா ஒப்பந்தத்தின் பிரகாரம், தமிழீழ விடுதலை புலிகளினால் கையளிக்கப்பட்ட ஆயுதங்கள் யாவற்றையும், இந்தியா அரசு திரும்ப பெற்றுக் கொடுக்க வேண்டுமென வழக்கு தொடுத்தால் என்னவாகும்?

கச்சதீவு விவகாரம்

இதேபோல் இந்தியாவின் உச்ச நீதிமன்றத்தில் இன்னுமோர் அரசியல் கட்சி, 1974ஆம் ஆண்டு இந்திரா காந்தியினால் கையெழுத்திடப்பட்ட கச்சதீவு உடன்படிக்கை செல்லுபடியாகாது எனவும், கச்சதீவை ஸ்ரீலங்கா உடனடியாக திருப்பி இந்தியாவிடம் கையாளிக்க வேண்டுமென வழக்கு தொடுத்தால் என்னவாவது?

ஸ்ரீலங்காவுக்கும் இந்தியாவிற்கும் இடையில் உள்ள தீவான கச்சதீவு இந்திரா காந்தியின் காலத்தில் ஓர் உடன்படிக்கை மூலம், ஸ்ரீலங்காவிடம் கையளிக்கப்பட்டது. ஆனால் தமிழ் நாட்டு மக்கள் இவ் விவகாரத்தை என்றும் விரும்பவில்லை என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

இப்படியான பல வித நடைமுறைக்கு சாத்வீகமான காரணங்களினால், இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் சர்வதேச சமாதானத்திற்கும், பாதுகாப்புக்கும் அபாயம் ஏற்படக் கூடிய சாத்வீகக் கூறுகள் உண்டு. இந்த அடிப்படையில், ஸ்ரீலங்காவினால் தற்பொழுது மீறப்பட்டுள்ள ஸ்ரீலங்கா - இந்தியா சர்வதேச ஒப்பந்தம் பற்றிய விவகாரத்தை, இந்தியாவினால் ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு சபைக்கு - ஐ. நா சபையின் அதிகாரப்பத்தின், ஆறாவது அதிகாரத்தின், சாரம் 34, 35, 36 க்கு அமைய, முறையீடு செய்யக்கூடிய வாய்ப்புகள் நிறைய உண்டு.

இப்படியாக இந்திய அரசாங்கம் முறையீடு செய்ய முன்வரும் வேளையில் இவ் விவகாரம் சர்வதேச நீதி மன்றத்தின் விசாரணைக்கு ஐ.நா.பாதுகாப்பு சபையினால் முன் வைக்கப்படலாம். இவ் நீதி மன்றத்தையே உலக நீதி மன்றம் எனவும் கூறுவார்கள்.

உலகத்தில் நீதியையும், சர்வதேச சமாதானத்தையம், பாதுகாப்பையும் விரும்பும் ஒவ்வொரு பிராஜைகளும், இந்திய அரசிடம் இவ் விவகாரத்தை ஐ.நா. பாதுகாப்பு சபையிடம் முறையீடு செய்யுமாறு வேண்டுகோள் செய்ய வேண்டும்.

தமிழ் பெயர்களில் மாற்றம்

ஸ்ரீலங்காவின் நீதித்துறை கபடமாகவும் ஒரு தலை பட்சமாகவும், முழுக்க அரசியல் தீர்வுகளை நடைமுறைப்படுத்தும் ஓர் நாடக கொட்டகையாக மாறியுள்ள காரணத்தினால், இவர்களினால் அடுத்த படியாக தொடரக்கூடிய வழக்கு எதுவாக இருக்குமென ஊகிக்கும் பட்சத்தில், அது நிச்சயமாக, 'இலங்கை தீவில் தமிழ் மக்களுக்கு எந்தவித சலுகைகளோ, உரிமைகளோ, குடி உரிமையோ கிடையாது" என்பதாகவே இருக்கும்.

இப்படியாக வழக்கு தொடரப்படும் வேளையில் விண்ணப்பக்காரர்களுக்கு சார்பான தீர்ப்பையே ஸ்ரீலங்காவின் உச்ச நீதி மன்றம் வழங்கும் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை. இப்படியான ஓர் நிலை ஏற்படும் வேளையில், இலங்கை தீவில் சகல தமிழ் மக்களும் - அவர்கள் அமைச்சராக இருந்தாலென்ன, அரசின் பிரச்சார பணிகளில் ஈடுபடுபவர்களாக இருந்தலென்ன, இல்லையேல் ஸ்ரீலங்கா அரசு சார்பாக தனது இனத்தவரையே அழித்து வரும் கோடரிக் காம்புகளாக இருந்தலென்ன, யாவரும் உடனடியாக தம்மை சிங்களவராக இனம் காட்ட வேண்டிய நிலை ஏற்படும். அப்படியானால், கூடுதலான தமிழ் பெயர்களின் முடிவில் உள்ள ஆங்கில எழுத்துக்களான 'எம்", 'என்", 'எச்" போன்ற எழுத்துக்களை, எ, இ ஆக மாற்றுவது தான் ஸ்ரீலங்காவின் அரசியல் தீர்வாக இருக்கும்.