இடமாற்றம்பெறும் நீதிபதி இளஞ்செழியனால் தடுமாறும் குடா நாட்டு மக்கள்! அடுத்தது என்ன?

Report Print Jeslin Jeslin in கட்டுரை

கோர யுத்தத்தின் பிடியுள் சிக்குண்டு இருந்த யாழ்ப்பாணம் கடந்த 2009ஆம் ஆண்டு யுத்தம் மௌனிக்கப்பட்டதன் பின்னர், விரைவாக மாற்றமுறத் தொடங்கியது. சமூகத்தில் ஏனைய இனங்களுடன் ஒப்பிடுகையில், சமூக மாற்றங்களில் இருந்து தொழிநுட்ப வளர்ச்சிவரை ஒரு கட்டத்தில் பின்தங்கியிருந்த சமூகம் யுத்தத்தின் பின்னர் வெகுவாக வளர்ச்சி கண்டது.

வளர்ச்சிகண்டது என்றால், அது சாதகமாகவும் இருக்கலாம் அல்லது பாதகமாகவும் இருக்கலாம் அவ்வாறு ஒரு சூழல்தான் யாழ்ப்பாணத்திலும் உருவாகியிருந்தது, எந்த அளவில் இழந்த தமது கலை கலாச்சாரத்தை மீட்டெடுத்தனரோ, அந்த அளவில் சமூக விரோத செயல்களும் பெருகியிருந்தன.

யாழ்ப்பாணத்தில், வாள்வெட்டுக்களும், போதைப்பொருள் பாவனை, பாலியல் வண்புனர்வுகள் என்பன யுத்தம் நிறைவுற்ற காலத்திற்கு பின்னர் வலுப்பெற்றிருந்தது என்பதை யாராலும் மறுக்க முடியாது.

இந்நிலையில்தான், கடந்த 2015ஆம் ஆண்டு யாழ். மேல் நீதிமன்ற நீதிபதியாக இடமாற்றம்பெற்று நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் யாழ்ப்பாணத்திற்கு சென்றிருந்தார்.

தற்போது அவரது மூன்று வருட சேவை காலம் நிறைவுற்று திருகோணமலைக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

எனினும் நீதிபதி இளஞ்செழியனின் தற்போதைய இடமாற்றத்தை குடா நாட்டு எதிர்த்து வருகின்றனர், இதற்கு காரணம் குடாநாட்டு மக்களின் மனதில் நீதிபதி இளஞ்செழியன் ஒரு ஹீரோபோல உள்ளமையே காரணம்.

பல்வேறு தமிழ்த் திரைப்படங்களில், ஒரு பொலிஸ் அதிகாரி அல்லது ஒரு நீதிபதி மற்றும் சட்டத்தரணி என்போர் அவர்களின் துணிச்சலான செயல்களினால் பொதுமக்களிடத்தில் பெரும் வரவேற்பை பெற்றுக்கொள்வர்.

ஆனால் நடைமுறையில் அது எத்தனை சதவீதம் சாத்தியப்படும் என்பது சந்தேகமே, எனினும் அதற்கு விதிவிலக்காக வாழ்பவர்தான் நீதிபதி இளஞ்செழியன்.

நீதிபதியாக அவர் வழங்கிய தீர்ப்புக்கள், தாயகத்திற்கு மாத்திரமின்றி சர்வதேசத்திற்கும் ஓர் எடுத்துக்காட்டாக அமைந்தது.

அத்துடன், தமிழர்களை தனது கட்டுப்பாட்டிற்குள் வைத்திருந்து ஆள வேண்டும் என்ற பேரினவாத சிங்கள சமூகத்திற்கும் ஓர் எடுத்துக்காட்டாக விளங்குபவர் நீதிபதி இளஞ்செழியன் என்றால் மிகையாகாது.

பல அச்சுறுத்தல்களுக்கு மத்தியிலும், யாழ்ப்பாணத்தில் துணிந்து தனது கடமையை சரிவர நிறைவேற்றிவரும் நீதிபதி இளஞ்செழியனின் தற்போதைய இடமாற்றம் குடாநாட்டு மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது எனலாம்.

யாழ். மேல் நீதிமன்ற நீதிபதியாக நீதிபதி இளஞ்செழியன் பதவியேற்றதில் இருந்து யாழ்ப்பாணத்தில் நீதிச்சேவை முறையாக அமுல்படுத்தப்படுகின்றது என்பதோடு குற்றச்செயல்களில் ஈடுபடுவதற்கு அனைவரும் அஞ்சுகின்ற ஒரு சூழல் தோன்றியுள்ளது.

நீதிபதி இளஞ்செழியனின் நேர்மையான செயற்பாடுகள் அனைவரிடத்திலும் தனி மரியாதையைத் தோற்றுவித்துள்ளது. அத்துடன், நீதிபதி இளஞ்செழியனை அறியாத சிறுபிள்ளை இல்லை என்றும் கூறலாம்.

குற்றவாளிகளுக்கு நீதிபதி இளஞ்செழியன் வழங்கும் தீர்ப்புக்கள் அடுத்து ஒரு முறை குற்றம் செய்யவேண்டும் என்ற நோக்கத்தை அடியோடு அழித்துவிடும் வல்லமை பெற்றதாக காணப்படுகின்றது.

குறிப்பாக அனைவரும் அறிந்தது, புங்குடுதீவு மாணவி வித்தியாவின் படுகொலை வழக்கு, மாணவி படுகொலை செய்யப்பட்டு வருடங்கள் இரண்டு கடந்தும்கூட குற்றவாளிகளுக்கு பக்கச்சார்பின்றி அதிரடியாக தீர்ப்பு வழங்கியிருந்தார்.

இந்த தீர்ப்புதான் சர்வதேசத்தின் கவனம் நீதிபதி இளஞ்செழியன் மீது திரும்ப காரணம், ஆனாலும் குறித்த காலப்பகுதியில் பல்வேறு கொலை அச்சுறுத்தல்களுக்கு அவர் முகம்கொடுத்திருந்தார் என்பதும் யாம் அனைவரும் அறிந்ததே.

கடந்த 2017ஆம் ஆண்டு ஜூலை மாதம் இவரை நோக்கி துப்பாக்கிசூட்டுத் தாக்குதல் நடத்தப்பட்டிருந்த நிலையில் அதனை தடுக்க வந்த நீதிபதி இளஞ்செழியனின் மெய்பாதுகாவலர் உயிரிழந்திருந்தார்.

அங்கேயும்கூட நீதிபதி இளஞ்செழியனின் மனிதாபிமானம் வெளிப்பட்டது, தந்தையை இழந்த மெய்பாதுகாவலரின் குழந்தைகளுக்கு தான் தந்தையாகவிருந்து அனைத்து கடமைகளையும் செய்வேன் என்று தான் வழங்கிய வாக்குறுதியை இன்றுவரை நிறைவேற்றிவருகின்றார் நீதிபதி இளஞ்செழியன்.

நீதிபதி ஒருவரின் பல்வேறு விதமான வெளிப்பாடுகள், ஒட்டுமொத்த இலங்கை மக்கள் மத்தியில் கடவுளாக போற்றும் அளவுக்கு அமைந்துள்ளது.

தமிழர்கள் என்றால் பயங்கரவாதிகள் என்ற கோட்பாட்டை கொண்டிருந்த பெரும்பான்மை இனத்தவர்கள் மத்தியில் முதன்முறையாக மாற்று சிந்தனையை நீதிபதி இளஞ்செழியன் விதைத்துள்ளார்.

இலங்கையில் அரசியல்வாதிகளின் உயிர்களை பாதுகாக்க எத்தனையோ இராணுவத்தினர் மற்றும் பொலிஸார் தமது உயிர்களை தியாகம் செய்துள்ளனர். அவ்வாறானவர்களை, குறித்த அரசியல்வாதிகள் மதித்ததும் இல்லை, அதனை கண்டுகொண்டதும் இல்லை.

எனினும் நீதிபதி இளஞ்செழியன் தனது உயிரை பாதுகாத்த பொலிஸ் அதிகாரியின் மனைவியின் காலில் வீழ்ந்து அழுதார். பிள்ளைகளையும் தத்தெடுத்துள்ளார். இலங்கையின் வரலாற்றில் இவ்வாறானதொரு நெகிழ்வான சம்பவம் இடம்பெற்றமை இதுவே முதன்முறை என்பது குறிப்பிடத்தக்கது.

அத்துடன், சமூகத்திற்கு ஏதுவான பல கருத்துக்களை இலகுவான நடையில் நீதிபதி இளஞ்செழியன் தெரிவித்துவருகின்றார்.

அண்மையில் அவரது கருத்துக்கள் சில அனைவரிடத்திலும் வெகுவாக சென்றிருந்தது, இனத்தில் பற்று வையுங்கள் ஆனால் வெறி வேண்டாம், மதத்தில் பற்று வையுங்கள் ஆனால் வெறி வேண்டாம், மொழியில் பற்று வையுங்கள் ஆனால் வெறி வேண்டாம், கலாச்சாரத்தில் பற்று வையுங்கள் ஆனால் வெறி வேண்டாம், உனது கலாச்சாரத்தை மதிப்பது உனது உரிமை! ஆனால் இன்னொரு இனத்தின் கலாச்சாரத்தை மிதிப்பது உனது உரிமை அல்ல! என்ற இந்த வார்த்தைகள் மிகப்பெரிய படிப்பினையாக மக்களுக்கு அமைந்திருந்தது.

இந்நிலையில்தான், நீதிபதி இளஞ்செழியனின் இன்றைய இடமாற்றம் அனைவருக்கும் கவலையளித்துள்ளதோடு, எமது பிரதேசத்திற்கு அவர் இடமாற்றம் பெற்று வரமாட்டாரா என்ற ஏக்கத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

மேலும், தற்போது யாழ்ப்பாணத்திற்கு இடமாற்றம் பெற்றுள்ள நீதிபதி பிரேம்சங்கர் இனிவரும் காலங்களில் எவ்வாறு செயற்படபோகின்றார்? நீதிபதி இளஞ்செழியன் போல அனைத்தையும் தனது கட்டுப்பாட்டிற்குள் வைத்திருப்பாரா என்ற கேள்வி மக்கள் மத்தியில் எழ ஆரம்பித்துள்ளது.