ஜம்மியதுல் உலமா கட்சித் தலைவர் ரிஸ்வி முப்தி கோத்தபாய ராஜபக்சவை சந்தித்ததன் மர்மம் என்ன?

Report Print M.M.Nilamdeen M.M.Nilamdeen in கட்டுரை

கடந்த வாரம் இலங்கை ஜம்மியத்துல் உலமா சபை தலைவர் றிஸ்வி முப்தி முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தபாய ராஜபக்சவை அவரது இல்லத்தில் சந்தித்து நீண்ட நேரம் பேசியுள்ளதாக தகவல் ஒன்று கசிந்துள்ளது.கூடவே சபையின் செயலர் முபாறக் மௌலவியும் சென்றுள்ளார்.

இலங்கையின் 2020ஆம் ஆண்டின் ஜனாதிபதி கோத்தபாய என்றும் அடுத்த ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாய என்றும் கடந்த சில மாதமாக செய்திகள் வந்துக்கொண்டிருக்கும் இந்த தருணத்தில் றிஸ்வி முப்தியையும் சபையின் செயலாளரையும் கோத்தபாய ஏன் சந்தித்தார் என்ற தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை.

ஆனால் பொதுபல சேனா அமைப்புக்கும் தனக்கும் எவ்விதமான சம்மந்தமும் இல்லை என்பதை முஸ்லிம் மக்களிடம் றிஸ்வி முப்தி எடுத்துச் செல்ல வேண்டும் என்ற ஒரு அஜந்தா றிஸ்வியிடம் கொடுக்கப்பட்டுள்ளதாகவும் அறிய வருகின்றது.

அதற்கான முழுப் பொறுப்பையும் ஜம்மியத்துல் உலமா சபை முஸ்லிம் மக்களிடம் எடுத்துச் செல்லுமா? என்பது ஒருபுறமிருக்க எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் தனக்கு முஸ்லிம் வாக்களிக்க வேண்டும் அதற்கான பணியை றிஸ்வி செய்ய வேண்டும் என்று கோத்தபாய கேட்டுள்ளாராம்.

மஹிந்தவுடன் நெருக்கம்

கடந்த காலத்தில் மஹிந்த ஆட்சியில் இந்த றிஸ்வி முப்தி மஹிந்த மற்றும் கோத்தபாயவுடன் மிகவும் நெருக்கமாக இருந்தார். ஹலால் விடயத்தில் மிகவும் சர்ச்சையில் சிக்கிக் கொண்ட இந்த றிஸ்வி முப்தியிடம் ஜனாதிபதியாக விரும்பும் கோத்தபாய சில முக்கியமான பொறுப்புக்களை ஒப்டைத்துள்ளாராம்.

மஹிந்த ஆட்சிக் காலத்தில் ஹலால் உணவுக்கு எதிராக பொதுபல சேனா போர்க்கொடி தூக்கிய பொழுது அரசுக்கு ஆதரவாக செயல்பட்டார் என்ற குற்றச்சாட்டு இன்னும் றிஸ்வி முப்தி மீது உள்ளது. அதற்கான சின்மானமாக சில சலுகைகள் இவருக்கு வழங்கப்பட்டது என்ற தகவல்களும் அப்போது கசிந்தது. இந்த நிலையில்தான் இன்னும் உலமா சபையின் தலைவராகவும் உள்ளார்.

ஜெனீவா பிரேரணைக்கு எதிராக முஸ்லிம்கள்

மஹிந்த ஆட்சிக் காலத்தில் வடக்கில் நடந்தேறிய மனிதப்படுகொலைக்கு எதிராக ஜெனீவாவில் அமெரிக்கா கொண்டு வந்த பிரேரணைக்கு எதிராக பல முஸ்லிம் மத்ரசா மாணவர்களை ஒன்று திரட்டி கொழும்பு மாநகர் முழுவதும் முஸ்லிம் தொப்பிகள் நிறைத்து மாபெரும் கண்டனப் பேரணி நடத்தி தனது விசுவாசத்தை காட்டினார்.மறுபுறம் இலங்கைக்கு ஆதரவாக அரபு நாடுகளின் ஆதரவை அப்போதைய நீதி அமைச்சர் றவுப் ஹக்கீம் திரட்டிக் கொடுத்தார்.

ஆனால் அந்தப் பிரேரணையின் மூலமாக வடக்கு, கிழக்கில் தமிழ் முஸ்லிம் இன உறவு மேலும் விரிவடைந்து காணப்பட்டது. இந்த கேவலமான இழிவான செயல்களை மானமுள்ள மனிதநேயமுள்ள எந்த மனிதனும் மறக்கமாட்டான்.

இப்படிப்பட்ட ஈனச் செயல்களால்தான் இன்னும் முஸ்லிம்களை தொப்பி பிரட்டிகள் என்று தமிழ் சமூகம் தள்ளி வைக்கின்றான். ஒரு மனிதப் படுகொலைக்கு எதிராக நீதியின் பக்கம் நில்லாமல் அநீதியின் பக்கம் நின்று ஒரு சமூகத்தின் துன்பத்தில் இன்பம் கண்ட சமூகமாக இன்னும் முஸ்லிம் சமூகம் உள்ளது.

சிங்கள மக்களுக்கு இல்லாத மிகப் பெரிய அக்கறையாக ஒட்டு மொத்த முஸ்லிம் சமூகத்தையும் வெட்கித் தலைகுனியும் படியாக அந்தப் பேரணி அமைந்தது.

ஒரு அநீதிக்கு எதிராக ஒட்டு மொத்த முஸ்லிம் சமூகத்தையும் காவு கொடுத்த கதையாக அந்தப் பேரணி நடந்தது. அமைந்தது. அதனால் இன்னும் முஸ்லிம் சமூகத்தை எதிரியாகவே தமிழ் சமூகம் பார்க்கும் நிலைமைக்கு முஸ்லிம் சமூகம் தள்ளப்பட்டுள்ளது.

ஜெனீவா எதிர்ப்பு கண்டனம் என்பதை விட தமிழ் மக்களுக்கு எதிரான கண்டனப் பேரணி என்றே தமிழ் சமூகத்தால் இன்றும் அது பார்க்கப்படுகின்றது. படுகொலைக்கு எதிராக கண்டனம் ஒன்றை நடத்த இஸ்லாம் சொல்லியுள்ளதா? உங்கள் தனிமனிதனின் விசுவாசத்தை மஹிந்த அரசுக்குக் காட்டுவதற்காக இன்னுமொரு சமூகத்தை மிதித்து அந்த சமூகத்தை கொச்சைப்படுத்தி தான் சார்ந்த ஒட்டுமொத்த சமூகத்தையும் அடகு வைத்தது எந்த ஊர் நியாயம். இதை அல்லாஹ் கேட்க மாட்டானா?

தமிழன் இரத்தம் என்றால் தக்காளிச் சட்னி முஸ்லிம் இரத்தம் என்றால் இரத்தம். இந்த நிலைமைக்கு யார் காரணம்? முஸ்லிம் சமூகத்தை தனிநபர்கள் தங்களது சுகபோக வாழ்வுக்காகவும் பதவி பட்டத்திற்காகவும் பலிக்கெடாவாக்கி வருவதை முஸ்லிம் மக்கள் உணரவேண்டும்.

அரசியல் ரீதியாகவும் முஸ்லிம் அரசியல் வியாபாரம் ஒரு புறம் நடக்க மறு புறம் முஸ்லிம் அமைப்புக்கள் என்ற ரீதியிலும் முஸ்லிம் வியாபாரம் நன்றாகவே நடந்து வருகின்றன.

கிறீஸ் பூதம்

ஆனால் கிழக்கில் புனித நோன்பு காலம் என்றும் பாராமல் கிறீஸ் பூதம் என்று கிறீஸ் மனிதனை முஸ்லிம் தமிழ் பகுதிகளில் இறக்கி மக்களை கிலி கொள்ள வைத்து எப்போதும் மக்களை பயத்தில் ஆழ்த்தியது யார்? யாரது காலத்தில் இவைகள் அரங்கேறியது. இவைகள் எதுவும் றிஸ்விக்குத் தெரியாதா? தனி மனிதனின் பெயர் புகழுக்காக பதவி சுகத்திற்காக ஒட்டு மொத்த சமூகத்தையும் மீண்டும் மீண்டும் அதள பாதாளத்தில் தள்ளுவதை ஏற்றுக் கொள்ள முடியாது.

சில முஸ்லிம் அமைப்புக்களும் அதன் தலைமைகளும் தனிநபர் சுகபோகங்களுக்காக சமூகத்தை அடகு வைப்பதை முஸ்லிம் சமூகம் தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டும்.

இவர்களால் கோத்தபாய ராஜபக்சவுக்கு முஸ்லிம் சமூகம் ஆதரவு வழங்க வேண்டும் என்று ஒரு தீர்மானம் வெளியாகும். சிறுபான்மை மக்களின் வாக்குகள் இல்லாமல் யாரும் ஜனாதிபதியாக முடியாது என்பதை இப்போதுதான் கோத்தபாய புரிந்துள்ளார் போலும்.

அதிலும் குறிப்பாக வடக்கு மக்களின் வாக்குகள் குறைந்தது 3 லட்சம் வாக்குகள் இல்லை என்றால் யாரும் வெற்றி பெற முடியாது. எனவே எந்த தருணத்திலும் வடக்கு தமிழ் மக்களின் வாக்குகள் கோத்தபாயவுக்கு கிடைக்காது.

மறுபுறம் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளராக நிறுத்த கோத்தாவை மஹிந்தர் விரும்பவில்லை. இந்த நிலையில் கோத்தா இப்பவே அடுத்த ஜனாதிபதி என்று ஒரு பேஸ்புக் தளத்தை ஆரம்பித்து விட்டார்.

மற்றும் ஊடக பிரச்சாரத்தையும் ஆரம்பித்து விட்டார். இந்த நிலையில் கோத்தா ஏன் றிஸ்வி மற்றும் முபாறக் ஆகியோரை சந்திக்க வேண்டும். இது குறித்து இருவரும் விளக்கம் கொடுப்பார்களா?