முள்ளிவாய்க்கால் எழுச்சிநாளும் கூட்டமைப்பின் எதிர்காலமும்

Report Print Jeslin Jeslin in கட்டுரை

ஈழத்தில் பல தசாப்த காலமாக இலங்கை அரசாங்கத்தினாலும் இலங்கை இராணுவத்தினராலும் திட்டமிட்டு இனப்படுகொலை செய்யப்பட்டும் இனச்சுத்திகரிப்புக்கு உள்ளாக்கப்பட்டும் இலட்சக்கணக்கில் கொன்று குவிக்கப்பட்டனர் அப்பாவி தமிழர்கள.

முப்பது வருடமாக தமிழர்தாயகப் பிரதேசத்தில் விஷ்வரூபம்கொண்டு ஈழத்தமிழரை ஒட்டுமொத்தமாக காவுகொள்ள கோரத்தாண்டவம் ஆடிய யுத்தம் கடந்த 2009ஆம் ஆண்டு மே 18ஆம் திகதியுடன் மௌனிக்கப்பட்டது.

தன் இனத்தினை மாற்றான் அழித்த அந்த துயர நாளை வெளிப்படையாக அனுஷ்டிப்பதற்குகூட 2009ஆம் ஆண்டின் பின்னர் தமிழர்களுக்கு உரிமை மறுக்கப்பட்டது, குறிப்பாக சுட்டிக்காட்டவேண்டும் என்றால் தமிழர்கள் அழுவதற்கான உரிமையைகூட சிங்களவரிடத்தில் யாசகம் கேட்கவேண்டியிருந்த ஒரு கொடூர சூழல் அது, கொடுங்கோல் ஆட்சி அது.

அழிக்க அழிக்க மீண்டும் வரும் பீனிக்ஸ் பறவைபோல, தனது உயிர் உறிஞ்சப்படுகின்றது என்று தெரிந்தும் தேன் சேகரிக்கும் தேனிப்போல மீண்டும் தன் நிலையில் இருந்து துளிர்விட ஆரம்பித்தனர் தாயகத் தமிழர்கள்.

ஆயுதம்தாங்கி போராடிய சமூகம் ஜனநாயக ரீதியில் அகிம்சை வழியில் தனது அரசியல் போராட்டத்தை ஆரம்பித்தது.

தனக்கான தமிழர் தலைமை தேவை என தலைத்தூக்கி போராட ஆரம்பித்து, அரசியல் தலைமைகளை உருவாக்க வேண்டும் என்ற முனைப்புடன் செயற்பட்டு நல்லாட்சி அரசாங்கத்தினை உருவாக்கியிருந்தனர்.

தனது ஒட்டுமொத்த வாக்குகளையும் அளித்து தமிழர்களின் ஏகப்பிரதிநிதி எனப்படுகின்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினை நாடாளுமன்றத்திற்கு அனுப்பி வைத்தனர் தமிழர் தரப்பு.

அதேசமயம் வடக்கில் ஒரு தமிழர் ஆட்சியை நிலைநிறுத்தவேண்டும் என வடக்கு மாகாண சபைக்கு முதல்வராக சீ.வி.விக்னேஸ்வரன் ஆட்சிக்கு கொண்டுவரப்பட்டிருந்தார்.

அடுத்தடுத்த தமிழர் எண்ணம்போலவே அனைத்தும் நடக்கலாயிற்று, நல்லாட்சி மலர்ந்த பிறகு முதலாவதாக பகிரங்கமாக 2015ஆம் ஆண்டு முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் அனுஷ்டிக்கப்பட்டது.

தொடர்ந்து மூன்று வருடமாக எவ்வித தடங்கள்களும் இல்லாமல் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு வடக்கு மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஷ்வரனின் தலைமையிலும், அரசியல் தலைவர்களின் பங்களிப்புடன் நடத்தப்பட்டிருந்தது.

எனினும் கடந்த மூன்று வருடங்களைவிட இவ்வருடம் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு யாழ். பல்கலைக்கழக மாணவர்களின் பேரெழுச்சியுடன் மிக உணர்வுபூர்வமாக நடத்தப்பட்டது, அதுவும் அரசியல் தலையீடுகள் ஏதுமின்றி நடத்தப்பட்டுள்ளது.

ஆரம்பத்தில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வில் அரசியல் தலையீடுகள் இருக்கக்கூடாது இந்த நினைவேந்தல் முழுதும் மக்கள் மயப்படுத்தப்பட்டு அனுஷ்டிக்கப்படவேண்டும் என யாழ். பல்கலை மாணவர்களால் அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டன.

இதன்காரணமாக வடமாகாண சபைக்கும் யாழ். பல்கலை மாணவர்களுக்கும் இடையே முறுகல் நிலை ஏற்பட்டதுடன், சில பேச்சுவார்த்தைகளின் பின்னர் இரு தரப்பும் ஒருமித்த ஒரு முடிவிற்கு வந்தனர்.

இந்நிலையில், நேற்றைய தினம் அனுஷ்டிக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வில் அரசியல் தரப்பு சற்றே ஒதுங்கியிருந்ததுடன் முழு நிகழ்வுகளும் மாணவர்கள் தலைமையிலேயே மேற்கொள்ளப்பட்டது.

தமிழ் மக்களின் ஏகப்பிரதிநிதிகள் என்று கூறக்கூடிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் பின்வாங்கியிருந்தது.

இதற்கு காரணம் தமிழர் தாயக மக்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் மீது கொண்டுள்ள அதிருப்திநிலைதான் என பலராலும் விமர்சிக்கப்பட்டு வருகின்றது.

நேற்றைய முள்ளிவாய்க்கால் நிகழ்வில் இருந்து தமிழர் தரப்பில் விக்னேஸ்வரன் உயர்ந்த நிலை ஒன்றை அடைந்துவிட்டார் என்று சொன்னால் மிகையாகாது.

எனினும் தமிழர்களின் ஏகப்பிரதிநிதியான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நேற்றைய தினத்தில் புறக்கணிக்கப்பட்டிருந்தது.

வடமாகாண சபை முதலமைச்சர் விக்னேஸ்வரனுக்கும் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தனுக்கும் இடையில் மோதல் நிலை ஏதும் இல்லை எனினும், விக்னேஸ்வரனை கடுமையாக விமர்சிப்பவராக கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் உள்ளார்.

இருவருக்கும் இடையிலான கருத்துமோதல்கள் உச்சக்கட்டத்தில் உள்ளது என்றுகூட சொல்லலாம், இதன்விளைவுதான் வடமாகாண சபை முதலமைச்சர் விக்னேஸ்வரனை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இருந்து சற்றே தனித்து பயணிக்க வைத்துள்ளது.

பலரின் விமர்சனத்திற்கு உட்பட்டிருந்த சீ.வி.விக்னேஸ்வரன் மக்கள் மத்தியில் தனக்கென தனித்தலைமைத்துவத்தை கொண்டிருக்கின்றார் என்பதற்கு முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் ஓர் சான்று.

முள்ளிவாய்க்காலில் அரசியல் வேண்டாம் என கூட்டமைப்புசார் அரசியல் தலைமைகளையும், இதர அரசியல்வாதிகளையும் ஓரங்கட்டிய தமிழ் மக்கள் விக்னேஸ்வரனை ஆதரித்தனர், இது கூட்டமைப்புமீது மக்களுக்கு ஏற்பட்டிருக்கும் உச்சக்கட்ட விரக்திநிலையை சுட்டிக்காட்டுகின்றது.

தமிழீழ விடுதலைப்புலிகளின் காலத்தில் எவ்வாறு பொதுநிகழ்ச்சிகளும், நினைவுநிகழ்வுகளும் அரசியல் தலையீடு இல்லாமல் நடந்தேறியதோ அது போன்றதான ஒருசூழல்தான் இவ்வருட முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வில் ஏற்பட்டுள்ளது.

தேர்தல் இடம்பெறும் மூன்று மாத காலத்திற்கு முன்னர் மக்களின் ஆணையை கொண்டு நடப்போம் என வாக்குறுதி அளித்து வரும் கூட்டமைப்பு தேர்தலின் பின்னர் எங்களின் முடிவுதான் மக்களின் முடிவு என்று செயற்படுகின்றனர், அந்த மெத்தனப்போக்குதான் மக்களிடத்தில் கூட்டமைப்பினரின் பின்னடைவுக்குக் காரணம்.

மேலும், மாற்றம் ஒன்றை கொண்டு வருவதில், அதனை தெரிவு செய்வதில் கூட்டமைப்பின் தொய்வு நிலையும் மக்களிடத்தில் மதிப்பிழக்க காரணமாக அமைந்துள்ளது.

மக்களிடத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் மீதான நம்பிக்கை தொய்வுநிலை கண்டுள்ளது என்பதை கடந்த உள்ளூராட்சிமன்றத் தேர்தல் சரிவர பிரதிபலித்திருந்தது.

வடக்கு பகுதியில் பெரும்பாலான உள்ளூராட்சி மன்றங்களை ஈபிடிபி அணியினரும், கிழக்கில் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியினரும் கைப்பற்றி கூட்டமைப்பிற்கு பெரும் பாடம் புகட்டியிருந்தனர்.

இந்நிலையில், முள்ளிவாய்க்கால் தினத்தில் அரசியல் தலையீடுகளே ஏதும் வேண்டாம் என ஒருமித்த குரலாய் ஒலித்த மக்களின் குரல் விக்னேஸ்வரனை மாத்திரம் ஆதரித்தது மக்கள் மத்தியில் விக்னேஸ்வரனின் இடத்தை மேலும் வலுவானதாக்கியுள்ளது.

இந்நிலை இவ்வாறு தொடர்ந்து செல்லுமாயின் கூட்டமைப்பின் எதிர்காலம் கேள்விக்குள்ளாகும் என அரசியல் ஆய்வாளர்கள் கருத்துத் தெரிவிக்கின்றனர்.


You may like this..