தென்னிலங்கையை ஆட்டிப்படைக்கும் இயற்கை! உலக அழிவின் மற்றுமொரு அங்கமா?

Report Print Jeslin Jeslin in கட்டுரை

நாட்டில் தற்போது நிலவி வரும் சீரற்ற காலநிலை காரணமாக இதுவரையில் 12 மாவட்டங்களைச் சேர்ந்த 84,943 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், 11 பேர் உயிரிழந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது.

இதன்காரணமாக அப்பகுதி மக்களின் இயல்புவாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளதுடன், மக்களின் உடமைகளுக்கும் பாரிய சேதங்கள் ஏற்பட்டுள்ளன.

மேலும், நாட்டின் முக்கிய நதிகளான நில்வளா, களு, களனி, மகாவலி, அத்தனகல்ல ஓயா, மா ஓயா, கலா ஓயா, தெதுரு ஓயா ஆகியன பெருக்கெடுத்துள்ளதன் காரணத்தினால் அதனை அண்டி வாழும் மக்களும் பாரிய பாதிப்புக்கு முகம்கொடுத்துள்ளனர்.

அத்துடன், பாதுகாப்பு நடவடிக்கைகளை கருத்திற்கொண்டு முப்படையினரும் கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

அனுராதபுரம், கண்டி, நுவரெலியா, பதுளை, கேகாலை, இரத்தினபுரி, காலி, மாத்தறை, களுத்துறை, குருநாகல், புத்தளம், கொழும்பு, கம்பஹா, மொனராகலை, மாத்தளை, பொலன்னறுவை, அம்பாந்தோட்டை போன்ற மாவட்டங்கள் அதிக பாதிப்பை எதிர்நோக்கியுள்ளன.

குறித்த மாவட்டங்களில் வெள்ள அபாயம் மற்றும் மண்சரிவு அபாயம் ஏற்பட்டுள்ளதுடன் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டு பெருமளவான மக்கள் ஆபத்தான பிரதேசங்களில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், இவற்றுள் அதிக பாதிப்பை எதிர்நோக்கும் பிரதேசங்களாக மலையகப்பகுதிகள் உள்ளன என்பதை மறுப்பதற்கில்லை.

வருடா வருடம் இந்த காலப்பகுதியில் நிலவக்கூடிய தென்மேல் பருவப்பெயர்ச்சி காலநிலை காரணமாக பாரிய உயிரிழப்புக்களை சந்திக்கின்ற ஒரு பகுதியாக மலையக பிரதேசம் காணப்படுகின்றது.

குறிப்பாக கூறுவதென்றால் மண்சரிவும் அதனால் ஏற்படும் உயிரிழப்புக்களும் மலையக மக்களிடத்தில் இருந்து தவிர்க்க முடியாத ஒன்றாக மாறிவிட்டது.

அதிலும் கடந்த 2013ஆம் ஆண்டிற்கு பின்னரான காலப்பகுதிகளில் இவ்வாறான அனர்த்தங்கள் அதிகரித்துள்ளதுடன், வருடத்தின் இந்த மாதப்பகுதியில் ஏற்படும் உயிரிழப்புக்களை தவிர்க்க முடியாத இக்கட்டான நிலையில் மலையக மக்கள் இன்றும் உள்ளார்கள் என்பதுதான் வேதனைக்குரியது.

ஒரு தடவை ஏற்படும் என்றால் அதனை விபத்து அல்லது அனர்த்தம் என்று கூறலாம், ஆனால் அதுவே வருடா வருடம் ஒரு குறிப்பிட்ட காலப்பகுதியில் தொடர்ச்சியாக இடம்பெற்றுவருகின்றதெனில் அதனை விபத்து என்று கூறுவதை விட உரியவர்களின் அசமந்தப்போக்கினால் ஏற்படும் விளைவு என்று கூறலாம்.

இவ்வாறான அனர்த்தங்களுக்கு சிறந்த எடுத்துக்காட்டுகள் என்றால் கடந்த 2014ஆம் ஆண்டு இடம்பெற்ற கொஸ்லாந்த மீரியபெத்த அனர்த்தம்தான்.

ஒரு தோட்டம் முழுதும் மண்னுள் புதையுண்டு போன துயரம் அது, தேயிலை தோட்டத்திலேயே பிறந்து வளர்ந்து பின்னர் அந்த தேயிலைக்கே உரமாக மாறிப்போன துயரச்சம்பவங்கள்தான் அவை.

37 உயிர்களை ஒரே நொடியில் விழுங்கிய அந்த இயற்கை அனர்த்தத்தின் பிரதிபலிப்பு தொடர்ந்து வரும் வருடங்களிலும் வெளிப்படத்தான் செய்தன.

இவ்வாறான அனர்த்தங்கள் நிகழ இயற்கை ஒரு பாரிய காரணி என்றாலும், சமூகமும் சமூகம்சார் அரசியலும் மற்றொரு காரணியாக அமைந்துள்ளது.

மலையகத்தில் ஏற்பட்ட பாரிய அனர்த்தம் இது எனினும் அதன் பின்னர் ஒன்றன் பின் ஒன்றாக இவ்வாறான அனர்த்தங்கள் இடம்பெற்றுவருகின்றன.

மீரியபெத்தை அனர்த்தம் நிகழ்ந்து சரியாக ஒரு வருடகாலத்தில், கொத்மலை பிரதேசத்திற்குட்பட்ட வெதமுல்ல பிரதேசத்தில் ஏற்பட்ட மண்சரிவு ஐந்திற்கும் மேற்பட்ட உயிர்களைக் காவு கொண்டது.

அதற்கு அடுத்த வருடம் 2016ஆம் ஆண்டு மே மாதம் 18ஆம் திகதி அரநாயக்க பகுதியில் ஏற்பட்ட பாரிய மண்சரிவு, அதே வருடத்தில் கேகாலையில் ஏற்பட்ட மண்சரிவு என்பனவும் பல உயிர்களை பலியெடுத்துச்சென்றன.

தொடர்ந்தும் கடந்த வருடம், இரத்தினபுரி பகுதியில் ஏற்பட்ட மண்சரிவிலும் பலர் இயற்கைக்கு இறையாகியிருந்தனர்.

இவையெல்லாம் நாம் அறிந்தவைகளாக இருந்தாலும் நாம் அறியாத, மண்சரிவு ஏற்படக்கூடிய அபாய கட்டத்தில் இருக்கும் இடங்கள் இன்னும்பல.

அத்துடன், நுவரெலியா மாவட்டத்தில் கொத்மலை பிரதேச செயலகத்திற்குட்பட்ட வேவண்டன் தோட்ட பகுதியில் கடந்த எட்டுவருட காலமாக அப்பகுதியில் இருக்கும் பாரிய கற்பாறை ஒன்று மக்களை அச்சுறுத்தி வருகின்றது.

அப்பகுதியில் இருக்கும் மக்கள் பெரும் அச்சத்தின் மத்தியில் இரவு நேரங்களில் பாடசாலைகளிலும், பகல் நேரங்களில் தமது வீடுகளிலும் என அல்லலுறும் ஒரு வாழ்க்கை வாழ்ந்துவருகின்றனர்.

இப்போது எம் தலைமீது கல் விழுமா அல்லது தூங்கும்போது எம் தலைமீது கல் விழுமா என்று மரணபயத்தின் விளிம்பில் நின்று தமது ஒவ்வொரு வாழ்நாளையும் கடத்தி வருகின்றனர் அப்பகுதி மக்கள்.

மேலும், மலையகத்தின் முக்கிய அரசியல் ஜாம்பவானின் கோட்டை எனவும் இந்த பகுதி அழைக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

தேயிலை மலையில் உழைத்து, களைத்து பின்னர் தேயிலைக்கு அடியிலேயே மடிய வேண்டும் என்பதுதான் மலையகத்தவரின் தலைவிதிபோலும், அதற்கேற்றாற்போல்தான் அரசியல் காரணிகளும் உள்ளன.

மலையகத்தவரின் நலன் காக்க வேண்டிய மலையக தலைமைகள் இவ்வாறு அனர்த்தங்கள் ஏற்படும் காலத்தில் வந்து பார்த்துச்செல்வதும் அறிக்கை விடுவதும் அதன் பின்னர் அடுத்த அனர்த்தம் வரும்போது மீண்டும் அப்பகுதிக்கு விஜயம் செல்வதுமாக இருக்கின்றனரே தவிர இதுவரையிலும் அவ்வாறான அனர்த்தங்களை தவிர்ப்பதற்குரிய காத்திரமான நடவடிக்கைகளையும் எடுத்ததாக தெரியவில்லை.

அத்துடன், மலையக மக்களின் சந்தா பணத்தினை பெற்றுக்கொண்டு செயற்படும் தொழிற்சங்கங்களும் எவ்வாறான அனர்த்த முகாமைத்துவம் தொடர்பான தெளிவூட்டல்களையும் நடவடிக்கைகளையும் எடுத்துள்ளனர் என்றால் அது கேள்விக்குறியே.

அனர்த்தம் ஏற்படுகின்றது என்று தெரிந்தும் அப்பகுதியில் வசிப்பது தவறு, வெளியிடங்களுக்கு குடிபெயரலாம் என்று வாதிடுபவர்களும் உண்டு.

அவ்வாறு செல்லும் பட்சத்தில் முற்றிலுமாக மலையகத்தவரின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுமே என்று யோசிப்பவர்கள் அரிதிலும் அரிது.

இதற்கான தீர்வு என்று பார்த்தால் நிச்சயமாக அது அரசாங்கத்தினதும், மலையகத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் தலைமைகளின் செயற்பாடுகளிலுமே உள்ளது.

அபிவிருத்தியை நோக்கிய அரசாங்கம் என்று கூறிக்கொண்டு புதிய புதிய கட்டடங்கள், வீதிகள் என புனரமைப்புச் செய்தல், நிர்மாணித்தல் என்பதை விட அபிவிருத்தி என்பது அடிமட்ட கிராமங்களில் இருந்து மேற்கொள்ளப்பட்டுவரும் எனில் இவ்வாறான விபத்துக்கள் கூட தவிர்க்கப்படக்கூடியதே.

இந்நிலையில், குறித்த அனர்த்தத்தின் மூலம் பாதிக்கப்பட்ட மக்களுக்காக ஆமை வேகத்தில் நிகழும் அபிவிருத்திகளும் போட்டி அரசியலும் ஒரு மீரியப்பெத்தையை அல்ல, இன்னும் பல மீரியபெத்தைகளை உருவாக்கும் என்ற அச்சம் எழ ஆரம்பித்துவிட்டன.

மேலும், தேயிலைக்காக உழைப்பைக் கொட்டிக்கொடுத்து வாழும் மலையகத்தவர் இறுதியில் தமது உதிரத்தையும் உயிரையும் உரமாக்கும் கொடூரம் இனி நிகழாமல் இருக்க கடவுள் காக்கட்டும்.