தமிழர்களை தொடர்ந்தும் ஏமாற்றும் சிங்கள தலைமைகள்! அந்த வழியில் இன்று மைத்திரி..?

Report Print Nivetha in கட்டுரை

அரசியல் கைதி சச்சிதானந்தம் ஆனந்தசுதாகரன் விவகாரம் மீண்டும் தமிழ் அரசியலை கொதிநிலைப்படுத்தியிருக்கிறது.

யார் இந்த அரசியல் கைதிகள், ஜனாதிபதி தமிழருக்கு கொடுத்த வாக்குறுதி இன்று பொய்யாகிவிட்டதா..? எல்லாவற்றையும் இழந்து அடிமைகளாக வாழும், உண்மை தமிழர்கள்தான் இன்று அரசியல் கைதிகள்.

விடுதலையை எதிர்பார்த்து எதிர்பார்த்தே வருடக்கணக்கில் தங்கள் வாழ்க்கையைச் சிறைச்சாலைகளில் கடத்தி விட்டனர். எஞ்சியுள்ள வாழ்க்கையையேனும் நிம்மதியாகக் கழிக்கலாம் என்ற அவர்களின் எதிர்பார்ப்பும் கானல் நீராகிக் கொண்டேயிருக்கின்றது. உண்மையில் அவர்கள் செய்த குற்றம்தான் என்ன?

அரசியல் கைதிகளின் நிலை கவலைக்கிடமாக மாறியுள்ளது. ஆனால், நல்லாட்சி அரசில் இது தொடர்பான எவ்வித சமிக்ஞையும் புலப்படாதிருப்பது தமிழ் மக்களை விரக்தியடையச் செய்துள்ளது.

நல்லாட்சி என்று கூறி கொண்டு ஆட்சிக்கு வந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தமிழர்களுக்கு கொடுத்த வாக்குறுதிகள் ஏராளம்.

அதை மறந்து விட்டாரா அல்லது மறுத்து விட்டாரா என்று தெரியவில்லை.

இலங்கை ஜனாதிபதி நினைத்தால் தற்போது ஒரு ஆணை பெண்ணாகவும், ஒரு பெண்ணை ஆணாகவும் மாற்ற முடியும். அந்த அளவு அதியுயர் அதிகாரம் அரசியல் யாப்பின் மூலம் வழங்கப்பட்டுள்ளது.

அப்படி இருக்கும் நிலையில் தமிழர்களின் எல்லா விடயத்திலும் ஜனாதிபதி மௌனமாக இருக்கிறார்.

பல போராட்டங்களையும், கோரிக்கைகளையும் மேற்கொண்ட தமிழ் மக்களுக்கு அரசியல் கைதிகள் விடயத்தில் ஜனாதிபதியின் மௌனம் விரக்தியை ஏற்படுத்தியுள்ளது.

அது ஒரு புறம் இருக்க அரசியல் கைதி சச்சிதானந்தம் ஆனந்தசுதாகரன் விடயத்தில் ஜனாதிபதி மைத்திரின் செயல் தமிழ்மக்கள் மத்தியில் மேலும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட அரசியல் கைதி ஆனந்தசுதாகரனின் மனைவி சுகயீனம் காரணமாக கடந்த சில மாதங்களுக்கு முன்னர் மரணமடைந்திருந்தார்.

இதனால், அரசியல் கைதியின் குழந்தைகள் அநாதரவாக்கப்பட்டனர். ஆனந்தசுதாகரன் மனைவியின் இறுதி கிரியைகளை முடித்து விட்டு சிறைக்கு சென்ற போது அவரின் குழந்தைகள் அநாதரவான நிலையில் இருந்த காட்சி அனைவரையும் கண்ணீர் சிந்த வைத்தது.

இந்நிலையில் தந்தையை விடுதலை செய்ய கோரி அந்த பிஞ்சுகள் இரண்டும் ஜனாதிபதிக்கு கடிதம் எழுதினார்கள். ஜனாதிபதியை நேரில் சந்தித்தும் கோரிக்கையும் விடுத்திருந்தனர்.

பிஞ்சுக்களின் கோரிக்கையை செவிமடுத்த ஜனாதிபதி அப்பாவின் விடுதலைக்கு நடவடிக்கை எடுப்பேன் என பிஞ்சுகளுக்கு நம்பிக்கை கொடுத்திருந்தார்.

தமிழ் சிங்கள சித்திரைப் புதுவருடத்தில் அரசியல் கைதி சச்சிதானந்தன் ஆனந்த சுதாகரன் விடுவிக்கப்படுவார் என்று அனைவரினாலும் எதிர்பார்க்கப்பட்டது.

எனினும், இன்றுவரை விடுவிக்கப்பட வில்லை. குழந்தைகளுக்கு பொய்யான வாக்குறுதியை ஜனாதிபதி வழங்கியுள்ளதாக தமிழ் மக்கள் மத்தியில் விமர்சனங்கள் எழ ஆரம்பித்துள்ளது.

இரண்டு பிள்ளைகளின் தந்தையான சச்சிதானந்தம் ஆனந்த சுதாகர், 2008 ஆம் ஆண்டில் கைது செய்யப்பட்டு, 9 வருடங்களாக மகசின் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

இவருக்கு கடந்த வருடம் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. இந்த நிலையில், இவரின் மனைவி யோகராணி அண்மையில் உயிரிழந்தார்.

சிறைச்சாலை அதிகாரிகளின் அனுமதியுடன் மனைவியின் இறுதிக்கிரியைகளில் ஆனந்த சுதாகர் கலந்துகொண்டார். மீண்டும் சிறை நோக்கி புறப்பட்ட ஆனந்த சுதாகரை அவரது பெண் பிள்ளை பற்றிக்கொண்டு பின்னாலேயே சென்றமை பலரையும் துயரத்தில் ஆழ்த்தியிருந்தது.

இந்த நிலையில் அவரின் பிள்ளைகளின் எதிர்காலம் கருதி ஆனந்த சுதாகரனை விடுதலை செய்யுமாறு வலியுறுத்தி பல இடங்களில் கையெழுத்து பெறப்பட்டு வந்தது.

இதேவேளை, அரசியல் தண்டனைக் கைதி சச்சிதானந்தன் ஆனந்த சுதாகருக்கு பொது மன்னிப்பளித்து விடுவிக்கவேண்டும் எனக் கோரி தமிழ் தரப்புகளிடம் இருந்து ஜனாதிபதிக்கு கோரிக்கை மணு அனுப்பப்பட்டது.

தமிழர் பகுதிகள் எங்கும் போராட்டங்களும் இடம்பெற்றது. ஆட்சி மாற்றத்தின் பின்னர் தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்படுவர் என்று தமிழ்த் தலைவர்களால் நம்பிக்கை வெளியிடப்பட்டிருந்தது. ஆனால் நம்பிக்கை, வாக்குகள் வழங்கப்பட்டிருந்த அளவிற்கு விடயங்கள் எதுவும் விரைவாக இடம்பெறவில்லை.

தற்போது அரசியல் கைதி ஆனந்தசுதாகரனின் குழந்தைகளுக்கு தந்தையை விடுவிப்பதாக வாக்குறுதி வழங்கினார். இந்த வாக்குறுதியும் பொய்யாகி விடும் என்பதை போலவே நேற்று கருத்து வெளியிட்டுள்ளார்.

ஆனந்த சுதாகரனை உடனடியாக விடுதலை செய்ய முடியாத நிலை காணப்படுவதாக ஜனாதிபதி வடக்கு முதலவரிடம் கூறியுள்ளார்.

கிளிநொச்சியில் நேற்று நடைபெற்ற சிறுவர்களை பாதுகாப்போம் என்ற தேசிய செயற்திட்ட மாநாட்டில் ஜனாதிபதி பங்கேற்றிருந்தார். இந்த நிகழ்வில் கலந்துகொண்ட வடக்கு முதல்வர் ஆனந்த சுதாகரனின் விடுதலை தொடர்பில் வலியுறுத்தியுள்ளார்.

ஆனந்த சுதாகரனைப் போல் பலர் சிறையில் உள்ளனர். இவரை விடுவித்தால் அவர்களும் தம்மை விடுவிக்குமாறு கோருவார்கள். இதனால் உடனடியாக இதற்கு இடமளிக்கமுடியாத நிலை உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். இதனால், அரசியல் கைதியின் குழந்தைக்கு கொடுத்த வாக்குறுதியும் காற்றில் பரந்து விட்டதாக தமிழ் மக்கள் கூறி வருகின்றனர்.

அன்று தனி ஈழம் கோரி போராடி இருக்கலாம்.. இன்று தனது தாயையும், பிள்ளைகளையும், உறவுகளையும் பார்த்தால் மட்டுமே போதும் என நினைக்கும் தமிழ் அரசியல் கைதிகளுக்கு ஜனாதிபதி என்ன பதில் கொடுக்க போகிறார்.

அநாதரவாக தந்தையின் வருகைக்காக காத்திருக்கும் குழந்தைகளுக்கு ஜனாதிபதியின் பதில் என்ன..?