சீனா – மஹிந்த கடன் பொறி! ராஜபக்ஷ ரெஜிமென்டுக்கு ஏற்பட்டுள்ள பாரிய நெருக்கடி

Report Print Hariharan in கட்டுரை

சீனாவிடம் இருந்து மஹிந்த ராஜபக் ஷ பெற்றுக் கொண்டதாகக் கூறப்படும் நிதி, என்பது மிகவும் மோசமான அரசியல் நடத்தையாகவே பார்க்கப்படும். இதற்கு எதிராக, பொலிஸில் முறைப்பாடுகள் செய்யப்பட்ட விசாரணைகளும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இந்த விவகாரம் அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் முக்கியமானதொரு பிரச்சினையாக மாற்றப்படும் வாய்ப்புகள் உள்ளன.

இதனால் தான், மஹிந்த ராஜபக் ஷ தரப்பு இந்த விவகாரத்தில் இருந்து தப்பிக்க முடியாமல் திண்டாடுகிறது

அம்பாந்தோட்டை துறைமுகத்தை சீனா எவ்வாறு பெற்றுக் கொண்டது? என்பதை விவரிக்கும் வகையில், நியூயோர்க் டைம்ஸ் கடந்த மாத இறுதி வாரத்தில் வெளியிட்ட கட்டுரை தான் அரசியலில் இப்போது பெரும் புயலைக் கிளப்பியிருக்கிறது.

இந்தப் புயல், உள்நாட்டு அரசியலையும் கடந்து சர்வதேச அரசியலிலும் கூட தாக்கம் செலுத்துகிறது.

ஏனென்றால், இந்தக் கட்டுரையின் உள்ளடக்கம் உள்நாட்டு அரசியலில் மஹிந்த ராஜபக் ஷவையும், சர்வதேச அரசியலில் சீனாவையும் குறிவைப்பதாக – அம்பலப்படுத்துவதாக உள்ளது.

சீனா எவ்வாறு கடன்பொறியின் மூலம் அம்பாந்தோட்டை துறைமுகத்தை தன்வசப்படுத்தியது என்பது இந்தக் கட்டுரையின் சர்வதேச முகம்.

அதேவேளை, மஹிந்த ராஜபக் ஷவை உள்நாட்டு அரசியலில் பலப்படுத்துவதற்காக, அவரை வெற்றிபெற வைப்பதற்காக சீனாவினால் என்னென்ன உதவிகள் வழங்கப்பட்டன என்ற விவகாரம் இதன் உள்நாட்டு முகம்.

2015ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலின் போது, 7.6 மில்லியன் டொலர் நிதியை மஹிந்த ராஜபக் ஷவுக்கு, சீன நிறுவனம் வழங்கியது என்ற மிகப்பெரிய குண்டை நியூயோர்க் டைம்ஸ் போட்டது. இந்த நிதி பரிமாறப்பட்டது தொடர்பான சில விபரங்களும் வெளியிடப்பட்டிருந்தன.

எனினும் உடனடியாகவே மஹிந்த ராஜபக் ஷ தரப்பு இந்தக் குற்றச்சாட்டை மறுத்தது. தாம் அவ்வாறு எந்த நிதியையும் பெற்றுக் கொள்ளவில்லை என்றும் அவ்வாறு பெற்றதை நிரூபித்தால், தானே தனது கழுத்தை அறுத்துக் கொண்டு உயிர் துறக்கத் தயார் என்றும் கூறியிருந்தார் மஹிந்த ராஜபக் ஷ.

இது திட்டமிட்ட அரசியல் நோக்கத்துடன் செய்யப்படும் பிரசாரம் என்றும் நிரூபிக்க அவர்கள் முற்படுகின்றனர்.

அதேவேளை, நியூயோர்க் டைம்ஸுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறிய மஹிந்த தரப்பு தற்போது அந்த முயற்சியில் இருந்து பின்வாங்கத் தொடங்கியிருக்கிறது.

அதேவேளை, இந்தக் கட்டுரைக்கான உள்ளடக்கங்களை வழங்கி உதவிய இரண்டு ஊடகவியலாளர்களை கூட்டு எதிரணி பாராளுமன்ற உறுப்பினர்கள் அச்சுறுத்தும் வகையில் நடந்து கொண்டனர் என்ற இன்னொரு குற்றச்சாட்டு நியூயோர்க் டைம்ஸினால் கூறப்பட்டுள்ளது.

அத்துடன், ஊடகவியலாளர்களை அச்சுறுத்துவதை விட்டு விட்டு தேவைப்பட்டால், எம்முடன் தொடர்பு கொள்ளுங்கள், என்று நியூயோர்க் டைம்ஸ் ஆசிரியர் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறார். இவையெல்லாம் மஹிந்த தரப்புக்கு கடுமையான எரிச்சலை ஏற்படுத்தியிருக்கிறது. சீனாவிடம் இருந்து மஹிந்த ராஜபக் ஷ பெற்றுக் கொண்டதாகக் கூறப்படும் நிதி, என்பது மிகவும் மோசமான அரசியல் நடத்தையாகவே பார்க்கப்படும். இதற்கு எதிராக, பொலிஸில் முறைப்பாடுகள் செய்யப்பட்ட விசாரணைகளும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இந்த விவகாரம் அடுத்த ஜனாதிபதி தேர்தலில் முக்கியமானதொரு பிரச்சினையாக மாற்றப்படும் வாய்ப்புகள் உள்ளன. இதனால் தான், மஹிந்த ராஜபக் ஷ தரப்பு இந்த விவகாரத்தில் இருந்து தப்பிக்க முடியாமல் திண்டாடுகிறது.

உள்நாட்டு அரசியலில், நியூயோர்க் டைம்ஸ் செய்தி, ஒரு பெரும் கொந்தளிப்பையே உருவாக்கி விட்டிருக்கிறது,

அதேபோன்று தான், சர்வதேச அரசியலிலும், நெருப்புக்குள் கையை விட்டவர் அலறிக் கொண்டு ஓடித் திரிவது போன்று சீனாவும் ஓடுகிறது.

சீனா கடன் பொறியின் மூலம், மூன்றாம் உலக நாடுகளை தனது பாதுகாப்பு நலன்களுக்காக பலிக்கடா ஆக்குகிறது என்ற விமர்சனம் அண்மைக்காலங்களாகவே வலுப்பெற்று வருகிறது.

ஆபிரிக்க நாடுகள் பல சீனாவின் கடன்பொறியில் சிக்கியுள்ளன. இதற்கு மாற்றீடாக சில கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இடங்களையும் அந்த நாடுகள் இழந்திருக்கின்றன.

அண்மைக்காலமாக, சர்வதேச ஊடகங்கள் அம்பாந்தோட்டை துறைமுகத்தை கடன் பொறியின் மூலம், சீனா அபகரித்துக் கொண்டது என்ற குற்றச்சாட்டை சுமத்தி வருகின்றன. இது சீனாவுக்கு கடும் எரிச்சலை ஏற்படுத்தியிருக்கிறது.

அண்மையில் பிலிப்பைன்ஸுக்கு சீனா ஒரு திட்டத்துக்காக பெருமளவு நிதியைக் கொடுக்க முனைந்த போது, அது இலங்கையைப் போன்று கடன் பொறியில் தள்ளி விடும் என்று அந்த நாட்டு எதிர்க்கட்சிகள் குரல் எழுப்பின. ஊடகங்களும் அதேபோன்று தான், குற்றம்சாட்டின.

இதுபோன்று பல நாடுகளுக்கு சீனா நிதி உதவித்திட்டங்களை முன்னெடுக்கும் போது கடன் பொறிக் குற்றச்சாட்டுக்கு உள்ளாகி வருகிறது.

நியூயோர்க் டைம்ஸின் குற்றச்சாட்டு சீனாவைப் பெரிதும் பாதித்திருக்கிறது. அதனால் தான், கொழும்பிலும், பீஜிங்கிலும் உள்ள சீன அதிகாரிகள் மாறி மாறி இதனை நிராகரித்து வருகிறார்கள்.

பொதுவாகவே சீனா இதுபோன்ற குற்றச்சாட்டுகளை பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை. ஆனால், சீன வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர்கள், இரண்டு முறை வலுவான மறுப்பை வெளியிட்டார்கள்.

கொழும்பில் உள்ள சீனத் தூதரகமும் ஒரு செய்தியாளர் சந்திப்பை நடத்தி மறுப்பை வெளியிட்டது. ஆனாலும் இந்தக் குற்றச்சாட்டுகள் மாத்திரம் ஓயவில்லை.

பொதுவாகவே, சீன வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர்கள், அதிகாரிகளிடம், ஒரு கேள்வியைக் கேட்டால், அந்த ஊடகவியலாளர்களையே குழம்ப வைப்பார்கள். நேரடியாகப் பதிலளிக்காமல் சுற்றி வளைத்து பதில் கூறி, கேள்வி கேட்டவரையே என்ன கேள்வி எழுப்பினேன் என்று தெரியாத நிலைக்கு உள்ளாக்குவார்கள்.

நிலைமையை தமக்குச் சாதகமாக வைத்திருப்பதற்காக கையாளப்படும் உத்தி இது.

கொழும்பில் உள்ள சீனத் தூதரகம், செய்தியாளர் சந்திப்புக்கு குறிப்பிட்ட சில ஊடகவியலாளர்களை மாத்திரம் தெரிவு செய்து அழைப்பு விடுத்தமைக்கும் அது தான் காரணம்.

இந்த விடயத்திலும் அவ்வாறு தான், எங்கெங்கோ சென்று பதில்கள் அளிக்கப்படுகின்றன. இலகுவில் புரிந்து கொள்ள முடியாதபடி, தத்துவார்த்தமான விளக்கங்களும் கூறப்படுகின்றன.

எதுவாயினும், ஒற்றை வரியில் கூறக்கூடிய பதில், கடன் பொறி குற்றச்சாட்டை சீனா ஏற்கத் தயாரில்லை. அதனை முற்றாகவே மறுக்கிறது.

இருதரப்பு நலன்களை உள்ளடக்கிய திட்டங்களாகவே அதனை அடையாளப்படுத்த முனைகிறது சீனா.

நியூயோர்க் டைம்ஸ் செய்திக்குப் பின்னர் சீனாவுடனான உறவுகளில் பாதிப்பு ஏற்படவில்லையா என்று கடந்தவாரம் நடந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் ஒரு கேள்வி அமைச்சர் ராஜித சேனாரத்னவிடம் கேட்கப்பட்டது.

அதற்கு அவர் அளித்த பதிலும், சீன வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் லூ காங் கூறியுள்ள விடயமும் நேர்மாறானவையாக இருக்கின்றன.

“நியூயோர்க் டைம்ஸ் இலஞ்சக் குற்றச்சாட்டைச் சுமத்தியிருப்பது சீன நிறுவனம் ஒன்றின் மீதே தவிர, சீன அரசாங்கத்தின் மீது அல்ல. இரண்டு நாடுகளுக்கும் இடையிலான உறவுகள் வலுவாகவே இருக்கின்றன” என்று அமைச்சர் ராஜித சேனாரத்ன கூறியிருந்தார்.

ஆனால், பீஜிங்கில் நடந்த செய்தியாளர் மாநாட்டில் உரையாற்றிய சீன வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் லூ காங், “ வணிக கொள்கைகள் மற்றும் சமத்துவ அடிப்படையில், அம்பாந்தோட்டை துறைமுக பணிகளில் ஈடுபடுமாறு, சீன நிறுவனங்களுக்கு சீன அரசாங்கம் வேண்டுகோள் விடுத்தது. இலங்கையின் தேவைக்கு ஏற்ப சீன நிதி நிறுவனங்கள் நிதி வழங்கின. என்று கூறியிருக்கிறார்.

அதாவது, சீன அரசின் உத்தரவின் பேரில் தான், சீன நிறுவனங்கள், அம்பாந்தோட்டை துறைமுகத் திட்டத்தில் ஈடுபட்டுள்ளன என்று அவர் உறுதி செய்திருக்கிறார்.

இந்த இடத்தில், ஒரு முக்கியமான விடயம், இலங்கையில் முதலீடுகளைச் செய்துள்ள அத்தனை சீன நிறுவனங்களுமே, சீன அரசுக்குச் சொந்தமானவை தான்.

சீன அரசாங்கம் தான் இந்த நிறுவனங்களின் ஊடாக, திட்டங்களை முன்னெடுக்கிறது. இது ஒன்றும் இரகசியமான விடயமல்ல.

சீன அரசுத்துறை நிறுவனங்கள், மேற்கொள்ளும் திட்டங்கள் சீன அரசின் நேரடியான திட்டங்களாகத் தான் அடையாளப்படுத்தப்படும். ஆனால், அமைச்சர் ராஜித சேனாரத்ன, சீன நிறுவனம் மீது தான் இலஞ்சக் குற்றச்சாட்டு கூறப்பட்டுள்ளதே தவிர, சீன அரசாங்கத்தின் மீது அல்ல என்று கூறியிருக்கிறார்.

சீன அரசுத் துறை நிறுவனம் ஒன்றினால் முன்னெடுக்கப்பட்ட இந்த நடவடிக்கைக்கு குறித்த நிறுவனம் மாத்திரமன்றி சீன அரசாங்கமும் பொறுப்புக்கூறக் கடமைப்பட்டது தான்.

ஆனால், சீன நிறுவனத்திடம் மஹிந்த தேர்தல் நிதி வாங்கினார் என்பதை பூதாகாரப்படுத்த விரும்புகின்ற அரசாங்கத் தரப்பும் கூட, அதனை சீன அரசு தான் வழங்கியது என்ற கோணத்தில் குற்றச்சாட்டுகளைச் சுமத்த தயாராக இல்லை.

ஏனென்றால், சீனாவின் ஒத்துழைப்பும் உதவியும் இப்போதைய அரசாங்கத்துக்கும் தேவைப்படுகிறது.

சீனாவைப் பகைத்துக் கொண்டால், பொருளாதார ரீதியாக நெருக்கடிகளைச் சந்திக்க வேண்டியிருக்கும் என்ற அச்சம் தற்போதைய அரசாங்கத்துக்கும் இருக்கிறது.

இன்னொரு பக்கத்தில், அம்பாந்தோட்டை துறைமுகத் திட்டத்தை முன்னெடுக்குமாறு தாமே, சீன நிறுவனங்களிடம் கூறியதாக சீன அரசாங்கம் கூறியிருக்கிறது. எனினும், தாம் கடன் பொறியை உருவாக்கவில்லை என்றும் மறுக்கிறது.

கடன் பொறி என்ற குற்றச்சாட்டு தனக்கெதிராக சர்வதேச அளவில் உருவாகி வருவதை சீனா விரும்பவில்லை. அந்தக் குற்றச்சாட்டுகளை நியூயோர்க் டைம்ஸின் அபாண்டமான பொய்க் குற்றச்சாட்டு என்றும், அரசியல் சதி என்றும் நிரூபிக்க சீனாவும், ராஜபக் ஷ தரப்பும் முனைகின்றன.

ஆனாலும், இந்த விடயத்தில் அவ்வளவு இலகுவாக யாரையும் நம்ப வைக்க முடியாது என்பதே உண்மை.

Latest Offers