உலகை அழிவிற்கு கொண்டு செல்லும் ஆயுதங்கள்! பேராபத்தாக உருவாகுமா?

Report Print Sujitha Sri in கட்டுரை

மனிதர்களாக பிறந்த நாம் இந்த உலகத்திற்காக, வேண்டாம் நாம் வாழும் மண்ணிற்காக என்ன செய்தோம் என யோசித்திருக்கின்றோமா? என்ற கேள்வியை நீங்கள் உங்களிடமே கேட்டு பாருங்கள்.

நாம் எதையும் செய்ததே இல்லையே. பின்பு ஏன் நாம் அதனை யோசிக்க வேண்டும் என்று குரலொன்று உள்ளிருந்து சொல்லும்.

ஆம். மனிதர்களாக பிறந்து விட்டோம். முதலில் பட்டத்தை பெறுவதற்காக ஓடுகிறோம். பின்பு பணத்தை பெறுவதற்காக ஓடுகிறோம். இன்னும் எத்தனை எத்தனையோ காரணங்களை கைவசம் வைத்துக் கொண்டு வாழ்க்கை முழுவதும் ஓடிக் கொண்டே இருக்கிறோம்.

இந்த நாகரீக யுகத்தில் நம்மைப் பற்றி சிந்திக்கவே நமக்கு நேரமில்லாத போது எவ்வாறு உலகத்தை பற்றியும் நம்மை வாழ வைக்கும் மண்ணைப் பற்றியும் சிந்திப்பது.

நம்மை பற்றி நாம் சிந்திப்போமானால் துரித உணவுகள், கொடூர நோய்கள், அதனை தடுப்பதற்காக எடுத்துக் கொள்ளும் விதவிதமான மருந்துகள் இவற்றுக்கு எல்லாம் இடமே இல்லாது போயிருக்குமே.

சரி இது ஒருபுறம் இருக்க உலகத்தின் அழிவு பற்றிய கருத்துக்கள் பரந்தளவில் காணப்படுகின்றன. பல விஞ்ஞானிகளும், ஆராய்ச்சியாளர்களும் இது தொடர்பில் தொடர்ந்தும் கருத்து வெளியிட்டு வருகின்றனர்.

ஏன் சாதாரண மனிதனுக்கு கூட தெரியும்! இந்த உலகில் தற்போது பூதாகரமாகியுள்ள பல பிரச்சினைகள் ஆய்வுகளை உறுதிப்படும் வகையில் தானே அமைகின்றன. இதனை நாம் மறுக்க முடியாது.

ஆனால் இந்த பிரச்சனைகள் தோன்றவும், அது ஆல விருட்சம் போல கிளை பரப்பி பெரிதாகவும் மனிதர்களே காரணம் என்பதை யாராலும் இல்லையென்று சொல்ல முடியாது.

மனிதனின் பல்வேறு செயற்பாடுகள் உலகை அழிவுப் பாதைக்கு அழைத்துச் செல்லும் ஆயுதங்களாய் மாறியுள்ள நிலையில் நான் உங்களிடம் ஓர் கேள்வியை கேட்க விரும்புகிறேன்.

யாருக்காவது ஜூலை 11 என்ன விடயத்தினை நினைவுப்படுத்துகிறது என்பது தெரியுமா...? ஆம், நம்மில் பலருக்கும் இது தெரியாது. தெரிந்தவர்களும் அன்று உலக மக்கள் தொகை நாள் (World Population Day) அவ்வளவு தானே என்பார்கள்.

இதனை ஏன் கொண்டாடுகின்றோம் என கேட்டால் விண்ணை பார்க்க வேண்டியது தான். உலக மக்கள் தொகை நாள் வருடம் தோறும் ஜூலை 11ஆம் திகதி கொண்டாடப்படுகிறது.

மக்கள் தொகை குறித்த விழிப்புணர்வை உலகளாவிய ரீதியில் மக்களுக்கு எடுத்துச் செல்லும் ஒரு முயற்சியாக ஐக்கிய நாடுகள் வளர்ச்சித் திட்டத்தினால் உலக மக்கள் தொகை நாள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

என்ன! விழிப்புணர்வை ஏற்படுத்தவா? எதற்காக விழிப்புணர்வு? இவ்வாறு அடுக்கடுக்காக கேள்விகள் மனதிலிருந்து அம்பாய் பாயும்.

உலக மக்கள் தொகை வளர்ச்சியான அபரிமிதமான வகையில் வளர்ச்சியடைந்து வருவதாக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். அந்த வகையில் உலக மக்கள் தொகை வளர்ச்சியானது கி.பி 1650ஆம் ஆண்டிற்குப் பின்னர்தான் விரைவாக வளரத் தொடங்கியுள்ளது.

கி.பி 1840இல் 100 கோடியாகவும், 1927 இல் 200 கோடியாகவும் உலக மக்கள் தொகையானது வளர்ச்சியடைந்திருந்தது. கி.பி 1960இல் 300 கோடி மக்கள் தொகையும், 1999ஆம் ஆண்டில் 600 கோடி மக்கள் தொகையும் எட்டப்பட்டிருந்ததாக குடித்தொகை மதிப்பீட்டுப் பணியகத்தின் அறிக்கை தெரிவிக்கிறது.

மக்கள் தொகை வளர்ச்சி வீதமானது ஆண்டுதோறும் 1.31 வீதத்தால் அதிகரித்து வருகின்றது. ஒவ்வொரு செக்கனுக்கும் 2.582 வீதமாகவும், ஒரு நாளுக்கு 223,098 தொகையாகவும், ஒரு வருடத்திற்கு 81,430,910 தொகையாகவும் அதிகரித்து செல்கின்றது.

இதேவேளை எதிர்காலத்தில் அதாவது 2024இல் 800 கோடியாகவும், 2100இல் 1120 கோடியாகவும் சனத்தொகை உயரலாம் என மதிப்பிடப்பட்டுள்ளது.

சனத்தொகை அதிகரிப்பை எதிர்கொள்ளும் நாடுகளாக இந்தியா, சீனா, நைஜீரியா, பாகிஸ்தான், கொங்கோ, எத்தியோப்பியா, வங்காள தேசம் போன்ற நாடுகள் இனங்காணப்பட்டுள்ளதாக ஐ.நா அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மக்கள் தொகை பெருக்கத்தினால் என்னனென்ன விளைவுகள் ஏற்படும் என்பதை அறிய வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது மனித இனம்.

மக்கள் தொகை பெருக்கத்தினால் உணவு பற்றாக்குறை, நீர் மற்றும் சூழல் மாசடைதல், சமூக சீர்கேடுகள், சுகாதார பிரச்சினைகள், வேலையின்மை, போக்குவரத்து நெரிசல், நிலப்பற்றாக்குறை, நிலைத்து நிற்கும் அபிவிருத்தி தொடர்பான பிரச்சினைகள் போன்றவை ஏற்படக்கூடிய முக்கிய பிரச்சினைகளாக இனங்காணப்பட்டுள்ளன.

மருத்துவ தொழில்நுட்ப வளர்ச்சியினால் மனித இறப்பு விகிதம் குறைவதும், பிறப்பு விகிதத்தில் கட்டுப்பாடு இல்லாததுமே மக்கள் பெருக்கத்திற்கு காரணங்களாகப் பார்க்கப்படுகின்றன.

தற்போதே ஓரளவு சனத்தொகை அதிகரிப்பிற்கான விளைவுகள் எட்டிப்பார்க்க ஆரம்பித்துள்ளன. வறுமை, வேலையின்மை, அடிப்படை சுகாதார வசதியின்மை, சுற்றுச் சூழல் சீர்கேடு, தண்ணீர் பஞ்சம் போன்றவை மக்கள் தொகைப் பெருக்கத்தினால் விளைந்தவையே.

இத்துடன் உலகம் விரைவாக வெப்பமடைந்து வருவதால் பனிப்பாறைகள் உருகி, கடல் மட்டம் உயர்வதாக சொல்லப்படுகிறது. இந்த நிலை தொடர்ந்தால் பூமிக்கு பெரும் ஆபத்து காத்திருக்கிறது.

மேலும், தண்ணீர் தட்டுப்பாட்டினால் விளையப்போகும் துயரத்தை இங்கே குறிப்பிட்டு சொல்ல வேண்டும். இவ்வாறான சந்தர்ப்பத்தில் மூன்றாம் உலக மகா யுத்தம் வருமானால் அது நீருக்கான போட்டியினாலுமாக இருக்கலாம் என பல சமூகவியலாளர்கள் தெரிவிக்கின்றனர்.

அனைத்து உயிரினங்களின் வாழ்வாதாரத்துக்கும் அடிப்படையானது தண்ணீர். மக்கள்தொகை அதிகரிக்க அதிகரிக்க காடுகள் அழிக்கப்படுவதால், நீர் வெகுவாகக் குறைந்து வருகிறது. நிலத்தடி நீர்மட்டமும் மனிதனுக்கு எட்டாத தூரத்திற்கு சென்று விட்டது.

இதேநேரம் ஒரு நாட்டில் எவ்வளவுதான் பொருளாதார வளம் இருந்தாலும், நாட்டின் மக்கள் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்தத் தவறினால், முன்னேற்றம் காண முடியாது.

எனினும் சனத்தொகை வளர்ச்சியென்பது முக்கியம் தான். இருப்பினும் அதனால் நேரும் விளைவுகளையும் நாம் அறிந்து வைத்துக் கொள்ள வேண்டும். சனத்தொகையை பெருக்கி எதிர்கால சந்ததியை கல்வி அறிவற்றதொரு கூட்டமாக ஆக்குவோமேயானால் அதுவே நமக்கு பேராபத்தாக முடிந்துவிடும்.

ஆபத்து வரும் முன்னே எச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளவதே சிறந்தது. அந்த வகையில் இது தொடர்பில் அனைவரும் சிந்திக்க வேண்டும். இந்த ஆபத்தை தடுக்க தனிநபரால் மாத்திரம் முடியாது.

நம் எதிர்கால சந்ததி மற்றும் உலகம், நம்மை வாழ வைக்கும் மண் என்பவற்றை கருத்தில் கொண்டு உலகிலுள்ள அனைவரும் கைகோர்த்து செயற்படுவோமாக இருந்தால் பிரச்சினை பூதாகரமாவதை தடுக்க முடியும் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை.