இலங்கையின் பொருளாதாரத்தை ஆப்பு வைக்கும் சேது சமுத்திரத் திட்டம்! மீண்டும் ஆரம்பிக்க நடவடிக்கை

Report Print M.M.Nilamdeen M.M.Nilamdeen in கட்டுரை

இலங்கையின் பொருளாதாரத்தை ஆப்பு வைக்கும் சேது சமுத்திரத் திட்டத்தை மீண்டும் ஆரம்பிக்குமாறு கோரிக்கை விடுத்து தி.மு.க. எம்பியும் தி.மு.க. பேச்சாளருமான டி.கே.எஸ் இளங்கோவன் டெல்லி உச்ச நீதி மன்றில் வழக்குத் தாக்கல் செய்துள்ளார்.

'2020 இல் ஆசியாவின் இராணுவ மற்றும் பொருளாதார வல்லரசாக திகழ வேண்டும் என்ற இந்தியாவின் அகண்ட திட்டத்துக்கு தென் பகுதி கடலை ஆழமாக்கும் சேது கால்வாய்த் திட்டம் பெரிதும் உதவப் போகின்றது 2,427 கோடி டொலர் கொண்ட திட்டமாகும்.

சேது சமுத்திரக் கால்வாய் திட்டம் என்பது இன்று, நேற்று முன்மொழியப்பட்ட திட்டமல்ல. 1860ஆம் ஆண்டு வெள்ளையர்களினால் முன்வைக்கப்பட்ட இத்திட்டம், இந்தியா சுதந்திரம் அடைந்த காலம் தொட்டு தேர்தல் காலங்களில் ஐந்து வருடங்களுக்கு ஒரு முறை உயிர் பெறுவதும் பின்னர் கிடப்பில் போடுவதுமாக இருந்தது.

ஆனால் இத்திட்டம் சூடுபிடித்து, மதுரையில் மத்திய அரசின் அனுசரனையுடன் அப்போதைய மத்திய அமைச்சர் டீ.ஆர்.பாலு தலைமையில் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது.

இந்த சேது சமுத்திர கால்வாய்த் திட்டம் ஒன்றும் பெரிய திட்டமல்ல. இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையில் உள்ள கடல் பகுதியை ஆழமாக்கி பெரிய கால்வாய் ஒன்றை உருவாக்கி பெரிய கப்பல்கள் போய் வருவதற்கான வழி செய்வதே இத்திட்டமாகும்.

இக்கடல் பகுதி இலங்கைக்கு வெளியே இந்தியக் கடல் எல்லைக்கு உள்ளே உள்ளது என்றும் அது இந்தியக் கடல் எல்லையின் பகுதி என்றும் சொல்லப்படுகின்றது.

இந்தியா 2020 ஆண்டை நோக்கி அதாவது உலக வல்லரசு தரத்துக்குத் தன்னைத் தயார்படுத்தி வருகின்றது அல்லது நகர்ந்து செல்கின்றது.

அதற்கு முன்னோடியாக இந்தியாவின் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்ப வேண்டிய தேவையும் இந்தியாவுக்கு உள்ளது.

இதுவானது சீனாவுடனான பொருளாதாரப் போட்டி.

இந்திய பொருளாதார நிபுணர்களின் பரிந்துரைக்கு இணங்க சேது கால்வாய்த்திட்டம் உயிர் பெறத்தான் போகின்றது. இந்திய மத்திய அரசும் கடந்த காலங்களில் இத்திட்டத்தில் அதிக அக்கறை கொள்ளவில்லை. காரணம் துண்டு விழும் தொகை அதிகரிப்புத்தான்.

ஆனால் கடந்த காலத்தில் கண்டு கொள்ளப்படாத இத்திட்டத்தை தீவிரமாக இந்தியா செயல்படுத்த முனைவதன் நோக்கமே உலகச்சண்டியன் அமெரிக்காதான்.

மத்திய கிழக்கு நாடுகளிலிருந்து ஆசிய நாடுகளுக்குச் செல்லும் எரிபொருள் மற்றும் ஏனைய சரக்குகளை ஏற்றிச் செல்லும் கப்பல்கள் இந்த சேது கால்வாய் வழியாகத்தான் செல்ல வேண்டும்.

இதனால் இந்து சமுத்திர பகுதியை தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க வேண்டும் அல்லது குறைந்தது இப்பகுதியில் ஏதாவது ஒரு பிடியையாவது அமெரிக்கா வைத்திருக்க விரும்புகிறது.

எங்கேயோ இருக்கும் அமெரிக்கா இப்படி ஆசைப்படும்போது இந்து சமுத்திர வல்லரசுகளில் ஒன்றான இந்தியா இதற்கு ஆசைப்படாதா?

இந்தியாவுக்கு அப்படி ஒரு ஆசை வந்தததன் விளைவாகத்தான் சேது சமுத்திரக் கால்வாய்த்திட்டத்தை இந்தியா கையில் எடுத்துள்ளது. இதன் மூலம் இந்தியா பெருத்த பல நன்மைகளை அடைய போகின்றது.

இராணுவ ரீதியாக அமெரிக்காவுக்கு மறைமுக அழுத்தம் ஒன்றையும் இதன் மூலம் விடுவிக்க முடியும்.இந்து சமுத்திர கடல் எல்லையை தனது பூரண கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கவும்,பொருளாதார ரீதியாகப் பெரும் முன்னேற்றம் அடையவும் மற்றும் ஆசிய கண்டத்தில் நிலையான ஆசியச் சண்டியன் என்ற மகுடத்தை சூட்டிக் கொள்ளவும் சேது சமுத்திர திட்டம் இந்தியாவுக்கு எதிர் காலத்தில் உதவும்.

அமெரிக்கா உள்ளே நுழைந்தது

ஆனால் கடந்த காலங்களில் இந்தியா வேறுபக்கமாகத் தனது கவனத்தை திருப்பியிருந்த போது அமெரிக்கா திட்டமிட்டு கொஞ்சம் கொஞ்சமாகத் தனது காய் நகர்த்தலை இந்து சமுத்திர பிராந்தியத்தில் நகர்த்தி வந்தது.

இலங்கையின் சமாதான ஒப்பந்தத்தின் மீது மறைமுகமான ஒரு கவனம், ஆப்கானிஸ்தானுக்குள் பகிரங்கமாக அத்துமீறல் பாகிஸ்தானுடன் கைகோர்த்து தேன் நிலவு இப்படியாக எல்லாத் திசைகளிலும் அமெரிக்கா கொஞ்சம் கொஞ்சமாக உள்ளே நுழைந்தது.

இந்தியாவால் இதை வேடிக்கை பார்க்க முடிந்ததே தவிர இவற்றை தடுக்க முடியவில்லை.பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் இரண்டும் இந்தியாவுக்கு வடக்கே இருக்கின்றன. அங்கே அமெரிக்க என்ன வேண்டுமானாலும் செய்யட்டும்.

குறைந்த பட்சம் தெற்கே இருக்கும் கடல் பிராந்தியத்தையாவது இந்தியா தனது கையில் வைத்திருக்கலாம்.அப்படி இருந்தால் அமெரிக்காவுக்கு வடக்கே என்னதான் செல்வாக்கு இருந்தாலும் தெற்கே இந்தியாவின் தயவு இன்றி அமெரிக்காவினால் எதுவும் செய்ய முடியாது என்ற நிலை ஏற்படும்.

கிழக்கேயும் மேற்கேயும் உள்ள கடல் பகுதி ஆழமானது. இப்பகுதி இந்தியாவின் பெரிய கப்பல் போய்வரக்கூடிய பகுதி. ஆனால் தெற்கேதான் சிக்கல். அங்கே இலங்கையும் அமைந்துள்ளது.

அத்துடன் அப்பகுதி ஆழம் குறைந்த பகுதியாக இருப்பதால் பெரிய கப்பல்கள் போய்வர முடியாத நிலை. இந்தியாவின் மேற்கு பகுதியில் உள்ள இந்தியாவின் கடற்படையினர் இங்கே வரமுடியாது.

இந்தியாவின் மேற்குப்பகுதியில் உள்ள கப்பல் ஒன்றை இந்தியாவின் கிழக்குப் பகுதிக்குள் கொண்டு செல்ல வேண்டுமானால் இந்தியாவின் எல்லையை ஒட்டிய கடல் பிராந்தியத்தால் கொண்டு செல்ல முடியாது. இலங்கையைச் சுற்றியே கொண்டு செல்ல வேண்டிய நிலை.

அப்படிச் செய்யும்போது இலங்கையின் கடற்பிராந்தியத்திற்குள் அமெரிக்கா மிகுந்த செல்வாக்குடன் இருந்தால் இந்தியாவுக்கு அதுவொரு தடையாகத்தான் இருக்கும்.

இந்த உள்நோக்கத்தை வைத்த அமெரிக்கா 2004 ஆம் ஆண்டு சுனாமி நிவாரணக்குழு என்ற போர்வையில் அமெரிக்க இராணுவ அணியொன்று இலங்கைக்குள் புகுந்தது. இதுவும் ஒரு மறைமுகமான அத்துமீறல்தான்.

இந்நிலையில்தான் இந்தியா உசாரடைந்தது. இந்தியாவின் தெற்குக் கடல் பகுதி ஆழமாக இருக்க வேண்டும் இதுதான் இந்தியாவின் இராணுவ அபிலாஷை. இதன் மறுவடிவம்தான் சேது சமுத்திரக் கால்வாய்த்திட்டம்.

எனவே இது இராணுவம் சம்மந்தப்பட்ட திட்டமுமாகும் என்று வர்ணிப்பதே சரியானது.கூடவே இந்தியாவின் பொருளாதார மேம்பாடும் இதில் அடங்கியுள்ளது.

இந்தியாவின் பொருளாதார விவகாரங்களுக்கான பாராளுமன்றக்குழு சேது சமுத்திரத் திட்டத்திற்காக 550 பில்லியன் அமெரிக்கா டொலரை ஒதுக்கியுள்ளது.

இவ்வளவு பெரிய தொகையை இந்தியா இதில் கொண்டு முடக்குமானால் பாதியாவது இந்தியா இத்திட்டத்திலிருந்து மீளப்பெறாமலா போகும்?

இந்தியவின் ராமேஸ்வரம் பாம்பனுக்கும், தலைமன்னாருக்கும் இடையில் உள்ள கடல் எல்லைகள் மிகவும் ஆழம் குறைந்த பகுதியாகும். சில இடங்களில் 3 மீற்றர் ஆழமும் காணப்படுகின்றது.

இதன் காரணமாக இந்தியாவை அண்மித்த அரபிக் கடல் பகுதியில் இருந்து இந்தியாவின் கிழக்குத் துறைமுகங்களுக்குச் செல்லும் கப்பல்கள் அனைத்துமே இலங்கையை ஒரு சுற்றுச் சுற்றியே செல்கின்றன.

சேது சமுத்திரத் திட்டம் இதில் முழுமையான மாற்றத்தை கொண்டுவரப் போகின்றது. 167கி.மீ. நீளத்திற்கும் 300 மீ. அகலத்திற்கும் 14.5 கி.மீ. ஆழம் வரையும் அகழ்வு வேலைகள் நடந்து வருகின்றன.

167கி.மீ. நீளம் என்பது இந்தியாவின் தெற்கு துறைமுகமான தூத்துக்குடியிலிருந்து மன்னாரின் அடம்பன் பாலம் வரையும் அங்கிருந்து வடக்குப் பக்கமாக வங்காள விரிகுடா நோக்கிச் செல்வது வரையுமாகும்.

இத்திட்டம் பூர்த்தியானதும் இதுவரை கொழும்பினூடாகச் சென்றுகொண்டிருந்த கப்பல்களின் பயணத்தூரம் சுமார் 400 மைல்களால் குறைந்து போகும். பயண நேரம் 36 மணித்தியாலங்களால் குறைந்து போகும். எனவே 400 மைல்களால் கடப்பதற்கான எரிபொருள் மிச்சமாகும்.

இதனால் கப்பல்கள் வேறு பொருட்களை ஏற்றி வேறு இடங்களுக்குச் செல்வதற்கு இந்த நேரத்தையும் எரிபொருளையும் பயன்படுத்தலாம்.

இவற்றை விட வேறு ஒரு நன்மையும் இந்தியாவுக்கு உள்ளது. அதுதான் இலங்கையின் அடிமடியில் கையை வைக்கும் தந்திரோபாயமாகும்.

இலங்கையைச் சுற்றி செல்லும் சகல கப்பல்களும் இலங்கையில் ஒரு முறை அநேகமாக கொழும்பில் தரித்துச் செல்ல வேண்டும். இதன் மூலம் இலங்கைத் துறைமுக அதிகாரசபை பெருமளவு வருமானம் பெற்று வருகின்றது.

சேது சமுத்திர கால்வாய் ஊடாக கப்பல்கள் பயணம் செய்ய ஆரம்பிக்கும் போது இக்கப்பல்கள் கொழும்புத் துறைமுகத்துக்குச் செல்ல வேண்டிய அவசியம் ஏற்படாது. இது இலங்கைக்கு கோடிக்கணக்கான அமெரிக்கா டொலர் இழப்பை வருடா வருடம் ஏற்படுத்தும்.

இந்தப் பாதையைப் பயன்படுத்தும் கப்பல்களில் கணிசமானவை இந்தியக் கப்பல்கள் என்பதால் இந்தியாவின் பணம் இலங்கைக்கு போகாது.

இந்தியாவின் அந்நிய செலவானி மிச்சப்படுத்தப்படும். அதே சமயம் இந்தியத் துறைமுக வருமானம் பலமடங்காக அதிகரிக்கவும் செய்யும்.

ஆழப்படுத்தப்படும் சேது கால்வாய் ஊடாக வெளிநாட்டுக் கப்பல்கள் பயணம் செய்யும் இந்தியா 'டோல்' கட்டணமொன்றை அறவிடப்போகின்றது. வெளிநாட்டுக் கப்பல் நிறுவனங்களைப் பொறுத்த மட்டில் அவர்கள் இலங்கையைச் சுற்றிச் செல்லும் எரிபொருட்களுக்கான செலவுகள் மற்றும் கொழும்பு துறைமுகத்துக்கான டொக்கிங் கட்டணம் ஆகிய இரண்டு செலவுகளையும் விட குறைந்த கட்டணமொன்றையே இந்தியா இந்த 'டோல்' கட்டணமாக அறவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

எனவே தாராளமாக இந்தியாவுக்கு கட்டணத்தைச் செலுத்தி விட்டு இவ்வழியாக வெளிநாட்டுக் கப்பல்கள் பயணிக்கப்போகின்றது.

தூத்துக்குடி துறைமுகம்

ஆனால் இலங்கைக்கு பெருமளவு பொருளாதார இழப்பு ஏற்படப்போகின்றது. இதில் உடனடிப் பலன் கிடைக்கப் போவது தூத்துக்குடி துறை முகத்துக்குத்தான். அங்கே இப்போது வந்து போகும் கப்பல்களின் எண்ணிக்கை பலமடங்காக அதிகரிக்கும்.

அத்துடன், மாற்றுவழி வசதிக்காக இலங்கைத் துறைமுகத்தை உபயோகித்து வந்த கப்பல்கள் தமது தரித்துச் செல்லும் வசதிக்காகத் தூத்துக்குடி துறைமுகத்தைப் பயண்படுத்தப் போகின்றன. காலப் போக்கில் அந்தக்கடல் பிராந்தியத்தில் மிகப் பெரிய மாற்றுவழி தரிப்பிடமாகத் தூத்துக்குடி விளங்கும்.

இதன்மூலம் வந்து போகும் வெளிநாட்டுப் பயணம் ராமேஸ்வரம்,கன்னியாகுமாரி, தூத்துக்குடி ஆகிய தென் கரையோரப் பகுதி பொருளாதார வளர்ச்சிக்கு உரமாகப் போகிறது.

இலாபமும், நன்மையும் இப்படியாக இந்தியாவுக்கு வந்துசேர வேறு வழியில் சிறிய நஷ்டமும் உருவாகலாம்.

கடல் பகுதியை இப்படி ஆழமாக்கப்பட்டு அதனூடாகக் கப்பல்கள் இப்படியாக வந்து போகும் போது இந்தியக் கடல்பகுதியில் இப்போது இருக்கும் மீன்வளத்தின் பெரும் பகுதி அழிந்து போகலாம்.

இந்தியாவின் தெற்குப் பகுதியில் உள்ள 138 மீனவர் கிராமங்கள் பாதிப்புக்களை எதிர்நோக்கும். மீன்பிடித் தொழில் பாதிப்படையும், ஆனால் மீனவர்களின் பொருளாதாரம் பாதிப்படையாது என்பதுதான் இந்தியப் பொருளாதார நிபூணர்களின் கணிப்பாகும்.

காலப்போக்கில் மீனவக் கிரமங்களில் இருப்பவர்கள் தங்கள் தொழில்களை மாற்றிக் கொண்டு அதே கிராமங்களில் கொஞ்சம் கொஞ்சமாக கப்பல்களை பழுது பார்க்கும் வேளைகளைச் செய்ய ஆரம்பிப்பார்கள்.மீன்பிடித் தொழிலின் உருவமே மாறிப்போகும் என்று கருதப்படுகின்றது.

இந்திய தென் பிராந்திய பொருளாதார அபிவிருத்திக்கும் தனது இராணுவ ரீதியான அனுகூலங்களுக்கும் இவ்வாறு சேது சமுத்திர திட்டத்தைப் பயன்டுத்தி குறுகிய மற்றும் நீண்டகாலப் பலன்களைப் பெறப் போகின்றது.

இலங்கைக்கான பாதிப்பு என்ன?

ஆனால் சேது சமுத்திர திட்டத்தின் பின் விளைவுகளால் இலங்கையின் துறைமுகங்கள் பொருளாதார ரீதியாக பெரும் பாதிப்புக்களை அடையும்.

இன்றுவரை இலங்கையை மாற்றுவழிப் பாதையாக பயன்படுத்தி வந்த கப்பல்கள் இனிமேல் இலங்கைப் பக்கமே வரவேண்டிய தேவை இருக்காது.

இக்கப்பல்கள் தூத்துக்குடி வழியாகச் செல்ல ஆரம்பித்து விட்டால் இலங்கைத் துறைமுகங்கள் முற்றும் முழுதாக வெறிச்சோடிப் போகும்.

இலங்கைக்கு பொருட்கள் ஏற்றி வரும் கப்பல்கள் தவிர்ந்த ஏனைய எந்தவொரு கப்பல்களும் இலங்கைத் துறைமுகத்திற்கு வர வேண்டிய தேவையே இருக்காது.

இதனால் கொழும்புத் துறைமுகத்தின் பல்லாயிரம் தொழிலாளர்கள் வேலை இழக்க நேரிடலாம்.அதனால் இலங்கை துறைமுக அதிகார சபையில் தொழிலாளர்களை மிக அதிகமாக குறைக்க வேண்டிய தேவையில் அரசு தள்ளப்படும்.

பல உள்ளூர் போக்குவரத்து முகவர் நிலையங்கள் மற்றும் துறைமுக தொடர்புடைய தொழில்களும் வருமானம் இன்றி முடங்கிப் போகும்.

அத்துடன் இலங்கையின் கடல் பகுதிக்குள் உள்ள மீன் வளங்களும் அழிந்து போகும்.

இந்தியக் கடல் எல்லைக்குள் போதிய மீன் கிடைக்காததால் இந்திய மீனவர்கள் இலங்கைக் கடற்பரப்பினுள் அத்துமீறி நுழைவது இப்போதே வாடிக்கையாகி விட்டது.

சேது திட்டத்தின் பின் பெருமளவு எண்ணிக்கையில் மன்னார் பகுதி எல்லைக்குள் இந்திய மீனவர்கள் படையெடுப்பார்கள்.

இதனால் இந்திய மீனவர்களுக்கும் வடபகுதி மீனவர்களுக்குமிடையில் சண்டைகளும், கைகலப்புகளும் நடுக்கடலில் நடைபெறுவதற்கான வாய்ப்புக்கல் மிக அதிகமாக இருக்கும்.

இருந்த போதிலும் சேது சமுத்திர திட்டத்தினால் வடக்கே காங்கேசன்துறை கிழக்கே திருகோணமலை ஆகிய இரண்டு துறைமுகங்களுக்கும் நல்லதொரு வாய்ப்பு எதிர்நோக்கியுள்ளது.

இவ்விரு துறைமுகங்களும் அபிவிருத்தி செய்யப்படுமானால் அது வடக்கு கிழக்கு பகுதிகளின் அபிவிருத்திக்கும் பொருளாதார நலன்களுக்கும் பெரிதும் உதவும்.

சேது சமுத்திர நிர்மாணத்தின் காலகட்டத்தின் போதே இத்துறைமுக அபிவிருத்திப் பணிகளையும் மேற்கொள்வது இலங்கையின் இழப்புகளுக்கு மாற்றீடாக அமையும்.