மைத்திரி கொடுக்கும் இன்ப அதிர்ச்சி! பலிக்கு முன் இது தேவைதானா?

Report Print S.P. Thas S.P. Thas in கட்டுரை

போதைப் பொருள் கடத்தலில் ஈடுபடும் நபர்களுக்கு மரண தண்டனை வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டு இருக்கும் விவகாரம் இலங்கை அரசியலில் அண்மைய நாட்களாக பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

இந்த தீர்மானத்திற்கு ஆதரவாகவும், எதிராகவும் குரல்கள் கொடுக்கப்பட்டது. குற்றங்களுக்கு தண்டனைகள் அதிகரித்தால் குற்றங்கள் குறையும் என்று ஒரு தரப்பும், தண்டனைகள் அதிகரிப்பதனால் குற்றங்களை குறைக்க முடியாது என்பதும் இன்னொரு தரப்பினது வாதமாகவும் அமைந்திருந்தது.

எனினும், இளைய சமுதாயத்தின் எதிர்காலத்தை அழிக்கும் எந்த நடவடிக்கையாக இருப்பினும், அவர்களுக்கு அதிகளவான தண்டனைகள் வழங்கப்பட வேண்டும் என்பதில் பெரும்பாலான இலங்கையர்கள் உறுதியாக இருக்கின்றார்கள்.

இலங்கையில் தற்போது தலைவிரித்தாடுவது போதைப் பொருள் கடத்தல் தான் என்பதை அரசாங்கமே ஒத்துக் கொண்டிருக்கிறது. குறிப்பாக வடக்கு கிழக்கில் கேரள கஞ்சா உட்பட அதிகளவில் போதைப் பொருள் கடத்தல் தொடர்ந்து கொண்டிருக்கின்றன.

அதிகளவில் கைப்பற்றப்பட்டு, கடத்தல்காரர்களும் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். ஆனால், தொடர்ச்சியாக கடத்தல் நடந்து கொண்டிருப்பதை காண முடிகின்றது. இதை தடுப்பதற்கு காவல்துறையினர் பல வழிகளிலும் முயற்சி செய்தும் கடத்தல் குறைந்தபாடாக இல்லை.

இந்நிலையில் அரசாங்கம் எடுத்த தீர்மானம் தான் மரண தண்டனை விவகாரம். இன்னும் சில தினங்களில் இந்த தீர்மானத்தின்படி மரண தண்டனை கைதிகளுக்கு தண்டனைகள் நிறைவேற்றப்படலாம் என தெரிகிறது.

இதுவொருபுறமிருக்க, மரண தண்டனைக் கைதிகளுக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தண்டனை நிறைவேற்றப்படும் நாளுக்கு முதல் நாள் இரவு தன்னுடன் அவர்கள் இராப்போசன விருந்து உண்பதற்கான ஏற்பாடுகளை செய்துள்ளதாக ஒரு செய்தி வெளியாகியிருக்கிறது.

இது எதிர்க் கட்சி உறுப்பினர்களுக்கு மைத்திரியை சாடுவதற்கான வாய்ப்பாகவும், சமூக ஆர்வலர்களுக்கு சினத்தை தூண்டும் செய்தியாகவும் மாறியிருக்கிறது.

மிக மோசமான குற்றத்தை செய்திருக்கும் குற்றவாளிகளுக்கு வழங்கப்படும் தண்டனையானது நியாயமானது. அதில் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. ஆனால் அடுத்த நிமிடமே மரணத்தை எதிர்நோக்கவிருக்கும் அவர்களுக்கு இந்த விருந்துபசாரம் என்பது தேவை தானா? என்று கேள்வி எழுப்புகிறார்கள் அவர்கள்.

குற்றத்திற்கு தண்டனையாக தூக்கு என்பது முடிவான பின்னர் அவர்களுக்கு எதற்கு பெரும் எடுப்பிலான விருந்து என்பது அவர்களின் கேள்வி.

இன்னொருபுறத்தில், வேள்விகளில் பலியிடக் கொண்டு செல்லப்படும் ஆடுகளுக்கு எவ்வாறு மாலை மரியாதை கொடுத்து அலங்கரித்து பலி பீடத்தில் கொல்லப்படுவார்களோ அவ்வாறே தூக்குத் தண்டனை கைதிகளுக்கு மைத்திரி கொடுக்கும் இந்த விருந்தும் அமைந்திருக்கிறது.

போதைப் பொருள் கடத்தல் என்பது ஒரு தலைமுறையையே அழிக்கும் நாசகார வேலை. அது தொடர்ந்தால் இளைய தலைமுறை சின்னாபின்னமாக்கப்பட்டு நாட்டில் சீரழிவுகள் மிஞ்சும். அந்த விளைவினை ஏற்படுத்தும் நபர்கள் தண்டிக்கப்பட வேண்டியவர்களே.

ஆனால், அவர்களின் உயிர் பிரிவதற்கு முன்னர் ஆடம்பர விருந்து கொடுத்து கொல்வது என்பது ஏற்றுக் கொள்ள முடியாத நிகழ்வு என்று குரல்கொடுக்கும் சமூக ஆர்வலர்களின் கருத்தினையும் தட்டிக் கழித்துவிட முடியாது. இது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்துவது சாலச்சிறந்ததாக இருக்கும்.