அழிவில்லா வரம் வாங்கி வந்த தமிழன்! எட்ட முடியாத உயரத்தில் இருக்கும் புகழ்

Report Print Sujitha Sri in கட்டுரை

இந்தியாவை அணு ஆயுத வல்லரசு நாடாக மாற்றி சுவர்க்கம் மண்டியிடும் அளவிற்கு உயர்த்திக் காட்டியதற்கு டாக்டர் அப்துல் கலாமும், அவருடன் பணிபுரிந்த விஞ்ஞானிகளும் மாத்திரமே காரணம் என மேடையை அதிர வைத்தான் தமிழ் சிறுவனொருவன்.

மூளையில் சுளீரென்று ஊசி இறங்கினாற் போல் இன்று இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் நினைவு தினம் என்பது நினைவிற்கு வந்தது.

அதனால் அவர் பற்றிய சிந்தனை எழவே அப்துல் கலாம் தொடர்பில் தகவல்கள் தேடினேன். அப்போது தான் அந்த மின்னல் பேச்சுக்களால் அதிர வைத்த அந்த சிறுவனின் பேச்சைக் கேட்டேன்.

மெய்சிலிர்த்து, மெய்மறந்து நின்ற எனக்கு சிறிது நேரத்தில் சுய நினைவு வரவே, தோன்றியது அப்துல் கலாம் மறையவில்லை. தன்னை அணு அணுவாக பிளந்து அனைத்து எதிர்கால சந்ததியினர் மனதிலும் விதைத்துள்ளார் என்பது.

இந்த நிலையிலேயே மீண்டும் ஆழ்ந்தேன் கல்வியெனும் அழிவில்லா செல்வத்தின் அருமையை அனைவருக்கும் புரிய வைத்த டாக்டர் அப்துல் கலாமின் சிந்தனையில்...!

மக்களின் மனங்களில் அழிவில்லா வரத்தை வாங்கி வந்த டாக்டர் அப்துல் கலாம் மேகாலயா, ஷில்லாங்கில் இந்திய மேலாண்மை கல்வி நிறுவனத்தில் மாணவர்கள் முன்னிலையில் உரையாற்றுக் கொண்டிருக்கையில் நேர்ந்தது அந்த சம்பவம்.

திடீர் உடல் நலக்குறைவு காரணமாக தனது 83ஆவது வயதில் மயங்கி விழுந்த அவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டும் எம்மை விட்டு சென்றார்.

1931ஆம் ஆண்டு அக்டோபர் 15ஆம் திகதி இராமேஸ்வரத்தில் தமிழ் முஸ்லிம் குடும்பத்தில் பிறந்தார் அப்துல் கலாம்.

அப்துல் கலாமின் தந்தை ஜெனுலாபுதீன், தாயார் அஷியம்மா. ஏழ்மையான குடும்பத்தில் பிறந்து மிகப்பெரும் சாதனைகளை படைத்த தமிழரான அப்துல் கலாம், சிறுவயதிலேயே குடும்ப வருவாய்க்காக வேலைக்குச் சென்றார்.

பள்ளிப் படிப்பை முடித்த நிலையில் செய்தித்தாள்களை வீடு வீடாக சென்று விநியோகிக்கும் வேலையில் ஈடுபட்ட அவர் கணித பாட பிரியனாக இருந்தார்.

கனவு காணுங்கள் இளைஞர்களே என அனைவரையும் தூண்டிவிட்ட அப்துல் கலாமின், இந்திய வான்படையின் போர் வானூர்தி ஓட்டுநராக வேண்டும் என்ற கனவு நிறைவேறவில்லை என்பது ஆச்சரியமே.

ஆனால் கனவு நிறைவேறா விடினும் யாரும் எட்ட முடியா சாதனைகளின் சிகரமாய் திகழ்கிறார் அவர். 1960ஆம் ஆண்டு மெட்ராஸ் தொழில்நுட்ப கழகத்தில் பட்டம் வென்ற அப்துல் கலாம் பாதுகாப்பு ஆய்வு மற்றும் வளர்ச்சி கழகத்தில் விஞ்ஞானியாக இணைந்தார்.

பின்னர் இந்திய விண்வெளி ஆராய்ச்சி கூடத்தில் தனது ஆராய்ச்சி பணிகளை தொடர்ந்த அவர், துணைக்கோள் ஏவுகணை குழுவில் செயற்கைக்கோள் ஏவுதலில் முக்கிய பங்காற்றினார்.

1980ஆம் ஆண்டு SLV - III உந்துகணையை பயன்படுத்தி ரோகினி - ஐ என்ற துணைக்கோளை வெற்றிகரமாக விண்ணில் ஏவ செய்தார். இது அவருக்கு மட்டுமல்லாமல் இந்தியாவிற்கே ஒரு சாதனையாக அமைந்தது.

இத்தகைய வியக்கதக்க செயலை பாராட்டி மத்திய அரசு இவருக்கு 1981ஆம் ஆண்டு இந்தியாவின் மிகப் பெரிய விருதான “பத்ம பூஷன்” விருது வழங்கி கௌரவித்தது.

1963ஆம் ஆண்டு முதல் 1983ஆம் ஆண்டு வரை, இந்திய விண்வெளி ஆராய்ச்சி கூடத்தில் பல பணிகளை சிறப்பாக செய்த இவர் 1999ஆம் ஆண்டு “பொக்ரான் அணு ஆயுத சோதனையில்” முக்கிய பங்காற்றியுள்ளார்.

இந்தியாவை அணு ஆயுத வல்லரசாக மாற்றிய ஏ.பி.ஜே.அப்துல் கலாம், இதுவரை ஐந்து ஏவுகணை திட்டங்களில் பணிபுரிந்துள்ளார். அவர் அனைவராலும் இந்திய இராணுவ உந்துகணை படைப்பின் பிதாவாக போற்றப்படுகிறார்.

2002ஆம் ஆண்டு நடந்த குடியரசு தலைவர் தேர்தலில் வெற்றி பெற்று, இந்தியாவின் 11ஆவது குடியரசு தலைவராக ஜூலை 25ஆம் நாள் 2002இல் பதவியேற்றார்.

குடியரசு தலைவராவதற்கு முன் இந்தியாவின் மிகப்பெரிய விருதான “பாரத ரத்னா விருது” மத்திய அரசு இவருக்கு வழங்கி கௌரவித்தது. மேலும் “பாரத ரத்னா” விருது பெற்ற மூன்றாவது குடியரசு தலைவர் என்ற பெருமையை பெற்றார்.

2007ஆம் ஆண்டு வரை குடியரசு தலைவராக இருந்த இவர் “மக்களின் ஜனாதிபதி” என்று அனைவராலும் அன்போடு அழைக்கப்பட்டார்.

2007ஆம் ஆண்டு குடியரசு தேர்தலில் மீண்டும் போட்டியிட நினைத்த கலாம் பிறகு பல காரணங்களால் அந்த தேர்தலில் போட்டியிட போவதில்லை என்று முடிவு செய்து விலகினார்.

இருப்பினும் எமது மனங்களில் இருந்து விலகாத இடம்பிடித்த மாமனிதராக இருக்கிறார் அப்துல் கலாம். இதேபோன்று அவரது நூல்களில் அக்னி சிறகுகள், இந்தியா 2012, எழுச்சி தீபங்கள் ஆகியன குறிப்பிட்டு சொல்லக் கூடியதாக காணப்படுகின்றன.

தென் கொரியாவில் அவருடைய புத்தகங்கள், மொழி பெயர்ப்பு பிரதிகளாக மாற்றுவதற்காக பெரும் வரவேற்பைப் பெற்றிருக்கின்றன. இந்த வரலாற்று வரிகளின் முற்றுப்புள்ளி போல எனது சிந்தனையும் முற்றுப்புள்ளியுடன் கலைந்தது.

பல இளைஞர்களுக்கு முன்மாதிரியாக திகழும் டாக்டர் அப்துல் கலாம் எனக்கும் முன்மாதிரியாக திகழ்பவர் என்பதால் சிந்தனையின் முடிவில் என் கண்களில் இருந்து வந்த கண்ணீர்த்துளிகளை சமர்ப்பணமாக்கினேன் அவருக்கு.

எனினும் ஏதோ ஒரு விததத்தில் நான் அதிஷ்டசாலி..! ஹோ.. ஏன் என்று கேட்கின்றீர்களா? இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் 2015ஆம் ஆண்டு ஜுன் 26ஆம் திகதி இலங்கைக்கு விஜயம் செய்த போது BMICHஇல் இடம்பெற்ற நிகழ்வொன்றில் அவர் பங்கேற்றிருந்தார்.

அந்த நிகழ்வில் பல நூற்றுக்கணக்கான மாணவர்களின் மத்தியில் நானும் நின்றேன் என்பதை எண்ணுகையில் அந்த சந்தர்ப்பத்தை நினைத்து பெருமிதம் கொள்கிறேன்.

Latest Offers