வடக்கின் ஆளுநருக்கு ஓர் அன்பு மடல்

Report Print Tamilini in கட்டுரை

வடக்கு மாகாண ஆளுநருக்கு அன்பு வணக்கம்.

அண்மையில் பாடசாலை நிகழ்வில் கலந்து கொண்ட தாங்கள் முக்கியமான ஒரு கருத்தை முன்வைத்திருந்தீர்கள்.

வடக்கு மாகாணத்தின் அபிவிருத்திக்கு தமிழ் அரசியல்வாதிகளின் முரண்பாடே கார ணம் என்பது நீங்கள் கூறிய கருத்தாகும்.

வடக்கு மாகாணத்தின் அபிவிருத்திக்கு தமிழ் அரசியல்வாதிகளின் முரண்பாடே காரணம் என்று நீங்கள் கூறியதில் நிறைந்த உண்மை கள் உண்டு என்பதை நாம் மறுதலிக்கவில்லை.

மாறாக முரண்பாட்டை ஏற்படுத்துபவர்கள் யார்? அவர்களின் நோக்கம் என்ன? என்பதை பெயர் குறித்து நீங்கள் குறிப்பிட்டிருந்தால் தமிழ் மக்கள் நிச்சயம் அதை அறிந்திருப்பார்கள்.

எனினும் நீங்கள் தமிழ் அரசியல்வாதிகளின் முரண்பாடே வடக்கின் அபிவிருத்தி ஏற்படாமைக்குக் காரணம் என்று மட்டும் கூறியுள்ளீர்கள்.

இவ்வாறு நீங்கள் கூறிய விடயம் தமிழ் மக்களை கவனயீர்ப்புக்கு கொண்டு வந்துள்ளதென்பது உண்மையாயினும்,

நீங்கள் இக்கருத்தைக் கூறிய நேரமும் காலசூழ்நிலையும் பொருத்தமில்லை என்பதே நம் தாழ்மையான கருத்து. அதாவது தமிழ் அரசியல்வாதிகள் முரண்பட்ட சந்தர்ப்பங்கள் பல.

அதில் வடக்கு மாகாண முதலமைச்சர் நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன் அவர்களுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையைக் கொண்டு வந்தவர்கள் அந்தத் தீர்மானத்தை இரவோடு இரவாக ஆளுநராகிய தங்களிடம் கையளித்தனர்.

அந்தத் தீர்மானத்தை மறுநாள் காலையில் கொண்டு வந்து தாருங்கள் என்று நீங்கள் கூறாமல்; அந்த இரவுப் பொழுதிலும் தாங்களும் தங்கள் அலுவலகமும் விழித்திருந்து தீர்மானத்தைப் பெற்றுக்கொண்டீர்கள்.

அந்தத் தீர்மானத்தை வடக்கு மாகாண சபையின் அவைத் தலைவர் அவர்கள் உங்களிடம் கையளித்தபோது அதனை நீங்கள் சிரித்த முகத்தோடு பெற்றிருந்தீர்கள்.

வடக்கு மாகாணத்தின் பொறுப்பு வாய்ந்த ஆளுநர் என்ற வகையில் முதலமைச்சருடன் முரண்படாமல் இணைந்து சென்று வடக்கு மக்களின் அபிவிருத்திக்கு உதவுங்கள் என்று நீங்கள் அன்று கூறியிருந்தால் உங்கள் கனவான்தனம் உயர்வு பெற்றிருக்கும்.

ஆனால் அதை நீங்கள் செய்யவில்லை. அன்று தமிழ் அரசியல்வாதிகளின் முரண்பாடு உங்கள் மேலாண்மைக்கு தேவையாக இருந்துள்ளது.

இதுதவிர, யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் தமிழ் - சிங்கள மாணவர்கள் முரண்பட்ட போது நீங்கள் கொழும்புக்கு விரைந்தீர்கள், காயமடைந்த சிங்கள மாணவர்களைச் சென்று பார்வையிட்டீர்கள்.

சம்பவம் தொடர்பில் இன சமத்துவம் ஒற்றுமை என்ற இயல்புக்கு முரண்பாடாகக் கருத்துரைத்தீர்கள்.

காயமடைந்து யாழ்.போதனா வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த தமிழ் மாணவர்களை நீங்கள் சந்திக்காமல் தவிர்த்திருந்தீர்கள். இவையயல்லாம் ஒரு சில உதாரணங்கள் மட்டுமே. இன்னும் பலவற்றை நாம் கூறலாம்.

ஆனால் அவற்றை தவிர்த்துக் கொள்கிறோம். ஏனெனில் வடக்கு மாகாண மக்களின் அபிவிருத்தி விடயத்தில் ஆளுநர் என்ற பதவிக்கு இருக்கக்கூடிய அதிகாரத்தின் கீழ் நீங்கள் வடக்கை அபிவிருத்தி செய்கின்ற முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்ற நன்நோக்கிலாகும்.

எனவே தமிழ் அரசியல்வாதிகளிடையே முரண்பாட்டை ஏற்படுத்துகின்றவர்களின் பின்னணியை நீங்கள் அறிந்தவர்கள் என்ற வகையில் அவற்றை நிவர்த்தி செய்யுங்கள் என்பதே உங்களுக்கு எழுதுகின்ற இக்கடிதத் தின் நோக்கமாகும்.

- Valampuri