மாற்றம் காணும் கொள்கை: மயக்க நிலையில் தமிழர்கள்!

Report Print Hariharan in கட்டுரை

மகிந்த ராஜபக்சவின் தலைமையிலான கூட்டு எதிரணி ஆட்சியைப் பிடிப்பதற்கான நகர்வுகளை உறுதியாக எடுத்து வைக்கத் தொடங்கியிருப்பதாகவே தெரிகிறது.

தற்போதைய அரசாங்கத்தைப் பலவீனப்படுத்துவதில் தொடங்கி தாம் ஆட்சியைப் பிடிக்கும் போது அதனை வலுவாக நிலைப்படுத்துவது வரையான திட்டங்களை செயற்படுத்த ஆரம்பித்துள்ளது.

மகிந்த ராஜபக்ச ஆட்சியை இழந்த பின்னர் சிறிது காலம் ஒரு தொய்வு நிலை காணப்பட்டது. எனினும் சில மாதங்களிலேயே தம்மை சுதாகரித்துக் கொண்ட கூட்டு எதிரணியினர் மெதுமெதுவாகத் தம்மை வலுவாகக் கட்டமைக்கத் தொடங்கினர்.

அந்தக் கட்டமைப்பின் வலிமையை கடந்த உள்ளூராட்சித் தேர்தலின் மூலம் தெளிவாக உணர்ந்து கொள்ள முடிந்தது.

இந்த அரசாங்கத்தைக் கவிழ்த்து இடைநடுவில் ஆட்சியைப் பிடிப்பதற்கு மாத்திரமன்றி எதிர்க்கட்சித் தலைவர் பதவியைப் பிடிப்பதற்குக் கூட அவர்களால் முடியாமல் இருப்பது ஒரு பின்னடைவாகவே இருந்தாலும் அடுத்த அரசாங்கத்தை அமைப்பதற்கான நகர்வுகளை கூட்டு எதிரணி வலுவாகவே முன்னெடுக்கிறது.

மகிந்த ராஜபக்சவின் அடுத்த ஆட்சியில் பிரச்சினைகள் தீர்க்கப்படும் என்ற நம்பிக்கையை எல்லாத் தரப்பு மக்களிடையேயும் ஏற்படுத்துகின்ற வேலையை அவரது தரப்பினர் தீவிரமாகவே முன்னெடுத்து வருகிறார்கள்.

கோத்தபாய ராஜபக்ச, பசில் ராஜபக்ச உள்ளிட்டவர்கள் அத்தகைய வாக்குறுதிகளை உயர்மட்டத்தில் ஊட்டிக் கொண்டிருக்கின்றனர்.

அந்த வாக்குறுதிகளில் உண்மை இருக்குமோ இல்லையோ ராஜபக்சவினர் தமது உத்திகளை மாற்றிக் கொள்ள தொடங்கியிருக்கிறார்கள் என்பதைப் புரிந்து கொள்ள முடிகிறது.

தமது அடுத்த கட்ட அரசியல் பயணத்துக்கான மூலோபாயத்தை மாற்றிக் கொள்வதற்கும் அவர்கள் தரப்பில் இருந்து சமிக்ஞைகள் வெளிப்படுத்தப்படுத்துவதைக் காண முடிகிறது.

அத்தகைய மாற்றங்களுக்கான அறிகுறிகள் தனியே உள்நாட்டு அரசியலுக்கானதாக மாத்திரம் வெளிப்படுத்தப்படவில்லை. சர்வதேச அரசியலுக்கான மாற்றங்களும் கூட தென்படத் தொடங்கியுள்ளன.

அண்மையில் மத்தள விமான நிலையத்தை இந்தியாவுக்கு வழங்கும் விவகாரம் உச்சமடைந்த போது மகிந்த ராஜபக்ச வெளியிட்டிருந்த கருத்து முக்கியமானது.

மத்தள விமான நிலையத்தை இந்தியாவுக்கு வழங்குவதற்கு அரசாங்கம் எடுக்கின்ற நடவடிக்கை பிராந்திய சக்திகளின் தேவையற்ற ஆட்டத்துக்குள் இலங்கையைத் தள்ளிச் சென்று விடும் என்று அவர் எச்சரித்திருந்தார்.

முன்னதாக அம்பாந்தோட்டை துறைமுகத்தை சீனாவுக்கு வழங்கியதை சமப்படுத்தும் வகையில் மத்தள விமான நிலையத்தை இந்தியாவுக்கு வழங்கப் போவதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க கூறியிருந்தார்.

இந்தியாவையும் சீனாவையும் சமநிலைப்படுத்தும் நோக்கில் தற்போதைய அரசாங்கம் செயற்பட்டாலும் இது தேவையற்ற பிரச்சினைகளை ஏற்படுத்தும் என்பது மகிந்த ராஜபக்சவின் கருத்தாக உள்ளது.

எனினும் இதே மகிந்த ராஜபக்ச தான் 2007ம் ஆண்டு அம்பாந்தோட்டை துறைமுகத் திட்டத்தை சீனாவுக்கு வழங்கியதன் மூலம் தற்போது இந்தியப் பெருங்கடலில் நடக்கின்ற அதிகாரப் போட்டிக்கு பிள்ளையார் சுழி போட்டிருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

அப்போது அவர் பிராந்திய அதிகாரப் போட்டிக்குள் இலங்கை சிக்கிக் கொள்ள வேண்டியிருக்கும் என்று எதிர்பார்க்கவில்லை. அண்மைக்காலம் வரையில் கூட தனது முடிவு சரியானதே என்று தான் மகிந்த வாதிட்டு வந்தார்.

இப்போதும் கூட தனது முடிவைப் பிழையானது என்று கூற தயாராக இல்லாவிடினும் மத்தளவை இந்தியாவுக்கு கொடுத்தால் தேவையற்ற பிரச்சினைக்குள் சிக்க நேரிடும் என்று எச்சரித்திருக்கிறார்.

அவரது இந்தக் கருத்து இலங்கையில் இந்தியாவும் சீனாவும் அதிகளவில் தலையீடுகளைச் செய்ய முனையும் போது ஏற்படக் கூடிய பிரச்சினைகளை கருத்தில் கொள்ளத் தொடங்கியிருக்கிறார் என்பதைப் புரிந்து கொள்ள முடிகிறது.

இந்த அதிகார மோதலினால் அதிகபட்ச இழப்புகளை எதிர்கொண்டவரும் அவர் தான். என்பதையும் மறந்து விட முடியாது. சீனாவுடன் காட்டிய நெருக்கம் தான் ராஜபக்சவின் ஆட்சிக்கு ஆபத்தை ஏற்படுத்தியது.

சூடு கண்ட பூனை அடுப்பங்கரை நாடாது என்பது பழமொழி. எனவே மீண்டும் ஒருமுறை சூடு வைத்துக் கொள்ள மகிந்த ராஜபக்ச தயாராக இல்லைப் போலவே தெரிகிறது. அதனால் தான் அவர் தனது வெளியுலகத்துடனான அரசியல் அணுகுமுறைகளை செய்ய ஆரம்பித்திருக்கிறார்.

மகிந்த ராஜபக்ச தனது முன்னைய ஆட்சிக்காலத்தில் சர்வதேச சமூகத்துடன் எத்தகைய உறவாடலைக் கொண்டிருந்தார் என்பது தெரிந்ததே.

அமெரிக்க எதிர்ப்பு நிலைப்பாடுகளை கொண்ட நாடுகளுடன் மகிந்த ராஜபக்ச கொண்டிருந்த உறவுகள் தான் ஐநா மனித உரிமைகள் பேரவையில் தீர்மானங்களை எதிர்கொள்வதற்கு காரணமாக அமைந்தது.

மீண்டும் மகிந்த ராஜபக்ச அல்லது அவரது பதிலி ஒருவரின் தலைமையில் ஆட்சி அமைக்கப்படுமானால் சர்வதேச சமூகத்துடனான உறவுகள் விடயத்தில் முற்றிலும் வேறுபட்டதொரு கொள்கை கடைப்பிடிக்கப்படும் போலத் தெரிகிறது.

அண்மையில் மகிந்த ராஜபக்ச தனது ஆட்சிக்காலத்தில் வெளிநாடுகளில் பணியாற்றிய இலங்கையின் முன்னாள் தூதுவர்கள், இராஜதந்திரிகளைச் சந்தித்து கலந்துரையாடியிருந்தார்.

அந்தக் கலந்துரையாடலின் முக்கிய நோக்கமாக இருந்தது தாம் அடுத்து அமைக்கப் போகும் அரசாங்கத்தின் வெளிவிவகாரக் கொள்கையை வகுப்பதற்கான யோசனைகளைப் பெற்றுக் கொள்வது தான்.

மகிந்த ராஜபக்ச இதனை வெளிப்படையாகவே கூறியிருக்கிறார். முன்னைய ஆட்சிக்காலத்தில் வெளிநாடுகளுடன் கையாளப்பட்ட உறவுகளின் தன்மை, அதன் பலம், பலவீனங்களை ஆராய்ந்து புதிய உத்திகளை வகுக்க முற்படுகின்றார். எங்கே தவறு செய்திருக்கிறோம் என்பதையும் ஆராய்ந்திருக்கின்றார். அதுவும் தற்போதைய அரசாங்கம் கடைப்பிடிக்கும் கொள்கையை முன்வைத்து இந்த ஆய்வு நடத்தப்பட்டிருக்கிறது.

முன்னைய அரசாங்கம் சர்வதேச சமூகத்துடன் எவ்வாறு முரண்பட்டது என்பதையும் இப்போதைய அரசாங்கம் சர்வதேச சமூகத்துடன் முரண்படாமல் செயற்படுவதற்கு கையாளும் உத்திகளையும் முன்வைத்து இந்தக் கலந்துரையாடலில் ஆராயப்பட்டுள்ளது.

இதன் பின்னர் தான் அனைத்து முன்னாள் தூதுவர்களையும் எதிர்கால வெளிவிவகாரக் கொள்கை பற்றிய யோசனைகளை சமர்ப்பிக்குமாறு கோரப்பட்டுள்ளது. அது மாத்திரமன்றி தூதுவர்களாகப் பணியாற்றிய நாடுகளின் அடிப்படையில் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. அதில் ஆசியப் பிராந்தியக் குழுவை மாதந்தோறும் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் சந்திக்கவும் திட்டமிட்டுள்ளார்.

இதிலிருந்து மகிந்த ராஜபக்ச தரப்பு சர்வதேச அரசியல் நகர்வுகளுடன் இணைந்து செயற்படும் ஒரு வெளிவிவகாரக் கொள்கையை வகுப்பதற்கு தயாராகி வருவது போலத் தென்படுகிறது.

பிராந்திய மற்றும் சர்வதேச சக்திகளுடன் முரண்பட்டுக் கொண்டு இலங்கைத் தீவில் நிலையாக ஆட்சி செய்ய முடியாது என்ற உண்மை ராஜபக்ச குடும்பத்தினருக்கு உணர்த்தப்பட்டு மூன்று ஆண்டுகளுக்கு மேலாகி விட்டது.

இந்தநிலையில் பிராந்திய சர்வதேச சக்திகளுடன் முரண்பட்டுக் கொள்ளாத ஒரு அணுகுமுறையைத் தெரிவு செய்வதை விட அவர்களுக்கு வேறொரு தெரிவு இல்லை.

மகிந்த ராஜபக்ச, பசில் ராஜபக்ச போன்றவர்கள் சர்வதேச சமூகத்தை அனுசரிப்பது பற்றி வெளிப்படுத்தும் கருத்துக்களில் இருந்து அத்தகைய தெரிவுக்கு அவர்கள் தயாராகி வருகிறார்கள் என்றே புரிந்து கொள்ள முடிகிறது.

மகிந்த ராஜபக்ச ஆட்சியமைப்பதற்கு தற்போதைய உலக ஒழுங்கு இடமளிக்குமா என்ற விடயங்களைத் தாண்டி அத்தகைய ஒரு வாயப்பு நிகழுமானால் அந்த அரசாங்கத்தின் வெளிவிவகாரக் கொள்கையில் ஏற்படக்கூடிய மாற்றங்கள் தமிழர் தரப்பின் மீது எத்தகைய தாக்கங்களை ஏற்படுத்தும் என்பதையும் ஆராய வேண்டியுள்ளது.

சர்வதேச மற்றும் உள்நாட்டு அரசியலின் தாக்கங்களை எதிர்கொள்வதற்கு ஏற்ற வகையில் தமிழர் தரப்பு எப்போதுமே கவனம் செலுத்தியது கிடையாது. இன்னும் ஒன்றரை ஆண்டுகளுக்குப் பின்னர் ஏற்படுத்தக் கூடிய ஆட்சி மாற்றத்தின் பின்னரான கொள்கையை வகுப்பதில் இப்போது மகிந்த தரப்பு ஈடுபட்டிருக்கிறது.

அப்படியான மாற்றங்கள் நிகழ்ந்தால் தமிழர் தரப்பு என்ன செய்யப் போகிறது, எத்தகைய அணுகுமுறையைக் கடைப்பிடிக்கப் போகிறது என்று யாரும் ஆராய்ந்ததாகவோ ஆராயப்படுவதாகவோ தகவல் இல்லை. இது ஒருவித மெத்தனப் போக்கு ஒன்று நிகழும் வரை எந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையிலும் இறங்காமல் இருக்கின்ற உறக்க நிலை.

திடீரென மாற்றங்கள் நிகழும் போது பதற்றத்தில் முடிவுகளை எடுப்பதற்கும் குழப்பமான முடிவுகளை எடுப்பதற்கும் இது தான் காரணமாகிறது.

ஒரு அரசாங்கத்தை அமைப்பதற்கு முன்னர் தமது கொள்கைகளைத் திட்டமிட்டு தயார்படுத்தும் வேலைகளை மகிந்த தரப்பு முன்னெடுக்கும் போது, நீதியை எதிர்பார்க்கும் ஒரு சமூகம் என்ற வகையில் அதனை விட வேகமாகச் செயற்பட வேண்டிய நிலையில் இருந்தாலும் அத்தகைய வேகத்தைக் காண முடியவில்லை.

சர்வதேச சமூகத்தின் உதவியுடன் நீதியை எதிர்பார்க்கும் தமிழர் தரப்புக்கு மகிந்த தரப்பின் வெளிவிவகாரக் கொள்கை மறுசீரமைப்பு நடைமுறைப்படுத்தப்பட்டால் அது சவாலானதொன்றாகவே இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. அதனைத் தமிழர் தரப்பு எவ்வாறு எதிர்கொள்ளப் போகிறது?