மாறி வரும் மூலோபாயம்!

Report Print Subathra in கட்டுரை

விடுதலைப் புலிகளுடனான போர்க் காலத்துடன் ஒப்பிடுகையில் இலங்கைக் கடற்படையின் மூலோபாயம் முழுமையாக மாற்றமடையத் தொடங்கியிருக்கிறது.

1980கள் வரை எந்த பாதுகாப்பு மூலோபாய இலக்கும் இல்லாமல் வெறுமனே இந்தியா - இலங்கை இடையிலான கடத்தல்களைத் தடுக்கின்ற இலக்குடன் மட்டுமே இருந்த கடற்படை அதற்குப் பின்னர் தனது மூலோபாயத்தை மாற்றிக் கொண்டது.

கடற்புலிகளின் வளர்ச்சியை அடுத்து சிறியளவிலான கடற்சண்டைகளில் தொடங்கி நீண்டநேரக் கடல் சண்டைகளை நடத்துகின்ற அளவுக்கு அதன் திறன் வளர்க்கப்பட்டது.

எதிரி தான் எமது பலத்தை தீர்மானிக்கிறான் என்று கூறப்படுவதைப் போலவே இலங்கைக் கடற்படையும் தமது பாதுகாப்பு மூலோபாயத்தில் யாரை எதிரியாகக் கருதியதோ அவர்களே அதன் வளர்ச்சிக்கும் காரணமானார்கள்.

கடத்தல்களைக் கட்டுப்படுத்தும் ஒரு படையாக இருந்த கடற்படையை விடுதலைப் புலிகள் தான் கடற்சண்டைகளைக் கற்றுக் கொடுத்து அதன் படைபல பெருக்கத்துக்கு காரணமானார்கள்.

விடுதலைப் புலிகள் அறிமுகம் செய்த போர் யுக்திகளையும் படகுகள், ஆயுதங்கள் போன்றவற்றையும் வைத்துக் கொண்டு பிற்காலத்தில் அதனை ஒத்த மூலோபாயத்தின் ஊடாகவே கடற்படையை அவர்கள் எதிர்கொண்டனர்.

அதாவது சிறியளவிலான படகுகளை அதிகளவில் களமிறக்கி கனரக ஆயுதங்களை அதில் பொருத்தி சூட்டு வலுவை செறிவாக்கி கடற்புலிகளின் மூலோபாயத்தையே அவர்களுக்கு எதிராகத் திருப்பி விட்டனர்.

அது கடற்படைக்கு வெற்றியைப் பெற்றுக் கொடுத்திருந்த போதிலும் தொடர்ந்தும் அந்த மூலோபாயம் அவர்களுக்குத் தேவையான ஒன்றாக இருக்கவில்லை.

போர் முடிந்து ஒன்பது ஆண்டுகளாகி விட்ட நிலையில் கடற்படைக்குப் புதிய மூலோபாயமும் புதிய இலக்கும் புதிய போர்த் தளபாடங்களும் தேவைப்படுகின்றன.

கடற்படையில் புதிதாக மரைன் கொமாண்டோ பற்றாலியன் உருவாக்கப்பட்டு பலப்படுத்தப்பட்டு வருகிறது.

அதுபோலவே கடற்படையில் அதிகளவில் சேர்த்துக் கொள்ளப்பட்டு வந்த சிறிய வகையிலான ரோந்துப் படகுகள் சண்டைப் படகுகளுக்குப் பதிலாக பெரியளவிலான ஆழ்கடல் கண்காணிப்புக் கப்பல்கள் அதிகளவில் சேர்க்கப்படுகின்றன.

இப்போது கடற்படையின் மூலோபாயம் ஆழ்கடலைப் பாதுகாப்பதற்கானதாக மாறியிருக்கிறது. சர்வதேச பாதுகாப்பு மூலோபாயத்துடன் தொடர்புடைய ஒன்றாக அதன் அங்கமாக மாறத் தொடங்கியிருக்கிறது.

அண்மையில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க நீர்மூழ்கிகளின் ஆபத்தை எதிர்கொள்ள வேண்டிய நிலையும் இலங்கைக்கு இருப்பதாக கூறியிருந்தார்.

அதற்கு முன்னர் அவரே ஹோர்மூஸ் நீரிணைக்கும் மலாக்கா நீரிணைக்கும் இடைப்பட்ட கடல்வழிப் பாதுகாப்பை கடற்படை பொறுப்பேற்கும் காலம் வரப்போகிறது என்றும் கூறியிருந்தார்.

அதாவது இந்தியப் பெருங்கடலில் பயணிக்ஹகும் கப்பல்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் பொறுப்பு அது.

ஆழ்கடலில் இலங்கைக் கடற்படையின் பலத்தையும் திறனையும் அதிகரிப்பதற்குப் பின்னால் ஒரு சர்வதேச அரசியல் நிகழ்ச்சி நிரல் உள்ளது.

இந்தச் சர்வதேச அரசியலில் அறுவடைகளை எதிர்பார்க்கின்ற தரப்புகள் எல்லாமே இலங்கையையும் இலங்கையின் கடற்படையையும் பயன்படுத்திக் கொள்ள முனைவது தான் தனித்துவமான ஒன்றாக விளங்குகிறது.

இந்தியா, அமெரிக்கா, ஜப்பான், அவுஸ்திரேலியா போன்ற நாடுகள் சீனாவையும் அதன் பாதுகாப்பு மூலோபாயங்களையும் கடுமையாக எதிர்க்கின்றன. ஆனால் இந்த நாடுகள் அனைத்துமே இலங்கைக் கடற்படையைப் பலப்படுத்துவதில் ஒன்றிணைகின்றன என்பது ஆச்சரியமான உண்மை.

அண்மைக்காலத்தில் இலங்கைக் கடற்படைக்குக் கிடைத்துள்ள ஆழ்கடல் ரோந்துக் கப்பல்கள், படகுகள் மற்றும் இனிமேல் கிடைக்கவிருக்கும் கப்பல்கள் தொடர்பாக வெளியாகும் செய்திகளை உற்றுக் கவனித்தால் இது பற்றிய கேள்விகள் எழுவது தவிர்க்க முடியாதவை.

இலங்கைக் கடற்படையின் ஆழ்கடல் கண்காணிப்புத் திறனை அதிகரிப்பதற்காக இந்தியா 2000ம் ஆண்டுகளுக்குப் பின்னர் நான்கு ஆழ்கடல் ரோந்துக் கப்பல்களைக் கொடுத்திருக்கிறது.

இவற்றில் இரண்டு போர்க்காலத்தில் வழங்கப்பட்டவை. இரண்டு அண்மைக்காலத்தில் புதிதாக கட்டிக் கொடுக்கப்பட்டவை.

அமெரிக்கா போர்க்காலத்தில் ஒரு ஆழ்கடல் ரோந்துக் கப்பலைக் கொடுத்தது. இப்போது இன்னொன்றைக் கொடுக்கப் போகிறது.

சீனாவும் ஒரு போர்க்கப்பலைக் கொடுக்கவுள்ளது. மேலும் சிலவற்றைக் கொடுக்கும் வாய்ப்புகளும் இருப்பதாக செய்திகள் வெளியாகின்றன.

ஜப்பான் மூன்று ரோந்துப் படகுகளைக் கொடுத்துள்ளது.

அவுஸ்திரேலியாவும் சில ரோந்துப் படகுகளைக் கொடுத்துள்ளது. இன்னும் சிலவற்றைக் கொடுப்பதாக வாக்குறுதி அளித்துள்ளது.

ரஷ்யாவும் தாய்லாந்தும் கூட இலங்கைக் கடற்படைக்கு தமது புதிய போர்க்கப்பல்களைக் கட்டிக் கொடுப்பதற்கு கொழும்புக்கு தூதுக்கு மேல் தூது அனுப்பிக் கொண்டிருக்கின்றன.

இலங்கைக் கடற்படை இன்னும் சில ஆண்டுகளில் ஆழ்கடல் கண்காணிப்பை முழுமையாக மேற்கொள்ளக் கூடிய ஒன்றாக மாறி விடும் என்பதை இந்தப் போர்க்கப்பல்களும் அதன் அடிப்படையில் முன்னெடுக்கப்படும் மூலோபாயங்களும் உணர்த்தி நிற்கின்றன.

அதுவும் இலங்கைக் கடற்படையின் போர்க்கப்பல்களளின் பலத்தை அதிகரிப்பதற்கு பல நாடுகள் தாமாகவே முன்வந்து உதவத் தொடங்கியிருக்கின்றன.

இந்தளவுக்கு இந்தியப் பெருங்கடலில் இலங்கைத் தீவுக்கு என்று பிரத்தியேகமான எதிரி என யாரும் கிடையாது.

கடற்கொள்ளை தடுப்பு என்ற காரணத்தை பொதுவாகச் சொல்லப் போனாலும் இந்தியப் பெருங்கடலில் குறிப்பாக இலங்கையை அண்டிய கடற்பகுதிகளில் கடற்கொள்ளையர்களின் நடமாட்டங்கள் மிக அரிது.

எனவே கடற்கொள்ளை தடுப்பு நடவடிக்கையின் ஒரு கட்டமாக இலங்கைக் கடற்படையைப் பலப்படுத்தும் முயற்சிகள் நடப்பதாக கூற முடியாது.

இலங்கையின் பொருளாதார கடல் எல்லை 200 மைல்கள் வரை விரிவடைந்துள்ளது. அதனைப் பாதுகாக்க பெரிய போர்க்கப்பல்கள் தேவைப்படுகிறது. என்று கடற்படை அதிகாரி ஒருவர் கூறியிருக்கிறார்.

இலங்கைக் கடற்படை இதனை இந்த நோக்கத்தில் பார்த்தாலும் இலங்கைக் கடற்படையைப் பலப்படுத்துவதற்கான உதவிகளை வழங்கும் நாடுகளுக்கு வேறு நோக்கங்கள் இருப்பதாகவே தெரிகிறது.

இலங்கைக் கடற்படையுடன் நெருக்கமான உறவுகளை ஏற்படுத்திக் கொள்வதன் மூலம் தமது பூகோள அரசியல் நலன்களை உறுதிப்படுத்திக் கொள்வதற்கு இந்த நாடுகள் முயற்சிக்கின்றன.

அமெரிக்காவைப் பொறுத்தவரையில் இந்தோ - பசுபிக் கடற்பிராந்தியத்தில் சீனாவை எதிர்கொள்வதற்கு கூட்டணிகள் தேவை. அதன் ஒரு அங்கமாக இலங்கையையும் இலங்கைக் கடற்படையையும் மாற்றிக் கொள்ள முனைகிறது.

இலங்கைக் கடற்படையில் மரைன் பற்றாலியனை உருவாக்கியது இப்போது அமெரிக்க கடலோரக் காவல்படையில் இருந்து ஓய்வு பெற்ற வியட்னாம் போர்க்காலத்து போர்க்கப்பலை கொடையாக வழங்குவது இருதரப்பு கூட்டுப் பயிற்சிகள் ஒத்துழைப்பு என்று இலங்கைக் கடற்படையை பலப்படுத்துவதற்கு நிறையவே ஒத்துழைப்புகளை வழங்கியிருக்கிறது.

இந்தியப் பெருங்கடல் சுதந்திரமான கப்பல் போக்குவரத்துக்கு ஏற்றதாக இருக்க வேண்டும் என்பதை இலங்கைக் கடற்படையின் மூலம் உறுதி செய்து கொள்வது அமெரிக்காவின் திட்டம்.

கிட்டத்தட்ட இதே நோக்கம் தான் ஜப்பானுக்கும் இருக்கிறது. இதற்காக ஜப்பானும் 30 மீற்றர் நீளமான இரண்டு போர்க்கப்பல்களை இலங்கைக்கு வழங்கியுள்ளது.

இந்தியாவைப் பொறுத்தவரையில் போர்க்கப்பல்களை வழங்குவது புதிதான ஒரு விடயமாக இல்லாவிடினும் இலங்கை எப்போதும் தன்னுடனேயே இருக்க வேண்டும். தனக்கு எதிரான நாடுகள் இலங்கையைப் பயன்படுத்திக் கொண்டு விடக் கூடாது என்பதற்காக உதவிகளை வழங்குகிறது.

குறிப்பாக இலங்கையில் சீனா காலூன்றுவதை தடுப்பதற்காக பல வேளைகளில் இந்தியா வலிந்து சென்று உதவி வருகிறது.

சீனாவுக்கோ இந்தியப் பெருங்கடலின் மீதான அதிகாரத்தை உறுதிப்படுத்தும் ஆர்வம். ஆனால் அதனை வெளிப்படுத்துவதில்லை.

ஆபிரிக்க கண்டத்தின் கேந்திர முக்கியத்துவம் மிக்க முனையான டிஜி போட்டியில் தனது முதலாவது கடல் கடந்த தளத்தை நிறுவிவிட்ட சீனாவுக்கு இந்தியப் பெருங்கடல் வழியாக அதற்கான விநியோகங்களை உறுதிப்படுத்துவதற்குப் பாதுகாப்பும் தேவை.

அதற்கான ஒரு தளமாக இலங்கையைப் பயன்படுத்திக் கொள்வதற்காக சீனா முடியுமான வழிகளில் எல்லாம் இலங்கைக்கு உதவிக் கொண்டிருக்கிறது.

கடற்படையில் முன்னர் சீனப் பீரங்கிப் படகுகள் தான் பிரபலம். ஆனால் இப்போது கடற்படை்யில் சீனக் கப்பல்கள், படகுகளில் ஆதிக்கம் குறைந்து விட்டது.

இந்த நிலையில் சீனா ஒரு போர்க்கப்பலை இலங்கைக்கு வழங்கப் போவதாக கூறியிருக்கிறது. ஆனால் அது புதியது அல்ல. சீனக் கடற்படை பயன்படுத்திக் கழிக்கப்பட்டது. 100 மி்மீற். பீரங்கியுடன் கூடியதாக அந்தப் போர்க்கப்பல் இருக்கும் என்றொரு தகவலும் உள்ளது.

இதுதவிர மேலும் சில போர்க்கப்பல்களை சீனா வழங்கினாலும் ஆச்சரியப்பட முடியாது என்று சீனாவின் பாதுகாப்பு ஆய்வாளர் Zhou Chenming சவுத் சைனா மோர்னிங் போஸ்ட்டிடம் தெரிவித்திருக்கிறார்.

சீனாவின் இந்தப் போர்க் கப்பல் இந்தியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என்பது போல இந்திய ஊடகங்கள் சில செய்திகளை வெளியிட்டன. ஆனால் இந்த ஒற்றைக் கப்பலினால் எதையும் செய்து விட முடியாது. கடற்கொள்ளை எதிர்ப்பு நடவடிக்கைக்குத் தான் அதனைப் பயன்படுத்த முடியும் என்றும் Zhou Chenming குறிப்பிட்டுள்ளார்.

அவுஸ்திரேலியாவும் இலங்கைக் கடற்படைக்கு உதவுகிறதென்றால் அதற்கும் ஒரு காரணம் உள்ளது. ஜப்பான், அமெரிக்கா போன்று சுதந்திரமான கப்பல் போக்குவரத்தை உறுதிப்படுத்தும் நோக்கத்துடன் தனது நாட்டுக்குப் படையெடுக்கும் அகதிகளைத் தடுப்பதற்கான உதவிக்காகவும் அந்த நாடு இலங்கையிடம் கையேந்துகிறது.

இவ்வாறாக ஒவ்வொரு நாடும் ஒவ்வொரு நோக்கத்தை அடைவதற்காகத் தான் இலங்கைக் கடற்படையைப் பலப்படுத்துவதற்கு உதவிகளை வழங்கி வருகின்றன.

இது ஒரு சிக்கலான சூழ்நிலை. எல்லா நாடுகளினதும் தேவைகளை இலங்கைக் கடற்படையினால் நிறைவேற்ற முடியாது.

பூகோள அரசியலின் போக்கு மாற்றமடையும் போது இப்போது வளங்களை அள்ளிக் கொடுக்கின்ற நாடுகளே இலங்கைக் கடற்படைக்கு நெருக்கடிகளைக் கொடுப்பனவாகவும் மாறக் கூடும்.

இலங்கைக் கடற்படையின் முன்னாள் தளபதியான அட்மிரல் ஜயந்த கொலம்பகே இதனை ஒரு எச்சரிக்கையாகவே விடுத்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.