ஒரு நாட்டின் வரலாற்றையே அஸ்தமிக்க செய்த அமெரிக்கா! கொடூர அழிவை ஏற்படுத்த காரணம் இதுவே

Report Print Dias Dias in கட்டுரை

என்ன தவறுகள் செய்தோம்? எதற்காக இவ்வளவு பெரிய தண்டனை? வாழும் போதே நரகத்தை கண்டுவிட்டோம். இந்த நாட்டில் பிறந்தவர்கள் மட்டுமன்றி இனி பிறக்கப்போகும் குழந்தைகளுக்கும் தண்டனை எதற்கு?

இனி ஒரு போதும் மனிதர்களாய் பிறக்கவே கூடாது. இப்படித்தான் எண்ணியிருப்பான் அன்றைய நாளில் மரணத்தின் விளிம்பில் ஜப்பானில் வாழ்ந்த ஒவ்வொரு மனிதனும்.

உலகையே அதிர வைத்த 2ஆம் உலகப்போரின் மிகப்பெரிய தாக்குதல் எதுவென்றால் கட்டாயம் 1945இல் ஹிரோசிமா, நாகசாகி ஆகிய நகர்கள் மீது நடத்தப்பட்ட அணுகுண்டு தாக்குல் என்றே அனைவரும் கூற வேண்டும்.

லிட்டில் போய் எனப்படும் அணுகுண்டு வீச்சினால் அன்றைய ஜப்பான் நாடே கதிகலங்கி நின்றது. ஆனால் அத்தகைய மிகப்பெறும் சக்தி வாய்ந்த அணுகுண்டு ஜப்பான் மீது தொடுக்கப்பட்டதற்கான காரணம் என்ன?

உலகப்போரில் பங்குப்பற்றிய எத்தனையோ நாடுகளில் அமெரிக்காவுக்கு ஜப்பான் மீது மட்டும் தனிப்பட்ட கோபம் எதற்கு? ஹிரோசிமா மீது கொடூர தாக்குதல் நடத்தப்பட்டு நேற்றுடன் 73 ஆண்டுகளாகிவிட்டது.

இந்த நிலையில் குறித்த தாக்குதல் பற்றிய விடயங்களை உலகில் வாழும் ஒவ்வொரு மனிதனும் தெரிந்து வைத்திருப்பது மிக முக்கியமாகும்.

கடந்த 1937ஆம் ஆண்டு ஜப்பான், சீனாவின் மஞ்சூரியாவை கைப்பற்றிய பிறகு காரணங்கள் கேட்காமல் இலட்சக்கணக்கான மக்களை கொன்று குவித்தது.

மனிதர்களை உயிருடன் புதைப்பதற்கென்றே பாரிய அளவிலான குழியொன்றையும் தன்னகம் வைத்திருந்தது ஜப்பான். இதன்போது கர்ப்பிணி பெண்களும் கூட இரக்கமின்றி படுகொலை செய்யப்பட்டனர்.

1941ஆம் ஆண்டு ஜூலையில் ஜப்பான், இந்தோனேசியா மற்றும் சீனா, கிழக்கு ஆசியா போன்ற இடங்களை ஆக்கிரமித்த பிறகு அதுவரையில் போரில் கலந்து கொள்ளாத அமெரிக்கா ஜப்பானின் மீது பொருளாதார தடையை விதித்தது.

இதை பொறுக்க முடியாத ஜப்பான், டிசம்பர் 7, 1941 அன்று ஜப்பானியர்கள், வாஷிங்டனுடன் உடன்படிக்கை தொடர்பாக பேசிக் கொண்டிருக்கும் சமயம் அமெரிக்காவின் கப்பற்தளங்களில் ஒன்றான பேர்ல் ஹார்பரை தாக்கியது.

பேர்ல் ஹார்பர் சம்பவத்திற்கு பிறகு அமெரிக்கா, பிரித்தானியாவின் உதவியுடன் உக்கிரமாக உலகப்போரில் இறங்கியது. ஜப்பான் மீது பலமுறை அமெரிக்கா தாக்குதல்களை தொடுக்க ஆரம்பித்தது.

நீயா? நானா? என்ற போட்டியில் நானே என்று அமெரிக்கா நிரூபிக்க வேண்டிய கட்டாயம். இந்த சந்தர்ப்பத்திலேயே உலகில் பொருளாதார வளமிக்க இடங்களாக ஜப்பானின் ஹிரோசிமா, நாகசாகி காணப்பட்டன.

ராபர்ட் ஜே ஆப்பன்ஹைமர் தலைமையில் நாட்டில் தலைச்சிறந்த அணு விஞ்ஞானிகளைக் கொண்டு அமெரிக்காவில் ஒரு இரகசிய அணு ஆயுத வடிவமைப்பு நடந்து கொண்டிருந்தது.

கடுமையான ஆராய்ச்சியின் பலனாக யூரேனியம் - 235, ப்ளுட்டோனியம் போன்ற கனிமங்களை பிளந்து சங்கிலி தொடர் வினைகளின் மூலம் எண்ணி பார்க்க முடியாத அளவு சக்தி உண்டாக்க முடியுமென கண்டறிந்தனர்.

1945ஆம் ஆண்டு ஜூலை 16 ப்ளூட்டோனியம் கொண்டு தயாரிக்கப்பட்ட ‘லிட்டில் போய்’என்ற முதல் அணு ஆயுதம் தயாரிக்கப்பட்டது. சோதனை முயற்சியாக அன்று நியூமெக்ஸிகோவில் ட்ரினிட்டி (Trinity) என்ற பெயரில் வெடிப்பு நிகழ்த்தினார்கள்.

உயரே கிளம்பிய காளான் புகையும், வெளிச்சமும், வெடி அதிர்வும் பல மைல்களுக்கு அப்பால் இருந்த விஞ்ஞானிகளையும் மூச்சடைக்க வைத்தது. அந்த அளவு சக்தியின் வெளிப்பாடு எங்கேயும் அவர்கள் கண்டதில்லை.

அமெரிக்காவுக்கு ஜப்பானால் நெருக்கடி அதிகமாகி கொண்டே போனது. ஜப்பானை வென்று ஆக்கிரமிக்கும் வரை இரண்டாம் உலகப்போருக்கு முடிவு வராது என புதிதாக பதவிக்கு வந்திருந்த அதிபர் ட்ரூமென் கணக்கு போட ஆரம்பித்தார்.

வழக்கமான வழியில் சென்று போரிட்டு வென்றால் பல ஆயிரத்திற்கும் மேற்பட்ட அமெரிக்கர்களை இழக்க வேண்டிவரும் என்று எண்ணினார்.

அதற்கு ஒரே தீர்வு அணு ஆயுதத்தை ஜப்பானுக்கு எதிராக பயன்படுத்துவது. மன்காட்டன் அணு ஆயுதத்தை பயன்படுத்துவதற்கு பயங்கர எதிர்ப்பு இருந்தது. 2 பில்லியன் செலவழித்து தயாரிக்கப்பட்ட ஆயுதம் வெறுமனே உறங்கிக் கொண்டிருக்க முடியுமா?

எனவே ஜப்பானுக்கு முன்னெச்சரிக்கை கொடுக்காமல் ஜப்பானின் சில முக்கிய நகரமான க்யாட்டோ, ஹிரோஷிமா, யோககாமா, கோகுரா போன்ற நகரங்களை அணு ஆயுதத்தால் தாக்க அமெரிக்கா பட்டியலிட்டது.

கடைசியில் ஹிரோஷிமா தான் முதல் குறி என்று தீர்மானிக்கப்பட்டது. கர்னல் பால் திப்பெட் (Paul tibbets) கமெண்டராக நியமிக்கப்பட்டார். ஆகஸ்ட் 6, 1945 என்று தாக்குதலுக்கு நாளும் குறிக்கப்பட்டது.

திப்பெட் தலைமையில் புறப்படும் குழுவிற்கு அதுவரை அணுகுண்டு என்றால் என்ன? அதன் விளைவு என்ன? என்று தெரியாது.

மன்காட்டன் விஞ்ஞானிகள் விளக்கம் கொடுக்க வந்த போது சோதனை அணுகுண்டு வெடிப்பு பற்றிய படத்தை, ப்ரொஜெக்டர் வேலை செய்யாததால் போட்டு காட்ட முடியவில்லை.

எனினும் விஞ்ஞானிகள் விளக்கியதிலிருந்தும், புகைப்படங்களிலிருந்தும் நடக்க போகும் விபரீதத்தை அறிந்து உறைந்து போனார்கள். குண்டு போட்டவுடன் போர் விமானத்தை அதிர்வலை தாக்கும் என்பதால் எப்படி தப்பிப்பது போன்ற பயிற்சிகள் கொடுக்கப்பட்டன.

வானம் தெளிவாக இருந்தததால் ஹிரோஷிமாவின் நடுவில் உள்ள T வடிவில் உள்ள அயோய் பாலத்திற்கு குறி வைத்து சரியாக ஹிரோஷிமா நேரப்படி காலை 8:15இற்கு அணுகுண்டு விமானத்திலிருந்து ஹிரோசிமா நோக்கி விடுவிக்கப்பட்டதாக தகவல்கள் காணப்படுகின்றன.

குறித்த சந்தர்ப்பத்தில், 18,000 அடி உயரத்தில் அணுகுண்டு தன்னால் எரியூட்டப்படுகிறது. விமானம் திரும்பி பாரிய வேகத்தில் வந்த வழியில் விரைகிறது. 43 நொடிகளில் ஒளி விமானத்தை நிரப்புகிறது.

ஊதா, சிவப்பு கலவையினூடே கருப்பு நிறத்தில் காளான் வடிவில் அடர்த்தியான புகை ஹிரோசிமா நகரையே மறைக்கிறது. ஒரே நிமிடத்தில் 20,000 அடி உயரத்தை அடைந்த காளான் புகை சற்று நேரத்தில் 30,000 அடிக்கு உயர்கிறது.

திப்பெட் விமானத்தில் அறிவிக்கிறார் “முதல் அணுகுண்டை வெடித்து விட்டோம்” என்று. ஆனால் அன்றைய தினம் ஜப்பானின் மொத்த வரலாறுமே அஸ்தமித்துப்போனது. ஒரு நாடே மௌனித்து போனது ஒரு நிமிடத்தில்..

உலகம் சந்திக்காத கொடூர அழிவொன்றை 1945இல் ஜப்பான் சந்தித்தது. உடல் உறுப்புகளை இழந்து உடமைகளை இழந்து மக்கள் நிர்க்கதியான அவல வரலாறு இது.

இந்த ரணம் ஆறுவதற்கு முன் நாகசாகி மீது இன்னுமொரு அணுகுண்டு வீசப்பட்டது. மனிதர்கள் மீது அசுர வேகத்தில் அணுகுண்டு பாய ஆற்ற முடியாத காயங்களுடன் மரணித்து போனவர்கள் ஆயிரக்கணக்கானோர். இதன் காரணமாக 1945 ஆகஸ்ட் 15 ஜப்பான் அமெரிக்காவிடம் சரணடைந்தது.

அதன் பின் கொஞ்சம், கொஞ்சமாக மீண்டெழுந்த ஜப்பான் இன்று உலகின் வல்லரசு நாடுகளில் ஒன்று. இருப்பினும் லிட்டில் போயின் தாக்கம் இன்றும் ஜப்பானில் தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றது.

Latest Offers