யாழ்ப்பாணத்திற்கு அச்சுறுத்தலாக மாறியிருக்கும் குள்ள மனிதர்கள்! பின்னணியில் மறைந்திருப்பது என்ன?

Report Print Jeslin Jeslin in கட்டுரை

யாருக்கும் தலை வணங்கா தன்னிகரில்லா தமிழன் தேசம் யாழ்ப்பாணம், மங்கா புகழும், மடியா வீரமும் தலைமுறைகள் தாண்டியும் யாழ். மண்ணின் புகழ் எடுத்துரைக்கும்.

இத்தனை புகழுக்கு சொந்தமான யாழ். மண்ணில் அண்மைக்காலங்களாக நடக்கும் அசம்பாவிதங்கள் வியப்பை ஏற்படுத்துவதுடன், மர்மத்துடன் கூடிய ஓர் அச்சநிலையையும் மக்கள் மத்தியில் தோற்றுவித்துள்ளது.

யாழில் வாள்வெட்டுக்கள் அதிகரித்தன, போதைப்பொருள் பாவனைகள் அதிகரித்தன, அதன் விளைவாக பல துஸ்பிரயோக சம்பவங்களும் அரங்கேறின, உலகையே யாழ். மண் நோக்கி திரும்பிப்பார்க்க வைத்த அளவில் கொடூரங்களும் அரங்கேறின.

ஆனால், தற்போது அதனையும் விஞ்சும் அளவிற்கு யாழ். மண்ணில் பேய், பிசாசுகளின் நடவடிக்கை உள்ளதாகவும், விசித்திர குள்ள மனிதர்களின் நடமாட்டம் இருப்பதாகவும் மக்கள் மத்தியில் ஒரு செய்தி பரவி வருகின்றது.

பேய், பிசாசுகள், விசித்திர குள்ள மனிதர்கள் என்பதெல்லாம் உண்மையா? அல்லது நடைமுறையில் சாத்தியமானதா என்பது பலரது கேள்வி.

இது இவ்வாறு இருக்க உண்மையிலேயே உலகத்தில குள்ள மனிதர்கள் இனம் ஒன்று வாழ்ந்துள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

இவர்கள் பேய், பிசாசு வகைகளைச் சேர்ந்தவர்கள் அல்லர் மாறாக அற்புதத்தீவு என்னும் தமிழ்த் திரைப்படத்தில் காண்பிக்கப்படும் குள்ள மனித வகையினரைச் சார்ந்தவர்கள் எனலாம்.

வியப்பாகத்தான் இருக்கும் இந்த குள்ள மனிதர்கள் தொடர்பில் கேட்க,

இவர்களைப்பற்றி கதைகளில் படித்துள்ளோம், கார்ட்டூன்களில் பார்த்துள்ளோம், ஆனால் இவர்கள் தொடர்பில் அறிந்தவர் எம்மில் எத்தனைப்பேர்?

இந்தோனேசியாவின் கிழக்குப் பகுதியில் உள்ள ஓர் தீவுதான் ப்ளோரஸ் தீவு, இந்த தீவு காடுகள், மலைகள் மற்றும் மர்மங்கள் சூழ்ந்த அபூர்வ தீவு எனவும் வர்ணிக்கப்படுகின்றது.

இந்த ப்ளோரஸ் தீவினுடைய அழகுடன் அறிவியல் அதிசயங்களும் பொதிந்துள்ளன. இந்த தீவில் வாழ்ந்த பழங்குடி மக்கள் நெல்லிஸ்குயா என்று அழைக்கப்பட்டுள்ளனர்.

மிகவும் பழைமை வாய்ந்த பழங்குடியினரின் பட்டியலில் இந்த நெல்லிஸ்குயா இனத்தவர்க்கும் இடமுண்டு.

பழங்குடியினரின் வாழ்க்கைத் தொடர்பில் ஆராய்ச்சிகளை மேற்கொள்ள உலக ஆராய்ச்சியாளர்கள் ப்ளோரஸ் தீவை அதிகம் நாடுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இவ்வாறு ஆராய்ச்சிக்காக செல்லும் ஆராய்ச்சியாளர்களுக்கு அங்குள்ள மக்கள் விசித்திர குள்ள மனிதர்கள் கதைகளையும் கூறிவருகின்றனர்.

ப்ளோரஸ் மலைக்குப் பின்னால் விசித்திர குள்ள மனிதர்கள் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள், அவர்களது கண்கள் பெரிதாகவும், உடல் முழுதும் உரோமங்களும் காணப்படும் என அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர் அல்லது நம்புகின்றனர் என்றுகூட குறிப்பிடலாம்.

மேலும், இந்த குள்ள மனிதர்கள் புரியாத மொழிகள் பல பேசுவதுடன், அடிக்கடி கிராமத்திற்குள் புகுந்து பழங்கள், பயிர்கள் என பல உணவுப்பொருட்களை திருடிக்கொண்டு செல்வதை அவதானித்திருப்பதாக ஆராய்ச்சியாளர்களிடம் பழங்குடி கிராம மக்கள் பல கதைகளை தெரிவிக்கின்றனர்.

இது போன்ற கதைகள் வெறும் வாய்ப்பேச்சளவில் மாத்திரமே சொல்லப்பட்டு வந்தது, எனினும் 2003ஆம் ஆண்டிற்கு பின்னர் இந்த கதைகள் அனைத்தும் ஒரு வரலாற்றுச் சுவடாக மாறியுள்ளது.

2003ஆம் ஆண்டு நெல்லிஸ்குயா மக்கள் வாழ்ந்து வரும் பழங்குடி கிராமத்திற்கு சற்றுத் தொலைவில் ஒரு மர்ம குகை ஒன்று ஆராய்ச்சியாளர்களால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்கா, அவுஸ்திரேலியா மற்றும் இந்தோனேசியா உள்ளிட்ட நாடுகளில் உள்ள தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் குழுவினால் குறித்த குகை ஆராயப்பட்டுள்ளது.

அப்போது அந்த குகையில் இருந்து சிறிய உருவத்திலான எலும்புக்கூடுகளுடன் பல மிருகங்களில் எலும்புக்கூடுகளையும் கண்டுபிடித்துள்ளனர்.

ஆரம்பத்தில் கண்டுபிடிக்கப்பட்ட எலும்புக்கூடு ஒரு சிறிய குழந்தையின் எலும்புக்கூடாக இருக்கலாம் என சந்தேகிக்கப்பட்டது எனினும், பழங்குடியினர் தெரிவித்த கதைகளுடன் ஒப்பிட்டுப் பார்த்த போது இந்த எலும்புக்கூடு சிறிய குழந்தையுடையது அல்ல என்ற சந்தேகமும் ஆராய்ச்சியாளர்கள் மத்தியில் தோன்றியுள்ளது.

அதன் பின்னர் கண்டுபிடிக்கப்பட்ட எலும்புக்கூட்டை முழுவதுமாக ஆராய்ந்தனர், அதில், இதுவரை யாரும் அறியாத புதிய மானிட இனத்தின் எலும்புக்கூடுகள் அவை என அறிந்தனர். அத்துடன் அந்த எலும்புக்கூடு சுமார் 30 வயதுடைய ஒரு பெண்ணுடையதாகவிருக்கலாம் எனவும் அவர்கள் கண்டுபிடித்தனர்.

விரிவான ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டபோது குறித்த விசித்திர மனிதர்களின் மொத்த உயரமே 3 அடிதான், அதாவது 3 வயது குழந்தை ஒன்றின் அளவுதான், அத்துடன் இவர்களது மொத்த உடல் எடை 25கிலோ கிராம் மாத்திரமே இருக்கும் என கண்டறியப்பட்டது.

அத்துடன், அவர்களது மூளை அமைப்பு மிகவும் சிறியதாகவும் சிக்கலானதாகவும் இருந்திருக்கும் என அந்த ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்திருந்தனர்.

இருப்பினும் இந்த சிறிய மூளை அமைப்பை கொண்டே வேட்டையாடுதல், பதுங்கியிருந்து தாக்குதல், கூர்மையான ஆயுதங்களை பயன்படுத்தல் போன்ற பல செய்கைகளை அவர்கள் மேற்கொண்டுள்ளனர்.

மேலும், கண்டுபிடிக்கப்பட்ட எலும்புக்கூடு சுமார் 18,000 ஆண்டுகளுக்கு முற்பட்டது என்றும், மனித வரலாற்றில் இந்த 18,000 ஆண்டுகள் என்பது மிக நெருக்கமான ஒன்றுதான் என்றும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இதன் காரணமாக இந்த குள்ள மனிதர்கள் இன்றும் கூட அடர்ந்த காட்டுப்பகுதிகளில் வாழ்ந்து வரக்கூடிய சாத்தியப்பாடுகள் நிலவுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன் இந்தியா மற்றும் இலங்கை போன்ற நாடுகளிலும்கூட இது போன்ற குள்ள மனிதர்கள் வாழ்ந்திருக்கக்கூடும் என்றும் இந்த நாடுகளிலும் இது போன்ற மனித எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டுள்ளன என்றும் ஆராய்ச்சியாளர் டாக்டர் ரிச்சர்ட் ராபர்ட் என்பவர் தெரிவித்துள்ளார் என பதிவு ஒன்று குறிப்பிடுகின்றது.

ஆக இலங்கையில் குள்ள மனிதர்கள் வாழ்ந்து வந்தனர் அல்லது வருகின்றனர் என்ற கருத்தும் வலுப்பெறுகின்றது.

இவ்வாறான பின்னணியில் தற்போது யாழ்ப்பாணத்தில், குள்ள மனிதர்களின் நடமாட்டம் இருப்பதாக சமீப காலமாக பேசப்பட்டு வருகின்றது.

இது ஆதாரபூர்வமாக இதுவரையில் நிரூபிக்கப்படாத போதிலும், யாழ். வட்டுக்கோட்டை அராலிப் பகுதி மக்கள் குள்ள மனிதர்கள் போன்ற உருவத்தினை கண்டதாக தெரிவித்துள்ளனர்.

இவ்வாறான உருவங்கள் இரவு நேரங்களில் ஆள் அரவமில்லாத பிரதேசங்களில் அலைந்து திரிவதாகவும் வீடுகள் மீது கல்லெறித் தாக்குதல் நடத்துவதாகவும் கூறுகின்றனர்.

இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறும் போதெல்லாம் பொலிஸாரும் அப்பகுதிகளுக்கு சென்றுதான் வருகின்றனர். எனினும் பொதுமக்கள் மாத்திரமே இவ்வாறு குள்ள மனிதர்கள் இருப்பதாக தெரிவித்து வருகின்றன நிலையில் பொலிஸார் இதனை முற்றிலும் மறுத்தே வருகின்றனர்.

ஆகையினால் இது குறித்த உண்மைத்தன்மையினை ஆராய்ந்து பார்க்க வேண்டிய கட்டாயத் தேவையும் ஏற்பட்டிருக்கின்றது.

ஏனெனில், கடந்த காலங்களில் தென் இலங்கை மற்றும் மலையக பகுதிகளில் கிறீஸ் மனிதர்களுடைய அச்சுறுத்தல் காணப்பட்டது, கிறீஸ் மனிதர்களின் பின்னணி குறித்து அப்போது பல்வேறு கருத்துக்கள் முன்வைக்கப்பட்டு வந்தன.

இவ்வாறான பின்னணியைக் கொண்டு தற்போது யாழ்ப்பாணத்தை அச்சுறுத்தி வரும் குள்ள மனிதர்கள் குறித்தும் அவர்களின் பின்னணி குறித்தும் ஆராய்ந்து பார்க்க வேண்டியது காலத்தின் கட்டாயமாகும்.