கூட்டமைப்பை இல்லாமல் ஆக்குதல்

Report Print Habil in கட்டுரை

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை விடுதலைப் புலிகளின் இன்னொரு வடிவமாக, அழிக்கப்பட்டு விட்ட ஒரு இராணுவ அமைப்பின் அரசியல் எச்சமாகவே பார்க்கின்ற போக்கு, இப்போது வரை தென்னிலங்கையில் இருக்கிறது.

விடுதலைப் புலிகளின் கொள்கையை- அவர்களின் தனிநாட்டுக் கோரிக்கையை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முன்னெடுத்துச் சென்று விடுமோ என்பது தான், சிங்களத் தேசியவாத சக்திகள் முன்பாக இருக்கின்ற பிரச்சினை

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை இல்லாமல் ஆக்குதல் என்பது, ஒரு பரந்துபட்ட அரசியல் நிகழ்ச்சி நிரலாக முன்னெடுக்கப்படுகிறதா என்ற சந்தேகம் பரவலாக ஏற்பட்டிருக்கிறது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை இல்லாமல் ஆக்குவதற்கு யார் முயற்சிக்கிறார்கள்- ஏன் அவ்வாறு அவர்கள் முயற்சிக்க வேண்டும் என்பதை அறிந்து கொள்ளாமல் இத்தகையதொரு சந்தேகம் குறித்து எந்த கேள்வியையும் எழுப்புவதில் அர்த்தமில்லை.

இன்றைய நிலையில் யார் விரும்பினாலும் சரி, விரும்பாவிட்டாலும் சரி, தமிழ் மக்களின் அரசியல் பிரதிநிதிகளாக பார்க்கப்படுவது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தான்.

பாராளுமன்றத்திலும், வடக்கு மாகாணசபையிலும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கொண்டிருக்கின்ற அரசியல் பலம் இந்த தகைமையைக் கூட்டமைப்புக்குக் கொடுத்திருக்கிறது.

தமிழ் மக்களின் அரசியல் பிரதிநிதிகளாக மாத்திரமன்றி, விடுதலைப் புலிகளால் உருவாக்கப்பட்ட, அவர்களால் ஏற்றுக் கொள்ளப்பட்டு ஆசீர்வதிக்கப்பட்ட ஒரு அரசியல் அமைப்பாகவும் கூட்டமைப்பு இருப்பது தான் இதன் முக்கியமான தகைமை எனலாம்.

2009ஆம் ஆண்டு விடுதலைப் புலிகள் இயக்கம் தோற்கடிக்கப்பட்ட பின்னர், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தான், தமிழ் மக்களின் பிரதிநிதிகளாக மாறியது.

விடுதலைப் புலிகள் இயக்கம் பலமாக இருந்த போது கூட, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இருந்தது. அவர்களுக்குப் பின்னரும் அது இருக்கிறது. ஆனால் இனிமேலும் அதே நிலையில் இருக்குமா என்பது தான் கேள்வி.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை விடுதலைப் புலிகளின் பதில் அமைப்பாகவே, மஹிந்த ராஜபக் ஷ அரசாங்கம் பார்த்து வந்தது. சிங்களத் தேசியவாத சக்திகள் அனைத்துமே அதே பார்வையைத் தான் கொண்டிருக்கின்றன. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை விடுதலைப் புலிகளின் இன்னொரு வடிவமாக, அழிக்கப்பட்டு விட்ட ஒரு இராணுவ அமைப்பின் அரசியல் எச்சமாகவே பார்க்கின்ற போக்கு, இப்போது வரை தென்னிலங்கையில் இருக்கிறது.

விடுதலைப் புலிகளின் கொள்கையை- அவர்களின் தனிநாட்டுக் கோரிக்கையை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முன்னெடுத்துச் சென்று விடுமோ என்பது தான், சிங்களத் தேசியவாத சக்திகள் முன்பாக இருக்கின்ற பிரச்சினை.

சமஷ்டியை கோரினாலும் சரி, அதிகாரப் பகிர்வை வலியுறுத்தினாலும் சரி, அரசியலமைப்பு மாற்றத்தைக் கோரினாலும் சரி, எதனைக் கூட்டமைப்பு முன்னெடுத்தாலும், பிரபாகரனால் ஆயுதப் போராட்டத்தின் மூலம் முடியாது போன ஈழத்தை, சம்பந்தன் அரசியல் ரீதியாக அடைய முயற்சிக்கிறார் என்ற குற்றச்சாட்டு கூறப்படுவது வழக்கம்.

உண்மையில், விடுதலைப் புலிகளின் கொள்கைக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கொள்கைக்கும் எந்த ஒற்றுமையும் கிடையாது.

புலிகள் விட்டுச் சென்ற கொள்கையை முன்னெடுத்துச் செல்லும் நோக்கமும் அதற்குக் கிடையாது.

அதைவிட, சிங்களத் தேசியவாதிகள் அஞ்சுகின்றதைப் போல, எந்தக் காரியத்தையும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு செய்து விடவும் இல்லை.

ஆனாலும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை ஒரு பயங்கரமான பூதமாக உருவகப்படுத்துவதில் சிங்கள பௌத்த பேரினவாத சக்திகள் கவனம் செலுத்தி வருகின்றன.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை உடைப்பது, அதற்குள் குழப்பத்தை ஏற்படுத்துவது எல்லாமே, ஒருங்கிணைந்த ஒரு நிகழ்ச்சி நிரலின் கீழ் முன்னெடுக்கப்படுகின்றன.

விடுதலைப் புலிகளால் நேரடியாகவோ மறைமுகமாகவோ உருவாக்கப்பட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தொடர்ந்தும், தமிழ் மக்களின் அரசியல் பிரதிநிதிகளாக இருப்பது சிங்கள பௌத்த பேரினவாக அரசியல் சக்திகளுக்கு ஒரு இடைஞ்சலான விடயமாகவே இருக்கிறது.

கூட்டமைப்பின் கொள்கையும் செயற்பாடுகளும், சிங்கள பௌத்த பேரினவாத அரசியல் சக்திகளுக்கு இடையூறாக இல்லாவிட்டாலும், அவர்கள் அழிக்க விரும்புவது, விடுதலைப் புலிகளின் வழி வந்த அரசியலைத் தான்.

எந்த இடத்திலும் விடுதலைப் புலிகளின் அடையாளம் இருந்து விடக் கூடாது என்பது தான் அவர்களின் கொள்கை, நோக்கம். அவர்களே அவ்வப்போது விடுதலைப் புலிகளை நினைவுபடுத்திக் கொள்கிறார்கள் என்பது வேறு விடயம்.

தமிழர் தரப்பில் யாரும், விடுதலைப் புலிகள் பற்றியோ, அவர்களின் காலத்தைப் பற்றியோ பேசி விட்டால், அது சிங்கள பெளத்த பேரினவாதிகளுக்கு கோபத்தையும் எரிச்சலையும் ஏற்படுத்துகிறது.

அப்படியான நிலையில், விடுதலைப் புலிகளால் உருவாக்கப்பட்ட அல்லது அவர்களின் அரசியல் பிரதிநிதிகளாக இயங்கிய – தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, தொடர்ந்தும் அதே தளத்துடன் செயற்படுவது தான் அவர்களுக்குக் கோபம்.

புலிகளைப் போலவே, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பையும் இல்லாமல் செய்து விட வேண்டும் என்பது அவர்களின் கனவு.

விடுதலைப் புலிகளின் காலத்தில் உருவாக்கப்பட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை உடைத்து விட்டால், தமிழ்க் கட்சிகள் உதிரிகளாக்கப்பட்டு விடும். தமிழ்க் கட்சிகளோடு, சிங்களத் தேசியவாதக் கட்சிகளும் அந்த வெற்றிடத்தைப் பங்கு போட்டுக் கொள்ளும்.

அதற்குப் பின்னர், தமிழ் மக்களின் அரசியல் பிரதிநிதிகள் என்று யாரும் கை காட்டப்பட முடியாத நிலை தோற்றுவிக்கப்படும். அது தமிழ்த் தேசிய இனத்தின் உரிமைக்கான ஒட்டுமொத்த குரலை இல்லாமல் செய்து விடும்.

சிங்கள பெளத்த பேரினவாத சக்திகளைப் பொறுத்தவரையில், தமிழர் தரப்பு- நிறுவனமயப்படுத்தப்பட்ட ஒரு கட்டமைப்பாக இருப்பதை விரும்பவில்லை

விடுதலைப் புலிகளுடன் அதற்கு முற்றுப்புள்ளி வைத்து விடலாம் என்று அவர்கள் எதிர்பார்த்தார்கள். ஆனால் விடுதலைப் புலிகளுக்குப் பின்னரும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஊடாக அந்தக் கட்டமைப்பு தொடர்வது அவர்களுக்கு இடையூறாக இருக்கிறது.

அதற்காக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நிறுவனமயப்படுத்தப்பட்ட கட்டமைப்பாக இருக்கிறதா- அது எதனைச் சாதித்தது என்றெல்லாம் கேள்வி எழுப்ப வேண்டியதில்லை. ஏனென்றால் கூட்டமைப்பு அதனைச் செய்யவில்லை.

ஆனாலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்ற பெயர், ஒரு அரசியல் பிரதிநிதியாக நிலைத்திருக்கிறது. சர்வதேச சமூகத்தினால் அங்கீகரிக்கப்பட்டிருக்கிறது.

நடைமுறை ரீதியாக இல்லாவிட்டாலும், கூட்டமைப்பு ஒரு நிறுவன ரீதியாக கட்டமைக்கப்பட்ட வடிவமாக – தமிழர் தரப்பின் அரசியல் கட்டமைப்பாக தோற்றம் காட்டுகிறது. வெளியில் இருந்தும் பார்க்கப்படுகிறது.

அந்தநிலையை முற்றாக உடைத்து விடும் போது, ஏற்படக்கூடிய சாதக நிலை சிங்கள பௌத்த பேரினவாத சக்திகளுக்கு துணையாக இருக்கும்.

எனவே அவர்கள் கூட்டமைப்பை இல்லாமல் செய்வது தான் அவர்களின் முதன்மையான நோக்கமாக இருக்கிறது.

சிங்கள பௌத்த பேரினவாத தரப்புகளில் மாத்திரமன்றி, தமிழர் தரப்புக்குள்ளேயும் கூட அதே சிந்தனையுடன் இயங்குகின்ற தரப்புகள் இருக்கின்றன.

அவ்வாறு தமிழர் தரப்பில் உள்ள தரப்புகளில் கூட்டமைப்புக்குள் உள்ள- வெளியே உள்ள தரப்புகளும், உள்ளடங்கியிருக்க வாய்ப்புகள் உள்ளன.

இவர்கள் கூட்டமைப்பை புலிகளின் பதிலிகள் என்ற நிலையில் இருந்து நீக்க எத்தனிக்கிறார்கள். அவர்கள் இரண்டு வகையானவர்கள்.

அரசாங்கத்தைப் போலவே, விடுதலைப் புலிகளின் பெயரும் அடையாளமும் இல்லாமல் போய் விட வேண்டும் என்று எதிர்பார்ப்பவர்கள் ஒரு வகையினர்.

விடுதலைப் புலிகளால் உருவாக்கப்பட்டவர்கள் என்ற பெயரை வைத்துக் கொண்டு, தம்மை அரசியலில் தலையெடுக்க விடுகிறார்கள் இல்லை என்று எரிச்சல் கொண்டுள்ளவர்கள் இன்னொரு வகையினர்.

விடுதலைப் புலிகள் இருந்தபோது அவர்களை வசைபாடியவர்களில் பெரும்பாலானவர்கள் இப்போது அவர்களின் துதி பாடிக் கொண்டிருக்கிறார்கள் அல்லது அதற்குத் தயாராக இருக்கிறார்கள்.

அரசியலுக்காக அவ்வாறு செய்தாலும் உள்ளூர இவர்களுக்கு விடுதலைப் புலிகள் மீது வன்மமும் கோபமும் இருக்கிறது. அதனை வெளிப்படுத்தினால் தமது அரசியல் எதிர்காலம் பறிபோய் விடும் என்று அமைதி காக்கிறார்கள்.

அதேவேளை, புலிகளின் அடையாளத்துடன் கூட்டமைப்பு இருக்கும் வரை, தமது சுய அடையாளத்துடன் அரசியல் செய்ய முடியாது என்ற கவலையும் கோபமும் இவர்களுக்கு இருக்கிறது.

அதனால் எப்படியாவது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை இல்லாமல் செய்து விட வேண்டும் என்பது இவர்களின் நோக்கம். அதற்காக உள்ளே இருந்தும் பணியாற்றுகிறார்கள். வெளியே இருந்தும் பணியாற்றுகிறார்கள்.

அதுபோலவே, விடுதலைப் புலிகளால் உருவாக்கப்பட்டவர்கள் என்ற அடையாளத்தை வைத்துக் கொண்டு, கூட்டமைப்பு அரசியல் ஆதாயங்களை அடைவதால் இன்னொரு தரப்பினர் எரிச்சலடைந்து போயிருக்கிறார்கள்.

கூட்டமைப்பாக இருக்கும் வரை தான், இவர்களால் தாக்குப் பிடிக்க முடியும், கூட்டமைப்பை உடைத்து விட்டால், தாக்குப்பிடிக்க முடியாது என்பதை தெளிவாக உணர்ந்து கொண்டு, அதனை உடைப்பதற்கு இவர்கள் பகீரதப் பிரயத்தனம் எடுக்கிறார்கள்.

இங்கு குறிப்பிட்ட இரண்டு தரப்பினர் எனும் போது, கட்சிகள் மாத்திரமன்றி தனிநபர்களும் உள்ளடக்கம்.

இவ்வாறாக கூட்டமைப்பை உடைத்து ஒன்றுமில்லாமல் ஆக்கி விடுவதன் மூலம் ஆதாயங்களை அடைய சிங்கள பௌத்த அரசியல் சக்திகள் மாத்திரமன்றி தமிழர் தரப்பிலும் அரசியல் சக்திகள் செயற்படுகின்றன.

ஆனால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள் உள்ளவர்களைப் பொறுத்தவரையில் இதனை சரியாக விளங்கிக் கொள்ளும் நிலையில் இருப்பதாக தெரியவில்லை. அவர்களில் பலருக்கும் தனிப்பட்ட அரசியல் நிகழ்ச்சி நிரல் இருப்பதும் அதற்கு ஒரு காரணம்.

இவ்வாறான நிலையில் தான் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை உடைத்தல் என்பது பொது நிகழ்ச்சி நிரலாக மாறி வருகின்றது. ஆனாலும், அதனை பொது நிகழ்ச்சி நிரல் ஒன்றின் கீழ் எதிர்கொள்ளும் நிலையில், கூட்டமைப்பு இருப்பதாகத் தெரியவேயில்லை.

Latest Offers