மகிந்த அணி ஆட்சி அமைக்கும் நகர்வில் சிறுபான்மை கட்சிகளை கூட்டு சேர்க்கும் பணிகள் ஆரம்பம்!.

Report Print M.M.Nilamdeen M.M.Nilamdeen in கட்டுரை

தற்போது நாட்டில் எந்த தேர்தல் நடந்தாலும் அது மகிந்த அணிக்கே வெற்றி வாய்ப்பு அதிகம் என்பது சாதாரண குடி மகனுக்கும் தெரிந்த விடயமே.

அனைத்து சிறுபான்மை கட்சிகளும் மகிந்தவுடன் கைகோர்க்கும் என்பதில் சந்தேகம் இல்லை. கொஞ்சம் முன்கூட்டியே ஹக்கீம் மகிந்தவுடன் கை கோர்த்து விட்டார்.

மாகாண சபை தேர்தலை இழுத்தடித்து விட்டு 4 ஆண்டுகள் முடிந்த கையோடு அடுத்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் நாடாளுமன்றத்தை கலைத்து விட்டு, பொது தேர்தலை நடத்தும் நோக்கம் ஜனாதிபதிக்கு இருக்கின்றதாம்.

புதிய தேர்தல் மூலமாக சுதந்திரக்கட்சி ஆட்சி அமைக்கலாம் என்பது ஜனாதிபதியின் ஆசை.

அதன்படி, ஜனாதிபதி நாடாளுமன்றத்தை கலைத்து விட்டு, பொது தேர்தலை நடத்துவராயின் ஐக்கிய தேசியக்கட்சி ஆட்சி அமைக்கலாம் என்பது பிரதமர் ரணிலின் ஆசை.

இந்த இருவரும் பகல் கனவு கண்டு என்ன பிரயோசனம்? மகிந்த அணி பலமாகவே உள்ளது. மகிந்த அணி ஆட்சி அமைக்கும் நல்ல எதிர்காலமே நாட்டில் உள்ளது.

ஆனால் நாடாளுமன்றத்தை கலைத்து விட்டு, பொது தேர்தலை நடத்தினால் அது ஆபத்தில் முடிந்து விடும். எனவே அடுத்த ஆண்டில் மாகாண சபை தேர்தலை நடத்துவதுதான் நல்லது என்று ஜனாதிபதிக்கு அண்டை நாடு ஒன்று கடந்த வாரம் ஆலோசனை வழங்கியுள்ளதாம்.

நாடாளுமன்றத்தை கலைக்கும் ஜனாதிபதியின் முடிவுக்கு ஐக்கிய தேசியக்கட்சி, சுதந்திரக்கட்சி, தமிழ் தேசியக் கூட்டமைப்பு, ஹக்கீமின் முஸ்லிம் காங்கிரஸ், ரிஷாட் மற்றும் மனோ அணியினர் என யாருமே விருப்பம் தெரிவிக்கவில்லையாம்.

அதாவது நாடாளுமன்றத்தை கலைப்பதற்கு ஜனாதிபதி மற்றும் மகிந்த அணிக்கு மட்டுமே விருப்பம்.

அதனால் நாடாளுமன்றத்தை கலைக்கும் உறுதியான முடிவில் இருந்த ஜனாதிபதி, அடுத்த ஆண்டு பெப்ரவரி மாதமளவில் மாகாண சபை தேர்தலை நடாத்தும் முடிவுக்கு வந்து விட்டாராம். (இந்த முடிவு பின்னர் மாறலாம்)

இப்போது வேடிக்கை என்னவென்றால் பழைய முறையில் மாவட்ட வாரியான விகிதாசார தேர்தல் நடாத்துவது என்றாலும் 2/3 பெரும்பான்மை கொண்டு நாடாளுமன்றத்தில் புதிய திருத்தும் (சட்டம்) ஒன்றை சமர்ப்பித்து நிறைவேற்ற வேண்டும் .

இந்த சட்டம் வெற்றி பெற வேண்டுமானால் மகிந்த அணி முழு ஆதரவு கொடுக்க வேண்டும். அதற்காக மகிந்தவுடன் ஹக்கீம், மனோ கணேசன் ஆதரவு கோரியுள்ளார்கள்.

கைமாறாக மகிந்த ஆட்சி அமைப்பதற்கு சிறுபான்மை கட்சிகள் ஆதரவு வழங்கும். ஆனால் முதலில் இந்த புதிய சட்டத்திற்கு உங்கள் அணி ஆதரவு தர வேண்டும் என்று ஹக்கீம், மனோ கோரிக்கை விடுத்துள்ளார்கள்.

சட்டம் நாடாளுமன்றம் வரும்போது பார்ப்போம் என்று மகிந்தவும் சொல்லி விட்டாராம்.

இதேவேளை, எதிர்க்கட்சி தலைவர் சம்பந்தனிடம் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் மகிந்த அணிக்கு ஆதரவு கோரி கோரிக்கை விடுத்துள்ளதாக மற்றுமொரு செய்தி கிடைத்துள்ளது.

மாகாணசபை தேர்தல் நடத்தினால் மகிந்த அணி 9 மாகாணத்தில் 4-5 மாகாணத்தை கைப்பற்றும். களத்தில் பசில் களமிறங்கவுள்ளாராம்.

வடக்கில் கூட்டமைப்பும், கிழக்கில் சுதந்திரக் கட்சியும் ஆட்சி அமைத்தால் 2-3 மாகாணத்தை யார் கைப்பற்றுவது என்ற போட்டியில் ஐக்கிய தேசியக்கட்சியும், சுதந்திரக்கட்சியும் பலமான போட்டியில் அமையும்.

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி, ரணில் தலைமையிலான ஐக்கிய தேசியக்கட்சி ஆகியவற்றின் செல்வாக்கு குறைந்துள்ளதால் மகிந்தர் கட்சி இன்னும் கொஞ்சம் அதிகமாக வெற்றி பெறும் வாய்ப்புள்ளது.

ஜனாதிபதி மைத்திரி தேர்தலுக்கு அஞ்சாமல் எந்த தேர்தலை நடத்தினாலும், மகிந்த அணி தனியாக மொட்டு சின்னத்தில் பாரிய வெற்றி பெறும் நிலைதான் உள்ளது.

இந்த அரசு மகிந்த அணியை மீள் எழுர்ச்சி பெற வைத்து விட்டது. மகிந்த அணியை முடக்கும் எந்தவொரு பணியிலும் ஈடுபடவில்லை.

தற்போது அரசாங்கம் ஏதும் செய்யுமாக இருந்தால் அது மகிந்த அணிக்கு இன்னும் வாய்ப்பாக அமைந்து விடும்.

அடிக்கடி எரிபொருள் விலையேற்றம் மக்களை இன்னும் இந்த அரசு மீது கடுப்பாக்கியுள்ளது. மறுபுறம் இந்த நேரம் பார்த்து ரயில்வே வேலை நிறுத்தம். எப்படிப் பார்த்தாலும் நல்லாட்சிக்கு ஆயுள் குறைவுதான்.