இராணுவ மயமாக்கலுக்குள் அகப்பட்ட இலங்கைத் தீவு!

Report Print Hariharan in கட்டுரை

இரண்டாம் உலகப் போர் காலத்துக்குப் பின்னர் அமெரிக்க வரலாற்றில் மிக அதிகமான பாதுகாப்புச் செலவினமாக அமையப் போகும், 2019ம் ஆண்டுக்கான பாதுகாப்பு நிதி ஒதுக்கீட்டு அங்கீகாரச் சட்டத்தில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அண்மையில் கையெழுத்திட்டிருந்தார்.

இதற்கமைய 681.1 பில்லியன் டொலர், 2019ம் ஆண்டில் பாதுகாப்பு நிதியாக ஒதுக்கப்பட்டுள்ளது. சீனாவுக்கும் ரஷ்யாவுக்கும் போட்டியாக அமெரிக்காவின் படைபலத்தை அதிகரிக்கும் நோக்கிலேயே டொனால்ட் ட்ரம்ப் நிர்வாகம் பாதுகாப்பு நிதி ஒதுக்கீட்டை கணிசமாக உயர்த்தியிருக்கிறது.

இந்த நிதி ஒதுக்கீட்டின் மூலம் அமெரிக்கா தனது படைபலத்தை மாத்திரம் வலுப்படுத்திக் கொள்ளப் போவதில்லை. தனது நட்பு நாடுகள், பூகோள அரசியல் நலன்களின் அடிப்படையில் தனக்கு வேண்டிய நாடுகளின் படைபலத்தையும் அதிகரிக்கப் போகிறது.

அமெரிக்காவின் கூடுதலான இராணுவ நிதியைப் பெறப் போகின்ற நாடுகளின் பட்டியலில் இலங்கை, இந்தியா உள்ளிட்ட நாடுகளும் உள்ளடங்கியிருக்கின்றன.

இந்தோ - பசுபிக் பிராந்தியத்தில் சீனாவின் இராணுவத் தலையீடு மற்றும் செல்வாக்கை ஓரம்கட்டுவதற்கு இந்தியாவையும் இலங்கையையும் தமது முக்கிய பங்காளராக சேர்த்துக் கொண்டிருக்கிறது அமெரிக்கா.

2009 தொடக்கம் 2014 வரை இலங்கை தொடர்பாக கடைப்பிடித்த இறுக்கமான போக்கை 2015 ஆட்சி மாற்றத்துக்குப் பின்னர் தளர்த்த ஆரம்பித்த அமெரிக்கா, இப்போது இன்னும் வேகமாக இலங்கைக்கு இராணுவ உதவிகளை வழங்க ஆரம்பித்துள்ளது.

2009ம் ஆண்டுக்குப் பின்னர் இலங்கைக்கு இராணுவ உதவிகளை வழங்குவதை அமெரிக்கா இடைநிறுத்தியிருந்தது. மட்டுப்படுத்தப்பட்ட அளவிலான பயிற்சிகள் உள்ளிட்ட ஒத்துழைப்புகளை மாத்திரம் தொடர்ந்தது.

குறிப்பாக மனிதாபிமான அனர்த்த மீட்பு ஒத்துழைப்புகளையே தொடர்ந்து வந்த அமெரிக்கா 2015ற்குப் பின்னர் இலங்கைக் கடற்படையை வலுப்படுத்துவதற்கான பயிற்சிகளை வழங்கத் தொடங்கியது. கூட்டுப் பயிற்சிகள், ஒத்திகைகள் என்று இப்போது அவை விரிவடைந்துள்ளன.

அண்மையில் கூட இலங்கைக் கடற்படையைச் சேர்ந்த 62 கொமாண்டோக்களுக்கு திருகோணமலையில் பலன்ஸ் ஸ்ரைல் 2018/1 என்ற திட்டத்தின் கீழ் அமெரிக்க கடற்படையின் சிறப்பு போர்ப்படை அதிகாரிகள் 3 வாரகால பயிற்சிகளை அளித்திருந்தனர்.

இந்தநிலையில் தான் அமெரிக்கா இலங்கையின் கடல்சார் கண்காணிப்பு பலத்தை அதிகரிக்கும் வகையில் இராணுவ நிதியை வழங்கப் போவதாக அறிவித்திருக்கிறது.

அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் கடந்த வாரம் வெளியிட்ட அறிவிப்பில் இலங்கைக்கு 39 மில்லியன் டொலர் இராணுவ நிதி வழங்கப்படும் என்று கூறப்பட்டிருந்தது. இந்த நிதி ஒதுக்கீட்டுக்கு அமெரிக்க பாராளுமன்றம் இன்னமும் அங்கீகாரம் அளிக்கவில்லை.

இந்த நிதியை எவ்வாறு செலவிடுவது என்று இலங்கை அரசாங்கத்துடன் பேச்சு நடத்தப் போவதாகவும் அமெரிக்க இராஜாங்கத் திணைக்களப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

மிக நீண்ட காலத்துக்குப் பின்னர் அமெரிக்காவினால் இலங்கைக்கான இராணுவ நிதி அறிவிக்கப்பட்டிருக்கிறது. இதன் பெரும் பகுதி கடல்சார் கண்காணிப்புத் திறனை அதிகரிப்பதற்கே பயன்படுத்தப்படும்.

இந்தோ - பசுபிக் பிராந்தியத்தில் சுதந்திரமான திறந்த சட்டதிட்டங்களுக்கு அமைவான கப்பல் பயணங்களை உறுதி செய்வதே அமெரிக்காவின் இலக்கு. அதற்காகவே இந்த இராணுவ நிதியை இலங்கைக்கு வழங்கவுள்ளது

அமெரிக்கா. இலங்கைக் கடற்படையின் பலத்தை அதிகரிப்பது இந்தத் திட்டத்தின் ஒரு கட்டம். இதற்காக அமெரிக்கா தனது கடலோரக் காவல் படையில் இருந்து நீக்கப்பட்ட போர்க்கப்பல் ஒன்றையும் இலங்கைக் கடற்படைக்கு வழங்கவுள்ளது.

யுஎஸ்சிஜி ஷேர்மன் என்ற பெயருடைய போர்க்கப்பலே இலங்கைக் கடற்படைக்கு வழங்கப்படவுள்ளது. ஹவாய் துறைமுகத்தில் தற்போது தரித்து நிற்கும் யுஎஸ்சிஜி ஷேர்மன் கப்பலின் மேற்தளத்தில் எதிர்வரும் 22ம் திகதி நடைபெறவுள்ள நிகழ்வில் இந்தக் கப்பல் இலங்கைக் கடற்படையிடம் கையளிக்கப்படும்.

378 அடி(115 மீற்றர்) நீளம் கொண்ட இந்தப் போர்க்கப்பல் 1967ம் ஆண்டு கட்டப்பட்டது. வியட்னாம் போரின் போது பல கப்பல்களை மூழ்கடித்து சாதனை படைத்த இந்தப் போர்க்கப்பல் அமெரிக்க கடலோரக் காவற்படையில் 50 ஆண்டுகள் பணியாற்றிய நிலையில் கடந்த மார்ச் மாதம் சேவையில் இருந்து நீக்கப்பட்டது.

யுஎஸ்சிஜி ஷேர்மன் போர்க்கப்பல் இலங்கைக் கடற்படையினரிடம் எதிர்வரும் 22ம் திகதி கையளிக்கப்பட்டாலும் உடனடியாக அது கொழும்புக்கு கொண்டு வரப்படாது. அடுத்த ஆண்டு பெப்ரவரி மாதமே கொழும்புக்கான பயணத்தை ஆரம்பிக்கும்.

அதற்குள்ளாக கப்பலில் திருத்த வேலைகள் மற்றும் கருவிகள் பொருத்தும் பணிகள் இடம்பெறுவதுடன் இலங்கைக் கடற்படையின் மாலுமிஜகளுக்கும் அதில் பயிற்சிகள் அளிக்கப்படும். இதற்கான செலவுகளை இலங்கை அரசாங்கமே ஏற்றுக்கொள்ள வேண்டும்.

ஏற்கனவே அமெரிக்கா 2004ம் ஆண்டு கடற்படைக்கு கொடுத்த போர்க்கப்பல் இப்போதும் எஸ்.எல்.என்.எஸ் சமுத்ர என்ற பெயருடன் இயங்கிக் கொண்டிருக்கும் நிலையில் அடுத்த ஆண்டில் அமெரிக்காவின் இன்னொரு கப்பலும் கடற்படையில் இணைந்து கொள்ளப் போகிறது.

சீனாவின் செல்வாக்கை உடைப்பதற்காக அமெரிக்கா போர்க்கப்பல் மற்றும் இராணுவ உதவிகளை இலங்கைக்கு அளித்து வருகின்ற நிலையில், சீனாவும் அதற்குப் போட்டியாக போர்க்கபல் ஒன்றை வழங்கப் போவதாக அண்மையில் அறிவித்திருந்தது. எந்த வகையான போர்க்கப்பலை இலங்கைக் கடற்படைக்கு சீனா வழங்கப் போகிறது என்று சீனா இன்னமும் அதிகாரபூர்வமாக அறிவிக்கவில்லை.

எனினும் Type C28A அல்லது Type C 138 ரகத்தைச் சேர்ந்த போர்க்கப்பலாகவோ அல்லது அண்மையில் சீனக் கடற்படையில் இருந்து ஓய்வுபெற்ற Type 053 போர்க்கப்பலாகவோ அது இருக்கக் கூடும் என்று நம்புவதாக சீன இராணுவ ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த மூன்று வகை சீனகப் போர்க்கப்பல்களும் தான் பொதுவாக ஏனைய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுபவை.

அல்ஜீரியா, பங்களாதேஷ், பாகிஸ்தான் போன்ற நாடுகள் இந்த வகை போர்க்கப்பல்களை வைத்திருக்கின்றன.

சீனாவின் இந்தப் போர்க்கப்பல் இந்தியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தக் கூடும் என்று இந்திய ஊடகங்களும் ஆய்வாளர்கள் சிலரும் புரளியைக் கிளப்பி விட்டிருந்தார்கள்.

ஆனால் அதற்குச் சீன ஆய்வாளர்களோ, இந்தியா எவ்வாறு இலங்கைக் கடற்படைக்கு போர்க்கப்பல்களைக் கொடுத்ததோ அவ்வாறு தான் சீனாவும் கொடுக்கிறது என்று பதிலடி கொடுத்திருக்கிறார்கள்.

ஏற்கனவே இந்தியாவும் இரண்டு ஆழ்கடல் ரோந்துக் கப்பல்களை இலங்கைக் கடற்படைக்கு கொடையாக வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

ஆனால் பழைய போர்க்கப்பல்கள் கொடையாக வழங்கப்பட்டாலும் கூட அவற்றை ஏற்றுக்கொள்ளக் கூடாது என்று முன்னாள் கடற்படைத் தளபதி அட்மிரல் ஜயந்த கொலம்பகே இந்திய ஊடகம் ஒன்றிடம் அண்மையில் தெரிவித்துள்ளார்.

தாயக் கடற்படைகளில் சேவையில் இருந்து நீக்கப்பட்ட பழைய போர்க்கப்பல்கள் கொடையாக வழங்கப்படும் அல்லது விற்கப்படும். வயதான அந்தப் போர்க்கப்பல்களின் இயந்திரங்கள் ஏனைய கருவிகள் அடித்தளம் என்பன பழுது பார்க்கப்பட வேண்டியிருக்கும் அல்லது அடிக்கடி பராமரிப்புக்கு உட்படுத்தப்பட வேண்டியிருக்கும்.

அந்தக் கப்பல்களை கணிசமான காலத்துக்கு பழுதுபார்க்க வேண்டியிருக்கும். அதற்கான செலவுகளும் கப்பலின் பெறுமதியுடன் சேர்க்கப்பட வேண்டியிருக்கும். கப்பல் கொடையாக வழங்கப்பட்டிருந்தாலும் கூட அதனைப் பராமரிக்க அதிகம் செலவழிக்க வேண்டியிருக்கும்.

இலங்கை அதன் தேவைகளை கவனமாக மதிப்பீடு செய்ய வேண்டும். பொருத்தமான கொள்வனவுகளை மேற்கொள்ள வேண்டும். கொடையாக வழங்கப்படுகிறது என்பதற்காக ஏற்றுக்கொள்ளக் கூடாது.

போர்க்கப்பல்களை பல்வேறு நாடுகளில் இருந்து கொடையாக பெற்றுக்கொள்ளும் போது அவற்றில் பொருத்தக் கூடிய ஆயுதங்கள் தொடர்பாக பிரச்சினைகள் எழும்பக் கூடும். ஏற்கனவே இருந்த ஆயுதங்கள் பதிலீடு செய்யப்பட வேண்டும்.

பயன்படுத்தப்படும் ஆயுதங்கள் நாட்டுக்கு நாடு வேறுபடக் கூடும். கையாளுதல் மற்றும் பல ஆயுதப் பொறிமுறைகளை இணைத்தல் ஒரு சவாலான பணியாக இருக்கும். உதிரிப்பாகங்களைப் பெற்றுக்கொள்வதும் பிர்ச்சினைக்குரிய ஒன்றாக இருக்கக் கூடும்.

இலங்கைக்கு இப்போது இராணுவத் தளபாடங்கள் தேவையில்லை. ஏனென்றால் விடுதலைப் புலிகளுக்கு எதிரான போர் அவர்களின் முழுமையான இராணுவத் திறனும் அழிக்கப்பட்டதுடன் நிறைவுக்கு வந்து விட்டது.

ஆனாலும் பிராந்திய மற்றும் பூகோள ரீதியாக சக்திவாய்ந்த நாடுகள் இலங்கைக்கு இராணுவத் தளபாடங்களை குறிப்பாக போர்க்கப்பல்களை கொடையாக வழங்கிக் கொண்டிருக்கின்றன.

இந்தியப் பெருங்கடலின் கட்டுப்பாட்டுக்காக மேற்குலகம் மற்றும் இந்தியா ஒரு பக்கமும் சீனா மற்றொரு பக்கமும் நடத்துகின்ற போட்டிக்குள் இழுத்துச் செல்லவே இவ்வாறு போர்க்கப்பல்களை கொடையாக வழங்குகின்றன.

உள்நாட்டுப் போர் நடந்து கொண்டிருந்த போது இலங்கைக்கு ஆயுத்ங்களை விற்க மறுத்த நாடுகள் இப்போது கொடையாக ஆயுதங்களை வழங்குகின்றன. இது ஏனென்றால் அவர்களின் பூகோள அரசியல் நலன்களை அடைவதற்காகவே என்றும் அவர் சாடியிருக்கிறார்.

அது மாத்திரமன்றி இலங்கையை இராணுவ மயமாக்கும் செயற்பாடுகளில் சர்வதேச நாடுகளே ஈடுபட்டிருக்கின்றன என்றும் அட்மிரல் ஜயந்த கொலம்பகே குற்றஞ்சாட்டியுள்ளார்.

இலங்கைத் தீவுடனான தமது இராணுவத் தொடர்புகளை அதிகரித்ததன் மூலம் இந்த நா’டுகள் இலங்கையில் புதிய இராணுவ மயமாக்கலை ஆரம்பித்தன.

பல்வேறு நாடுகளின் போர்க்கப்பல்கள் இலங்கைத் துறைமுகங்களுக்கு மேற்கொண்ட பயணங்களே இந்த இராணுவ மயமாக்கலுக்கான சாட்சி. 2009 தொடக்கம் 2017 வரை 398 வெளிநாட்டுப் போர்க்கப்பல்கள் இலங்கைத் துறைமுகங்களுக்கு வந்துள்ளன.

இந்தியாவின் 82 போர்க்கப்பல்களும், பாகிஸ்தானின் 24 போர்க்கப்பல்களும், ஜப்பானின் 67 போர்க்கப்பல்களும், பங்களாதேஷின் 23 போர்க்கப்பல்களும், சீனாவின் 31 போர்க்கப்பல்களும், அமெரிக்காவின் 18 போர்க்கப்பல்களும், ரஷ்யாவின் 28 போர்க்கப்பல்களும் இந்தக் காலப்பகுதியில் இலங்கைத் துறைமுகங்களுக்கு வந்துள்ளன என்றும் அவர் கூறியுள்ளார்.

அட்மிரல் கொலம்பகேயின் கருத்து நிலையில் இருந்து பார்க்கும் போது சர்வதேச சக்திகளின் இராணுவ மயமாக்கல் நிகழ்ச்சி நிரலுக்குள் இலங்கை அகப்பட்டு விட்டது என்றே கருத வேண்டியுள்ளது.

இலங்கை அரசாங்கமே நினைத்தாலும் கூட இதிலிருந்து இலகுவில் வெளியே வந்துவிட முடியாது என்பதையே இது உணர்த்தி நிற்கிறது.

Latest Offers