தோற்றுப்போனார் மைத்திரி! மகிந்தவின் ஆதரவால் ரணிலும் எதிர்ப்பு?

Report Print M.M.Nilamdeen M.M.Nilamdeen in கட்டுரை

புதிய தேர்தல் முறைமையில் மாகாண தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்று அடம் பிடித்த நாட்டின் தலைவர் மைத்திரிபால தோல்வி கண்டுள்ளார்.

அதிபர் மைத்திரி மற்றும் சுதந்திரக் கட்சியின் சிலர் மட்டும் தான் புதிய முறைமைக்கு முழு ஆதரவு கொடுத்திருந்த நிலையில் அமைச்சர் ஹக்கீம், முன்னாள் அமைச்சர் தோழர் டக்ளஸ் தேவானந்தா, அமைச்சர் மனோ கணேசன் ஆகியோர் அண்மையில் முன்னாள் அதிபர் மகிந்தவை நேரில் சந்தித்து இந்த எல்லை நிர்ணய அறிக்கை தோற்கடிக்கப்பட வேண்டும் அதற்கு தங்களின் ஆதரவு வேண்டும் என்று கோரிக்கை விடுத்த போது மகிந்தவும் ஓகே கொடுத்தார்.

பிரதமர் ரணிலும் புதிய முறைமைக்கு ஆதரவுடன் இருந்த நிலையில் ஹக்கீம் குழு மகிந்தரை சந்தித்த செய்தி அறிந்து ரணிலும் புதிய முறைமையை எதிர்க்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டார்.

மாகாண எல்லை நிர்ணய அறிக்கை 139 வாக்குகளால் தோற்கடிக்கப்பட்டுள்ளது.

மீண்டும் பழைய முறைமையில் மாகாண தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்று ஒரு மசோதா கொண்டு வரப்பட வேண்டும் .. விரைவில் கொண்டு வரப்படும் .

மாகாண எல்லை நிர்ணய அறிக்கை தோற்கடிக்கப்பட வேண்டும் என்று ஹக்கீம் குழு மகிந்தவிடம் ஆதரவு கோரிய நிலையில் இந்த அறிக்கையை அதிபர் மைத்திரி சபையில் கொண்டு வராமல் தடுத்திருக்க வேண்டும்.

சபைக்கு இந்த அறிக்கை கொண்டு வரப்படாமல் புதிய மசோதாவை கொண்டு வந்து நிறைவேற்றியிருக்க வேண்டும், இப்போது அதிபர் மைத்திரி முஸ்லிம்களுக்கு விரோதமானவர், முஸ்லிம்களின் அரசியல் இருப்பை குழி தோண்டி புதைக்க முயன்ற நபர் என்ற முத்திரை குத்தி விட்டார். ஆனால் இதில் ஹக்கீம், டக்ளஸ், மனோ ஆகியோர் பாரிய வெற்றி கண்டுள்ளார்கள்.

தனது உளவுப்பிரிவு பொலிஸ் மூலம் இந்த அறிக்கையின் நிலை பற்றி அறிந்திருக்க வேண்டும். அதை இந்த அதிபர் கேட்டிருக்க வேண்டும். இவைகள் எதுவுமே இல்லாமல் இந்த அதிபர் மூக்குடைபட்டுள்ளார். மகிந்தவை ஹக்கீம் குழு சந்தித்த பின்னர் பிரதமர் ரணில் மாறியது போன்று அதிபர் மைத்திரி மாறியிருக்க வேண்டும்.

இப்போது ரணில் நல்ல பிள்ளை. ஆனால் எந்த எதிர்ப்பும் இன்றி ஆர்ப்பாட்டம் இன்றி மகிந்த, ஹக்கீம் குழுவுக்கு ஆதரவு என்று சொன்னதே மிகப் பெரிய விடயம்.

மகிந்தவை விட மைத்திரி மிகப்பெரிய இனவாதி என்று அப்போதே கதை வந்தது .ஆனால் அதுவல்ல பிரச்சினை மகிந்த ஒரு இராணுவ ஆதிக்கம் மூலம் இராணுவ ஆட்சி போன்று வடகிழக்கில் இராணுவ நடமாட்டம், இராணுவ கண்காணிப்பு வடகிழக்கில் நாளாந்தம் 6 இராணுவ சிப்பாய்கள் 3 துவிச்சக்கரவண்டிகளில் காலை முதல் மாலை வரை முஸ்லிம் தமிழ் பகுதிகளில் ரோந்து நடவடிக்கை.

ஒவ்வொரு வீதி வீதியாக எத்தனை கோவில்கள், எத்தனை பள்ளிவாசல்கள், எத்தனை சர்ச்கள் உள்ளது என்ற கணக்கெடுப்புகள், வெள்ளை வான் கடத்தல்கள், ஊடக அடக்குமுறை இப்படியாக ஒரு அடக்குமுறை ஆட்சியை மக்கள் எதிர்த்தார்கள்.

அந்த எதிர்ப்பின் காரணமாவே நாட்டில் ஒரு ஆட்சி மாற்றம் வந்தது. இப்போது மீண்டும் ஒரு மாற்றம் வேண்டி மக்கள் மாற வேண்டிய நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளார்கள்.

அதிபர் மைத்திரியின் பிடிவாதம்

மாகாண சபைத் தேர்தல்கள் ஒத்திவைக்கப்படுவதற்கு ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி கடுமையான எதிர்ப்பை தெரிவிக்கின்றது . அந்தத் தேர்தல், புதிய தொகுதி மற்றும் விகிதாசார முறைமைகளின் கீழ், விரைவில் நடத்தப்பட வேண்டும் என்பதே அதிபர் மைத்திரின் பிடிவாதமாகும்.. அதாவது நடந்து முடிந்துள்ள உள்ளூராட்சி தேர்தல் போன்று.

புதிய தேர்தல் மூலமாக சுதந்திரக்கட்சி இருந்த இடமும் இல்லாது படுதோல்வி கண்டுள்ளது. ஆனாலும் புதிய தேர்தல் முறைதான் வேண்டும் என்று அதிபர் மைத்திரி அடம் பிடிப்பதன் நோக்கம் என்ன? தனது இரண்டு கண்கள் போனாலும் பரவாயில்லை முஸ்லிம்களின் ஒரு கண்ணாவது போகட்டும் என்ற நினைப்பில் உள்ளார் மைத்திரி .

முஸ்லிம்களின் அரசியல் பலத்தை உடைக்க நினைப்பது யார் ? புதிய தேர்தல் முறைமையின் மூலமாக முஸ்லிம்களின் அரசியல் பலம் மிகவும் பின்தள்ளப்பட்டு அரசியல் அனாதையாகும் நிலை வந்துள்ளது. புதிய தேர்தல் முறைமை பற்றிய சாதகம், பாதகம் பற்றி எந்தவொரு சிறுபான்மை கட்சிகளும் அலசவில்லை.

ஹக்கீம் விழித்துக் கொண்டார்

கடந்த உள்ளூராட்சி தேர்தல் முடிவின் பின்னர் தான் இந்த தேர்தல் ஹக்கீம் கட்சிக்கு பாரிய தோல்வியைக் கொடுத்த பின்னர் தான் ஹக்கீம் விழித்துக் கொண்டார். அதன் பின்னர் தான் இந்த தேர்தல் முறைமையை எதிர்க்க துவங்கினார்.

ஏற்கனவே இந்த அறிக்கை நாடாளுமன்றில் வந்த போது வேடிக்கை பார்த்த ஹக்கீம் இப்போது விழித்துக் கொண்டார். முஸ்லிம்களின் அரசியல் இருப்பிடத்தை குழி தோண்டிப் புதைத்த ஹக்கீம் அதை இப்போது சரி செய்து விட்டார். முதல் முதலாக ஹக்கீமை வாயார வாழ்த்தலாம்.

தோழர் டக்ளஸ் தேவானந்தா, மனோ கணேசன் ஆகியோரை இணைத்து மகிந்தவிடம் ஹக்கீம் சென்றது போன்று எதிர்வரும் காலங்களில் தமிழ் தேசியக் கூட்டமைப்பையும் சேர்த்து அரசியல் பயணம் செய்தால் இதை விடப் பெரிய வெற்றிகள் பெறலாம்.

ஹக்கீம் எதிர்ப்பின் பின்னர் பலன் கண்டுள்ளார் . ஆரம்பத்தில் பிரதமர் ரணிலும் புதிய முறைமையில் தான் மாகாண தேர்தல் நடாத்தப்பட வேண்டும் என்று பிடிவாதமாக நின்றார். ஆனாலும் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ரணிலுக்கு ஹக்கீம் ஆதரவு வேண்டும் என்ற நோக்கிலும் ஹக்கீம் மகிந்த பக்கம் சாய்ந்து போவதாலும் ரணில் ஹக்கீமின் கோரிக்கைக்கு செவிசாய்க்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்.

இதேவேளை எதிர்க்கட்சி தலைவர் இரா சம்பந்தனிடம், ஹக்கீம் ஆதரவு கோரியுள்ளதாகவும் இருவருக்குமிடையில் ஒரு சமரச இணக்கம் காணப்பட்டுள்ளதாகவும் அறிய வருகின்றது . அத்துடன் பிரதமர் ரணிலும் ஹக்கீம் கோரிக்கையை ஏற்றுள்ளதால் புதிய முறைமை தோல்வி கண்டுள்ளது.

பழைய முறைமை கொண்ட தேர்தல் நடாத்தப்பட வேண்டும் என்றாலும் ஒரு புதிய சட்டம் கொண்டு (மசோதா) வரப்பட வேண்டும். அதையும் ஹக்கீம் குழு வெற்றி பெறும். அந்த மசோதா ஏகமனதாக வெற்றி பெறும் வாய்ப்புள்ளது .

Latest Offers