இன்னமும் குழம்பும் தமிழ்த் தலைமைகள்!

Report Print Karthik in கட்டுரை

அரசியல் தீர்வுக்கா அபிவிருத்திக்கா முன்னுரிமை கொடுப்பது என்ற விடயத்தில் பல தசாப்தங்களாகவே தமிழ் அரசியல் தரப்புகள் குழம்பிப் போயிருக்கின்றன. அந்தக் குழப்பம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை இப்போதும் விட்டுப் போகவில்லை.

தமிழர்களைப் பொறுத்தவரையில் இனப்பிர்ச்சினைக்கான தீர்வு வடக்கு கிழக்கை அபிவிருத்தி செய்தல் இவையிரண்டும் முக்கியமான விடயங்கள்.

ஆனாலும் காலம் மற்றும் தேவைக்கேற்ப இவற்றைக் கையாளுவதில் தமிழ் அரசியல் தரப்புகள் சரியாகச் செயற்பட்டுள்ளனவா என்ற கேள்வியுள்ளது.

தமிழ் மக்களின் அரசியலை வழிநடத்திய விடுதலைப் புலிகளாகட்டும், அவர்களுக்குப் பின்னர் அதனைக் கையாண்டு வரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பாகட்டும், அபிவிருத்தி சார்ந்த அரசியலின் மீது அதிகம் நாட்டத்தைக் காட்டவில்லை.

அபிவிருத்தி அரசியலின் மீது கவனம் செலுத்தப்பட்டால் அது இனப்பிர்சினைக்கான தீர்வைக் காலம் தாழ்த்தி விடும் கவனிக்கப்படாமல் செய்து விடும். சில வேளைகளில் காணாமல் போகவும் செய்து விடக் கூடும் என்ற அச்சமே அபிவிருத்தி மீதான கவனக் குறைவுக்கு காரணம்.

இந்த விடயத்தில் மிகவும் தெளிவாக இருந்த தரப்பு என்றால் அது ஈபிடிபி மாத்திரம் தான். டக்ளஸ் தேவானந்தா எப்போதும் அபிவிருத்தி அரசியலின் மீதே நம்பிக்கை கொண்டிருந்தார். அதனையே தனது அரசியல் மூலோபாயமாகவும் பின்பற்றி வந்தார்.

அபிவிருத்தி அரசியலை வைத்தே தமிழ் மக்கள் மத்தியில் தமது அரசியல் செல்வாக்கை தக்கவைத்துக் கொள்ளலாம் என்றும் நினைத்திருந்தார்.

ஆனால் ஒரு கட்டத்துக்கு மேல் அவரது அபிவிருத்தி அரசியல் மூலோபாயம் உணர்ச்சி அரசியலுக்கு ஈடு கொடுக்க முடியாமல் தோற்றுப் போகும் நிலையும் ஏற்பட்டது.

இப்போது பாராளுமன்ற உறுப்பினர் பதவியை மாத்திரமே வைத்திருக்கும் ஈபிடிபிக்கு சாதகமான அரசியல் மாற்றங்கள் நிகழ்ந்தால் மீண்டும் அபிவிருத்தி அரசியலையே முன்னெடுக்கும் என்பதிலும் சந்தேகமில்லை.

ஆனால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்போ அதற்கு மாறான நிலையில் இருந்தது. போர் முடிவுக்கு வந்த பின்னர் வடக்கு கிழக்கில் மகிந்த ராஜபக்ச அரசாங்கம் சில அபிவிருத்தி வேலைத் திட்டங்களை முன்னெடுத்த போது கூட்டமைப்பு அதனை ஆதரிக்கவில்லை. சிலவேளைகளில் அதனை எதிர்த்தது. சில வேளைகளில் அமைதியாக இருந்தது.

போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிரந்தரமான அரசியல் தீர்வைப் பெற்றுக் கொடுப்பது தான் முக்கியம். அரசியல் தீர்வு உறுதிப்படுத்தப்பட்டு விட்டால் இலகுவாக அபிவிருத்தியை முன்னெடுக்கலாம் என்ற நிலைப்பாட்டில் இருந்தது கூட்டமைப்பு.

ஆனால் மகிந்த அரசாங்கமோ அதனை விட்டுக் கொடுக்கவில்லை. பசில் ராஜபக்சவையும், டக்ளஸ் தேவானந்தாவையும் முன்னிறுத்திய அபிவிருத்தி அரசியல் மூலோபாயத்தை வைத்தே கூட்டமைப்பை அரசியலில் இருந்து அகற்ற முற்பட்டது.

அதாவது அரசியல் தீர்வு முக்கியமோ முதன்மையானதோ அல்ல, அபிவிருத்தியைக் கொண்டு எல்லாவற்றையும் மாற்றி விடலாம் என்பது அவர்களின் கருத்தாக இருந்தது.

அண்மையில் கோத்தபாய ராஜபக்சவும் கூட தமிழ் மக்கள் அரசியல் உரிமைகளைக் கேட்கவில்லை. அவர்களுக்கு இருப்பது பொருளாதாரப் பிரச்சினை மட்டும் தான். பொருளாதாரப் பிரச்சினைகளை தீர்த்து விட்டால் அரசியல் பிரச்சினைகள் தானாகவே தீர்ந்து விடும் என்று கூறியிருந்தார். இன்னமும் கூட அரசியல் தீர்வை விட பொருளாதார அபிவிருத்தி தான் முக்கியம் என்று நம்பும் நிலையிலேயே ராஜபக்சவினர் இருக்கிறார்கள்.

அதேவேளை போர் முடிந்து பத்து ஆண்டுகள் ஆகப் போகின்ற நிலையிலும் வடக்கு கிழக்கு மாகாணங்கள் பொருளாதார ரீதியாக கடைசி இடத்திலேயே இருக்கின்றன. அதிலும் வடக்கு மாகாணத்தின் நிலை படுமோசம்.

போரினால் ஏற்பட்ட பொருளாதாரச் சிதைவுகளால் முன்னேற முடியாத நிலை என்று மாத்திரம் இதனைக் கூற முடியாது. போர் முடிந்த பின்னர் அபிவிருத்தி திட்டங்களை முன்னெடுப்பதில் காட்டப்பட்ட பாரபட்சங்களும் கூட அதற்குக் காரணம்.

அபிவிருத்தி மீது அக்கறை காட்டப்படாத நிலையினால் வடக்கு இன்னமும் பொருளாதார முன்னேற்றங்களை அடைய முடியாதிருக்கிறது.

அதேவேளை அபிவிருத்தியை விட அரசியல் தீர்வு தான் முக்கியம் என்று ஒற்றைக்காலில் நின்ற கூட்டமைப்பினால் அரசியல் தீர்வையும் எட்ட முடியவில்லை.

இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வு பற்றி கிட்டத்தட்ட நான்கு தசாப்தங்களாகப் பேசப்படுகிறது. அரசியல் தீர்வு எட்டப்பட்டு விட்டால் இலகுவாக அபிவிருத்தி செய்து விடலாம் என்று கூறுவது தமிழ் அரசியலில் வழக்கம்.

ஆனால் நான்கு தசாப்தங்களாக அரசியல் தீர்வையும் எட்ட முடியாமல் அபிவிருத்தியையும் அடைய முடியாமல் ஒரு திரிசங்கு நிலையில் தான் வடக்கிலுள்ள மக்கள் இருக்கிறார்கள்.

அபிவிருத்தியின் மூலம் தமிழ் மக்களின் அரசியல் பிரச்சினைகளை மறைத்து விடலாம் என்ற எதிர்பார்ப்பு சிங்கள அரசியல் தலைமைகளிடம் இருப்பதைப் போலவே அபிவிருத்தி அரசியலின் மூலம் அரசியல் தீர்வு காணாமல் போகச் செய்யப்பட்டு விடும் என்ற அச்சம் தமிழ் அரசியல் தலைமைகளிடமும் இருக்கிறது.

இதையெல்லாம் இங்கு சுட்டி்காட்ட வேண்டிய நிலை வந்தமைக்குக் காரணம் வடக்கு கிழக்கு அபிவிருத்திச் செயலணி தொடர்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள் உருவாகியிருக்கின்ற பிரச்சினைதான்.

சில மாதங்களுக்கு முன்னர் வடக்கு கிழக்கு அபிவிருத்தித் திட்டங்களை துரிதப்படுத்துவதற்காக ஜனாதிபதி செயலணி ஒன்று உருவாக்கப்பட்டுள்ளதாக வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டது. அந்த செயலணியில் 48 பேர் இடம்பெற்றிருந்தனர்.

அந்தக் குழுவில் அமைச்சர்கள் இருந்தார்கள். படைத்தளபதிகள் மற்றும் அதிகாரிகள் இருந்தார்கள். ஆனாலும் அந்தப் பிரதேசத்தில் இருந்து தெரிவு செய்யப்பட்ட பாராளுமன்ற, மாகாணசபை உறுப்பினர்களுக்கு இடமளிக்கப்பட்டிருக்கவில்லை.

வடக்கைப் பொறுத்தவரையில் முதலமைச்சர் விக்னேஸ்வரன் இடம்பெற்றிருந்தார். பாராளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தான் இடம்பெற்றிருந்தார். ஏனைய எந்த பாராளுமன்ற, மாகாணசபை உறுப்பினர்களுக்கும் இடமில்லை.

வடக்கு கிழக்கில் அபிவிருத்தி திட்டங்களை துரிதப்படுத்துவதற்கு இராணுவ, கடற்படை, விமானப்படை, பொலிஸ் அதிகாரங்களையெல்லாம் செயலணிக் குழுவில் இணைத்த அரசாங்கம் பாராளுமன்ற, மாகாணசபை உறுப்பினர்களை சேரத்துக் கொள்ளவில்லை.

இது கடுமையான விமர்சனங்களை ஏற்படுத்தியிருந்தது. இது பற்றி ஜனாதிபதிக்கு வடக்கு மாகாண முதலமைச்சரும் கடிதம் அனுப்பியிருந்தார். கூட்டமைப்பும் அதற்கு கண்டனம் தெரிவித்திருந்தது.

ஆனாலும் செயலணிக் குழுவின் முதலாவது கூட்டம் கூட்டப்படும் வரை ஜனாதிபதி எந்த நடவடிக்கையையும் எடுக்கவில்லை. அந்தக் கூட்டத்தில் தான் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு ஏன் அழைப்பு விடுக்கவில்லை என்று தமது அதிகாரிகளிடம் கேட்டிருந்தார் ஜனாதிபதி.

இந்தநிலையில் நாளை நடக்கவுள்ள இரண்டாவது கூட்டத்துக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

செயலணிக் குழுவில் கூட்டமைப்பு எம்.பிக்களுக்கு இடமளிக்கப்பட்டதாக எந்த அறிவிப்பும் வெளியிடப்படாத போதும் இந்தக் கூட்டத்தில் பங்கேற்க அவர்கள் அழைக்கப்பட்டுள்ளார்கள். கிட்டத்தட்ட பார்வையாளர் நிலை என்று தான் கூற வேண்டும்.

பாராளுமன்ற, மாகாணசபை உறுப்பினர்களுக்கு அழைப்பு விடுக்கப்படாததை சுட்டிக்காட்டி முதலாவது செயலணிக் குழுக் கூட்டத்தை புறக்கணித்திருந்தார் முதலமைச்சர் விக்னேஸ்வரன்.

இப்போது கூட்டமைப்பு எம்.பிக்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ள நிலையில் அவர்களும் செயலணிக் குழுக் கூட்டத்தில் பங்கேற்கக் கூடாது என்று கூட்டமைப்புத் தலைமையிடம் கோரியிருந்தார் முதலமைச்சர்.

அவரது அந்தக் கோரிக்கையை நிராகரித்து நாளைய செயலணிக் குழுக் கூட்டத்தில் பங்கேற்க முடிவு செய்திருக்கிறது கூட்டமைப்பின் பாராளுமன்றக் குழு. விக்னேஸ்வரனுக்கும் கூட்டமைப்புத் தலைமைக்கும் இடையில் நடக்கின்ற கயிறிழுப்பினால் கூட இந்த முடிவு எடுக்கப்பட்டிருக்கலாம்.

மயிலிட்டியில் கடந்த வாரம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் நடந்த மீன்பிடித் துறைமுக அபிவிருத்தி திட்ட ஆரம்ப நிகழ்வையும் கூட முதலமைச்சர் புறக்கணித்திருந்தார்.

அந்த நிகழ்வில் மாவை சேனாதிராசாவுக்கு முக்கிய இடம் அளிக்கப்பட்டது. அவர் அந்தக் கூட்டத்தில் உரையாற்றிய போது இந்த ஆண்டு இறுதிக்குள் ஜனாதிபதி அரசியல் தீர்வைக் காண வேண்டும் என்றும் அரசியல் தீர்வு காணப்படாவிடின் அபிவிருத்தியால் எந்தப் பயனும் கிட்டாது என்றும் கூறியிருந்தார்.

அரசியல் தீர்வு இன்றேல் அபிவிருத்தியால் பயனில்லை என்று மாவை சேனாதிராசா கூறியிருந்த நிலையில் தான் அபிவிருத்திக்கான செயலணிக் கூட்டத்துக்கான அழைப்பையும் ஏற்றுக் கொண்டிருக்கிறது கூட்டமைப்பு.

அதேவேளை முதலமைச்சர் விக்னேஸ்வரனும் தனது கூட்டங்களில் வெளிநாட்டு மற்றும் புலம்பெயர் தமிழர்களின் முதலீடுகள், அபிவிருத்திகள் குறித்து அதிகம் பேசுகிறார். சுயசார்பு பொருளாதாரம் பற்றி பேசுகிறார். ஆனாலும் அபிவிருத்தி என்றதும் பின்வாங்குகிறார்.

அபிவிருத்தி அரசியலை முன்னெடுப்பதில் கூட்டமைப்புக்கும் சரி, விக்னேஸ்வரனுக்கும் சரி இன்னமும் குழப்பம் தீரவில்லை. போருக்குப் பின்னர் தான் தெற்கு பெரும் அபிவிருத்தியைக் கண்டது. ஆனால் வடக்கு தேய்ந்து போனது.

அரசியல் தீர்வைக் காரணம் காட்டி அபிவிருத்திச் செயற்பாடுகளை பிற்போட்டு அல்லது புறக்கணித்து வரும் நிலையில் தான் வடக்கின் நிலை மோசமடைந்து செல்கிறது.

வெளிநாட்டில் இருந்து கிடைத்து வரும் புலம்பெயர் தமிழர்கள் மூலமான வருமானம் தடைப்படுகின்ற நிலை ஏற்பட்டால் வடக்கின் பொருளாதாரம் படுமோசமான கட்டத்தை எட்டும். அந்த ஆபத்தைக் கூட உணராமல் தமிழ் அரசியல் தலைமைகள் உள்ளன.

தமிழ் மக்களுக்கு அரசியல் தீர்வு முக்கியம். உரிமைகள் முக்கியம். ஆனால் அதனை அடைவதற்கான முயற்சிகள் 40 ஆண்டுகளாகச் சாத்தியப்படவில்லை. சிங்களத் தலைமைகள் அரசியல் தீர்வுக்கு இணங்க மறுக்கின்றன.

இப்படியான நிலையில் அரசியல் தீர்வு தான் முதலில் என்று ஒற்றைக்காலில் நிற்பதற்குப் பதிலாக மாற்று வழிமுறைகளையும் தேட வேண்டிய சூழல் இருக்கிறது.

அரசியல் தீர்வை இழுத்தடிப்பதன் மூலம் தமிழ் மக்களை எவ்வாறு பலவீனப்படுத்த சிங்கள அரசியல் தலைமைகள் முற்படுகின்றனவோ அதற்கு இணையாகவே தமிழ் தலைமைகளும் செயற்படுகின்றன.

அபிவிருத்தி அரசியலின் மூலம் தமிழ் மக்களை வசப்படுத்த அல்லது அவர்களின் அரசியல் தீர்வுக்கான அவசியத்தை மறக்கடிக்கலாம் என்று அரசாங்கமும் சிங்களத் தலைமைகளும் திட்டம் போடுவது உண்மை தான்.

அதற்கான அபிவிருத்தியைத் தொடர்ந்தும் புறக்கணிப்பது சரியானது தானா என்ற கேள்வி உள்ளது. ஏனென்றால் இந்தப் புறக்கணிப்பு சிங்களத் தலைமைகளுக்கோ அவர்களைத் தெரிவு செய்யும் சிங்கள மக்களுக்கோ பாதிப்பைத் தராது, தமிழ் மக்களையே பாதிக்கும்.

ஒருவேளை அபிவிருத்தியின் மூலம் அரசியல் தீர்வு இல்லாமல் ஆக்கப்பட்டு விடும் என்ற பயம் தமிழ்த் தலைவர்களிடம் இருக்குமேயானால் சிங்களத் தலைவர்கள் கூறுவது போல தமிழ் மக்களுக்கு இருப்பது அரசியல் பிரச்சினைகள் இல்லை, பொருளாதாரப் பிரச்சினைகள் தான் என்ற கூற்றும் உண்மையாகி விடும்.

தமிழ் மக்களுக்கு அரசியல் பிரச்சினைகள் தான் உள்ளன என்ற வலுவான நம்பிக்கை தமிழ்த் தலைமைகளிடம் இருந்தால் அபிவிருத்தி அரசியலை துணிச்சலுடன் எதிர்கொள்வதற்குத் தயாராவதில் தவறில்லை.

இது ஒரு விஷப் பரீட்சை தான் என்றாலும் தமிழ் மக்களின் பொருளாதார இருப்பும் முக்கியமானது என்ற நிலையில் இருந்து பார்த்தால் இந்த அமிலச் சோதனை தவிர்க்க முடியாத ஒன்று தான்.

Latest Offers