மனித உரிமையென்றால் என்ன என்பதை தெற்கின் அரசியல்வாதிகள் அறிவார்களா?

Report Print S.V Kirubaharan S.V Kirubaharan in கட்டுரை
மனித உரிமையென்றால் என்ன என்பதை தெற்கின் அரசியல்வாதிகள் அறிவார்களா?

“இலங்கையில் சிங்கள பௌத்தவாதிகளிற்கும், பல உணர்ச்சிவாத தமிழ் மக்களிற்கும், விஷேடமாக பல புலம்பெயர்வாழ் தமிழ் மக்களிற்கும் மனித உரிமை என்பது ஒரு பொழுதுபோக்கான அல்லது சந்தர்ப்பவாத விடயம்.

இவர்கள் மனித உரிமையின் அடிப்படை தந்துவத்தையோ அல்லது அதன் நடைமுறைகளை அறிந்தவர்கள் அல்ல. இவற்றை ஒர் ஒழுங்கான முறையில் படித்து அறிந்துகொள்ள விரும்பியவர்களும் அல்ல.

ஆனால், வெளி உலகிற்கு தம்மை ஓர் மனித உரிமை செயற்பாட்டாளர்களாக தங்களை தாமே சுய விளம்பரபடுத்தவதில் இவர்கள் தவறவில்லை.”

மூத்த அரசியல் ஆய்வாளர் ச.வி. கிருபாகரன் தனது கட்டுரையில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அவர் தனது கட்டுரையில் தொடர்ந்தும் தெரிவித்துள்ளதாவது,

இலங்கைதீவின் சுதந்திரம் பெற்றவேளையில், ஐ.நா.மனித உரிமை பொறிமுறைகளும் ஆரம்பமாகியது.

இவ்வேளையில் சிங்கள பேரினவாதிகள் அப்பாவி தமிழ் அரசியல்வாதிகளை இலங்கை தீவின் தலைநாகரான கொழும்பில் வைத்து மிகவும் கடுமையாக தாக்கியதன் மூலம், சர்வதேச பிரகடனங்களை இலங்கை மீறுவது ஆரம்பாமகியது.

சிறு மனித உரிமை மீறல்களுடன் ஆரம்பமாகி இறுதியில் இனஅழிப்பு, சர்வதேச குற்றம், படுகொலைகள், பெண்கள் மீதான பாலியல் வன்முறை போன்ற நிலைக்கு வடக்கு-கிழக்கு வாழ் மக்கள் தள்ளப்பட்டார்கள்.

அறிவியலை பொறுத்தவரையில், உலகின் பல நாடுகளிற்கு மேலான நிலையில் இலங்கை உள்ளது.

ஆனால் தெற்கில் பாடசாலை மாணவ, மாணவிகளிற்கு எவற்றை கற்பிக்கிறார்கள் என்ற கேள்வியை நாம் தொடர்ந்து ஆராய கடமைபட்டுள்ளோம்.

இலங்கைதீவின் தெற்கை பொறுத்தவரையில், சைவர்கள், கிறிஸ்தவர்கள், இஸ்லாமியர்கள் ஒர் சிறு எண்ணிக்கையிலேயே காணப்படுகின்றனர்.

பாரிய எண்ணிக்கையில் மதபற்றுடன் வாழும் பெரும்பான்மையின மாணவ மாணவிகளிற்கு, பெரும்பான்மையின் மக்களை தவிர்ந்த மற்றவர்கள் யாவரும் விலங்குகளிற்கு சமமானவர்கள் என்பது போல் கல்வி புகட்டப்படுகிறது.

சுருக்கமாக கூறுவதனால் மனித உரிமை என்பது பெரும்பான்மையின மக்களிற்கு மட்டுமே உரியதாக கல்வி கற்பிக்கப்படுகிறது. இதற்கு இங்கு சில உதாரணங்களை கொடுக்க விரும்புகிறேன்.

“துப்பாக்கிக் கலாச்சாரம் அல்லது ஆயுத காலச்சாரம் அல்லது வன்முறை கலாச்சாரம் என்பதை சிங்கள பேரினவாதிகளே இலங்கைதீவில் 1900 ஆண்டுகளில் ஆரம்பித்து வைத்தார்கள்.

இலங்கை தீவில், முதல் இனகலவரம் என்பது, 1915ஆம் ஆண்டு இலங்கைவாழ் இஸ்லாமியர்களிற்கு எதிராக சிங்கள பேரினவாதிகளினால் ஆரம்பிக்கப்பட்டது.

இதன் பின்னர் தமிழர்கள் மீது கைவரிசைகள் காட்டப்பட்டது. 1970ஆம் ஆண்டு, ஜே.வி.பி. என்ற புரட்சிவாத அமைப்பு, இலங்கை அரசை கைப்பற்றுவதற்காக ஆயுதம் தாங்கிய புரட்சியை ஆரம்பித்து தோல்வி கண்டார்கள்.

இதே பாணியில் 1980ன் பிற்பகுதியில் ஜே.வி.பி.யினர் தொடர்ந்து பயணித்ததால், பாரய மனித உரிமை மீறல்கள் தெற்கில் ஏற்பட்டது. இதனால் அரச படைகள் தெற்கின் இளைஞர்களை படுகொலை செய்தும், காணாமல் ஆக்கப்பட்டார்கள்.

இக் காலப்பகுதியில் பல அரசியல்வாதிகள், விசேடமாக அவ்வேளையில் நாடாளுமன்ற உறுப்பினர்களான – மகிந்த ராஜபக்ச, மங்கள சமரவீர, வசுதேச நாணயக்காரா ஆகியோர் ஜெனிவா மனித உரிமை ஆணைகுழு, பிராசில் ஐரோப்பிய ஒன்றியம் உட்பட பல வெளிநாடுகளுக்கு சென்று இலங்கை அரசிற்கு எதிரான பல மனித உரிமை கூட்டங்களை ஒழுங்கு செய்து நடத்தியிருந்தனர்.

இவர்கள் இலங்கை அரசு மீது சர்வதேச அழுத்தங்களை பிரயோகிக்குமாறும் பிரச்சாரங்களை மேற்கொண்டனர். 1991ம் ஆண்டு இவர்களினால் பிரித்தானியவில் வெளியிடப்பட்ட துண்டுபிரசுரம் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.

சிங்கள அரசியல்வாதிகளின் சர்வதேச செயற்பாடுகள் காரணமாக, இலங்கைதீவில் ஆயுத புரட்சியை மேற்கொண்டு இரு அரசுகளை கவிழ்க முயற்சித்தது மட்டுமல்லாது, தெற்கில் வாழ்ந்த பௌத்த துறவிகள், கல்விமான்கள் உட்பட ஆயிரக்கணக்கான பொதுமக்களை கொன்று குவித்த ஜே.வி.பி.யினருக்கு, மிகவும் குறுகிய காலத்தில் பொதுமன்னிப்பு கொடுக்கப்பட்டதுடன், சிறை வைக்கப்பட்டிருந்தவர்களும் விடுதலை செய்யப்பட்டனர்.

இதேவேளை இம் மூன்று அரசியல்வாதிகளும், பிரித்தானிய மக்களிடம், தெற்கில் காணாமல் போயிருந்தோரின் தாய்மார்களிற்கு நிதி உதவியும் திரட்டினார்கள்.

இத்துடன் இணைக்கப்பட்டுள்ள கடிதத்தில் மகிந்த ராஜபக்ச, மங்கள சமரவீர ஆகிய இருவரும் நிதி உதவி கோரி கையெழுத்திட்டுள்ள கடிதத்தை காணலாம்.

வடக்கு கிழக்கு

ஆயிரம் ஆயிரம் வருடங்களாக தமிழர்களின் தாயாகபூமியான வடக்கு - கிழக்கு நிலைகளின் பக்கம் பார்வையை திருப்புவோம். வக்குறுதி கொடுக்கப்பட்ட தமிழர்களது தாயாகபூமி பற்றிய ஆய்வை பிறிதொரு கட்டுரையில் பார்க்கலாம்.

இலங்கைதீவில் பிரித்தானிய காலனித்துவ ஆட்சிகாலத்தில், சுதந்திரமாக தனித்து காணப்பட்ட தமிழ் இராச்சியம், இலகுவான நிர்வாகம் நடத்துவதற்கு உதவுவதாக சாட்டு போக்கை கூறி, 1833ஆம் ஆண்டு வேறு இரு சிங்கள இராச்சியங்களுடன் இணைக்கப்பட்டது என்பது சரித்திரம்.

தமிழர்களின் தனி இராட்சியத்திற்கு சாட்சியாக, இலங்கை காலனித்துவ ஆட்சியாளர்களான - போத்துகீசர் , ஒல்லாந்தர், பிரித்தானியர் சான்று பகிர்கின்றனர்.

பிரித்தானிய காலனித்துவ ஆட்சிகாலத்தின் பிற்பகுதியிலிருந்து இன்றுவரை வடக்கு கிழக்கு வாழ் மக்கள் தமது அரசியல் பொருளாதார வாழ்க்கையை - நாளுக்கு நாள், நிமிடத்திற்கு நிமிடம், அங்குலம் அங்குலமாக இலங்கைதீவில் இழந்து வருகின்றனர் என்பதே யாதார்த்தம்.

1948ஆம் ஆண்டு முதல் முப்பது வருடகாலமாக தமிழர்களது அரசியல் உரிமைகளிற்காக தமிழ் அரசியல் தலைவர்களினால் மேற்கொள்ளப்பட்ட சாத்வீக போராட்டங்கள் யாவும், அரசுகள் வன்முறை மூலம் அடக்கி ஒடுக்கியிருந்த காரணத்தினால், வடக்கு கிழக்கு வாழ் இளைஞர்கள், ஓர் ஆயுத போராட்டத்திற்கு 70ஆம் ஆண்டின் பிற்பகுதியில் வித்திட்டு, 1983ஆம் ஆண்டு பாரிய போராக மாற்றம் பெற்றது.

துர்திஸ்டவசமாக, தெற்கில் ஆயிரகணக்கில் ஜே.வி.பி.யினர் படுகொலை செய்யப்பட்டும் காணாமல் போனது போல், வடக்கு கிழக்கிலும் ஆயிரக்கணக்கான இளைஞர்களும் அப்பாவி தமிழ் மக்களும் அரச படைகளினால் படுகொலை செய்யப்பட்டும் காணாமல் ஆக்கப்பட்டனர்.

இவை யாவும் வடக்கு கிழக்கு வாழ் மக்கள் மீது ஓர் இனஅழிப்பையும், சர்வதேச போர்குற்றங்களையும் இலங்கை அரசு மேற்கொள்ள வழிவகுத்தன. இன்று ஐ.நா.மனித உரிமை சபையினால் நிறைவேற்றப்பட்ட பல தீர்மானங்களிற்கு பதில் கூற வேண்டிய நிலையில் இலங்கை உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ஆகையால் முன்பு பெரும்பான்மையின மக்களுக்கு நடைபெற்ற மனித உரிமை மீறல்களை, அண்மையில் வடக்கு கிழக்கு வாழ் மக்களிற்கு பெரும்பான்மையின அரசியல் தலைவர்களின் ஆதரவுடன் நடாத்தப்பட்ட மனித உரிமை மீறல்களுடன் ஒத்து பார்ப்பது மிக அவசியமானது.

அன்று ஜே.வி.பியினரினால் இரு அரசுகளை கவிழ்ப்பதற்காக நடாத்தப்பட்ட ஆயுத புரட்சியில் சம்பந்தப்பட்டவர்களை ஆதரிப்பதற்காக, பெரும்பான்மையின அரசியல் தலைவர்கள், மனித உரிமை என்பதனை தமது தலையாய கடமையாக கொண்டு, தெற்கில் படுகொலை செய்யப்பட்டும் காணாமல் போயும் தடுத்து வைக்கப்பட்ட இளைஞர்களிற்கு நீதி வேண்டி நின்றார்கள்.

ஆனால் அதே நிலைமை வடக்கு கிழக்கில் உள்ள மக்களிற்கு உருவாகிய போது, பெரும்பான்மையின அரசியல் தலைவர்களே வடக்கு கிழக்கில் இடம்பெற்ற படுகொலைகள் காணாமல் போனோருக்கு காரண கர்த்தவாக, பாதுகாப்பு படையினருக்கு உத்தரவுகளை வழங்கியிருந்தார்கள்.

உண்மை என்னவெனில், பெரும்பாம்மையின அரசியல்வாதிகளை பொறுத்த வரையில், வடக்கு கிழக்கு வாழ் மக்களிற்கு நடைபெறுபவை யாவும் ‘பயங்கரவாதத்தின்’ பிரதி பலன்கள். இந்த அடிப்படையில் சிறையில் தடுத்து நிறுத்தப்பட்டவர்களிற்கு பொது மன்னிப்பு என்பது பகல் கனவாகவுள்ளது.

தெற்கின் அரசியல்வாதிகளிடம் சில வினாக்கள்?

அன்று வெளிநாடுகள் சென்று நீதி தேடிய பெரும்பான்மையின அரசியல் வாதிகளான மகிந்த ராஜபக்ச, மங்கள சமரவீர, வசுதேச நாணயக்கார மற்றும் சிலரிடம் நாம் வினாவும் கேள்வி என்னவெனில் - வடக்கு கிழக்கில் இடம்பெற்ற காணாமல் போயுள்ளோர் விடயத்திற்கு நீதி கண்பதற்கான உங்கள் பங்களிப்பு என்ன?

மகிந்த ராஜபக்ச வடக்கு கிழக்கில் நடைபெற்ற ஆயிரக்கணக்கான காணாமல் போயுள்ளோர் விடயத்தில் பதில் கூறவேண்டியவராக காணப்படுகிறார். உலகின் மனித உரிமை சமூதாயத்தின் கண்களில் இவர் ஓர் ‘சர்வாதிகாரி’. யுத்தம் முடிவுற்ற காலத்தில் - “இராணுவ சிப்பாய்கள் ஒரு கையில் மனித உரிமை பிரகடனத்தையும் மற்றை கையில் துப்பாக்கியை ஏந்திய வண்ணம் போரிட்டதாக ஓர் கற்பனை கதையை இவர் கூறியுள்ளார்.

இதேவேளை முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்காவும் மற்றைய ஜனாதிபதிகள் காலத்தில் இடம்பெற்ற காணாமல் போனவற்றை நாங்கள் கவனத்தில் கொள்கிறோம்.

வாசுதேவ நாணயக்கார வடக்கு கிழக்கில் இடம்பெற்ற காணாமல் போனோர் பற்றி இன்று வரை நாடாளுமன்றத்திலோ வேறு ஏதாவது பொது கூட்டங்களில் உரையாற்றியது கிடையாது.

இதன் மூலம் நாம் ஊகிக்க கூடியது என்னவெனில், இவரது நண்பன் மகிந்த ராஜபக்சவினால் வடக்கு கிழக்கில் காணாமல்போக்கப்பட்டதை இவரால் எப்படி கண்டிக்க முடியும்? முன்பு வடக்கு கிழக்கு வாழ் மக்களின் சுயநிர்ணய உரிமைக்காக குரல் கொடுத்து வருவதாக கூறிவந்த வாசுதேவ நாணயக்கார, இன்று என்ன செய்கிறார்?

தமிழ் மக்களிற்கு பாரிய ஏமாற்றங்களை ஏற்படுத்தியவரும் தற்பொழுது ஏற்படுத்துபவரே, மங்கள சமரவீர. இவர் மிகவும் ராஜதந்திரமான முறையில், பெயருக்கும் புகழிற்கும் ஆசைப்பட்டு அடிமைதன பக்குவத்தை கொண்ட தமிழர்களை நல்ல முறையில் பாவிக்கிறார்.

‘பயங்கரவாதம்’ என்ற சொற்பதத்தை பாவித்து இவர் முழு தமிழினத்தின் அரசியல் உரிமை போராட்டத்திற்கு உலை வைத்தவர். இதை தான் கூறுவார்கள் - “மடையர் ஆக்கப்படுபவர்கள் இருக்கும் வரை, மடையர் ஆக்குபவர்களும் இருப்பார்களென்று”.

மங்கள சமரவீரவின் இறுதி சாதனை என்னவெனில், தனது தகவல் அமைச்சர் பதவியை பாவித்து, சில ஊடகங்களில் எனது கட்டுரைகளை பிரசுரிக்காமல் செய்துள்ளமையாகும்.

என்னை பொறுத்தவரையில், 2001ம் ஆண்டு சமரவீர எனக்கும், காலம் சென்ற மருத்துவ காலாநிதி ஜெயலத் ஜெயவர்த்தனா செய்த அநாகரிகமான காரியங்களுடன் ஒப்பிட்டு பார்க்கும் பொழுது, இவை எல்லாம் ஓர் அர்ப்ப விடயம். இவ்வேளையில் சமரவீர, சந்திரிக்காவின் அமைசரவையில் தகவல் அமைச்சராக கடமையாற்றியவர்.

அன்று, காலம் சென்ற மருத்துவ காலாநிதி ஜெயலத் ஜெயவர்த்தன, பல இன்னல்களையும் கொலை மிரட்டல்களையும் எதிர்கொண்டிருந்த வேளையில், இவரது அரசியல் கட்சியான ஐக்கிய தேசிய கட்சியினாலோ அல்லது அதனது தலைவர் ரணில் விக்கிரமசிங்காவினலோ ஜெயலத் ஜெயவர்த்தனாவிற்கு உதவி புரிய முடியவில்லை.

இவ்வேளையில் ‘தமிழர் மனிதர் உரிமைகள் மையத்தினராகிய’ எம்மால், இவரது சர்ச்சைகளை ஜெனிவாவில் உள்ள ‘இன்டர் பாராளுமன்ற ஒன்றியத்திற்கு’ சமர்ப்பித்து நீதி பெற்றோம்.

இவ்விடயம், ஜனதிபதி சந்திரிக்காவிற்கும் அவரது மாமனார் ரத்வத்தைக்கும் அவ்வேளையில் எம்மீது மிகவும் ஆத்திரங்களை உருவாக்கியது.

உடனே, அவர்களது தகவல் அமைச்சாரான மங்கள சமரவீர – என்னையும், காலம் சென்ற ஜெயலத் ஜெயவர்த்தனா பற்றி பல, கட்டுகதைகளும் பொய்களும் அடங்கிய தகவல்களை ஓர் செவ்வி மூலம் 2001ம் ஆண்டு நவம்பர் மாதம் 22ம் திகதி வெளியிட்டார்.

நல்லாட்சியெனப்படும் பொல்லாட்சியினால் எனது கட்டுரைகள் பிரசுரிக்கபடுவதை தடுப்பதானால், ஒருவருடைய பேச்சு சுதந்திரம், எழுத்து சுதந்திரம் யாவும் இவ் நல்லாட்சியின் கீழ் எங்கு சென்றுள்ளது? இவை யாவும் ராஜபக்ச அரசின் சர்வாதிகாரம், வெள்ளை வான், நிலப்பறிப்பிற்கு மேலாக மோசமானவை.

தெற்கின் பெரும்பான்மையின அரசியல்வாதிகள், பயங்கரவாதம் ஒழிக்கப்பட்டதும், வடக்கு கிழக்கு மக்களிற்கான அரசியல் தீர்வு, பதின்மூன்று பிளஸ் (13+ ) என சர்வதேசதிற்கு கதை அழந்தவர்கள்.

இன்று ஏறக்குறைய பத்து வருடங்கள் ஆகும் நிலையில் கூட, அங்கு ஒன்றும் உருப்படியாக செய்யவில்லை. போருக்கு முன்னும் போர்வேளையிலும் வடக்கு கிழக்கு வாழ் மக்கள் அனுபவித்த உரிமைகள் கூட இன்று நடைமுறையில் இல்லை.

வெளிநாட்டு நீதிபதிகளும் வழங்கறிஞர்களும்

மேற்கூறப்பட்டவை யாவற்றையும் சுருக்கமாக கூறுவதனால், முதலாவதாக பெரும்பான்மையின வாதிகளிடம் தமிழ் மக்களிற்கும் மனித உரிமை உண்டு என்பது அவர்களது சொற்பாவனையில் அறவே இல்லை.

இரண்டாவதாக, தெற்கில் இடம்பெற்ற படுகொலைகளிற்கும் காணாமல் போனவற்கும் தாய்மார்களுக்கான நிதி உதவிகளிற்கு வெளிநாட்டவர்களது, அதாவது சர்வதேசத்தின் உதவி மூலமே தீர்க்க முடியுமானால், அதேவிதமாக வடக்கு கிழக்கில் ஏற்பட்ட படுகொலைகளிற்கும், காணாமல் போனாவர்களுக்கும், தாய்மார்களது போராட்டத்திற்கும் நீதி காண்பதற்கு எதற்காக சர்வதேசத்தை இவர்களால் அழைக்க முடியாமல் உள்ளது? இது மிகவும் வேடிக்கையானது மட்டுமல்லாது இவை யாவும் பெரும்பான்மையின வாதிகளது வெளிப்படையான இனத்துவேசமே.

இலங்கைதீவில் உள்ள சகலருக்கும், விசேடமாக தெற்கில் உள்ளவர்களிற்கு ஞாபக்கப்படுத்த விரும்புவது என்னவெனில் - 1963ஆம் ஆண்டு பிரதமர் சிறிமாவோ பண்டராநாயக்கவினால் தனது கணவரது படுகொலை சம்பந்தமாக விசாரணை நடத்துவதற்கு நியமிக்கப்பட்ட விசாரணை குழுவின் மூவரில் இருவர் வெளிநாட்டவர்களே. எகிப்து நாட்டை சார்ந்த நீதிபதி அப்டில் யூனேஸ் என்பவருடன் கான நாட்டை சார்ந்த நீதிபதி மில்ஸ் ஓடீச் ஆகியோர் சமூகமளித்திருந்தனர்.

அதுமட்டுமல்லாது, பண்டாரநாயக்கவின் படுகொலையின் முதலாம் இரண்டாம் குற்றவளிகளான – புத்தரகித்த தேரோ, எச். பி. ஜெயவர்த்தனா போன்றோர் சார்பாக உச்ச நீதிமன்றத்தின் வழங்கறிஞராக பிரித்தானியவை சார்ந்த பினியஸ் குவாஸ் என்ற மாகாராணி சட்ட தரணியே ஆஜராகியிருந்தார் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

இலங்கைதீவின் நான்காவது பிரதமர் பண்டாரநாயக்க, 1959ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 25ஆம் திகதி ஓர் பௌத்த துறவியினாலேயே கொலை செய்யப்பட்டார் என இலங்கை நீதி மன்றத்தின் தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.

வெளிநாட்டு அல்லது சர்வதேச நீதிபதிகள் வழங்கறிஞர்கள் எவ்வளவு தூரம் இலங்கைதீவின் விடயங்களில் சமூகம் அளித்துள்ளார்கள் என்பதை அறிவதற்கு, பண்டாரநாயக்கவின் படுகொலை பற்றிய விசாரணைகளை யாவரும் ஒழுங்காக வாசிக்க வேண்டும்.

பல யாதார்தங்கள் உண்மைகளை கவனத்தில் கொண்டு, மீண்டும் கூறுகிறேன் - பெரும்பான்மையின வாதிகளை பொறுத்த வரையில் தமிழ் மக்களை ஒரு பொழுதும் தங்களுடன் சரிநிகராக வாழவோ நடந்த போவதில்லை. அவர்களது செயற்பாடுகள் யாவும் இனத்துவேசத்தை அடிப்படையாக கொண்டவை.

யாதார்த்தின் அடிப்படையில் கூறுகின்றேன், வடக்கு கிழக்கு வாழ் மக்கள் பெரும்பான்மையின அரசியல்வாதிகளிடமிருந்து எந்தவித அரசியல் சலுகைகளை பெற்றுகொள்ள போவதில்லை.

பெரும்பான்மையின வாதிகள் இனத்துவேசிகளாக காணப்பட்டாலும், அவர்கள் சர்வதேசத்தை நசுக்கான ராஜதந்திரம் மூலம் கையாளுகின்றனர்.

எது என்னவானாலும், தென் ஆபிரிக்காவின் சிறந்த வெள்ளை இன அரசியல்வாதிகளான பி.டபிள்யூ. போத்தா அல்லது டபிள்யூ. டீ கிளாக் போன்ற ஒருவர், பெரும்பான்மையின வாதிகளிடையே ஒருபொழுதும் பிறக்க போவதில்லை என்பதை யாவரும் உணர்ந்து கொள்ள வேண்டும்.

சிவில் சமூகம்

ஓர் ஜனநாயக நாட்டில், சிவில் சமூகம் என்பது நடுநிலையானதாக காணப்பட வேண்டியதொன்று. ஆனால் இலங்கையின் தெற்கில் காணப்படும் சிவில் சமூகம், கண்மூடித்தனமாக தற்போதைய நல்லாட்சி எனப்படும் பொய்யாட்சியை ஆதரிக்கிறது.

இதற்கு அவர்கள் சொல்லும் காரணம் என்னவெனில், மகிந்த ராஜபச்ச பதவிக்கு வந்தால் யாருக்கும் எந்த சுதந்திரமும் இல்லாமல் போய்விடுமாம். அப்படியானால், வடக்கு கிழக்கு வாழ் மக்களுடைய பொறுப்பு கூறல், அரசியல் தீர்விற்கு உங்கள் பங்கு என்ன?

தெற்கில் உள்ள சிவில் சமூகத்தின் பெரும்பான்மையானோர், தற்போதைய அரசிற்கு வால் பிடிப்பதற்கு மேலாக, அவர்கள் அங்கு ஒன்றும் செய்யவில்லை.

நாம் அறிந்த வரையில், கொழும்பில் உள்ள சில தமிழ் பேசும் சிவில் சமூகத்தினர், இலங்கையின் தகவல் திரட்டும் பிரிவினருடன், வடக்கு கிழக்கில் காணாமல் போனோர் பற்றி போராட்டம் நடத்தும் பலருடைய தகவல்களை சேகரிப்பதற்கா வேலை செய்வதாக அறிந்துள்ளோம். உண்மையில் இவை மனித உரிமை வேலை அல்லா. இவற்றை ‘மனித தவறு’ என கூறலாம்.

இவ்வேளையில், தெற்கின் முற்போக்கான சிங்களவரிடமும், அடிமை மனப்பான்மையுடன் வாழும் தமிழரிடம் நாம் வினாவுவது என்னவெனில் - வடக்கு கிழக்கில் இன்று வரையில் ஏதாவது ஒரு பெரும்பான்மையின அரசுகளினால் செய்யப்பட்ட நன்மையான விடயங்களை உங்களால் காண்பிக்க முடியுமா?

இங்கு தான், வடக்கின் முதலாமைச்சர் விக்கினேஸ்வரனினால் கூறப்பட்ட ‘மாபிள்’ கதை ஞாபகத்திற்கு வருகிறது. இவர் கொழும்பில் றோயல் கல்லூரியில் சிறுவனாக படிக்கும் வேளையில், இவர்கள் ‘மாபிள்’ விளையாடும் வேளைகளில், அக்கல்லூரியில் கல்விகற்கும் மூத்த மாணவர்கள் சிறுவர்களது ‘மாபிள்களை’ பறிப்பது வழக்கமாம்.

அவ்வேளையில் சிறிய மாணவர்கள் தமது மாபிளிற்காக மூத்த மாணவர்களிடம் கெஞ்சி கேட்டுக்கும் வேளையில், மூத்த மாணவர்கள் ஒருசிலவற்றை மட்டுமே கொடுப்பது வழக்கமாம்.

இன்று தமிழர்களது அரசியல் போராட்டமும் அரசியல் தீர்வும் இந் நிலையிலேயே இலங்கைதீவில் சென்று கொண்டிருக்கிறது.

இவ் அபாயங்களை, கன்னி தமிழ் அரசியல்வாதிகளினாலும், அரசியல் பயிற்சி பெறுவோர்களினாலும் ஒரு பொழுதும் புரிந்து கொள்ள முடியாது. இக் கன்னி அரசியல்வாதிகளும், அரசியல் பயிற்சியாளர்களும் செய்ய முயல்வது என்னவெனில் - “யானை பசிக்கு சோழப் பொறி”.

பொறுப்புகூறல் காணாமல் போனோர்களிற்கான அமைப்பு யாவும் ஓர் பித்தலாட்டம். இன்னும் சில மாதங்களிலோ வருடங்களிலோ இவ் அமைப்பு முடிவிற்கு வந்துவிடும்.

பல மனித உரிமை நிபுணர்களும், கல்விமான்களும் இவ் அமைப்பினால் எதுவும் விசேடமாக நடைபெற போவதில்லை என்பதை அடித்து கூறியுள்ளார்கள். கடந்த காலங்களில் நியமிக்கப்பட்ட மற்றைய அமைப்புக்கள் போன்று இதுவும் ஒரு கைதேர்ந்த இலங்கை அரசின் மழுப்பல் காரியமே.

40ஆவது கூட்டத் தொடர்

ஐரோப்பாவில் பல ராஜதந்திரிகளிடம் உரையாடிய வேளையில், வெளியான உண்மை என்னவெனில், இலங்கையில் கூடிய விரைவில் ஜனதிபதி தேர்தலும், நாடாளுமன்ற தேர்தலும் நடைபெறவுள்ள காரணத்தினால், மனித உரிமை சபையின் தீர்மானத்திற்கு, நல்லாட்சி அரசினால் கொடுக்ப்பட்ட இணைந்த பரிந்துரையிலிருந்து, இலங்கை மீளு பெறுவதற்கான ஆயத்தங்களில் இறங்கியுள்ளனர்.

இவற்றை கண்டு நாம் யாரும் அதிசயப்படப் போவதில்லை. காரணம் கடந்த ஏழு தசாப்தங்களிற்கு மேலாக பெரும்பான்மையின வாதிகள் வடக்கு கிழக்கு வாழ் மக்களை ஏமாற்றுவதிலேயே வெற்றி கண்டு வந்துள்ளனர்.

இலங்கையினால் இந்த தீர்மானத்தினை இணைந்து பரிந்துரைப்பதாக கூறிய வேளையில், இவை யாவும் இலங்கையின் காலம் கடந்தும் செயற்பாடுவென அன்றே அறிவிந்திருந்தேன்.

ஐ.நா.உட்பட உரையாற்றிய பல கூட்டங்கள் சந்திப்பில், இலங்கை ஒருபோதும் இத் தீர்மனத்தை நிறைவேற்ற போவதில்லை என்பதை உறுதியான அன்றே கூறியிருந்தேன். இணைந்த பரிந்துரையிலிருந்து, இலங்கை வாபஸ் பெறும் கட்டத்தில், தெற்கின் சிவில் சமூகம் என்ன செய்ய போகிறார்கள் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

எது என்னவானலும், ஐ.நா.மனித உரிமை சபையினால்இலங்கை மீது நிறைவேற்றப்பட்டுள்ள பல தீர்மானங்களிற்கு இலங்கை அரசுகள் பதில் கூறவேண்டிய கடமைபாட்டில் உள்ளனர் என்பது குறிப்பிடதக்கது.

எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் மகிந்த ராஜபக்சவினது கட்சியோ ஆட்சி அமைப்பது தவிர்க்க முடியாதொன்றகவுள்ளது. இதிலும் வேடிக்கை என்னவெனில், மகிந்த ராஜபக்ச எண்ணுவது போல் அவருக்கு சார்பாக யாவும் நடைபெறுமானால், இவரது குழு அல்லது கட்சியினால் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை பெறக்கூடிய சந்தர்பங்களும் உண்டு.

எது என்னவானலும், ராஜபக்சாவினது குழுவினால் ஜனதிபதி தேர்தலில் வெற்றியடைவது மிகவும் கடினமான விடயம். ஜனதிபதி தேர்தலில் போட்டியிடும் எந்த வேட்பளராக இருந்தாலும் - வடக்கு கிழக்கு மலைநாட்டு மக்களது வாக்குகள் இல்லாது வெற்றி அடைய முடியாது. 2005ம்ஆண்டு, 2010ம் ஆண்டு நடைபெற்ற ஜனதிபதி தேர்தல்களில் மகிந்த ராஜபக்சாவின் வெற்றிக்கு பல அசாதாரண நிலைமைகள் காரணிகளாக அமைந்தன.

2005ம் ஆண்டு வடக்கு கிழக்கின் புறக்கணிப்புக்களும், 2010ம்ஆண்டு ஜனதிபதி தேர்தலில் மோசடி வாக்குகள் மூலமே ராஜபக்ச வெற்றியடைந்தார். 2010ம் ஆண்டு தேர்தல் ஆணையாளராக கடமையாற்றி நாட்டைவிட்டு வெளியேறிய தயானந்தா திசநாயக்கா தனது அமைதியை கலைப்பரானால், 2010ம்ஆண்டு ராஜபச்சவின் வெற்றி பற்றிய விடயங்கள், விபரங்களுடன் வெளியாகும்.

நான் அறிந்தவரையில், ஏற்கனவே ராஜபக்ச குடும்பத்தினர் ஒர் நிழல் அரசாங்கத்தை, தற்போதைய அரசாங்கத்தில் உள்ளவர்களையும் அதன் ஆதரவாளர்களையும் பழிவாங்கும் நோக்குடன் நிறுவியுள்ளதாகவும், இந்த அடிப்படையில் ராஜபச்ச குழுவினரினால் தயாரிக்கப்பட்ட பழிவாங்கல் பட்டியலில் - சரத் பொன்சேக்கா, சந்திரிக்க குமாரதுங்கா, மேர்வின் சில்வா போன்றவர்களது உள்ளதாகவும் இவர்கள் வாழ்நாள் முழுவதும் சிறைவாசம் அனுபவிக்க வேண்டிய நிலை ஏற்படலாமென கூறப்படுகிறது.

இப் பழிவாங்கல் படலத்திற்கு, பல அரசாங்கங்களில் அமைச்சர் பதவி வகித்த ஓர் கல்விமான், சட்ட சிக்கல்களை ஆராய்ந்து வருவதாகவும் கூறப்படுகிறது. இதேவேளை ராஜபக்சவிற்கு ஆதரவான சில கல்விமான்கள் - நியூயோர்க், பிரசில்ஸ், ஜெனிவா, ராஸ்யா போன்ற இடங்களில் தூதுவராக பதவிகளை நிரப்புவதற்கு காத்து இருப்பதாகவும் கூறப்படுகிறது.

நல்லாட்சியில் உள்ள அமைச்சர்கள், ஆதாரவாளர்கள் கவலைப்படும் காலம் மிக தூரத்தில் இல்லை. காரணம், ராஜபக்ச ஆட்சிவேளையில் நடைபெற்ற ஊழல்கள் கொலைகளை, தற்போதைய அரசாங்கம் ஒழுங்காக விசாரித்து நடவடிக்கை எடுக்க தவறியுள்ள காரணத்தினால், இவற்றிலிருந்து தப்பி செல்லும் ராஜபச்ச குடும்பத்தினர், யாவற்றையும் மூடிமறைந்து தற்போதைய அரசில் அங்கத்துவம் வகிக்கும் சிலரை சிறைகளிற்குள் தள்ளுவார்களென எதிர்பார்க்கப்படுகிறது.

2020ம் ஆண்டு ராஜபச்ச ஆட்சி அமைக்கும் பட்சத்தில், தற்போதைய அரசில் அங்கத்துவம் வகிக்கும் பல அமைச்சர்களும், ஆதரவாளர்களும் வெளிநாடுகளில் தஞ்சம் கோர வேண்டிய நிலைமைக்கு தள்ளப்படுவார்கள்.

Latest Offers