நித்தியகலாவின் படுகொலையும், நிர்கதியாகிப் போன குழந்தைகளின் எதிர்காலமும்!!

Report Print Murali Murali in கட்டுரை

சமகாலத்தில் வடக்கு கிழக்கில் என்னதான் நடக்கின்றது? என்ற கேள்விக்கு யாராலும் பதில் கூற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. ஏனெனில் அரசியல், சமூகம், பொருளாதாரம் என அனைத்து துறைகளும் அங்கு சீரழிந்து விட்டது.

நாளுக்கு நாள் வடக்கு கிழக்கு அரசியலில் பெரும் குழப்பங்கள் ஏற்பட்டுகின்றன. அதிகார போட்டி தலைதூக்கியுள்ள நிலையில், தமிழ் தலைமைகள் ஒருவருக்கு ஒருவர் பரஸ்பர குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகின்றனர்.

இது தான் இப்படியென்றால் சமூக சீரழிவு என்பது அங்கு வேறு ஒரு ரகத்தில் அரங்கேறி வருகின்றது. கொலை, கொள்ளை, வாள் வெட்டு, கற்பழிப்பு, என என்றும் இல்லாத அளவிற்கு வடக்கு கிழக்கில் குற்றச்செயல்கள் நடக்கின்றன.

அந்த வகையில், கடந்த இரண்டு நாட்களாக பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கும் ஒரு படுகொலை சம்பவம் ஒன்று கிளிநொச்சியில் இடம்பெற்றுள்ளது. ஒரு பிள்ளையின் தாயான 32 வயதுடைய நித்தியகலா என்ற பெண் கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளார்.

கிளிநொச்சி - பன்னங்கண்டி பகுதியிலிருந்து கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் இளம் பெண்ணொருவர், இரணைமடு நீர்ப்பாசன கால்வாய்க்குள் இருந்து சடலமாக மீட்கப்பட்டார்.

முல்லைத்தீவு, முறிகண்டி பகுதியைச் சேர்ந்த 32 வயதான கருப்பையா நித்தியகலா என்ற பெண்ணே கொலை செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் தொடர்பில் இரண்டு பிள்ளைகளின் தந்தை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபர் தானே இந்த கொலையை செய்ததாக ஒப்புக்கொண்டுள்ளார். அதே சமயம், கொலை செய்யப்பட்ட பெண் கணவரை பிரிந்து வாழும் நிலையில், ஐந்து மாத கர்ப்பிணியாக இருந்துள்ளார்.

“குறித்த பெண்ணுடன் தனக்கு தொடர்பு இருந்தது. அவரது வயிற்றில் வளர்ந்த குழந்தை என்னுடையதுதான். அதனால் அவள் தன்னை கூட்டிச் செல்லுமாறு வற்புறுத்தினாள்.

பின்னர் நாம் இருவரும் நஞ்சு குடித்து இறந்துவிடுவோம் என்று முடிவெடுத்து, அதற்கான முயற்சிகளை மேற்கொண்ட நிலையில், குறித்த பெண்ணை கொலை செய்ததாக” சந்தேகநபர் வாக்குமூலம் வழங்கியுள்ளார்.

கொலை செய்யப்பட்ட பெண், நல்லடக்கம் செய்யப்பட்டுவிட்டார். கொலை செய்தவர் பொலிஸ் தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ளார். அவர்களின் பிரச்சினை முடிந்து விட்டது.

“ஆசை அறுபது நாள் மோகம் முப்பது நாள்” என்பார்கள். அது போல் இந்த இருவருக்கும் இடையில் காணப்பட்ட தகாத உறவு ஒரு எல்லைக்கு சென்று இறுதியில் கொலையில் முடிந்து விட்டது.

இந்த சம்பவத்தில் பலரின் எதிர்காலம் கேள்விக்குறியாகி விட்டது. குறிப்பாக மூன்று குழந்தைகள் மற்றும் ஒரு அங்கவீனமான முன்னாள் போராளி ஒருவரின் வாழ்க்கை கேள்விக்குள்ளாகியுள்ளது.

அத்துடன், அவர்கள் சார்ந்த குடும்பம், உறவினர்கள் என பலரும் இதனால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபர், விடுதலைப் புலிகள் காலத்தில், புலிகளின் காவல் துறையில் இருந்த ஒருவர் எனவும், அவரின் மனைவி அங்கவீனமான முன்னாள் போராளி ஒருவர் எனவும் தெரியவந்துள்ளது.

இந்த தம்பதியினருக்கு இரண்டு குழந்தைகள் இருக்க, உயிரிழந்த பெண்ணுக்கு ஒரு குழந்தை இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. ஆக மொத்தம் இந்த கொலை சம்பவத்தினால் முக்கியமாக நான்கு பேரின் எதிர்காலம் கேள்விகுறியாகியுள்ளது.

இனி அந்த குழந்தைகளும், அந்த அங்கவீனமான பெண்ணும் சமூகத்தில் எவ்வாறு வாழ்க்கையை கொண்டு செல்லப்போகின்றார்கள் என்ற கேள்வியெழும்பியுள்ளது. அந்த குழந்தைகளின் எதிர்காலம் என்ன?

இந்த சமூகத்தில் தொடர்ந்தும் எவ்வாறு அவர்கள் வாழப்போகின்றார்கள் என்ற கேள்வியெழுந்துள்ளது. ஏனெனில் எங்களது சமூகம் அவ்வாறான ஒரு கட்டமைப்பை கொண்டுள்ளது.

பெரியவர்கள் செய்த தவறுக்காக தண்டிக்கப்பட போவது அவர்களின் குழந்தை என்று கூறினாலும் மிகையாகாது. ஏனெனில், அந்த குழந்தைகள் இனிவரும் காலங்களில் சமூகத்தில் பல்வேறு புறக்கணிப்புகளுக்கு ஆளாவார்கள் என்பது நிச்சயம்.

அதுவே அவர்களின் எதிர்காலத்தை வீணாக்கி விடும் என்பதே நிதர்சனம். அவர்களால் பாடசாலை சென்று நிம்மதியாக கல்வி கற்க முடியாது. அங்கு அவர்களுக்கு பல்வேறு புறக்கணிப்புகள் ஏற்படும்.

புறக்கணிப்பு என்பதைவிட வீண் பழிச்சொல்லுக்கு ஆளாவது நிச்சயம். அதுவே அவர்களுக்கு ஒரு வெறுப்பை ஏற்படுத்தும். அது மட்டுமல்லாது அவர்களை சுற்றியிருக்கும் சமூகமும் அவர்கள் மீது வீண் பழியினையே சுமத்தும்.

இதன் பின்னர் அந்த பிள்ளைகளை எங்களது சமூகம் பார்க்கும் பார்வையே வேறு விதமாகத்தான் இருக்கும். அவர்களுக்கு உதவி செய்வதற்கு கூட இந்த சமூகம் நிச்சயம் தயக்கம் காட்டும்.

யாருடனும் நெருங்கி பழக முடியாது. எந்தவொரு பொது நிகழ்வுகளிலும் கலந்துகொள்ள முடியாது. ஏன் உறவுகள் கூட சில நேரங்களில் ஒதுக்கி வைத்து விடும். இவ்வாறான சம்பவங்களை நாங்கள் எங்கள் சமூகத்தில் பார்க்க முடிகின்றது.

இவ்வாறான நிலை அந்த குழந்தைகளின் எதிர்காலத்தை இல்லாமல் செய்துவிடும். அது மட்டுமல்லாது தன் இனத்திற்காக போராடிய அந்த அங்கவீனமான பெண்ணின் நிலை இன்னும் பரிதாபத்துக்குறியதாகும்.

பெற்றோர்கள் செய்த தவறுக்காக குழந்தைகள் தண்டிக்கப்படுவதும், அவர்களின் எதிர்காலம் வீணடிக்கப்பட போவதும் கவலைக்குரிய ஒரு விடயமாகும். ஒரு கட்டுக்கோப்பாக இருந்த சமூகத்தில் வாழ்ந்த இருவர் செய்த தவறு பலரையும் பாதித்துள்ளது.

இது போன்று தமிழர் தாயகப் பகுதிகளில் கடந்த காலங்களில் கொடூரமான கொலை சம்பவங்கள் இடம்பெற்றிருந்தன. வித்தியா, ரெஜினா, ஹரிஸ்ணவி என பலர் கொலை செய்யப்பட்டிருந்தனர்.

இவர்கள் கொலை செய்யப்பட்ட போதெல்லாம் எங்கள் சமூகம் போராட்டங்களையும், கண்டனங்களையும் வெளியிட்டிருந்ததுடன், எதிர்ப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தது.

அரசாங்கத்திற்கும், பாதுகாப்பு தரப்பினர்களுக்கும் பல்வேறு அழுத்தங்களை கொடுத்திருந்தனர். எனினும், இது போன்ற சம்பவங்கள் எங்கள் சமூகத்தில் அவ்வப்போது அறங்கேறிக்கொண்டுதான் இருக்கின்றது.

ஆகையினால் இதன் பின்னணி குறித்து ஆய்வு செய்ய வேண்டிய கடப்பாடு எங்களுக்கு இருக்கின்றது. ஏனெனில், திறந்தவெளி சிறைச்சாலையில், பாதுகாப்பு படைகளின் கட்டுப்பாட்டில் இருக்கும் தாயகப் பகுதியிலேயே இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறுகின்றன.

வட கிழக்கு பகுதிகளோடு ஒப்பிடும் போது தென்னிலங்கையில் இவ்வாறான கொடூரமான சம்பவங்கள் இடம்பெறுவதில்லை. அப்படியானால் வடக்கு கிழக்கு பதிகளில் இவ்வாறான சம்பவங்கள் திட்டமிட்டு அரங்கேற்றப்படுகின்றதா என்ற சந்தேகமும் எங்கள் மத்தியில் ஏற்படுகின்றது.

எது எவ்வாறான போதிலும், இரண்டு பேருக்கு இடையில் காணப்பட்ட தகாத உறவு அவர்களில் குழந்தைகளின் எதிர்காலத்தை நிச்சயம் பாதித்துள்ளது என்பதே நிதர்சனமான உண்மை.

Latest Offers