போர்க் குற்றச்சாட்டு மாறிவரும் காலம்!

Report Print Subathra in கட்டுரை

போர் முடிவுக்கு வந்து பத்து ஆண்டுகள் ஆகப் போகின்ற நிலையிலும் அந்தப் போரின் முடிவில் கொல்லப்பட்டு விட்டார் என்று அரசாங்கத்தினால் அறிவிக்கப்பட்ட விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் தொடர்பாக இன்னமும் பல்வேறு கதைகள் வந்து கொண்டு தான் இருக்கின்றன.

2009 மே 19ம் திகதி விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் கொல்லப்பட்டு விட்டார் என்று அரசாங்கத்தினால் அறிவிக்கப்பட்டது. அது தொடர்பான படங்களும் வெளியிடப்பட்டன.

அதனை அப்போது பொய் என்றவர்களும் உண்டு. உண்மையே என்று நம்பியவர்களும் உண்டு. உண்மை என்று தெரிந்திருந்தும் அதனை பொய் என்று நம்ப வைக்க முயன்றவர்களும் உண்டு.

பிரபாகரன் உயிரோடு இருக்கிறார், மீண்டும் வருவார், வரப்போகிறார், வந்து கொண்டிருக்கிறார் என்று கூறிக் கொண்டிருந்தவர்களின் சுருதி இப்போது மெல்ல மெல்ல அடங்கிக் கொண்டிருக்கின்றது.

அவ்வாறு கூறிக் கொண்டிருந்த பலருக்கு ஒரு உண்மையை மறைக்க துணை போய் விட்டதான குற்ற உணர்வு தலைகாட்டத் தொடங்கி விட்டது. அல்லது எப்படியாவது சமாளித்துக் கொள்ளும் துணிச்சல் வந்து விட்டது.

அது ஒரு புறத்தில் இருக்க அரசாங்கத்தினால் அறிவிக்கப்பட்ட பிரபாகரனின் மரணம் தொடர்பாக இருந்து கொண்டிருந்த கேள்விகள் சிலவற்றுக்கு விடைகள் கிடைக்கத் தொடங்கியிருக்கின்றன.

இது ஒன்றும் ஊகங்களின் அடிப்படையில் கூறப்படும் விடயமன்று. இறுதிக்கட்டப் போர்முனையில் நின்ற இராணுவ அதிகாரிகள் வெளியிட்ட தகவல்களே இவை.

மேஜர் ஜெனரல் சாஜி கல்லகே இலங்கை இராணுவத்தின் கஜபா படைப்பிரிவைச் சேர்ந்த ஒரு முக்கிய அதிகாரி. கடந்த 31ம் திகதியுடன் அவர் இராணுவத்திலிருந்து ஓய்வு பெற்றிருக்கிறார்.

விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரில் முக்கிய பங்கெடுத்த அதிகாரிகளில் இவரும் ஒருவர். குறிப்பாக நான்காவது கட்ட ஈழப்போர் என்று வர்ணிக்கப்படும் இறுதிக்கட்டப் போரில் இவரது பங்கு மிக அதிகமானது.

குறிப்பாக கிழக்கிலும் மன்னாரில் தொடங்கி முல்லைத்தீவு வரையிலுமாக ஒட்டுமொத்த போர் அரங்கிலும் செயற்பட்டவர். கொமாண்டோ அணிகளை வழிநடத்தியவர். 59வது டிவிஷனின் கட்டளை அதிகாரியாகவும் இருந்தவர்.

அவ்வாறான ஒருவர் தான் கடந்த வாரம் சிங்கள ஊடகம் ஒன்றுக்கு சில வாக்குமூலங்களைக் கொடுத்திருக்கிறார். அவர் அதில் பிரபாகரன் தொடர்பாக வெளியிட்டுள்ள தகவல்கள் புதியவை.

அதாவது 2009 மே 19ம் திகதி காலை ஒரு துப்பாக்கிச் சண்டைக்குப் பின்னர் பிரபாகரன் உடல் மீட்கப்பட்டது என்றும் தொலைக்காட்சிகளில் முதலில் ஒளிபரப்பப்பட்ட அவரது உடல் இராணுவ சீருடையுடன் இருப்பதை பார்த்து இராணுவத் தளபதி சரத் பொன்சேகா கோபத்துடன் இராணுவ அதிகாரிகளைக் கடிந்து கொண்டார் என்றும் பிரபாகரனின் உடலிலிருந்து சீருடையை அகற்றி விட்டு இடுப்பில் கோவணம் போன்று சிறிய துணி ஒன்றைப் போர்த்தி விடுமாறும் சரத் பொன்சேகா உத்தரவிட்டார்.

அதன்படியே அருகிலிருந்த இராணுவ முகாம் ஒன்றுக்கு பிரபாகரனின் சடலத்தை தனது பிக்கப் வாகனத்தில் எடுத்துக் கொண்டு போய் சீருடையைக் களைந்து விட்டு இடுப்பில் ஒரு சிறிய துணியைப் போர்த்திக் கொண்டு மீண்டும் கண்டெடுக்கப்பட்ட இடத்திலேயே சடலத்தை வைத்ததாகவும் மேஜர் ஜெனரல் கல்லகே கூறியிருக்கிறார்.

அதற்குப் பின்னரே பிரபாகரனின் உடலை அடையாளம் காண்பதற்கு கருணாவையும், தயா மாஸ்டரையும் சரத் பொன்சேகா அனுப்பி வைத்தார் என்றும் அவர் குறிப்பிட்டிருக்கிறார்.

பிரபாகரனின் உடலிலிருந்து இராணுவ சீருடையை அகற்றுமாறு உத்தரவிட்டது சரத் பொன்சேகாவே என்பது தான் புதிய தகவல்.

இதற்கு முன்னர் மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன தனது நூலில் பிரபாகரனின் உடல் கண்டெடுக்கப்பட்ட விடயம் பற்றி எழுதியிருந்தாலும் அவரது சீருடை அகற்றப்பட்ட விவகாரம் தொடர்பாக எந்தத் தகவலையும் குறிப்பிடவில்லை. பேட்டிகளிலும் அவர் அதனைத் தவிர்த்திருந்தார்.

ஆனால் மேஜர் ஜெனரல் கல்லகே துணிச்சலோடு சரத் பொன்சேகாவின் மீது கல்லைத் தூக்கிப் போட்டிருக்கிறார். அதுவும் ஓய்வு பெறவிருக்கின்ற நிலையில் தான் அவர் இந்தத் தகவலை வெளியிட்டிருக்கிறார்.

தற்போதைய அரசாங்கத்துடன் முட்டி மோதிய இராணுவ அதிகாரிகளில் ஒருவர் தான் மேஜர் ஜெனரல் கல்லகே.

2016ம் ஆண்டு தொடக்கத்தில் பொறுப்புக்கூறல் பொறிமுறைகளுக்கான கலந்தாய்வுச் செயலணி ஒன்று அரசாங்கத்தினால் அமைக்கப்பட்டது. அது பற்றி வெளிவிவகார அமைச்சராக இருந்த மங்கள சமரவீர பலாலியில் நடந்த கூட்டத்தில் விளக்கமளித்துக் கொண்டிருந்த போது அந்தச் செயலணியில் இராணுவ அதிகாரிகளுக்கும் இடமளிக்கப்பட வேண்டும் என்று வாதாடி அவருடன் வாக்குவாதம் செய்தவர் தான் மேஜர் ஜெனரல் கல்லகே.

அதனால் அவர் இராணுவத் தலைமையகத்துக்கு மாற்றப்பட்டு முக்கிய பதவிகளில் இருந்து ஒதுக்கி வைக்கப்பட்ட நிலையில் தான் ஓய்வு பெற்றிருக்கிறார். எனவே சரத் பொன்சேகா மீது இவர் வெளிப்படையாக குற்றச்சாட்டை வீசியிருப்பதில் ஆச்சரியமில்லை.

இவர் மகிந்த ராஜபக்சவுடன் சென்றிருந்த போது போர்க் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு அமெரிக்கா, பிரித்தானியாவில் இருந்து அவசரமாக நாடு திரும்பும் நிலையும் ஏற்பட்டது. அவுஸ்திரேலியாவும் கூட இவருக்கு போர்க் குற்றச்சாட்டுகளைக் காரணம் காட்டி வீசா வழங்க மறுத்திருந்தது.

போரின் போது விதிகளை மீறுவது மட்டும் தான் போர்க் குற்றங்கள் அல்ல. போரில் உயிரிழந்தவர்களின் உடல்களின் மீது நிகழ்த்தப்படுகின்ற வன்முறைகளும் போர்க்குற்றங்களாகவே பார்க்கப்படுகின்றன.

பிரபாகரன் கொல்லப்பட்ட பின்னர் அவரது சீருடை களையப்பட்டு உடல் முழுவதும் சேறு பூசப்பட்ட நிலையில் தான் அடையாளம் காண்பதற்காக வைக்கப்பட்டிருந்தது.

உடல் கைப்பற்றப்பட்ட போது சீருடையுடன் அதனை தூக்கி வரும் காட்சிகளும் நிலத்தில் கிடத்தப்பட்டிருக்கும் காட்சிகளும் வெளியாகியிருந்தன.

பின்னரே இடுப்பில் ஒரு சிறு துணியுடன் சேறு பூசப்பட்ட நிலையில் அவரது உடல் கிடத்தப்பட்டிருந்தது. இடைப்பட்ட குறுகிய நேரத்துக்குள் இறந்து போனவரின் உடல் வன்முறை நிகழ்த்தப்பட்டு அவமரியாதைக்குள்ளாக்கப்பட்டிருக்கிறது என்பது அதன்மூலம் நிரூபணமாகியிருந்தது.

தெரிந்தோ தெரியாமலோ அதற்கான ஆதாரங்களை இராணுவமே வெளியிட்டு விட்டது. பிரபாகரனின் மகன் பாலச்சந்திரன் கொல்லப்பட்டுக் கிடக்கும் காட்சிகள் வெளியான போது அதனை மறுத்தது போன்று இதனையும் பொய்யானது போலியானது என்று மறுக்க முடியாது.

ஏனென்றால் அவை அதிகாரபூர்வமாக இராணுவமே வெளியிட்ட படங்கள். எனவே ஏதோ ஒரு காலகட்டத்தில் இத்தகைய தவறுகள் அல்லது மீறல்களுக்கு பொறுப்புக்கூற வேண்டிய நிலை ஏற்படுவது தவிர்க்க முடியாததாகவே இருக்கலாம்.

இராணுவ சீருடையை அகற்றுமாறு உத்தரவிட்ட விவகாரத்தில் சரத் பொன்சேகாவை பொறுப்பாளியாக்க முற்பட்டுள்ளதன் மூலம் மேஜர் ஜெனரல் சாஜி கல்லகே தனக்கு இதில் உடன்பாடு இல்லை என்று காட்டிக் கொள்ளவே முற்பட்டுள்ளார்.

ஆனால் பிரபாகரனின் உடல் அவமதிப்புக்குள்ளாக்கப்பட்ட விடயத்தை முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் தயா ரத்நாயக்க போன்றவர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை.

2016 ஏப்ரல் 16ம் திகதி ஆங்கில நாளிதழ் ஒன்றில் அவரது பேட்டியுடன் ஒரு கட்டுரை வெளியாகியிருந்தது. அதில் ஜெனரல் தயா ரத்நாயக்க இலங்கை இராணுவம் மீதான மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுகளை நிராகரித்து சில தகவல்களை வெளியிட்டிருந்தார்.

நான் கலாநிதிப் படிப்புக்கான ஆய்வுத் திட்டத்துக்காக சீனாவில் இருந்தேன். அங்கு 2000 சீன அதிகாரிகளும் 168 வெளிநாட்டு அதிகாரிகளும் இருந்தனர்.

ஒரு பெரிய அரங்கில் இரண்டு சீன அதிகாரிகள் தமது ஆய்வைச் சமர்ப்பித்தனர். அவர்களுக்கு அங்கு சில இலங்கை அதிகாரிகளும் இருக்கிறார்கள் என்று தெரியாது.

அந்தச் சமர்ப்பணத்தின் ஒரு பகுதியாக ஒரு வீடியோ துண்டுக் காட்சியை ஒளிபரப்பினர். அது பிரபாகரனின் உடல் நிலத்தில் கிடத்தப்பட்டிருந்த காட்சி. அவரைச் சுற்றி படையினர் நிற்கின்றனர். ஒரு ஈ வந்து பிரபாகரனின் முகத்தின் மீது அமர்கிறது. அதனை ஒரு படைச்சிப்பாய் விரட்டி விடுகிறார்.

அந்த சமர்ப்பணத்தைச் செய்த சீன அதிகாரிகள் அதனைக் காண்பித்து உலகின் மிக மோசமான ஒரு தீவிரவாத தலைவரும் தமக்கு மிகவும் அச்சுறுத்தலாக இருந்தவருமான ஒருவரிடத்தில் இலங்கைப் படையினர் எந்தளவுக்கு கருணையுடன் நடந்து கொண்டுள்ளனர் என்று கூறினார்.

இப்போது அவர் இறந்து விட்டார். அவரது இறந்த உடலை ஒரு ஈ அசுத்தப்படுத்தவும் அவர்கள் விடவில்லை. இது தான் ஒரு நாகரிகமான படை என்று கூறினர் எனக் குறிப்பிட்டிருந்தார் மேஜர் ஜெனரல் தயா ரத்நாயக்க.

சீன அதிகாரிகளின் இந்தக் கருத்துக்கும் மேஜர் ஜெனரல் சாஜி கல்லகே கூறியிருக்கின்ற விடயங்களுக்கும் இடையில் உள்ள பெரிய இடைவெளியை புரிந்து கொள்வது கடினமல்ல.

பிரபாகரனின் சடலம் நிலத்தில் கிடந்த காட்சயை தொலைக்காட்சியில் பார்த்த போது அது தனக்கு மகிழ்ச்சியைத் தரவில்லை என்று இந்திய காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தி கூறியிருக்கும் இந்தத் தருணத்தில் தான் மேஜர் ஜெனரல் சாஜி கல்லகேயும் இதனைக் கூறியிருக்கிறார்.

இராணுவ அதிகாரிகளில் சிலர் போரில் விதிமீறல்கள் நிகழவில்லை என்பதை நிரூபிக்க ஒற்றைக்காலில் நிற்கிறார்கள். இன்னும் சிலர் எங்காவது சில சம்பவங்கள் நிகழ்ந்திருக்கலாம் என்ற நிலைப்பாட்டில் இருக்கிறார்கள்.

அவர்களின் மத்தியில் குற்றச்சாட்டுகளை இன்னொருவர் மீது போட்டுவிட்டுத் தப்பிக்க முனையும் அதிகாரிகளும் வெளிப்படத் தொடங்கியிருக்கிறார்கள்.

ஆக போர்க் குற்றச்சாட்டுகளை முற்றாக மறுத்து வந்த காலம் மாறத் தொடங்கியிருக்கிறது போலவே தெரிகிறது.