விக்னேஸ்வரனுக்கு காத்திருக்கும் சவால்!

Report Print Habil in கட்டுரை

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இருந்து வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் வெளியேறுவது ஏறக்குறைய உறுதியாகி விட்டது.

தமிழ் மக்கள் பேரவையின் கூட்டம் கடந்த 31ம் திகதி யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற போது 2009ல் ஏற்றுக்கொண்ட தலைமைத்துவம் மற்றும் அணுகுமுறை என்பனவற்றில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தோல்வி கண்டுவிட்டது என்று அவர் கூறியிருந்தார்.

இதன் மூலம் மீண்டும் ஒருமுறை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் போட்டியிடும் எண்ணம் அவருக்கு இல்லை என்பது உறுதியாகியிருக்கிறது.

அதுமாத்திரமன்றி தனது எதிர்காலச் செயற்பாடு குறித்த நான்கு தெரிவுகளையும் அவரே வெளிப்படுத்தியிருக்கிறார். அந்த நான்கில் ஒன்றிலும் கூட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடாக அரசியலில் நீடித்திருப்பது பற்றி அவர் குறிப்பிடவேயில்லை.

எனவே வடக்கு மாகாண சபையின் பதவிக்காலம் முடிவுக்கு வருவதுடன் விக்னேஸ்வரனுக்கும் கூட்டமைப்புக்கும் இடையிலான உறவு அதிகாரபூர்வமாக முடிவுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்கும் விக்னேஸ்வரனுக்கும் இடையிலான சந்திப்பு பெரியளவில் திருப்பங்களை தரும் என்றோ இனிமேலும் விக்னேஸ்வரன் கூட்டமைப்பில் நீடிப்பார் என்றோ எதிர்பார்ப்பது முட்டாள்தனம் என்றாகி விட்டது.

ஒற்றுமை நிலைக்க வேண்டும் என்று எதிர்பார்த்த அதற்காக பணியாற்றிய தரப்புகள் எல்லாமே இனிமேல் இது சாத்தியமில்லை என்பதை உணரத் தொடங்கி விட்டன.

விக்னேஸ்வரன் தனது அடுத்த கட்ட நகர்வு என்ன என்பதை பகிரங்கப்படுத்தவில்லையே தவிர அதற்கான தயார்படுத்தல்களை தொடங்கி விட்டார்.

அதுபோலவே விக்னேஸ்வரன் கூட்டமைப்பில் இருந்து வெளியேறுவது அல்லது வெளியேற்றப்படுவது குறித்து பங்காளிக் கட்சிகளான ரெலோவுக்கும் புளொட்டுக்கும் மாற்றுக் கருத்துக்கள் இருந்தாலும் தமிழரசுக் கட்சியோ அவர் இல்லாத அரசியல் சூழலை எதிர்கொள்வதற்கான தயார்படுத்தல்களில் இறங்கி விட்டது.

அதிகாரபூர்வமாக இந்த உறவு முடிவுக்கு வரும் திகதி பெரும்பாலும் ஒக்டோபர் 25ம் திகதியாக இருக்கலாம். அன்று தான் வடக்கு மாகாண சபையில் முதலமைச்சர் என்ற பதவி விக்னேஸ்வரனிடம் இருந்து நீங்கப் போகும் நாள்.

வேண்டா வெறுப்பாகவே அரசியலுக்கு வந்த அவர் இப்போது அதனை உதறித் தள்ளி விட்டுச் செல்ல முடியாத நிலையில் இருக்கிறார்.

தனக்கு முன்பாக இருக்கின்ற நான்கு வாய்ப்புகளில் முதலாவதை அவர் தெரிவு செய்வார் என்று எதிர்பார்ப்பதற்கில்லை.

ஏனென்றால் அவரது அரசியல் விருப்பு நிலை அதற்கு இடமளிக்காது. எனவே தனிக்கட்சி அமைத்தோ கூட்டணி ஒன்றை உருவாக்கியோ அரசியலில் நிலைத்திருப்பதற்கான முயற்சிகளில் இறங்குவார் என்பதே பொதுவான எதிர்பார்ப்பாக இருக்கிறது.

கூட்டமைப்பில் இருந்து விக்னேஸ்வரன் வெளியேறுவது மாத்திரமன்றி அவர் இன்னொரு கட்சியை அல்லது கூட்டணியை உருவாக்கி தேர்தலில் நிற்கும் போது அது நிச்சயமாக கூட்டமைப்புக்கு பெரியளவிலான பாதிப்பை ஏற்படுத்தும்.

ஆனால் விக்னேஸ்வரன் கூட்டமைப்புக்கு ஏற்படும் அந்தப் பாதிப்பை தனக்குச் சாதகமாக முற்றிலும் அறுவடை செய்யக்கூடிய நிலையில் இருக்கிறாரா என்பது சந்தேகமே.

ஏனென்றால் முதலமைச்சர் பதவி கைவிட்டுப் போன பின்னர் தான் விக்னேஸ்வரனுக்கு உண்மையான சவால் காத்திருக்கிறது.

அதாவது கூட்டமைப்பு தோல்வி கண்டு விட்டது. மக்களின் அபிலாஷைகளுக்கு மாறாக செயற்படுகிறது என்ற குற்றச்சாட்டுகளை வீசிய அவர் கூட்டமைப்பை எதிர்த்து அரசியல் செய்ய முனையும் போது, தனது தனித்துவத்தையும் அடையாளத்தையும் பாதுகாக்க வேண்டிய தேவை அவருக்கு இருக்கிறது.

முதலமைச்சர் விக்னேஸ்வரன் தனிக்கட்சி ஒன்றை அமைப்பது சாத்தியமானது போலத் தெரியவில்லை. அதற்குப் பெரியளவில் உழைப்பு தேவை. அதனை அவரால் வழங்க முடியுமா என்று தெரியவில்லை.

அறிக்கை அரசியலுக்கு அப்பால் அவர் செயற்பாட்டு அரசியலை முன்னெடுக்கக் கூடிய தலைவராக இன்னமும் வெளிப்படுத்திக் கொள்ளவில்லை.

உதாரணத்துக்கு தமிழ் மக்களின் பிரச்சினைகளை அறிக்கைகளில் அடுக்கும் அவர் அத்தகைய பிரச்சினைகளுக்காக எத்தனை முறை நேரில் சென்றிருக்கிறார் என்பது கேள்வி.

பல நூறு நாட்களாக போராட்டம் நடத்தும் மக்களை எத்தனை தடவைகள் சென்று சந்தித்திருக்கிறார்? அதனை விரல் விட்டு எண்ணி விடலாம்.

முல்லைத்தீவு சிங்களக் குடியேற்றத்துக்காக இரண்டு போராட்டங்கள் நடத்தப்பட்ட போதும் அவர் எட்டியும் பார்க்கவில்லை.

இப்படியே களத்தில் இறங்கி மக்களின் பிரச்சினைகளைத் தீர்க்கின்ற செயற்பாட்டு அரசியல்வாதியாக விக்னேஸ்வரன் இன்னமும் அடையாளம் காணப்படவில்லை.

இப்படியான நிலையில் உள்ள அவர் தனிக்கட்சி ஒன்றை ஆரம்பித்து வளர்த்து தேர்தலைச் சந்திப்பதற்கு நேரம், உழைப்பு, நிதி என்பன போதுமானதாக இருக்குமா என்பது சந்தேகம் தான்.

எனவே கூட்டணி ஒன்றை அமைத்து அவர் அடுத்த வடக்கு மாகாணசபைத் தேர்தலை எதிர்கொள்ளும் வாயப்புகளே அதிகம் இருக்கின்றன. அங்கு தான் அவர் உண்மையான அரசியலையும் அதிலுள்ள சூட்சுமங்கள், சூது வாதுகளையும் அறிந்து கொள்வார்.

விக்னேஸ்வரன் ஒரு பாரம்பரிய அரசியல்வாதி அல்ல. அது தான் அவருக்குள்ள பிரதான சிக்கல். இதுவரையில் எந்தவொரு தேர்தலுக்கும் அவர் வியூகம் வகுத்தவர் அல்ல.

தேர்தல் ஒன்றில் கூட்டணிக் கட்சிகளை எப்படி வளைத்துப் போடுவது, எப்படி வெட்டி விடுவது, எப்படி ஆசனங்களை ஒதுக்கிக் கொடுப்பது, எப்படி பிரசார வியூகங்களை வகுப்பது என்பதையெல்லாம் எல்லோராலும் இலகுவாக செய்துவிட முடியாது.

ஒவ்வொரு தேர்தலின் போதும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள் முரண்பாடுகள் வரும். கட்சிகள் வெளியேறப் போவதாக மிரட்டும். ஆனால் கடைசியில் ஏதோ ஒரு வகையில் இணக்கப்பாடு ஏற்படும். முட்டி மோதிக் கொண்டவர்கள் தேர்தலில் ஒன்றாக நின்று போட்டியிடுவார்கள்.

தமிழரசுக் கட்சி இந்த விடயங்களைத் திறமையாகக் கையாளும் அனுபவங்களைப் பெற்றிருந்தது. ஆனால் விக்னேஸ்வரனுக்கு எந்தவொரு தேர்தலிலும் அத்தகைய அனுபவம் கிட்டியதில்லை.

அவருக்கு மாத்திரமன்றி அவரை மாற்றுத் தலைமையாக மேலுயர்த்துவதற்கு முற்படும். தமிழ் மக்கள் பேரவை மற்றும் அதில் அங்கம் வகிக்கும் கட்சிகளுக்கும் கூட இந்த விடயத்தில் போதிய அனுபவம் இல்லை.

தமிழ் மக்கள் பேரவையில் உள்ளவர்கள் பெரும்பாலும் அரசியலில் அனுபவமே இல்லாதவர்கள். அதிலுள்ள தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியும், ஈபிஆர்எல்எவ்வும் ஊள்ளூராட்சித் தேர்தலில் கூட்டணி அமைப்பதற்கே முடியாமல் போனவை. இதிலிருந்தே கூட்டணி ஒன்றில் ஆசனப் பங்கீட்டை சமாளிக்கும் திறன் இந்தத் தரப்பில் யாருக்கும் இல்லை என்பதை உணர முடியும்.

விக்னேஸ்வரன் தலைமையில் அமையக் கூடிய ஒரு கூட்டணிக்குள் கட்சிகளை உள்ளீர்ப்பதும் அவற்றுக்கான ஆசனங்களைப் பகிர்ந்தளிப்பதும் சுலபமான வேலையாக இருக்கப் போவதில்லை என்பது இப்போதே தெரிகிறது.

தமிழ் தேசிய மக்கள் முன்னணி முதலமைச்சரை தமது பக்கத்துக்கு இழுக்க முனைகிறது. ஈபிஆர்எல்எவ்வோ முதலமைச்சருடன் ஒட்டிக்கொள்ள விரும்புகிறது. இந்தநிலையில் ஆனந்தசங்கரி வேறு, தமது கட்சியின் தலைமைப் பதவியை விக்னேஸ்வரனுக்கு தாரை வார்க்கத் தயார் என்று கூறிக்கொண்டு திரிகிறார்.

விக்னேஸ்வரன் தனியான கூட்டணியை அமைத்துப் போட்டியிட்டால் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் ரெலோவும் புளொட்டும் அவருடன் சேர முனைந்தால் அது சாத்தியப்படுமா என்றும் கேள்விகள் இருக்கின்றன.

கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கடந்த வாரம் செய்தியாளர்களிடம் பேசிய போது தாம் முதலமைச்சருடன் தான் கூட்டணி அமைப்போம் என்றும் ஏனைய கட்சிகளுடன் கூட்டணி அமைக்கத் தயாரில்லை என்றும் திட்டவட்டமாக கூறியிருக்கிறார்.

உள்ளூராட்சித் தேர்தலின் போது முதுகில் குத்தி விட்டுச் சென்றது என்பதை அவர் நினைவுபடுத்தியிருக்கிறார். அதுபோலவே ரெலோ புளொட்டுடன் கூட்டணி அமைக்க முதலமைச்சர் முடிவெடுத்தால் அந்தக் கூட்டணியில் இணைவதா என்று தாம் சிந்திக்க வேண்டியிருக்கும் என்றும் எச்சரித்திருக்கிறார்.

ஆனந்தசங்கரிக்கும் கஜேந்திரகுமாருக்கும் எட்டாம் பொருத்தம் என்பது ஏற்கனவே தெரிந்த விடயம் தான்.

முதலமைச்சர் விக்னேஸ்வரனோ அண்மையில் ஒருமுறை கஜேந்திரகுமார் மற்றும் சுரேஸ் பிரேமச்சந்திரன் ஆகியோருடன் ஒருமித்த கருத்து இருப்பதாக கூறியிருந்தார். இருந்தாலும் அவர்களுக்கிடையில் இருக்கும் முறுகலைத் தீர்ப்பது சிக்கலானதாகத் தெரிகிறது.

பல ஆண்டுகளாக இணக்கப்பாட்டை ஏற்படுத்தப் பேசினோம். ஆனாலும் முடியவில்லை என்று சுரேஸ் பிரேமச்சந்திரன் கூறியிருப்பதானது தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியையும், ஈபிஆர்எல்எவ்வையும் ஒரே கூட்டுக்குள் வைத்திருப்பதில் உள்ள சவாலை வெளிப்படுத்தியிருக்கிறது.

அதுபோலவே ரெலோ, புளொட் மீதும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி அதிருப்தியில் இருக்கிறது.

முதலமைச்சர் அமைக்கும் கூட்டணியில் தலைமைப் பாத்திரத்தை அல்லது அதிகளவு பங்கை தமக்குப் பெற்றுக் கொள்ளும் இலக்குடன் கஜேந்திரகுமார் தரப்பு இருப்பதாகத் தெரிகிறது. உள்ளூராட்சித் தேர்தல் முடிவுகள் அவர்களுக்கு சாதமாகவும் இருந்தன.

ஆனால் முதலமைச்சர் விக்னேஸ்வரன் தலைமையில் கூட்டணி சேரும் ஏனைய தரப்புகள் அதனை ஏற்றுக்கொள்ளுமா என்பது தான் பிரச்சினை.

இதுபோன்ற பிரச்சினைகளை அரசியல்வாதியாக சிந்திப்பவர்களால் தான் இலகுவாகத் தீர்க்க முடியுமே தவிர நீதியரசராக சிந்திக்கும் ஒருவரால் நிச்சயமாக தீர்ப்பது சாத்தியமல்ல.

முதலமைச்சர் விக்னேஸ்வரன் உண்மையான சவாலை கூட்டமைப்புக்குள் எதிர்கொள்ளவில்லை. அவர் கூட்டமைப்புக்கு வெளியே செய்யப் போகும் அரசியல் தான் அவருக்கான உண்மையான சவாலாக இருக்கப் போகிறது.

Latest Offers