வடக்கு மாகாண கல்வித் துறையில் கவனம் கொடுக்கவேண்டிய துறையும் கவனிப்பாரற்ற நிலையும்

Report Print Dias Dias in கட்டுரை

இலங்கையின் பாடசாலைக் கல்வி முறையில் காலத்துக்கு காலம் அறிமுகப்படுத்தப்படும் பல்வேறு புதிய சிந்தனைகளில் வழி அண்மைக்காலத்தில் அதிகம் கவனம் கொடுக்கப்படும் விடயமாக மாறியிருப்பது பாடசாலைகளில் அமைந்துள்ள ஆலோசனை மற்றும் வழிகாட்டல் அலகு (Counselling and Guidance Unit ) ஆகும்.

ஊவா வெல்லஸ்ஸ பல்கலைக்கழகத்தின் சிரேஸ்ட உதவிப் பதிவாளர் இ.சர்வேஸ்வரா தனது கட்டுரையில் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். அந்த கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

மாறிவரும் உலகின் இயல்புக்கும், சவாலுக்கும் ஏற்ற விதத்தில் நமது மாணவர்களைத் தயார்ப்படுத்தவும் அவர்கள் தினம் தினம் சந்திக்கும் புதியவகை சவால்களுக்கு முகம்கொடுக்கத்தக்க திறனுள்ளவர்களாக அவர்களை தகவமைப்பதிலும் இவ் அலகுகள் கனதியான வகிபாகத்தைக் கொண்டுள்ளன.

இவ் அலகுகளினால் பிரதானமாக பின்வரும் மூன்று விடயங்கள் கையாளப்படுகின்றன.

1. மாணவர்களுக்கு உளவியல் ரீதியில் தேவைப்படும் ஆற்றுப்படுத்தல்களை வழங்கல் (Psychological counselling)

2. உயர்கல்வி வாய்ப்புக்கள் தொடர்பான வழிகாட்டல்களை வழங்கல் (Guidance for Higher Education)

3. தொழில்துறை தொடர்பான வழிகாட்டல்களை வழங்கல் (Carrier Guidance)

இருந்த போதும் இன்றைய சூழலில் அனேகமான பாடசாலைகளில் உள்ள இவ் அலகுகள் வினைத்திறன் (Efficiency) மற்றும் விளைதிறனுடன் (Productivity) இயங்கி பயனுறுதித்தன்மை (Effectiveness) வாய்ந்தவையாக உள்ளனவா என்பது சந்தேகத்துக்குரியதே.

அதிலும் குறிப்பாக மூன்று தசாப்த கால கொடிய யுத்தத்தினால் பல்வேறு வகையிலும் பாதிப்புக்களை எதிர்கொண்ட இலங்கையின் வடக்கு மாகாணப் பாடசாலைகளில் இவ் அலகு வினைத்திறனுடன் செயலாற்ற வேண்டியது காலத்தின் அத்தியாவசியத் தேவையாகும்.

போரில் பெற்றோரை இழந்த பிள்ளைகள், உடல் ரீதியாக பாதிப்புக்குள்ளான பிள்ளைகள், போர் நெருக்கடியான காலப்பகுதியில் தாயின் கர்ப்பத்தில் இருந்த நிலையில் கர்ப்பகால அமைதியின்மையால் பாதிக்கப்பட்ட குழந்தைகள், பெற்றோரை இழந்த நிலையில் உறவினர்களிடம் தங்கிவாழும் நிலையுள்ள மற்றும் சிறுவர் இல்லங்களில் உள்ள பிள்ளைகள் என கவனிப்புக்குரிய உள, உடல் பாதிப்புக்களைக் கொண்ட ஆயிரக்கணக்கான பிள்ளைகள் வடக்குப் பாடசாலைகளில் தற்போது நிலவும் குடித்தொகையில் கணிசமான எண்ணிக்கையினராக உள்ளனர்.

இப் பிள்ளைகளை சீராக கையாளவும் அத்துடன் அவர்களிடம் எழும் இயல்பான உளவியல் தாக்கங்களுக்கும் உரிய அரவணைப்பும் ஆறுதலும் கிடைக்காமையால் வன்முறைக் கலாசாரமாக அல்லது தற்கொலை முயற்சியாக மாறும் அவர்களது பிறழ்நிலைகளுக்கு தீர்வு காணவும் பாடசாலைகளில் உள்ள வழிகாட்டல் மற்றும் ஆலோசனை அலகின் பணி மிக அவசியமானது.

அத்துடன் போருக்குப் பின்னாக திறந்து விடப்பட்டுள்ள உயர்கல்வி வாய்ப்புக்கான பெருவெளியை எவ்வாறு நமது பிள்ளைகள் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ள முடியும் என்பதை அறிவூட்டுவதும் இவ் அலகுகளின் முக்கிய பணியாகும்.

இருந்தும் பொதுவான அவதானிப்புக்களின் அடிப்படையில் வடக்கு மாகாணப் பாடசாலைகளின் இவ் அலகுக்கு உரிய கவனமும் முக்கியத்துவமும் கொடுக்கப்படவில்லை என்பதை அறியக்கூடியதாகவுள்ளது. அதன் காரணமாக இவ் அலகுகளின் வினைத்திறன் சற்று குறைவாகவேயுள்ளது.

இந் நிலமைக்கு பல்வேறு காரணங்களை அடையாளப்படுத்தக் கூடியதாகவுள்ள போதும் பின்வருவனவற்றை அவ்வாறான காரணங்களுக்குள் முக்கியமானவையாகக் கருதலாம்.

1. பொருத்தமான மனிதவளமின்மை (Lack of Appropriate Human Resource)

2. ஆசிரியர் மாணவர் விகிதம் பொருத்தப்பாடின்மை (Inappropriate teacher students ratio)

3. பால்நிலைச் சமத்துவம் இன்மை (Gender Inequality)

4. பௌதிக வளங்களின் பற்றாக்குறை (Lack of Physical Resources)

5. குறித்த ஆசிரியரின் அறிவு மற்றும் திறனின் பலவீனம்

6. மாணவர்களின் பிரதிபலிப்புக்கள் எதிர்மறையாகவிருத்தல்

7. பாடசாலை முகாமைத்துவத்தின் ஒத்துழைப்பின்மை

8. வாண்மைவிருத்திக்கான மேலதிக வாய்ப்புக்களின் பற்றாக்குறை

9. ஊக்கப்படுத்தலில் உள்ள பலவீனம்

10. பொருத்தமற்ற சட்டங்கள் மற்றும் நியதிகள்

11. நிறுவனக் கலாசாரம் (Organization Culture)

12. சமூகப் பின்புலங்கள் (Social Norms and Values)

13. ஆசிரியர் மீதான அதிகரித்த பொருத்தமற்ற வேலைச்சுமை

14. பச்சாதாப மனப்பாங்கு (Empathetical Situation)

15. பிரச்சனைகளின் எண்ணிக்கை அதிகமாகவிருத்தல்

16. அர்ப்பணிப்பின்மை (Commitment)

பொருத்தமான மனிதவளமின்மை

பாடசாலைகளில் பிரத்தியேகமாக தனித்துவமான துறையாக அடையாளப்படுத்தப்பட்டுள்ள ஆலோசனை மற்றும் வழிகாட்டல் அலகுக்கு உரிய ஆசிரியரை நியமிக்கும் போது பொருத்தமான ஆளணியைக் கண்டறிவது மிகச் சிரமமானதாகவுள்ளது.

ஆளணித் தெரிவு தொடர்பில் பின்பற்றப்படும் நடைமுறைகளும் திருப்திகரமானதாகவும் பொருத்தமானவையாகவும் இருப்பதில்லை.

சில வருடங்களுக்கு முன்னர் ஏற்கனவே ஆசிரிய சேவையில் இருந்தவர்கள் அவர்களின் விருப்பத்தேர்வின் படி இத் துறைக்குள் உள்வாங்கப்பட்டு பயிற்றுவிக்கப்பட்டனர்.

பின்னர் இத் துறைக்கான ஆசிரிய நியமனம் தனித்து செய்யப்பட்டு உளவியல் பட்டதாரிகள் நியமிக்கப்பட்டனர். அவர்களும் மேலதிக பயிற்றுவிப்புக்களுக்கு உட்படுத்தப்படுகின்றனர்.

இருந்த போதும் போதிய அனுபவின்மை வயது முதிர்ச்சியின்மை விடயப்பரப்புக்களில் ஆழமான அறிவின்மை ஒரு அரச வேலை வாய்ப்புக் கிடைத்தால் போதும் எனும் மனநிலையில் பணியில் இணைகின்ற பல காரணங்களினால் இவ் அலகுகள் பலவற்றில் பொருத்தமான மனிதவளம் காணப்படவில்லை.

அதனை விட மனித வளம் தொடர்பில் பின்வரும் இரு பிரதான விடயங்களும் கவனத்தில் கொள்ளத்தக்கன. ஆசிரியர் மாணவர் விகிதம் பொருத்தப்பாடின்மை

ஏற்கனவே அமுலில் உள்ள சுற்றறிக்கைக்கு அமைய 300க்குப் மேற்பட்ட மாணவர்களைக் கொண்ட பாடசாலைகள் ஒரு ஆசிரியரையும் 300 க்கு குறைவான மாணவர்களைக் கொண்ட பாடசாலைகள் ஒரு ஆசிரியரின் 10 பாட வேளைகளையும் இவ் அலகின் செயற்பாடுகளுக்காக பாவிக்க முடியும் என ஆளணி நியமனம் தொடர்பில் கூறப்பட்டுள்ளது.

ஆனால் இவ் பங்கீடு யதார்த்தமாக இவ் அலகின் உண்மை நோக்கத்தை அடைய போதியதாக இருக்குமா என்பது ஆய்வுக்குரியதே.

பால்நிலைச் சமத்துவம் இன்மை

குறித்த அலகுக்கான ஆசிரிய நியமனத்தின் போது பால் நிலைச் சமத்துவம் என்பது கட்டாயமாக கவனத்தில் கொள்ளப்பட வேண்டும்.

காரணம் மாணவர்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகளில் பருவவயதினர் எனும் அடிப்படையில் அவர்கள் எதிர்கொள்ளும் உளவியல் சார் பிரச்சனைகளைக் கையாள்வதற்கு ஒத்த பாலினத்தவராக ஆசிரியர் இருப்பது மிகவும் முக்கியமானது.

ஆண்கள் பாடசாலைக்கு பெண் ஆசிரியையும் பெண்கள் பாடசாலைக்கு ஆண் ஆசிரியரையும் நியமிப்பது பொருத்தமற்றது. அது போன்றே கலவன் பாடசாலைகளுக்கு ஆண் மற்றும் பெண் ஆசிரியர்கள் நியமிக்கப்படுவது அவசியமானது. ஆனால் இந்த நடைமுறைகள் பின்பற்றப்படாமை மிக முக்கிய பிரச்சனையாகவுள்ளது.

பௌதிக வளங்களின் பற்றாக்குறை

குறித்த அலகுக்கு அவ் அலகை திறம்பட நிர்வகிப்பதற்கான பௌதிக வளங்கள் வழங்கப்படாதுள்ளது மிக முக்கிய பிரச்சனையாகும்.

பொருத்தமான கட்டடத் தொகுதி, தளபாட வசதிகள், ஆவணங்களைப் பேணுவதற்கான ஏற்பாடுகள், மாணவர்களுக்கு குழு நிலையில் வழி காட்டுதல்களை வழங்குவதற்கு ஏற்ற உபகரணங்கள் என்பன இவ் அலகை திறம்பட நடாத்த அவசியமானவை.

அனேகமான பாடசாலைகளில் இவ் அலகு பொருத்தமற்ற உள்ளகட்டுமாணச் சூழலில் அமைந்திருப்பது மிக முக்கிய பிரச்சனையாகும்.

குறித்த அசிரியரின் அறிவு மற்றும் திறனின் பலவீனம்

இவ் அலகுக்கு நியமிக்கப்படும் ஆசிரியரிடம் பின்வரும் விடயப்பரப்புக்களில் ஆழமான பரந்த அறிவும் அதனோடு இணைந்த திறன்களும் இருப்பது அவசியமானது.

· கல்வி உளவியல் சார் அடிப்படை அறிவு.

· குழந்தை உளவியல் மற்றும் பருவ வயதினர் உளவியல், வளர்ந்தோர் உளவியல் தொடர்பான அறிவு.

· சிறந்த தொடர்பாடல் திறன்.

· செவிமடுக்கும் திறன் - “மாணவனின் பிரச்சனையை கவனமாக உள்வாங்கிக் கொள்வதற்கு”

· உயர்கல்வி மற்றும் தொழில் வாய்ப்புக்கள் தொடர்பில் பாடசாலைக்கு வெளியே இருக்கும் சந்தர்ப்பங்கள் குறித்த பூரணமான விளக்கம்.

ஆனால் மனவருந்தத்தக்க வகையில் இவ் அலகுகளில் கடமையாற்றும் கணிசமான ஆசிரியர்களிடம் மேற்குறித்த அறிவும் திறனும் போதியளவு இல்லாமை வருத்தத்துக்குரியது.

மாணவர்களின் பிரதிபலிப்புக்கள் எதிர்மறையாகவிருத்தல்

குறித்த அலகு குறித்தான மாணவர்களின் பிரதிபலிப்பு எதிர்மறையானதாகவேயிருக்கின்றது இவ் அறைக்குள் போவதை மாணவர்கள் கௌரவக் குறைவாக நினைக்கும் தப்பான மனப்பாங்கை கொண்டவர்களாகவுள்ளனர்.

அதனால் தமது பிரச்சனைகளை இவ் அலகுக்குப் பொறுப்பான ஆசிரியர்களிடம் பகிர்ந்து கொள்வதில் ஆர்வம் அற்றவர்களாகவுள்ளனர்.

அது போன்றே இவ் அலகின் மூலம் பயன்பெற்ற தமது சகபாடிகளையும் ஏளனத்துடன் அணுகும் பழக்கமும் நமது மாணவர்களிடம் உள்ளது.

அதுவும் பெரும் பிரச்சனையாகவுள்ளது. மாணவர்கள் மத்தியில் உள்ள இத் தவறான எதிர்மறையான பிரதிபலிப்புக்களை களைவதற்குரிய செயற்திட்டங்களை வகுப்பதும் பொறிமுறைகளைக் கண்டறிவதும் அவசியமானதாகும்.

பாடசாலை முகாமைத்துவத்தின் ஒத்துழைப்பின்மை

பாடசாலை முகாமைத்துவம் மற்றும் பாடசாலை கல்விக் கட்டமைப்புடன் தொடர்புடைய ஏனைய முகாமைத்துவ அலகுகளின் ஒத்துழைப்பு இவ் அலகுக்கு போதியளவு கிடைப்பதில்லை.

இவ் அலகு எதிர்கொள்ளும் பிரச்சனைகளையும் சவால்களையும் முன்னுரிமை ஒழுங்கில் கையாள்வதற்கும் கரிசனையோடு அணுகுவதற்கும் பாடசாலை முகாமைத்துவம் தயார் இல்லாத நிலையினால் குறித்த அலகுக்குப் பொறுப்பான ஆசிரியர் சலிப்பு அடைவதும் தன் கடமை மீது பற்றுதியற்று இருப்பதும் இயல்பாக எழுகின்றது.

வாண்மைவிருத்திக்கான மேலதிக வாய்ப்புக்களின் பற்றாக்குறை

இவ் அலகுக்கு நியமிக்கப்பட்டுள்ள ஆசிரியர் தனது தொழில்சார் வாண்மை விருத்தியை பெற்றுக்கொள்வதற்கான வாய்ப்புக்கள் மிகக் குறைவாகவேயுள்ளன.

அவர்களுள் பெரும்பாலானவர்கள் சாதரணமாக பாடங்களைக் கற்பிக்கும் ஆசிரியர்கள் பின்தொடரும் கற்கைகளையோ அல்லது நிர்வாக மட்டத்தில் உள்ளவர்கள் பின்பற்றும் கற்கைகளையோ தான் தமது உயர்பட்ட கல்விக்காக தெரிவுசெய்கின்றார்கள்.

ஆசிரியர் விரும்பினாலும் ஆலோசனையும் வழிகாட்டலும் தொடர்பிலான உயர் கற்கைகளுக்கான வாய்ப்பு வடக்கு மாகாணத்தை மையப்படுத்தி மிகக் குறைவாகவேயுள்ளன.

அது போன்று குறித்த துறைசார் வாண்மை விருத்தியைப் பெற்றுக்கொள்ள ஆசிரியர்களுக்கு நிதிசார் ஊக்கப்படுத்தல்களும் வழங்கப்படுவதில்லை.

இதனால் பலர் தம்மை வாண்மை விருத்தி செய்யாதிருப்பது இவ் அலகுகளின் பின்னடைவுகளுக்கு பிரதான காரணமாகின்றன.

ஊக்கப்படுத்தலில் உள்ள பலவீனம்

பொதுவாக ஊக்கப்படுத்தல் என்பது மாணவர்களுக்கு வழங்கப்பட வேண்டும் என்பது பலரது கருத்தாகும். மாறாக ஆசிரியர்களும் ஊக்கப்படுத்தப்படும் போதே அவர்கள் தமது கடமைகளைச் சிறப்பாக ஆற்றுபவர்களாகவிருப்பர்.

பொதுவாக பாடங்களைக் கற்பிக்கும் மற்றும் இணைப்பாடவிதானச் செயற்பாடுகளில் மாணவர்களை ஈடுபடுத்தும் ஆசிரியர்கள் பெற்றுக்கொள்ளும் அளவிலான பின்னூட்டல்களையோ அல்லது ஊக்கப்படுத்தல்களையோ வழிகாட்டல் மற்றும் ஆலோசனை அலகுக்குப் பொறுப்பான ஆசிரியர் பெற்றுக்கொள்வதில்லை. இந் நிலமை அவர் தனது தொழிலில் சலிப்புத் தன்மையை அடைய காரணமாகின்றது.

பொருத்தமற்ற சட்டங்கள் மற்றும் நியதிகள்

இந்த விடயம் மிகப் பெரும் சவாலான விடயமாகவுள்ளது. கீழைத்தேய பண்பாட்டு வாழ்வியலில் பயணிக்கும் எம் சமூகம் தவிர்க்க முடியாது மேலைத்தேய சட்ட கடப்பாடுகளையும் கோட்பாடுகளையும் பின்பற்ற நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளது.

இவ் கோட்பாடுகளுக்கும் யதார்த்தத்துக்குமான முரண்பாடுகளினால் பல்வேறு சிக்கல்களை ஆலோசனை வழிகாட்டல் அலகு சந்திக்க வேண்டியுள்ளது.

குறிப்பாக ஆசிரியர் மாணவர் இடைவினை உறவில் புதிய சட்டக்கடப்பாடுகள் மட்டுப்பாடுகளைக் கொண்டிருப்பதனால் எழும் இயல்பான முரண்பாடுகளை கையாள்வது இவ் அலகுகள் எதிர்நோக்கும் முக்கிய பிரச்சனையாகும்.

நிறுவனக் கலாசாரம் மற்றும் சமூகப் பின்புலங்கள்

ஒவ்வொரு பாடசாலையும் ஆரம்பிக்கப்பட்ட நோக்கம், அமைந்துள்ள பூகோளவியல் சூழமைவுகள், சுற்றியுள்ள சமூகத்தின் தன்மை, மற்றும் இன, மொழி, மத, கலாசார விடயங்கள் அடிப்படையில் தமக்கென தனித்துவமான நிறுவனக் கலாசாரத்தைக் கொண்டுள்ளன.

இந்த நிறுவனக் கலாசாரங்கள் அமுலிலுள்ள கோட்பாடுகளுடனும் விதிமுறைகளுடனும் இணங்கிச் செல்லாத சந்தர்ப்பங்களில் மாணவர்களின் ஒழுக்க விழுமியங்கள் மற்றும் நடத்தைக் கோலங்கள் தொடர்பாக இவ் அலகு கவனம் எடுக்க முனையும் போது நடைமுறையில் பல்வேறு சிக்கல்களைச் சந்திக்கவேண்டி ஏற்படுவதனால் தமது கடமையில் முன்னோக்கி நகர்வது இவ் ஆசிரியர்களுக்கு பெரும் சவாலாகவுள்ள விடயமாகும்.

சமூக நிலமை என்பது அடுத்த பிரச்சனையான விடயம். குறிப்பாக இடைவிலகும் மாணவர்களை உள்ளீர்க்கும் செயற்திட்டங்களை மேற்கொள்ளும் போது குடும்பத் தொழிலில் பிள்ளைகள் ஈடுபடுவதை பெற்றோர்கள் அனுமதிப்பதும் விரும்புவதும் பிள்ளையை மீண்டும் பாடசாலைக்கு கொண்டுவந்து சேர்ப்பதில் சவால்களைத் தோற்றுவிக்கின்றது.

ஆசிரியர் மீதான அதிகரித்த பொருத்தமற்ற வேலைச்சுமை

குறித்த அலகில் கடமையாற்றும் ஆசிரியர்கள் பலரும் முழமையாக இவ் அலகுக்கு விடுவிக்கப்பட்டவர்களாகவேயுள்ளார்கள். கருத்தியல் ரீதியில் இவர்கள் கற்றல் கற்பித்தல் செயற்பாட்டில் நேரடியாக பங்குபெறாத ஆசிரிய ஆளணி எனும் விம்பம் பாடசாலைச் சமூகத்தில் உண்டு.

அத்துடன் இவர்களின் வேலைச்சுமை குறைவு எனக் கருதி இவ் அலகுடன் தொடர்பற்ற பல வேலைகளை குறித்த ஆசிரியர் மீது சுமத்துவது அவர் தனக்குரிய வேலையைச் செய்யாது வேறு வேலைகளில் ஈடுபட வேண்டிய நிர்ப்பந்தத்தை உருவாக்குகின்றது. இது இவ் அலகின் செயற்பாட்டில் பாரிய பின்னடைவை ஏற்படுத்தும் விடயமாகவுள்ளது.

பச்சாதாப மனப்பாங்கு (Empathetical Situation)

இவ் விடயம் பாடசாலைகளின் வழிகாட்டல் மற்றும் ஆலோசனை அலகுகளில் காணப்படும் வித்தியாசமான விடயமாகும்.

அர்ப்பணிப்புடன் பணியாற்றும் ஆசிரியர்கள் மாணவர்களின் பிரச்சனைகளை குறிப்பாக உளவியல் சார்ந்த பிரச்சனைகள் குடும்பச் சூழ்நிலை சார்ந்த பிரச்சனைகளை உன்னிப்பாக உள்வாங்கும் போது ஒரு முறையான ஆலோசகருக்குரிய வகையில் பச்சாதாப மனப்பாங்குடன் அதாவது மாணவர்களின் நிலையிலிருந்து அவர்களின் பிரச்சனைகளை அணுகின்றார்கள்.

இதில் சில ஆசிரியர்கள் பிரச்சனைகளின் தாற்பரியத்தினால் தம்வசமிழந்து அதனை தம்முடன் தமது வாழ்வியல் சூழலுடன் இணைத்துப் பொருத்தி உளத் தாக்கங்களுக்கு உள்ளாவதும் இவ் அலகுகளில் சில ஆசிரியர்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகள் ஆகும்.

பிரச்சனைகளின் எண்ணிக்கை அதிகமாகவிருத்தல்

அண்மைக்காலமாக பாடசாலை மட்டத்தில் இவ் அலகுகளை நோக்கி பல்வேறு தரப்புக்களினாலும் பல்வேறு பிரச்சனைகள் எடுத்து வரப்படுகின்றன.

சக ஆசிரியர்கள், மாணவ முதல்வர்கள், பழைய மாணவர் சங்கங்கள், பெற்றோர், சமூக நலன் விரும்பிகள், அரசாங்கத்தின் திணைக்களங்களில் சிறுவர்கள் தொடர்பில் பணியாற்றும் உத்தியோகத்தர்கள் எனப் பலதரப்பினர் பாடசாலை மையப்பட்ட பிரச்சனைகளை இவ் அலகுக்கு வழிப்படுத்துகின்றார்கள்.

இதனால் சில பாடசாலைகளில் பிரச்சனைகளின் எண்ணிக்கை அதிகமாகி குறித்த அலகினால் கையாள முடியாத அளவில் உள்ளன.

அர்ப்பணிப்பின்மை

சில பாடசாலைகளில் குறித்த அலகில் பணியாற்றும் ஆசிரியர்கள் அர்ப்பணிப்புத் தன்மையற்றவர்களாக இருப்பதும் வெறுமனே கடமைக்காக பணியாற்றுவதும் அவதானிக்கப்பட்டுள்ளது.

பிரச்சனைகளுடன் வரும் மாணவர்களுடன் அவர்கள் அணுகும் விதத்தின் அடிப்படையில் தொடர்ந்து மாணவர்கள் குறித்த அலகை நெருங்க சங்கடப்படும் சூழலும் சில பாடசாலைகளில் காணப்படுகின்றது.

ஆலோசனையும் வழிகாட்டலும் என்பது ஒரு மாணவனின் எதிர்கால வெற்றியில் கனதியான தாக்கத்தைச் செலுத்துகின்றன. ஆலோசனை வழிகாட்டல் கிடைக்கின்றதா என்பதை உறுதிசெய்வதைக் காட்டிலும் பொருத்தமான வடிவத்தில் பொருத்தமான நேரத்தில் பொருத்தமான விடயங்களில் கிடைக்கின்றனவா என்பதே உறுதிசெய்யப்பட வேண்டும்.

எனவே கல்விக் கட்டமைப்பின் முக்கிய தளமாகவிருக்கும் பாடசாலை மட்டத்தில் ஆலோசனையும் வழிகாட்டலும் அலகு சிறப்பாக செயற்பட வேண்டியது அவசியம். அதுவும் போரினால் மோசமாகப் பாதிக்கப்பட்ட வடக்கு மாகாணத்தில் இவ் அலகுகள் எதிர்பார்ப்பு எல்லைகளுக்கு அப்பாலும் செயற்பட வேண்டிய தேவையுள்ளது.

இதனை எமது மாகாண கல்வியுடன் தொடர்புடைய அனைத்து பொறுப்புதாரர்களும் தெளிவாக உள்வாங்கிக்கொள்ள வேண்டும். வடக்கின் கல்விப் பின்னடைவுக்கான காரணங்களாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளவற்றில் இவ் அலகுகளின் வினைத்திறனின்மையும் குறிப்பிடத்தக்கதாகும்.

எனவே இவ் அலகுகளின் சுமூகமான இயக்கத்துக்குத் தடையாக இருக்கும் மேற்போந்த விடயங்களில் கூடிய கவனம் எடுத்து அவற்றுக்கு உரிய வகையில் தீர்வு கண்டு குறித்த அலகின் தரத்தை பேணுவது பாடசாலை நிர்வாகம் உள்ளிட்ட கல்வி நிர்வாக கட்டமைப்புக்களின் தலையாய கடமையாகும்.

Latest Offers