காப்பாற்றப்படும் படை அதிகாரிகள்!

Report Print Subathra in கட்டுரை

கடந்த வியாழக்கிழமை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் ஒரு வழமைக்கு மாறான விஷேட அமைச்சரவைக் கூட்டம் நடத்தப்பட்டது.

அதற்கு இரண்டு நாட்களுக்கு முன்னர் தான் வழமையான அமைச்சரவைக் கூட்டம் நடந்திருந்தது.

திடீரென மறுநாள் ஜனாதிபதி செயலகத்தில் இருந்து வியாழக்கிழமை நண்பகல் அவசர அமைச்சரவைக் கூட்டத்துக்கு வருமாறு அமைச்சர்களுக்குத் தெரியப்படுத்தப்பட்டது.

அவசர அமைச்சரவைக் கூட்டம் பற்றிய செய்திகள் வெளியான போது ஊடகங்களிலும், அரசியல் வட்டாரங்களிலும் அது பெரும் பரபரப்பை தோற்றுவித்திருந்தது.

பிரதமர் ரணில் விக்ரமசிங்க வியட்னாமுக்குச் சென்றிருந்தார். மற்றும் பல முக்கிய அமைச்சர்கள் வியட்னாம், இந்தியா போன்ற நாடுகளுக்கான பயணங்களை மேற்கொண்டிருந்தனர்.

அத்தகைய சூழலில் விஷேட அமைச்சரவைக் கூட்டத்துக்கு ஜனாதிபதி அழைப்பு விடுத்தமை பரபரப்பை இன்னும் தீவிரமாக்கியது.

இந்த அமைச்சரவைக் கூட்டத்தில் பங்கேற்ற அமைச்சர்களிடம் பேசப்படும் விடயங்களை வெளியில் கசிய விடக் கூடாது என்றும் கண்டிப்பாக கூறப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

எனினும் விஷேட அமைச்சரவைக் கூட்டத்தில் பேசப்பட்ட முக்கியமான விடயம் அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன விவகாரமும், பொலிஸாரின் நடவடிக்கைகளைப் பற்றியும் தான் என்று தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.

பாதுகாப்பு அதிகாரிகளின் பிரதானியான அட்மிரல் ரவீந்திர விஜேகுணவர்தனவை கடந்த திங்கட்கிழமை காலை 10 மணியளவில் குற்றப் புலனாய்வுப் பிரிவுத் தலைமையகத்தில் முன்னிலையாகுமாறு கோரப்பட்டிருந்தது.

ஆனால் அவர் வரவில்லை. அதற்குப் பின்னர் தான் தெரிந்தது அன்று அதிகாலையே அவர் நாட்டை விட்டு வெளியேறி விட்டார் என்று.

கட்டார் எயார்வேஸ் விமானத்தில் அவர் டுபாய் வழியாக மெக்ஸிக்கோ சென்றிருந்தார். மெக்ஸிக்கோவின் 208வது தேசிய தின நிகழ்வுகளில் அரசாங்கத்தின் பிரதிநிதியாக பங்கேற்கவே அவர் அங்கு சென்றிருக்கிறார்.

இது ஒரு அதிகாரபூர்வ பயணம். எனினும் தமது பயணம் குறித்து முன்கூட்டியே குற்றப் புலனாய்வுப் பிரிவுக்குத் தெரியப்படுத்தாமலேயே அவர் வெளிநாட்டுக்குச் சென்று விட்டார்.

அவர் சென்ற பின்னரே அந்த தகவல் குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு தெரியப்படுத்தப்பட்டது.

கொழும்பில் 11 இளைஞர்கள் கடத்தப்பட்ட வழக்கில் முக்கிய சந்தேக நபரான நேவி சம்பத் நாட்டை விட்டுத் தப்பிச் செல்வதற்கு உதவினார் என்பது தான் அட்மிரல் விஜேகுணரத்ன மீதான குற்றச்சாட்டு.

அப்போது அவர் கடற்படைத் தளபதியாக இருந்தார். அவருக்கு எதிராக மற்றொரு உயர் அதிகாரி சாட்சியமும் அளித்திருந்தார்.

இதனடிப்படையில் அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்னவிடம் விசாரணை நடத்தும்படியும் தேவைப்பட்டால் கைது செய்யுமாறும் நீதிமன்றம் தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகிறது.

கடைசியாக அவரைக் கைது செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவிட்ட போதும் ஜனாதிபதி நாட்டில் இல்லாததால் அதற்கான எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

ஜனாதிபதி நாடு திரும்பியதும் அவரிடம் விசாரணை நடத்த முற்பட்ட போது அவர் மெக்ஸிக்கோவுக்குச் சென்று விட்டார். வரும் 19ம் திகதி தான் திரும்பி வரப்போகிறார்.

இந்த விடயத்தில் ஜனாதிபதி கடும் கோபமடைந்தமைக்கு இரண்டு காரணங்கள். ஒன்று அட்மிரல் விஜேகுணரத்ன நாட்டை விட்டு வெளியேறுவதை ஜனாதிபதி அறிந்திருந்தார் என்ற குற்றச்சாட்டு.

பாதுகாப்பு அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதியின் அனுமதியைப் பெறாமல் அவரால் வெளிநாடு சென்றிருக்க முடியாது. அதைவிட அவர் வெளியே செல்வதற்கு அரசாங்கமும் இணங்கியிருந்தது.

ஏனென்றால் அரசின் அதிகாரபூர்வ பிரதிநிதியாகவே அவர் அங்கு சென்றிருக்கிறார். நீதிமன்றத்தினால் கைது செய்யுமாறு உத்தரவிட்ட ஒருவரை அரசாங்கத்தின் பிரதிநிதியாக வெளிநாட்டுக்கு அனுப்ப முற்படும் போதே அரசாங்கம் சிந்தித்திருக்க வேண்டும்.

இப்போது அரசின் பிரதியாக வந்தவர் என்றாலும் மெக்ஸிக்கோவில் அட்மிரல் விஜேகுணரத்னவுக்கு முழுமையான மதிப்பு கிடைக்குமா என்பது சந்தேகம் தான். தப்பியோடி வந்தவர் என்ற மனோநிலையில் அவருக்கான வசதிகள் செய்து கொடுக்கப்படலாம்.

அட்மிரல் விஜேகுணரத்ன வெளிநாடு செல்வதற்கு ஜனாதிபதியும் உடந்தை என்று வெளியான செய்திகள் ஜனாதிபதிக்கு கடும் கோபத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

அடுத்து பாதுகாப்பு அதிகாரிகள் மீது பொலிஸ் கண்மூடித்தனமாக நடவடிக்கை எடுக்கிறது என்றொரு குற்றச்சாட்டும் ஜனாதிபதியால் முன்வைக்கப்பட்டிருக்கிறது.

படை அதிகாரிகள் போதிய ஆதாரமின்றி நீதிமன்றத்தில் எந்தக் குற்றச்சாட்டுகளையும் சுமத்தாமலேயே கைது செய்யப்படுகின்றனர். நீண்டகாலம் தடுத்து வைக்கப்படுகின்றனர் என்று ஜனாதிபதி விசனம் கொண்டிருக்கிறார்.

பல்வேறு குற்ற வழக்குகளில் படை அதிகாரிகள் கைது செய்யப்பட்ட போதெல்லாம் ஜனாதிபதி அதற்கு எதிர்ப்பை வெளியிட்டிருக்கிறார். அல்லது தனக்குத் தெரியாமல் படை அதிகாரிகள் கைது செய்யப்படுவதாக விசனத்தை வெளிப்படுத்தி வந்திருக்கிறார்.

அண்மையில் கூட படை அதிகாரிகளை கண்மூடித்தனமாக கைது செய்யக் கூடாது என்று முப்படை அதிகாரிகள், பொலிஸ் அதிகாரிகள் பங்கேற்ற கூட்டம் ஒன்றில் ஜனாதிபதி கூறியிருந்தார் என்று செய்திகள் வெளியாகின.

ஆனாலும் அட்மிரல் விஜேகுணரத்னவைக் கைது செய்வதற்கு குற்றப் புலனாய்வுப் பிரிவு நடவடிக்கை எடுத்ததை ஜனாதிபதியினால் சகித்துக் கொள்ள முடியவில்லை. அந்தக் கோபத்தைக் கொட்டித் தீர்க்கவே அமைச்சரவைக் கூட்டத்தை அவர் பயன்படுத்தியிருக்கிறார்.

ஏற்கனவே இராணுவத் தளபதிக்கும் அமைச்சர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவுக்கும் இடையில் வேறு ஏட்டிக்குப் போட்டியாக அறிக்கைப் போர் நடந்து கொண்டிருக்கிறது. அதுவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு எரிச்சலைக் கொடுத்திருக்கிறது.

தற்போதைய பாதுகாப்பு நடவடிக்கைகளை சரத் பொன்சேகா விமர்சனம் செய்திருந்தார். அதற்கு இராணுவத் தளபதி ஓய்வு பெற்ற படை அதிகாரிகளும் தம்மைத் தாமே பாதுகாப்பு ஆய்வாளர்கள் என்று கூறிக் கொள்வோரும் படை மீள்நிலைப்படுத்தல் குறித்து கருத்து வெளியிடுவதற்கு உரிமையில்லாதவர்கள் என்று சாடியிருந்தார்.

அதற்குப் பின்னர் சரத் பொன்சேகா இராணுவத் தளபதியின் மொட்டைத் தலையைப் பார்க்கும் போது இடி அமீன் போல தோற்றமளிக்கிறார் என்று விமர்சித்திருந்தார். ஒரு படை அதிகாரி எவ்வாறு தலைமுடியைப் பேண வேண்டும் என்ற அடிப்படை கூடத் தெரியாதவர் எனவும் சரத் பொன்சேகா சாடியிருந்தார்.

இதுவும் அரசாங்கத்துக்குள் கடும் நெருக்கடியை ஏற்படுத்தியிருந்தது.

தனிப்பட்ட முரண்பாடுகளைத் தீர்த்துக் கொள்வதற்கு இவர்கள் தேசிய பாதுகாப்பு விவகாரத்தை சந்திக்கு இழுக்கிறார்கள் என்பதே ஜனாதிபதியின் கருத்தாக உள்ளது. இவையெல்லாம் தான் விஷேட அமைச்சரவைக் கூட்டத்தில் ஜனாதிபதியின் முக்கியமான நிகழ்ச்சி நிரலாக இருந்திருக்கின்றன.

அட்மிரல் விஜேகுணரத்ன விவகாரத்தில் மாத்திரமன்றி அண்மையில் படை அதிகாரிகளை விசாரிக்கக் கூடாது, கைது செய்யக் கூடாது என்ற தொனியில் ஜனாதிபதி செயற்பட முனைந்திருப்பது பலத்த விமர்சனங்களை உருவாக்கியிருக்கிறது.

வரும் ஐநா பொதுச்சபைக் கூட்டத்தில் உரையாற்றும் போது படையினர் மீது சுமத்தப்பட்டுள்ள போர்க்குற்றச்சாட்டுகளில் இருந்து அவர்களை விடுவிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப் போவதாகவும் அவர் கூறியிருப்பதும் மனித உரிமை ஆர்வலர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது.

போரில் மீறல்கள் இடம்பெற்றன என்பதையும் பொதுமக்கள் கொல்லப்பட்டனர் என்பதையும் ஏற்றுக்கொள்ளும் நிலைக்கு எல்லாத் தரப்புகளும் வந்து விட்ட நிலையில் அந்த மீறல்களுக்குப் பொறுப்புக்கூறுவதை விட்டுவிட்டு அதிலிருந்து படை அதிகாரிகளை விடுவிக்கும் முயற்சியில் ஜனாதிபதி இறங்கவுள்ளதாக கூறியிருப்பது தான் ஏமாற்றத்தை உருவாக்கியிருக்கிறது.

அண்மையில் காணாமல் போனோர் பணியகத்தினால் ஒரு இடைக்கால அறிக்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கையளிக்கப்பட்டது. அதில் உள்ள பரிந்துரைகளை விரைவாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்று காணாமல் போனோருக்கான பணியகத்தின் தலைவர் சாலிய பீரிஸ் கூறியிருந்தார்.

ஆனால் அந்தப் பரிந்துரைகளைச் செயற்படுத்துவதற்கான எந்த நடவடிக்கையுமே இதுவரை அரசாங்கத்தினால் எடுக்கப்படவில்லை

அந்தப் பரிந்துரைகளில் முக்கியமான ஒன்று, ஆட்கடத்தல் மற்றும் காணாமல் ஆக்கப்பட்ட சம்பவங்களுடன் தொடர்புடையவர்கள் என்று குற்றம் சாட்டப்பட்ட படை அதிகாரிகள் மற்றும் பொலிஸ் அதிகாரிகள் உள்ளிட்ட அரச அதிகாரிகளை இறுதியான தீர்ப்பு அறிவிக்கப்படும் வரையில் பணியில் இருந்து இடைநிறுத்த வேண்டும்.

அவர்களுக்கு எதிரான வழக்குகள் நிலுவையில் இருக்கும் வரையிலும் சந்தேகநபர்களாக உள்ள அதிகாரிகளை இடமாற்றம் செய்யவோ, பதவி உயர்வு வழங்கவோ, ஆயுதப்படை, பொலிஸ் அல்லது அரச சேவையில் மற்றொரு பணியில் அமர்த்தப்படவோ கூடாது என்பதை அரசாங்கம் உறுதிப்படுத்த வேண்டும்.

காணாமல் ஆக்கப்பட்ட சம்பவங்களுடன் தொடர்புடையவர்கள் என்று சந்தேகிக்கப்படும் சிலர் இன்னமும் அதிகாரம் மிக்க பதவிகளில் குறிப்பாக ஆயுதப்படைகள் மற்றும் பொலிஸில் இருக்கிறார்கள். அவர்கள் நிலுவையில் உள்ள விசாரணைகளில் தலையீடு செய்ய முடியும்.

ஆயுதப்படையினரால் காணாமல் ஆக்கப்பட்ட சம்பவங்கள் தொடர்பான தகவல்களை வழங்கத் தயாராக இருந்த பலர் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவங்கள் நடந்திருக்கின்றன.

கடத்தல் மற்றும் காணாமல் ஆக்கப்பட்டமை தொடர்பாக நீதிமன்றத்தில் நடந்து கொண்டிருக்கும் வழக்கு ஒன்றில் சந்தேகநபராக உள்ள ஆயுதப்படை அதிகாரி ஒருவர், பணியில் இருந்து இடைநிறுத்தப்படவில்லை. தொடர்ந்தும் அவர் பணியாற்றிக் கொண்டிருக்கிறார்.

குறைந்தது ஒரு வழக்கில் காணாமல் ஆக்கப்பட்ட வழக்கில் சந்தேகநபராக உள்ள ஆயுதப்படை அதிகாரி ஒருவருக்கு அவர் மீதான வழக்கு நிலுவையில் இருக்கும் போதே பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.

இவ்வாறு சந்தேக நபர்களாக உள்ள படை அதிகாரிகள் பணியில் இருந்து இடைநிறுத்தப்பட வேண்டும் என்று அந்தப் பரிந்துரையில் கூறப்பட்டிருந்தது.

இந்தப் பரிந்துரையை நடைமுறைப்படுத்தும் எண்ணம் ஜனாதிபதியிடம் இருந்திருந்தால் அவர் நிச்சயமாக ஒரு விஷேட அமைச்சரவையைக் கூட்டியிருக்க மாட்டார்.

Latest Offers